Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விக்னேஸ்வரனின் வெற்றி சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையின் தோல்வி : சபா நாவலன்

wikiவடமாகாண தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் படு தோல்வியடைந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்திருக்கிறது. சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுகின்ற உலகின் அதி பயங்கர அதிகார வர்க்கத்தின் கூட்டு எதை விரும்புகிறதோ அதை இலங்கையில் செயற்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அடிமைகள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியால் தலைமை தாங்கப்படும் அதன் அரசியலும் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழரசுக் கட்சியின் மேட்டுக்குடி ஏகாதிபத்தியங்கள் சார்ந்த அரசியலுக்கும் இலங்கை அரசின் அரசியலுக்கும் அடிப்படையில் எந்த முரண்பாடும் கிடையாது.

‘சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம்’ என்று மேடை மேடையாக முழங்கிவிட்டு பேரினவாத அரசியல் யாப்பையே வரைந்துகொடுத்த அரசியல் வரலாற்றையே அறுபது வருடங்களாக நாம் அனுபவித்து வருகிறோம். அதற்கெல்லாம் இந்த மேட்டுக்குடிகள் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அது தான் அரசியல் சாணக்கியம் என்பது.

இந்திய அரசாங்கம் அது பிரதிநிதித்துவம் செய்யும் அதிகாரவர்க்கத்தின் நலன்கள் எதுவோ அதனை இலங்கையில் நடைமுறைப் படுத்த அப்பழுக்கில்லாத அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சேர். பொன்னம்ப்லம் ராமனாதன் பரம்பரையைச் சேர்ந்த முன்னை நாள் உயர் நீதிமன்ற நீதிபதியே அவர்! சி.வி.விக்னேஸ்வரனின், இனப்படுகொலைக்கு நான்கு வருடங்களின் பின்னான அரசில் பிரவேசம் தற்செயலானதல்ல.

கூட்டமைப்பும் இந்தியாவும் மேற்கு ஏகபோக அரசுகளும்

இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை அரசியல் யாப்பில் 13 வது திருத்தச் சட்டமாக இணைத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற முழுப் பிரதேசமும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டாலும் மாகாண சபைக்கு மேல் எதையும் கேட்கக் கூடாது என்பது அந்தச் சட்டத்தின் சாராம்சம்.

மாகாண சபை குறித்த சட்டத்தில் ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மட்டுபடுத்துவது போன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற முழக்கத்தோடு தேர்தலில் குதித்தவர் விக்னேஸ்வரன். பின்னதாக வடக்கில் மக்களின் அரச எதிர்ப்புணர்வையும் கூட்டு மனோபாவத்தையும் புரிந்துகொண்டவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுய நிர்ணய உரிமையையும் இணைத்துக்கொண்டார்கள்.
தாம் வாக்குப் பொறுக்குவதற்குரிய அத்தனை சாணக்கியத்தையும் பயன்படுத்திய தமிழர்சுக் கட்சி, அமோக வெற்றிபெற்றது.

இதுவரைக்கும் ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கு முன்னின்ற சிதம்பரத்திலிருந்து நாச்சியப்பன் ஈறாக பாரதீய ஜனதா வரைக்கும் விக்னேஸ்வரனின் வெற்றியில் மகிழ்ந்து போயின.

விக்னேஸ்வரன் வெற்றிபெறுவார் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்ல்லை என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் அதன் அடிப்படைச் சிந்தனையையும் கூட அழிப்பதற்கு அத்தனை வேலைமுறைகளும் தயார் செய்யப்பட்டுவிட்டன. இதன் முதல்படியாக விக்னேஸ்வரனை முதலமைச்சராகுவதில் இந்தியாவும் ஏகாதிபத்தியங்களும் அமோக வெற்றிபெற்றிருக்கின்றன. மக்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கை அல்லது ஈழத் தமிழர் பிரச்சனையில் வெவ்வெறு அரசியல் தளங்களில் செல்வாக்குச் செலுத்தும் மூன்று வெவ்வேறு மக்கள் கூட்டங்களை காணலாம்.

முதலில் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் தலைமை. இரண்டாவதக புலம்பெயர் அமைப்புக்கள். மூன்றாவதாக தமிழ் நாட்டின் அரசியல் குழுக்கள்:.

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் தலைமை

விக்னேஸ்வரன் ஊடாக இலங்கை தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் தலைமை இந்தியாவினதும் ஏகாதிபத்தியங்களதும் நேரடியான கட்டுப்பாடினுள் இழுத்துவரப்பட்டுள்ளது. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழிக்க எண்ணியவர்களது மாபெரும் வெற்றி இது. இந்தியாவும் மேற்கு ஏகாதிபத்தியமும் சிங்கள மக்களோடு நல்லிணக்கத்திற்கு வந்து சேர வேண்டும் என்று தமிழ்த் தரப்பையும், தமிழ் மக்களோடு நல்லிணக்கத்திற்கு வரவேண்டும் என்று சிங்களத் தரப்பையும் கோரி வருகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அவை நியாயமான கோரிக்கை. அதன் ஆழத்தில் பொதிந்திருப்பதோ வேறு பொருள். சிங்கள் அதிகார வர்க்கத்தோடு தமிழர்களின் அரசியல் தலைமையையும் தமிழ் அதிகார வர்க்கத்தோடு சிங்களத் தலைமையையும் இணங்கிப் போகக் கோரும் அடிமைத்தனம்.

அதிகார வர்க்கங்களிடையேயான இந்த இணக்க அரசியலின் வெளிப்பாடுதான் மகிந்த ராஜபக்ச முன்னிலையிலான சத்தியப் பிரமாணம்.

இதனை எதிர்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ள ஏனைய கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோ போன்றவை இந்த இணக்க அரசியலுடன் எப்படி முரண்படுகிறோம் என்ற அடிப்படையைக் கூட மக்களுக்குக் கூறவில்லை. அவர்களைப் பொறுத்த வரை பதவியும் அதிகாரமும் தான் அடிப்படை முரண்பாடு. சிங்கள அதிகார வர்க்கமும் பேரினவாத அரசும் சிங்கள மக்களையே தெருத்தெருவாகக் கொன்று போடுகிறது, ஆக நல்லிணக்கம் என்றால் எம்மைப் போல ஒடுக்கப்படும் சிங்கள மக்களுடன் மட்டும் தான் என்று பேச்சளவிலாவது கூறுவதற்கு தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அரசியல் தலைமகள் கிடையாது.

செயற்பாட்டுத் தளத்தில் கூட இல்லாமல் வெறுமனே கருத்தளவிலாவது இதனை முன்வைத்திருந்தால் அது மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதற்கான நுளை வாசலாக அமைந்திருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு நகர்விலும் அதிகார வர்க்கத்துடனான உடன்பாடு மிகத் தெளிவாக முன்வைக்கப்படுகின்றது. இந்திய அரசியல் வாதிகள் மூச்சுவிடக்கூடாது நாமே எமது பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்கொள்கிறோம் என்று விக்னேஸ்வரன் தேர்தலுக்கு முன்னர் கூறியது கூட இதே வைகைப்பட்டது தான்.
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் ஈழப் பிரச்சனையில் அக்கறையுள்ளவர்களும் இலங்கை அரசால் ஒடுக்கப்படும் சிங்கள மக்களோடு இணைந்து எமது சுய நிர்ணைய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு இடைஞ்சலாக அமையக்கூடாது என்று கூறுவதற்கு இன்னும் ஒருவராவது தமிழ்பேசும் அரசியலிலிருந்து முளைக்கவில்லை.

இந்த நிலையில் விக்னேஸ்வரன் கூறுவது போன்று இலங்கை பாசிச சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் பேசித் தீர்த்துக்கொள்வோம் என்பது அதிகாரவர்க்கங்கள் இடையேயான இணக்க அரசியல். இது இந்தியாவின் அரசியல்; இந்தியாவின் பின்னணியில் செயற்படும் அமரிக்கா போன்ற மேற்கு ஏகபோகங்களின் அரசியல்; தமிழ்ப் பேசும் மகளின் அரசியல் அல்ல.

தமிழ் நாட்டின் அரசியல் குழுக்கள்

தமிழ் நாட்டின் அரசியல் குழுக்களின் ஈழ அக்கறை இரண்டாவது காரணி. இவர்களில் ‘தமிழ்த் தேசிய அசியலை’ முன்னெடுக்கிறோம் என்று கூறுகின்றவர்கள் சுய நிர்ணய உரிமை என்பதை அவர்களது அரசியல் நலனுக்காகப் தலைகீழாகப் புரட்டிவிடுகின்றனர்.

சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு ஒன்றை அமைத்துக்கொள்வதற்கான உரிமை. தமிழ் நாட்டில் இருப்பவர்களோ தமிழீழம் என்பதைத் தவிர வேறு எதையும் ‘நாம்’ ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
அந்த உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் வெற்றிபெற்ற பின்னர், அதாவது பிரிந்து செல்லும் உரிமை கிடைத்த பின்னர் அவர்கள் பிரிந்து செல்வதா அன்றி இலங்கையிலுள்ள ஏனைய தேசிய இனங்களான முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள், சிங்கள மக்கள் ஆகியோருடன் இணைந்து கூட்டாட்சி ஒன்றை அமைத்துக் கொள்வதா என்பதெல்லாம் போரடும் மக்கள் தீர்மானிக்க வேண்டியதே தவிர தமிழ் நாட்டில் தமது எல்லைக்குள்ளேயே தமது பிரிந்து செல்லும் உரிமையைக் கூடக் கோர மறுக்கும் சினிமாக் காரர்களும் வாக்குப் பொறுக்கும் மேடைப் பேச்சு அரசியல் வாதிகளிம் தீர்மானிப்பதல்ல.

இவர்கள் தமக்குத் தேவைப்படும் போதெல்லாம் பிரபாகரன் வாழ்கிறார், அடுத்த ஈழப் போரை நடத்துவார் என்று கூறி ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து அவர்களின் சூழலுக்கு ஒப்ப உருவாகவல்ல சுய நிர்ணய உரிமைப் போராட்ட இயக்கங்களை தடை செய்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ இவர்கள் இந்திய அரசினதும் இந்திட உளவுத் துறையினதும் ஏகாதிபத்தியங்களதும், இலங்கை அரசினதும் நோக்கங்களுக்கு நேரடியாகவோ மறை முகமாகவோ துணை போகின்றனர்.
ஒருவரது பண்பையும் இயல்பையும் அவர்களது பிறப்பே தீர்மானிக்கின்றது என்று இந்து மத பழமை வாதத்துள் உறி வளர்ந்த இத் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஒடுக்கப்படும் சிங்கள மக்களைக் கூட ‘துரோகிகளாகவே’ காண்கின்றனர். சிங்களவர்கள் இயல்பு பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று உறுதியாக நம்பும் அல்லது நம்பக் கோரும் இந்த மனிதர்கள் ஒடுக்கப்படும் சிங்கள மக்களைக் கூட ராஜபக்ச பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக மாற்றுவதில் அதனால் ராஜபக்சவைப் பலப்படுத்துவதில் மிகப் பெரும் பங்காற்றுகின்றனர்.

இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கும் போத் ஏதோ சிங்கள் பாசிச அதிகார வர்க்கதோடு இணக்கத்திற்கு வருவதை எதிர்க்கிறோம் என்பதையும் அது சிங்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கும் செய்கின்ற துரோகம் என்பதையும் புரிந்துகொள்ளப் போவதில்லை.

புலம் பெயர் அரசியல் குழுக்கள்

இறுதியாகப் புலம் பெயர் அரசியல் குழுக்கள் ஈழப் பிரச்சனையில் அக்கறையுள்ளவர்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். மேற்கு ஏகாதிபத்தியங்களும் அதன் உப கூறுகளான ஐக்கிய நாடுகள் நிறுவனம், மனித உரிமை அமைப்புக்கள் போன்றன ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைக்கின்றன. இலங்கையில் அதிகார வர்க்கங்களிடையேயான நல்லிணக்க்கத்தை அவை கோருகின்றன. அதிகார வர்க்களின் நலன்களின் அடிப்படையில் சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்கின்றன. தேர்தல் ‘ஜனநாயகத்தைத்’ தவிர ஏனைய அனைத்துப் போராட்டங்களையும் அவை முடக்கக் கோருகின்றன. இது இவ்வாறிருக்க புலம் பெயர் அமைப்புக்கள் இந்தியா அல்லது மேற்கு ஏகபோக அரசுகளின் அடிவருடும் அமைப்புக்களாகச் செயற்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்குச் செல்வதும், இலங்கை எவ்வாறு அமைய வேண்டும் என்று ஏற்கனவே திர்மானித்துச் செயற்படும் ஏகாதிபத்தியங்களை இரைஞ்சுவதும், மிஞ்சிப் போனால் ராஜபக்ச புலம் பெயர் நாடுகளுக்குச் செல்லும் போது திரளாக ஆர்ப்பாட்டம் நடத்துவதும் இவர்களது பிரதான செயற்பாடுகள்.

உலகில் 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் வெவ்வேறு அளவுகளில் நடைபெறுகின்றன. இவர்களிடையே குறைந்த பட்ச தொடர்புகளும் ஒன்றை ஒன்று வளர்க்கும் வேலைத்திட்டங்களைக் காணலாம். புலம் பெயர் நாடுகளின் உள்ளேயே அரசுகளை அடிபணியவைக்கும் பல அணிகள் உள்ளன. இந்தியாவில் இராணுவக் குவியலின் மேல் நின்று போராடும் காஷ்மீரிகளும், நாகாலாந்து மக்களும் அழிக்கப்பட முடியாத போராட்டங்களை நடத்துகின்றனர். குர்திஷ்தான் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்கிறது.

இவர்களை அனைவரையும் நோக்கி புலம் பெயர் அரசியல் தலைமைகள் கூறுவது ஒன்று தான் ‘நாங்கள் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள், உங்களது எதிரிகளது நண்பர்கள்’ என்பது தான் அந்தச் செய்தி. அழிப்பவர்களோடு இணைத்து மக்களைப் பாதுகாக்கிறோம் என்ற இக்குழுக்களின் அரசியல் ராஜபக்சவை மேலும் பலப்படுத்துகிறது. சுய நிர்ணய உரிமைக்கு எதிரானவர்களுக்கு ஊட்டச்சத்துக் கொடுக்கிறது.

புலிகள், புலிகளின் அடையாளம் என்பவற்றோடும் நினைவு தினங்கள் விழாக்கள் போன்றவற்றை அடிக்கடி நடத்துவதற்கு வழிமுறைகளைக் கண்டுவைத்திருக்கும் இவர்கள் சுய நிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை அழிப்பதற்கான அத்தனை வாசற் கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறார்கள். நாளையே தேசியத் தலைவரின் பெயரால் புலிகளின் மீது ஆணையாக ராஜபக்சவோடு இணைந்து கொள்கிறேன் என்று விக்னேஸ்வரன் அறிக்கைவிட்டாலே விக்னேஸ்வரன் தான் அடுத்த தேசியத் தலைவர் என்று காவடியெடுப்பதற்குத் தயார் நிலையில் இவர்கள் வைக்கபட்டுள்ளனர்.

சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை ஆதரிக்கும் இவர்கள், அதைனைப் புலிகளின் போராட்டத்தின் தொடர்ச்சி என்பதால் ஆதரிக்கின்றனர். அதன் உண்மையான உள்ளர்த்தைப் புரிந்துகொள்வதும் மக்கள் சார்ந்து அதனை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இவர்கள் சிந்திப்பதில்லை.. இவ்வாறான ஒற்றைப் பரிமாணச் சிந்தனைக்கு புலம் பெயர் நாடுகளில் அவர்களின் வாழ்கை முறையும் ஒரு காரணம்.

புலிகள் சுய நிர்ணைய உரிமை கோரினார்கள் என்பதற்காக அல்ல மக்களின் தேவை என்பதால் அதனைக் கோருகிறோம் என்று ஆரம்பித்தால் அழிப்பவர்களோடு அவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்.

இவை அனைத்துக்கும் அப்பால், உலக மக்களின் ஆதரவை வென்றெடுத்து, முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்களின் ஆதரவோடு, சிங்கள ஒடுக்கப்படும் மக்களின் ‘நல்லிணக்கத்தோடு’ ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான மக்கள் போராட்டம் ஒழுங்கமைக்கப்படுவது இன்று அவசியமானது.இந்தியாவும் ஏகாதிபத்தியங்களும் அழிக்க முயலும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கும் இலங்கையில் அடிப்படை நிபந்தனை. அப் போராட்டம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானது மட்டுமன்றி இலங்கை அதிகாரவர்க்கத்தின் நண்பர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிரனதும் கூட.

தொடர்புள்ள முன்மைய பதிவுகள்:

விக்கியும், சம்பந்தனும், சுமந்திரனும் இணைந்து சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு மரணதண்டனை விதிக்கிறார்கள்
தேசிய விடுதலைப் போராட்டம் தொடரும் – யார் தடைசெய்கிறார்கள் : சபா நாவலன்
காசியானந்தனா விக்னேஸ்வரனா?
இந்தியாவின் கிளச்சுக்குள் விக்னேஸ்வரன் : சோளன்
கூட்டமைப்பிற்கு ஆதரவு : நாடுகடந்த தமிழீழமும், பேரவையும் அரசியலிலிருந்து விலகத் தயாரா?
‘தொப்புள் கொடியை’ ‘கணவன் மனைவி உறவால் பிரதியிட முயலும் விக்னேஸ்வரனும் தப்பியோடிய சீமானும்
பேரினவாத அரசு உருவாக்கியுள்ள பாசிசத்தை ஜனநாயகம் என்று அழைக்கும் விக்னேஸ்வரன்
பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP இன் முதன்மை வேட்பாளர் : காணொளி
இலங்கை இந்திய அரசுகளின் அடியாள் விக்கியையும் தேர்தலையும் புறக்கணிப்போம் : ஜவாகர் (வவுனியா)
அடிமையாவதற்கு இந்திய அரசை அழைக்கும் விக்கி தமிழ் நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறார்.
வாடகை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் எமக்கும் தொடர்பில்லை : இந்திய அரசு
வடக்கு தேர்தலும் ‘ஹை புரபைல்’ விக்கியும் : சோளன்
புலம் பெயர் வாழ்வும் இரத்தம் தோய்ந்த அரசியலும் : சபா நாவலன்
Exit mobile version