யாழ். கோட்டையில் எதிர்வரும் 15ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தினரால் மிகவும் பிரம்மாண்டமாக உணவுத் திருவிழா நடாத்தப்படவுள்ளது.
வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து இவ்வுணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
யாழ். கோட்டைக்கு முன்பாக நடைபெறவுள்ள இத்திருவிழாவில், இராணுவத்தின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மாகாணம் எங்கும் ஏ-9 வீதியை அண்டி இராணுவம் பல உணவு விடுதிகளைத் திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன், மக்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு பல்வேறு மட்டங்களிலிருந்து எதிர்ப்புக்களை வெளியிட்டாலும், இராணுவமோ வடக்கு மாகாணத்தில் திட்டமிட்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அத்துடன், முடி திருத்துமிடம், தையலகம் போன்றவற்றையும் இராணுவம் நடத்தி வருவதினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெதிராக மக்கள் போராடியும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்னிலையில், தற்போது உணவுத் திருவிழாவை ஆரம்பிப்பதுடன், இசைநிகழ்வினையும் இராணுவத்தினர் நடத்தவுள்ளனர்.