அம்பாறை மாவட்டத்தின் ஒலுவிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தினை இல்மனைற் கனியவள அகழ்விற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட குழுவொன்று நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஒலுவிலிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பானது கனியவளம் கூடிய பிரதேசமாகவும் இயற்கை வளம் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது.
குறிப்பாக, ஒலுவில் கடற்கரைப் பிரதேசமானது ஏற்கனவே மோசமான கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வருட முற்பகுதியில் மக்களின் வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்கள் பாரிய அழிவைச் சந்தித்திருந்தனர்.
இதனையடுத்து, அங்கிருந்த மீன்பிடித்துறைமுகத்தை மூடி தடுப்பணை அமைக்கப்பட்டதுடன் அக்கடற்கரைப் பிரதேசத்தினை கடற்படையினர் அபகரித்திருந்தனர்.
இந்நிலையிலேயே, தற்போது ஒலுவிலிலிருந்து பொத்துவில் வரையான கனியவளங்களை அதிகளவில் கொண்டுள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதற்கான ரி.ஐ.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எடுத்துரைத்தபோது, இது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் திட்டமெனவும், இதனால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படின் அதனை அவர் கருத்திலெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மோசமான கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள சிறிலங்கா அரசாங்கமானது, அதிலிருந்து மீள்வதற்காக நாட்டிலுள்ள வளங்களைச் சுரண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே புல்மோட்டையிலிருந்து இல்மனைற் கனியவளமானது யப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலேயே, தற்போது ஒலுவிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால், இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் சமூகமானது அவர்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு, மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதுடன், அவர்களது இருப்பே கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு, சிறிலங்கா அரசாங்கம், இயற்கை வளங்கள் நிறைந்த தமிழர் பிரதேசங்களை அபகரித்து வருவதுடன், தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் நிலையை உருவாக்கி வருகின்றது என்பதுடன், இதனை தமிழ் மக்கள் உணரும் நிலைவரும்போது அனைத்து வளங்களும் சூறையாடப்பட்டு, தமிழ்மக்கள் சிங்கள அரசிடம் கையேந்தும் நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.