எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரம் வட்டாரத்தில் போட்டியிடுவதற்கு தர்மபுரத்தினைச் சேர்ந்த கந்துவட்டி அறவிடும் ஜீவன் என்பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நியமித்துள்ளார்.
ஜீவன் எப்படி வட்டி அறவிடுகின்றார் என்பது பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜீவனின் கந்துவட்டி அறவீட்டில் தர்மபுரப் பிரதேசத்தில் இயங்கிவந்த கரிணிகா நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
2009ஆம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கந்துவட்டி காரணமாக பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராகியுள்ளார் கந்துவட்டிக் காரரான ஜீவன்.
அத்துடன், தர்மபுரத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள், காவல்துறையிடம் சிக்கும் பட்சத்தில் ஜீவனைத் தொடர்புகொண்டால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விசுவமடுப் பகுதியில் ஜீவன் என்பவரிடம் கடன் பெற்ற பலர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அண்மையில் இவ்வாறு தலைமறைவாகியிருந்த ஒருவரை அழைத்துவந்த ஜீவன் அவருக்காக சாட்சிநின்ற வர்த்தகர் ஒருவரின் வீட்டினை அபகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கந்துவட்டி அறவிடுபவரும், பல சட்டவிரோதச் செயல்களுக்கு துணைபோகும் ஒருவருமான ஜீவன் என்பவரை சிறிதரன் தர்மபுர அமைப்பாளராக நியமித்தமை அப்பகுதி மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மக்களுக்குச் சேவை செய்வதற்காக நியமிக்கப்படவேண்டிய அமைப்பாளர்களைத் தவிர்த்து சட்டவிரோத செயற்பாடுகளிலும், கந்துவட்டி அறவிடுபவர்களுமே தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவது மக்களின் சாபக்கேடே.