தமிழ்ப் பேசும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய்க் கொன்று குவிக்கப்பட்ட மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேரினவாத அரசு திட்டமிட்டுச் சூறையாடுகிறது. வன்னி பெரு நிலம் என்று நீங்கள் பெருமையடித்துக்கொண்ட மண்ணின் 30 வீதத்தை ஆக்கிரமித்தாகிவிட்டது.
பேரினவாதிகளும் பல்தேசிய நிறுவனங்களும் இணைந்தே இந்த ஆக்கிரமிப்பை நடத்துகிறார்கள். இராணுவக் குடியிருப்புகளும், பல்தேசியக் கம்பனிகளும் அருகருகே “பாதுகாப்பாக” பக்கத்துவீட்டுக் காரர்களாக மாறிவருகிறார்கள்.
இதற்கு புலம் பெயர் வியாபாரிகள் தம்மையும் நுளைத்துக்கொண்டு கொள்ளையடிக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
முன்னை நாள் முற்போக்கு வாதிகள், மாற்றுக் கருத்து மாணிக்கங்கள், புலிக் கொடியோடு புலம் பெயர்ந்தவர்கள் என்று எல்லா வியாபாரிகள் கூட்டமும் ஒரு கொடியின் கீழ் வந்தாகிவிட்டது. இப்போதும் அவர்கள் மாற்றுக் கருத்துப் பேசுகிறார்கள். இப்போதும் அவர்கள் புலிக் கொடிகளோடு உலா வருகிறார்கள். கே.பி யின் ஊடாக ராஜபக்ச, டக்ளசின் ஊடாக ராஜபக்ச, அமரிக்காவின் ஊடாக ராஜபக்ச, இந்தியாவின் ஊடாக ராஜபக்ச, என் ஜீ ஓ ஊடாக ராஜபக்ச என்று வரவேண்டிய இடத்திற்கு வந்துசேர்ந்தாயிற்று.
இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சம்பந்தனும் சீடர்களும் நாம் தான் தேசியவாதிகள் என்று சிங்கக் கொடியோடு புகுந்து விளையாடுகிறார்கள்.
எந்த மக்களுக்கு “உதவிசெய்வதாக” புலம்பெயர் நாடுகளில் நீங்கள் பணம் சேர்த்துக்கொண்டீர்களோ அந்த மக்கள் தெருவோரங்களில் அனாதைகளாக, அடிமைகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். பட்டினிச் சாவை எதிர் நோக்குகிறார்கள். பசியின் கொடுமையால் உடலை விற்கக்கூடத் தயாராக ஒரு வறிய மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது.
அமரிக்காவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு ‘கலாச்சாரம் சீரழிகிறது’ என்ற உங்கள் கூக்குரல்கள் நாரசமாக ஒலிக்கிறது.
புலம் பெயர் நாடுகளில் வியாபாரப் போட்டி உச்சமடைந்துள்ளது. நாடு கடந்த தமிழ் ஈழக் குழு பலவாகச் சிதறிவிட்டது. பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட ஐரோப்பியக் கனவான்க அரசியல் நடத்திய பேரவைகள் பல சிதறல்களாகிக் கொண்டிருக்கின்றனர்.
போராட்டம் நடத்துகிறோம் என்று மீண்டும் அதே முகங்கள் எங்காவது அரச அலுவலகங்களுக்கு முன்னால் போலீஸ் பாதுகாப்போடு கொடிகளைத் தூக்கிக் கொண்டு அமைதியாகக் கோசம் போடுகிறது.
தமது பலவீனங்களையும் முரண்பாடுகளையும் மறைப்பதற்காக நடத்தும் இந்த போராட்ட ‘வைபவங்களை’ நடத்துவதன் விளைவுகள் என்னா? யாருக்கு அழுத்தம் கொடுக்கிறீர்கள்.
ஏன் போராட்ட முறைகளை மாற்றிக் கொள்ளக்கூடாது. ‘கல்லோடு மண்தோன்றாக் கலத்து முன் தோன்றி கத்தியோடு களமிறங்கிய மூத்த குடி தலைகள்’ தங்கள் நலனுக்காக இல்லாமல் மக்கள் நலனுக்கான போராட்ட வழிமுறை ஒன்றை இன்னும் ஏன் முன்வைக்க முடியாமல் தவிக்கிறது?
எமது பலத்தைப் பலமாகவும் பலவீனத்தைப் பலவீனமாகவும் முன்வைத்து எம்மை சுய விமர்சனம் செய்துகொண்டு அறிவியல் பூர்வமாக உலக மக்களுக்கு எம்மை இனிமேல் நியாயமானவர்களக அறிமுகப்படுத்துவோம்.
இது பெட்டிசனில் கையெழுத்துப் போட்டு விடுதலபெறும் காலமல்ல. எட்டிப்பாருங்கள் தன்னலமின்றி எமக்காகக் குரலெழுப்பும் மக்களைக் இனம் காணுங்கள்.
அப்படி நாம் செயலாற்றத் துணிந்தால், சந்தர்ப்பவாதிகள் எம்மை விட்டு அகன்று விடுவார்கள். தொகுதிகளில் வாக்குப் பெற்றுக்கொள்வதற்காக ஆதரவுதரும் புலம்பெயர் அரசியல் வாதிகளுக்குப் பதிலாக போராடும் மக்கள் கூட்டம் ஒன்று எம்மை நோக்கி அணி திரளும்.
அமரிக்கா வருகிறது, ஐரோப்பா அடிக்கிறது என்று பூச்சாண்டி காட்டியே புலம் பெயர் அரசியல் வியாபாரிகள் சுருட்டிக்கொண்டது ஏராளம். இப்போ அமரிக்கா இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கிறது.
இவர்கள் சுருட்டிக்கொண்டது ஒரு புறம் இருக்க அமரிக்காவின் அழிவு அரசியலுக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகளை நியாயமான எமது போராட்டங்களின் கிட்டக் கூட வரவிடாமல் எட்டி உதைத்திருக்கிறார்கள். இன்றும் அவர்கள் மனம் தளராமல் நேசக்கரம் நீட்டுகிறார்கள்.
போராட்டம் என்பது, அமரிக்காவையோ இந்தியாவையோ அல்லது இன்னொரு கொலைகாரனையோ கொள்ளைக்காரனையோ தாஜா பண்ணி பணத்தையும் பதவியையும் பெற்றுக்கொள்வதல்ல. எங்களுக்கு முன்னால் உள்ள அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்வதே. அப்படி எதிர்கொள்கிறவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். திமிர்பிடித்த யாழ்ப்பாண மேட்டுகுடி வேளார்களாக அன்றி, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனத்தின் அரசியல் தலைமை என்ற எண்ணத்தை நினைவில் வைத்துக்கொண்டு மக்களை அணுகினால் வெற்றிக்கான முதல் அத்தியாத்தை ஆரம்பிக்க முடியும்.
உறுதியான அரசியல் வழி நடத்திலின் கீழ் மக்கள் போராட்டங்களை பாசிச இலங்கை அரசிற்கு எதிராக நடத்தமுடியும்.
ஒற்றுமை ஒற்றுமை என்று நீங்கள் போட்ட ஓலத்தில் அழிக்கப்படுக்கொண்டுருக்கும் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் தயாரானால் ஒற்றுமை தானாக உருவாகும்.
என்ன செய்யப்போகிறீர்கள்?