டிசம்பர் மாதம் 5 ஆம்திகதி 2013 அன்று தென்னாபிரிக்க நேரம் இரவு 8 மணி 20 நிமிடமளவில் நெல்சன் மண்டேலா இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். தென்னாபிரிகாவின் இன்றைய ஜனாதிபதி ஜகோப் சூமா மரணச் செய்தியை உலகிற்கு அறிவித்தார்.
தென்னாபிரிக்க நிற வெறி அரசுக்கு எதிராகப் போராடிய மண்டேலாவின் வரலாற்றில் ஆயிரம் சுவடுகள் எம்மக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அவர் தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கினார் என்பதையும் அதனை சரியான திசைவழியில் தான் ஆரம்பித்தார் என்பதையும் அதனால் தான் அது வெற்றிக்கான வழிகளைத் திறந்துவிட்டது என்பதையும் பலர் சாட்சியாகச் சொல்கிறார்கள்.
அமரிக்க ஜனதிபதி ரொனால்ட் ரீகனும் பிரித்தானியப் பிரதமர் மாக்ரட் தட்சரும் மண்டேலாவைப் பயங்கரவாதி என்று அழைத்தமை அவரது போராட்டம் மக்கள் சார்ந்த ஆரம்பத்தைக் கொண்டிருந்தது என்பதற்கு அதிஉயர் சாட்சிகளில் ஒன்று.
பழமைவாதக் கட்சி என்று அழைக்கப்படும் ரோரிக் கட்சி மண்டேலாவிற்க்கு எதிரான சுவரொட்டிகளால் பிரித்தானியச் சுவர்களை அசிங்கப்படுத்தியது. ரொரிக் கட்சியின் மாணவர் அமைப்பின் உயர் மட்ட உறுப்பினர்களாகவிருந்த இன்றைய பிரதமர் டேவிட் கமரனும், இன்றைய லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்சனும் மண்டேலாவைத் தூக்கிலிடுங்கள் என்ற பிரச்சாரத்தை பிரித்தானியா முழுவதும் மேற்கொண்டனர்.
அன்று மண்டேலா உறுதிமிக்க போராளியாகவிருந்தார் என்பதற்கு இதைவிடச் சான்றுகள் தேவையில்லை.
இன்று மண்டேலாவிற்காகக் கண்ணீர்வடிக்கும் கூட்டம் அன்று மண்டேலாவைக் கொன்றுபோடத் துடித்தவர்கள் என்பது மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்ற உண்மை.
இலங்கையில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்குச் சென்று திரும்பிய டேவிட் கமரன் 1989 ஆம் ஆண்டு 23 வயது இளைஞனாக தென்னாபிரிக்க சென்றார். மண்டேலா சிறையிலிருந்தார். உண்மை கண்டறியும் குழு என்ற அமைப்பின் உறுப்பினராக நிறவெறி அரசின் எல்லைக்குள் சென்றார். உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அதற்கு நிதியுதவி செய்த நிறுவனத்தின் பெயர் சர்வதேச வியூக வலையமைப்பு -Strategy Network International (SNI) -என்பதாகும். தென்னாபிரிக்க நிறவெறி அரசின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை நீக்குவதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதே அந்த அமைப்பினதும் உண்மை கண்டறியும் குழுவினதும் நோக்கமாகவிருந்தது.
தென்னாபிரிக்க விடுதலைக்கான மக்களின் போராட்டத்தைச் சிதைப்பதற்கும் நிற வெறி சிறுபான்மை அரசைப் பாதுகாப்பதற்கும் போராடிய அதே மனிதர்கள் இன்று நெல்சன் மண்டேலாவிற்காகக் கண்ணீர் வடிக்கும் அவமானம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
ஆரம்பத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் உறுப்பினராக இணைந்துகொண்ட மண்டேலா, 1948 ஆம் ஆண்டு காங்க்ரசின் இளைஞர் அணியைத் தோற்றுவிக்கிறார். ஏகாதிபத்தியங்களுக்கும் காலனி ஆதிக்கத்திற்கும் எதிரான மக்கள் எழுச்சிகள் பலவற்றைத் தலைமை தாங்கினார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்திய வேளையில் 1961 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகும் மண்டேலா, அதே ஆண்டில் தென்னாபிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டக் குழுவில் இணைந்து அதன் முக்கிய உறுப்பினராகினார்.
1962 ஆம் ஆண்டு மண்டேலா நிறவெறி அரசிற்கு எதிரான வன்முறைக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார். அதன் பின்னதாக வாழ் நாள் முழுவது சிறையிலடைக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறை செல்கிறார்.
27 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலா, 1990 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படுகிறார்.
விடுதலையான பின் தனது சுயசரிதத்தை எழுதிய மண்டேலா, தென்னாபிரிக்க நிறவெறி அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறார். சுதந்திரமான தேர்தல் ஜனநாயகம் ஒன்றின் ஊடாக அனைத்து நிற மக்களுக்கும் வாக்குரிமை கேட்கிறார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாகின்றார்.
மண்டேலா சிறையிலிருந்த வேளையில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சிகளும் போராட்டங்களுமே நிற வெறி அரசை நிலைகுலையச் செய்தது. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பெரும்பாலான நடவடிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியே வழி நட்த்தியது. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தத்துவார்த வழிகாட்டலை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ரூத் பெர்ஸ்ட் என்பவரே மேற்கொண்டார் என்ற தகவல்களால் அதிகாரவர்கம் அதிர்ச்சிக்கு உள்ளானது.
அந்த மக்கள் எழுச்சியை இனிமேலும் எதிர்கொள்வது சாத்தியமற்றது என முடிவு செய்த அதிகாரவர்க்கம், தமக்குள் முரண்பட்டுக்கொண்டது. இரண்டு பிரதான பிரிவுகளாக உடைந்து போனது, முதலாவது பிரிவு முன்னை நாள் நிறவெறி ஜனாதிபதி பி.டபிள்யூ போத்தாவின் தலைமையில் இயங்கியது. இரண்டாவது பிரிவு மிகவும் தந்திரமாகச் செயற்பட்டது. இரண்டாவது பிரிவைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தைக்குச் சென்று கறுப்பின மக்களின் அரசாங்கத்தை நிறுவினாலும் அதன் ஊடாகவும் தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம் எனக் கணக்குப் போட்டது.
அதன் அடிப்படையில், விடுதலையான, மக்கள் ஆதரவு பெற்ற மண்டேலாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டது. ஆட்சியின் அடிப்படையில் எந்த மாற்றமும் ஏற்படுதாமல் முன்பிருந்த அதே ஆட்சி ஆபிரிக்க தேசிய காங்கிரசால் பிரதியீடு செய்யப்பட்டது.
பொன்கொழிக்கும் செல்வந்த நாடான தென்னாபிரிக்காவின் பொற் சுரங்கங்களை வெள்ளையின அதிகாரவர்க்கம் சூறையாடியது, அதே வெள்ளையின அதிகாரவர்க்கத்துடன் கறுப்பு முதலாளிகள் இணைந்து தனது தேசத்தின் வளங்களைச் சூறையாடுவார்கள் என்று மண்டேலா சிறையிலிருந்த போது எண்ணிப்பார்க்கவில்லை.
‘பொற்சுரங்கங்களும் வங்கிகளும், தனியார் நிலங்களும் தேசிய மயமாக்கப்பட வேண்டும். நாட்டின் வளங்களும் சொத்துக்களும் தேசிய மயமாக்கப்பட்டு மக்களின் கைகளில் வழங்க்கப்படும் வரை தென்னாபிரிக்கா சுதந்திர நாடாக முடியாது’ – சிறையிலிருந்து மண்டேலா கூறியது இதுதான்.
புரட்சி பேச்சுவார்த்தையாகி, தேர்தல் அரசியலாகி ஆபிரிக்க காங்கிரஸ் வெற்றிபெற்ற பின்னர், அதே வெள்ளையினக் கொள்ளைக்காரர்கள் மக்களின் சொத்துக்களை முன்னைப் போலவே சூறையாடினர்.
இவை அனைத்தினதும் உச்சகட்டமாக,கடந்தவருடம் தங்கச் சுரங்கத்தில் கூலியுயர்வு கோரிப் போராடிய நிராயுத பாணிகளான தொழிலாளர்கள் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் அரச படைகளால் சாரிசாரியாகச் சூட்டுக்கொல்லப்பட்டார்கள்.
பெரும்பான்மை தென்னாபிரிக்க மக்களான உழைக்கும் மக்களுக்கும், வறுமையை அணைத்துக்கொண்டு வாழும் மத்தியதரவர்க்கத்த்கிற்கும் இன்று போராடுவதைத் தவிர வேறு வழிகள் கிடையாது. சிறையில் போராளியாகவிருந்த நெல்சன் மண்டேலா அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்துகொண்டு விடுதலையானபோது அவரின் அரசியலுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளம் போராளி மண்டேலா அப்போதே துக்கிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டுவிட்டார். போராடும் மக்கள் புரிந்துகொள்வார்கள். விடுதலையாவதற்கு முன்பிருந்த ‘பயங்கரவாதி’ நெல்சன் மண்டேலா இவர்களின் வழிகாட்டிகளில் ஒருவாராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நெல்சன் மண்டேலா நினைவாக மீள்பதிவு
தொடர்புடையவை :
படுகொலைகளின் இரத்த வாடையோடு இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு
ஈழத் தமிழர்கள் உட்பட உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும் : ஆபிரிக்க புரட்சிகர முன்னணி
http://en.wikipedia.org/wiki/South_African_Communist_Party
South African Communist Party: Exile and After Apartheid : Eddy Maloka
ISBN-10: 1431407666