இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தமிழ் பிரதான அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? பலர் செய்வது போல, தமிழ் அடையாளம், தேசியம் என்பவற்றை உருவாக்கி அதனை மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால் அந்த அக்கறை முதலில் முகாம்களில் அடைக்கப்ப்படுள்ள மக்கள் மீதே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.”
இதை யாரும் புலி எதிர்ப்புப் பன்னாடை சொல்லவில்லை. லண்டனில் புலி ஆதரவு அமைப்புக்கள் ஒன்றிணைந்து அருந்ததி ராய் ஐ பேச அழைத்த போது அவர் கூறிய விடையங்கள்.
தமிழ் நாட்டிலே உங்களது முற்றத்திலே விலங்குகளாக நடத்தப்படும் உங்கள் “தொப்புள் கொடி உறவுகள்” என்ன தவறு செய்தார்கள்? இன்று நேற்ற்றல்ல கடந்த 25 வருடங்களாக தஞ்சம் தேடிச் சென்ற இடத்தில் அதிகார வர்க்கத்தால் சிறை வைக்கப்படிருக்கிறார்கள். நீங்கள் புல்லரித்துப் புழகாங்கிதமடையும் “அன்னை ஜெயலலிதா” வின் தமிழுணர்வும், இதுவரை நீங்கள் தமிழர் தலைவனாக வேடம்கட்டியிருந்த “இரத்ததின் இரத்தம்” கருணாநிதியும் காலாகாலமாக ஆண்டு மகிழ்ந்த மாநிலைத்தில் தான் இந்த மனித அவலமும் நடக்கிறது.
இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். உங்களோடு நீண்ட தொலைவிலிருக்கின்ற அருந்ததிக்குத் தெரிகின்றதென்றால் “விலங்குப் பண்ணையை” சுற்றிக் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரியும் உங்களுக்கு இதெல்லாம் அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்திருக்கும்.
தேசியம் அடையாளம் என்பவற்றை நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான முதலீடாகப் ப்யன்படுத்திக் கொள்கிறீர்களா இல்லையா என்பது தான் இங்கு வினா. இதற்கு ஆயிரம் பேசுக்களில் நீங்கள் பதில் சொல்லலாம். நரம்பு புடைக்க உணர்ச்சிவயப்படும் சீமானைப் பார்த்திருக்கிறோம். சினிமாவில் வந்த வீரபாண்டியக் கட்டப்பொம்மனுக்கு மறு அவதாரம் கொடுப்பது போல் பேசும் வை.கோபாலசாமியைக் கண்டிருக்கிறோம். தமிழ் நாட்டில் முதிர்ந்த “தேசியத் தலைவராகும்” நெடுமாறனைப் பார்த்திருக்கிறோம். ஈழப் பிரச்சனை, ரியல் எஸ்டேட் பிரச்சனை என்பவற்றோடு தலித் ‘பிளேவரையும்’ கலந்து தேசிய உணர்விற்குச் சாம்பார் படைக்கும் தொல்.திருமாவளவனைக் கேட்டிருக்கிறோம்.
நீங்கள் “விலங்கு கூடங்கள்” குறித்து என்ன செய்யப் போகிறீர்கள். வழமை போலவே ஒளிந்திருக்கும் “தேசியத் தலைவர் பிரபாகரன்” நாளை வந்து தமிழ் நாட்டின் அகதிகளையும் சேர்த்து விடுவிப்பார் என்றா சொல்லப் போகிறீர்கள்? இன்றைய திகதியில் பிரபாகரன் வருவார் என்று ஜெனீவாவில் வை.கோ அதிர்ந்ததையே கோமளித் தனமாகத் தான் புலம்பெயர் தமிழர்களே நோக்கினார்கள்.
அருந்ததி ராய் இன் கூற்றைக் கண்டு அஞ்சிவிடாதிர்கள் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள்கள். கருணாநிதி ஈழம் பெற்றுத்தரும், அமரிக்க வரும், ஐரோப்பா கடைகண் திறக்கிறது என்று மக்களை நம்பவைத்தே நீங்கள் நன்றாக முதலிட்டிருக்கிறீர்கள். இப்போது ஜெயலலிதா பெற்றுத் தருவார் என்று இன்னொரு கதையை பரப்பியிருக்கிறீர்கள்.
இனிமேல் அதிகமாக மக்கள் உங்களை நம்பத் தயாரில்லை. இந்த நூற்றாண்டின் அறிவு சார் சமூகத்தில் தகவல்கள் காட்டுத் தீ வேகத்தில் பரவி விடுகின்றன. ஆயிரம் வியாபாரிகள் உங்கள் “தேசிய” முதலீட்டுகளுக்கு ஆதரமாக நின்றாலும் எங்காவது, ஏதாவது ஒரு சந்தில் சமூகப் பற்றுள்ள குரல் ஒலிக்கும்.
ஆக, அருந்ததி ராய் கூறியதை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முதல்.. .
– விலங்குக் கூடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யப் போராடுங்கள்.
– அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை உறுதி செய்யுங்கள்.
-விரும்பியவர்களுக்குப் பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க பரிந்துரை செய்யுங்கள், மறுத்தால் தெருவிலே போராடுங்கள்.
-அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்வையுங்கள்.
-இந்தியாவில் பிறந்து ஈழப் போராட்டத்தின் வரலாற்றோடு வளர்ந்து பெரியவர்களாகியிருக்கும் விலங்குக் கூடங்களின் குழந்தைகளின் கல்வியை உறுதிசெய்யுங்கள்.
-ஈழத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றவர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய அரசியல் போராட்டங்களை முன்னெடுங்கள்.
-இந்த அவலங்களை உலக மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள்.
இதற்கெல்லாம் உங்கள் சொந்தப் பணத்தில் ஒரு பைசா கூடத் தர வேண்டாம். இப்போது தான் சடுதியாகத் தமிழ் உணர்வு மேலெழுந்து தேசியக் கூத்தாடும் அன்னை இருக்கிறாரே. அவர் பெரும் பண முதலைகளிடம் பெட்டி வாங்கும் போது அகதிகளுக்கும் சேர்த்து வாங்கச் சொல்லுங்கள். அப்படி வாங்காவிட்டால் அம்பலப்படுத்துங்கள்.
தமிழ் அடையாளக் கனவில் மூழ்கிய நேரம் போக மிகுதியானவற்றில், சிறைவைக்கப்படிருக்கும் அகதிகளிடம் பேசிப் பார்த்தாலே இன்னும் கோரிக்கைகளைக் கண்டறியலாம்.
இனிமேலும் பிரபாகரன் வருவார் என்பதை மட்டும் முன்வைத்து அரசியல் நாடகம் போட முடியாது. நேர்மையாக மக்கள் பற்றிருந்தால் இந்த எரியும் பிரச்சனையை அதுவும் 25 வருடங்களாக தீபந்தம் போல எரியும் பிரச்சனையை முன்வைத்துப் போராடுங்கள். உங்கள் முற்றத்தில் நிகழும் அவலம் அல்லவா?
பிரபாகரன் வந்தால் வரட்டும். அதுவரைக் கான இடைக் காலத்தில் நீங்கள் சாதித்ததாக இவை அமையட்டுமே?