கூட்டமைப்பை நாடிபிடித்துப் பார்க்கும் ரணில்!

உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கியதேசியக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளிலிருந்து கட்சித் தாவல்கள், பேச்சுவார்த்தைகள் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க நாடிபிடித்துப் பார்க்கும் செயலில் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது மகிந்த அணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குமாயிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டில் முக்கியமாக முல்லைத்தீவு மற்றும் மடடக்களப்பு மாவட்டங்களில் முரண்பாடுகள் உருவாகி தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்துள்ளன.

இதனையடுத்து சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து, பிரிந்து சென்ற கட்சியினை ஒன்றிணைக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனித்தனியாக சந்தித்துப் பேசி வருவதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தான் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயார் என அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, ரணில் – கூட்டமைப்பு இணைப்பு உறுதியாகியுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி உறுதியாகியுள்ளது.

இத்தேர்தலில் ரணில் – கூட்டமைப்பு இணைப்பினாலோ, அல்லது ஏனைய தமிழ்க் கட்சிகளின் இணைவினாலோ தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதே நிதர்சனமாகும்.

Leave a Reply