தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையிலிருந்து விடுபடவேண்டுமென்பதற்காக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர், அப்போராட்டத்தில் அங்கவீனமடைந்த மக்கள் மற்றும் போராளிகள் இன்று ஒரு வேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை புனரமைப்புச் செய்வதற்காக 40 இலட்சத்தை வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
இந்நிதியானது குறித்தொதுக்கப்பட்ட பன்முகப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது எனவும், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் பழைய நிலையில் உள்ளபடியே மீண்டும் புதுப்பிக்கப்படும் எனவும் சிறிதரன் உறுதியளித்துள்ளார்.
கடந்த மாவீரர் தினத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இரண்டு இலட்சம் ரூபா லஞ்சம் கொடுத்து விளக்கேற்றினார் என அவரது கட்சியைச் சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும், அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகாக்களும் மக்கள் மீது வாழ்க்கைச் சுமையை ஏற்றியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து இரண்டு கோடியை (இந்நிதியானது ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற இரகசிய உடன்பாட்டின்படி ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், விடயம் மக்களுக்குத் தெரியவரும் நிலையிலேயே இந்நிதி அபிவிருத்திக்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டiதும் குறிப்பிடத்தக்கது) இலஞ்சமாகப் பெற்றுள்ளனர்.
அந்நிதியை, எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலைக் குறிவைப்பதற்கும், மக்களின் மனதில் தன்னைப் பற்றிய நல்லபிப்பிராயம் உருவாகவேண்டுமென்பதற்காக, விடுதலைக்காக, தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரர்களின் துயிலுமில்லத்தை தனது அரசியல் இலாபத்துக்காக துஷ்பிரயோகம் செய்வதை எந்தவொரு சமூகப்பற்றுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து, எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களே வறுமையில் முன்னணியில் உள்ளதுடன், யுத்தத்தினால் அங்கவீனமடைந்தவர்கள், விதவைகள் என தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப போராடிக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றி துளியளவும் நினைக்காத சிறிதரன் போன்ற வாக்குப் பொறுக்கும் அரசியல் வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.
மக்களின் உரிமைக்கான போராட்டமும் அதன் வழிவந்த இழப்புக்களும் தியாகங்களும் வாக்கு வங்கி அரசியலின் கருவியாகப் பயன்படுத்தப்படும் அவமானகரமான இன்றைய சூழல் மக்கள் சார்ந்த அரசியலால் பிரதியடப்பட வேண்டும்.