தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை எஸ்.கே. அறிவுச்சோலையாக பெயர் மாற்றம்செய்யப்பட்டு அடையாள அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடையாள அழிப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அனுசரணையுடன் நடந்தேறியுள்ளது.
1993ஆம் ஆண்டு, தனது பெற்றோரைச் சிறுவயதில் இழந்த மேஜர் காந்தரூபனின் வேண்டுகோளுக்கமைய, பெற்றோரை இழந்த சிறுவர்களின் கல்விக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது காந்தரூபன் அறிவுச்சோலை.
2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் திருவையாறு 2ஆம் பகுதியில் விடுதலைப் புலிகளின் கணினிப் பிரிவு இயங்கிவந்த 14 ஏக்கர் காணியில் இச்சிறுவர் இல்லத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை எஸ்.கே. என அழைக்கப்படும் சுவிஸ் வர்த்தகரான கதிர்காமநாதன் அணுகியுள்ளார்.
குறித்த 14 ஏக்கர் காணிகளும் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதுடன், சிறுவர் இல்லம் அமைப்பதற்காக விடுதலைப் புலிகளினால் அக்காணிகளின் சொந்தக்காரர்களுக்கு பணம் கொடுத்துப் பெறப்பட்டது. அதன் பின்னர் குறித்த நிலப்பரப்பில் சிங்களப் பொறியியலாளர்கiளால் சிறுவர் இல்லங்களுக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டது. இருப்பினும் அதில் குறித்த சிறுவர் இல்லம் இயங்கவில்லையென்பதுடன், விடுதலைப்புலிகளின் கணினிப்பிரிவு இயங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யுத்தம் நிறைவடைந்தபின், இக்காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அக்காணிகளைப் பெறுவதற்கு காணி உரிமையாளர்களால் கரைச்சிப் பிரதேச சபையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த 14 ஏக்கர் நிலப்பரப்பும் கரைச்சிப் பிரதேச சபையினால் கதிர்காமநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரதேச சபையினால் தனியொருவருக்கு 14 ஏக்கர் காணியை வழங்கமுடியாது. இதற்காக, அக்கிராமத்தில் சிறிதரனின் ஆதரவாளர்கள் சிலரின் பெயரை இணைத்து, தமது கிராமத்துக்கு சிறுவர் இல்லம் அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி கரைச்சிப் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கதிர்காமநாதனூடாக அனுப்பிவைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், காணி உரிமையாளர்களில் இருவர் சிறிதரனிடம் முறையிட்டபோது, உங்களது காணிகளைப் பெற்றுத் தருவதாக இருந்தால், முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் உங்கள் காணியைப் பெற்றுத் தரமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உரிமையாளர்களான கணபதிப்பிள்ளை சண்முகசுந்தரம் மற்றும் திருநாவுக்கரசு பொன்னம்பலம் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைப் பிள்ளைகள் வவுனியாவில் இயங்கும் சிவன் ஆலயத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தனர். பின்னர் செஞ்சோலை சிறுவர் இல்லம் கிளிநொச்சியில், கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனால் இயக்கப்பட்டு வருகின்றது.
இதைவிட, கிளிநொச்சியில், கருணா நிலையம், மகாதேவா சிறுவர் இல்லம், காந்தி நிலையம் போன்ற சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்று அமைப்பதற்கு அவசியமேதுமில்லை.
அத்துடன், அரச சட்டத்தின்படி கண்டபடி சிறுவர் இல்லங்கள் அமைக்கமுடியாது. இந்நிலையிலேயே, சிறிதரன் அவர்கள் அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளுக்கூடாக, காந்தரூபன் அறிவுச்சோலை பதிவெண்ணில் எஸ்கே. அறிவுச்சோலைக்கான அனுமதியைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மக்களுக்கு தன்னையொரு விடுதலைப் புலிகளின் விசுவாசியெனக் காட்டுவதற்காக மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பவற்றைக் கொண்டாடிக்கொண்டு மறுபக்கம், இவ்வாறு அடையாள அழிப்புகள் செய்துவருகின்றமை கண்கூடு.