தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக வாழும் வன்னியர்கள் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். டிசம்பர் 1-ஆம் தேதி முதல் போராட்டம் நடக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பெருவாரியான வன்னியர்கள் சென்னையை நோக்கி அணி அணியாக வந்தார்கள். இவர்களை சென்னைக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுக்க இவர்கள் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டார்கள். தென் தமிழகம் நோக்கிச் சென்ற ரயில் மீது தாக்குதல் நடத்தியதால் வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே தண்டவாளங்களை பெயர்த்து வீசியதால் அங்காங்கே ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
இன்னொரு பக்கம் சென்னைக்குள் வருவதற்கான பிரதான சாலையான தாம்பரம் சாலையில் ஆங்காங்கே மறியலில் ஈடுபட வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை எடுத்து வீசி விட்டு வாகனங்களை பாமகவினர் மறித்ததால் சென்னைக்குள் வர வேண்டிய வாகனங்கள் அப்படியே நின்றன.
காலை வேலை நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தால் சென்னை நகரம் திண்டாடிப் போய் விட்டது.
இப்போராட்டம் தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராமதாஸ் நான் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தாலும் என் உள்ளம் சென்னை போராட்டக்களத்தில்தான் உள்ளது என்று ட்விட்டிருந்தார். இதில் பலரும் ராமதாஸைக்கண்டித்து வருகிறார்கள்.
காரணம் இட ஒதுக்கீடு கேட்பதில் தவறு இல்லை. ஆனால்,மத்தியில் ஆளும் பாஜகவுடனும், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமியுடனும் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு. இத்தனை நாட்கள் போராடாமல் தேர்தலை மனதில் வைத்து வன்னியர்களிடம் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நோக்கோடு போராடுவதாக பலரும் ராமதாஸை விமர்சித்து வருகிறார்கள்.