மலையகப் பாடசாலைகளில், விஞ்ஞானம், கணித பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து பந்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த 12ஆம் நாள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
மலையகப் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்கு வடக்குக் கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளிலிருந்து தகுதியானவர்களை நியமிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதா கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் மேடைகளில் கூறி வந்தாரே தவிர அதற்கான எந்தவித நடவடிக்கையையும் அவர் முன்னெடுக்கவில்லை.
நாடு தழுவிய ரீதியில் 50ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். யுத்தத்தினால் பாதிப்படைந்த வடக்குக் கிழக்கில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, மலையகப் பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
நாட்டில் 53ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் வேலை தேடி இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்றது.