Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்

அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக வீடு சென்றுள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர்.

எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து மருத்துவர் சிவசங்கரின் உதவியுடன் அவர்கள் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.
எனினும் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வேண்டும் எனில் ஒரு மாதகால அவகாசம் தேவை என இராணுவத்தினர் தெரிவித்ததால் பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க அவரை விடுதலை செய்யுமாறு சிவசங்கர் விவாதித்துள்ளார்.

இந்த இடத்தில் வைத்தியர்; சிவசங்கர் படையினருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் கோபம் அடைந்த படையினர் அவரைத் தடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணையும் பெற்றோரையும் வீடு செல்ல அனுமதித்த இராணுவத்தினர் மருத்துவர் சிவசங்கரைத் தடுத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை குறித்த குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை வைத்தியர் சிவசங்கர் படையினரை கடுமையாகத் திட்டினார் அவர்களை கட்டிப்பிடித்து முரண்டு பிடித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார் எனக் கூறி பொலிஸாரிடம் கையளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சிவசங்கருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக மனநோய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிவசங்கரை அறிந்தவர்களுடன் தொடர்புகொண்டபோது அவருக்கு இதுவரை அப்படி எந்த நோய்களும் இருந்ததில்லை எனவும், இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என சான்றிதழ் வழங்கியவர் வைத்தியர் சிவதாசனே எனவும் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சிவதாசனையே நேரில் தொடர்புகொண்டு கேட்டோம். அவரின் வாக்குமூலம் வருமாறு,
‘ஒரு வருடத்தின் முன்னர் டாக்டர் சிவசங்கரின் மனைவி தன்னைத் தொடர்புகொண்டு கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக முறையிட்டதாகவும், அதன் பின்னர் சிவசங்கரை தான் பார்வையிட்டு மருத்துவம் செய்ததாகவும் சிவதாசன் குறிப்பிட்டார். இராணுவம் கூறியது போன்று காண்பவர்களைக் கட்டியணைக்கும் ஒருவகையிலான மன நோயினால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் கடந்தவாரம் மருத்துவர் சிவசங்கர் குறித்துக் கேட்ட போது அவரை அறிந்திருந்த காரணத்தால் சிவசங்கர் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று இராணுவத்தினருக்குச் சான்றிதழ் வழங்கினேன் என்றார்’

முன்னதாக கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் மன நோயினால் பாதிக்கபட்டிருந்தனர் என்று சான்றிதழ் வழ்கியவரும் சிவதாசனே.
அரச சார்பு ஊடகங்கள் சிவதாசனின் வாக்குமூலத்தை முன்வைத்து இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும், இராணுவம் கூறுவது போல குறித்த மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தன. வழமைபோல இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது (பாலியல் வன்முறை கூட அல்ல) என்பதைக் கூட சிவதாசனதும் இராணுவத்தினரதும் தகவல்களை முன்வைத்து நிராகரித்த அரச ஆதரவுக் கும்பல்கள், பெண்கள் மீதான அரச பயங்கரவாதம் குறித்துப் பேசுவது கூடத் தவறானது என கூக்குரலிட்டன.

இலங்கை அரசுக்கு எதிராகக் குரலெழுப்புகின்ற அனைவரையும் புலிகள் என்றும், சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசுவது இனவாதம் என்றும், இராணுவம் நம்பத்தகுந்த வகையில் நடந்துகொள்கிறது என்றும், வட-கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறத் தேவையில்லை என்றும் தொடர்ச்சியாகச் சூறையாடப்படும் தேசிய இனம் ஒன்றின் மீது தமது நலனுக்காக உளவியல் யுத்தம் நடத்தும் சமூகவிரோதிகள் எதிர்கொள்ளப்படவேண்டும்.

டாக்டர் சிவசங்கர் அண்மையில் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினால் அவர் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக விசாரணைக்கு உட்படுத்தபட்டிருந்தார். எச்சரிக்கை உடனான விசாரணையாக அது இருந்தது எனச் சிவசங்கர் கூறியிருந்தார். அந்த விசாரணையின் பின்பும் சங்கரின் அடுத்த கட்டுரை பிரசுரமாகி இருந்தது.

மிக நேர்மையான துணிச்சல் மிக்க மருத்துவ அதிகாரியான சிவசங்கரின் கருத்துக்களே இராணுவத்தினரைப் பயமுறுத்துகிறது. புரட்சிக்காரனாக அரச ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்த சிவதாசன் மக்களைப் பயமுறுத்துகிறார்.
மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்ற சிவதாசன் போன்றவர்கள் எந்தக் குற்ற உணர்வுமற்ற அப்பட்டமான வியாபாரிகள். மருத்துவர்கள் அல்ல.

தொடர்புடைய பதிவுகள்:

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் குறித்து சிவதாசனுடன் உரையாடல்

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் பயிற்சி முடிவடைகிறது

இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை : மருத்துவர்

இராணுவத்தில் இணைகட்டாயப்படுத்தல் மூலம் இளம் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப் பட்டுள்ளார்கள் : பெண்கள் செயற்பாட்டு வலையமைப்புத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் : ஊதுகுழல்கள் ஆரம்பித்துள்ள உளவியல் யுத்தம்!

16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் : மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?

இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?

Exit mobile version