அண்மையில், கித்துளைத் தவிர பனை, தென்னை மரங்களில் கள்ளுச் சீவத் தடை விதித்து சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தப் பிரச்சனையை எடுத்துரைத்தபோது, ‘பனை, தென்னைகளில் கள்ளுச் சீவலாம், ஆனால் அதற்கு வரி செலுத்தவேண்டும்’ என அரசாங்கம் அறிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.
வடக்குக் கிழக்கு மாகாணங்களே அதிகளவான பனை மற்றும் தென்னை வளங்களை க் கொண்ட மாகாணங்களாகத் திகழ்கின்றன. வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களே பனை,தென்னைகளில் கள்ளுச் சீவி வருகின்றனர்.
இம்மக்கள் கள்ளுச்சீவி வரும் வருமானத்திலேயே தமது அன்றாட வாழ்வைக் கழித்துவரும் நிலையில், மைத்திரி – ரணில் அரசானது, அதற்கு வரி அறவிட்டுள்ளது.
இந்நிலையில், தென்பகுதியிலேயே கித்துள் எனப்படும் பனை இனங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
பனை, தென்னையில் கள்ளெடுப்பவர்களுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், எவ்வாறு கித்துளில் கள்ளெடுக்கும் தொழிலாளிகளுக்கு வரி விதிக்காதிருக்கமுடியும்.
இவ்வாறு சிறிய விடயங்களுக்கே மக்களின் தொழில்களில் இனப்பாகுபாடு காட்டும் சிங்கள இனவாத அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கமுடியும்.
இவற்றினைத் தட்டிக்கேட்காத தமிழ்த் தலைமைகள் இனவாத அரசுடன் இணைந்து தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் சலுகைகளைப் பெறுகின்றனரே தவிர வேறெதனையும் செய்யவில்லையென்பது வெளிப்படை.