இலங்கையில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு மீதான விசாரணை, கடந்தகாலங்களிலும் உள்நாட்டு விசாரணை என்கிற பெயரில், ஏமாற்றங்களுக்கு உள்ளானதினை, வரலாற்றின் படிப்பினைகள் ஊடாக அறிந்து கொள்ள முடியும். தற்போது தமிழ் மக்களின் பிரதிநிதியான, சுமந்திரன் ஐயா, ஐக்கிய நாடுகள் சபை, “இனப்படுகொலை நடந்தது என நிரூபிப்பதற்கு, போதுமான அளவு ஆதாரம் அவர்களிற்கு கிடைக்கவில்லை” எனும் கருத்தினை மையமாக வைத்து, தனது வாதத்தினை முன்வைத்து, மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி வருவதுடன், தான் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கங்களை நோக்கி, தனது செயற்பாடுகளை முன்வைக்காது, தம்மை ஒரு முதல் தர சட்டத்தரணி என குறிப்பிட்டு, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, தம்மாலான வழிகள் மூலம், சர்வதேச மன்றுகளில், ஆதாரங்களை மக்களிடம் இருந்து பெற்று சமர்பிப்பதன் மூலம், நடைபெற்றது இனப்படுகொலையென உலகிற்கு நிரூபிக்க தவறிவிட்டது மட்டும் அல்லாமல், அப்பாவி தமிழ் மக்களிடையே, புலம், தாயகம் எனும் மோசமான பிரிவினையை தூண்டிவிட்டு, அதனில் குளிர்காய்ந்து கொண்டு அரசியல் செய்வது, மிகவும் கீழ்த்தரமானது என்பதுடன், அவருடன் இணைந்து செயற்படும் அரசியல் மற்றும் மக்களினது உரிமைகளை பற்றிய, எவ்வித அடிப்படை அறிவும் இன்றிய சுரேந்திரன் போன்றோர், தன்னார்வ நிறுவனங்களுக்காக வேலை செய்வதுடன், தமது பிழைப்புற்காக தமிழர் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இவர்களை, துறை சார் அறிஞர்கள், தக்க கேள்விகளை முன்வைப்பதன் மூலம், இவர்களது நோக்கங்களை வெளிக்கொணர்ந்து, இவர்களை போன்ற பதவிகளிற்காக செயற்படும் அரசியல்வாதிகளை, அரசியலில் இருந்து அகற்ற முன்வந்து செயற்படவேண்டும்.
தமிழ் மக்களாகிய எங்களுக்கு, இவ்வாறான விசாரணைதான் தேவையென, இன அழிப்பின் மற்றும் வள கொள்ளையினால் ஏற்படுத்தப்படும் அழிவுகள் ( சுன்னாகம் நீர் மாசடைதல், மன்னார் மற்றும் திருகோணமலையில் இடம்பெறும் எண்ணெய் கொள்ளையினால் கடல் வளம் மாசடைதல் போன்றவற்றின் பின்னால் இயங்கும் சூத்திரதாரிகளை கண்டறிவதன் மூலம் ) பற்றிய ஆதாரங்களுடன், ஏதாவது ஒரு நாட்டின் ஆதரவுடன் ( விசாரணைக்கு ஓட்டுக்கள் கிடைக்குதோ இல்லையோ, பாதிக்கப்பட்டவர்களான எமக்கு, இவ்விசாரணைதான் தேவையென உண்மைகளை, உலகின் முன் இடித்துரைத்து கபட நாடகம் ஆடும் அமெரிக்காவின் முகத்தில் கரியை பூச முடியும் ) , எங்களுக்கு தேவையான விசாரணையை கோர வேண்டுமே தவிர, சர்வதேச விசாரணை தேவை, சர்வதேச விசாரணை தேவை என, மேற்குலக சக்திகளுடன் இணைந்து போரின் பின் இயங்கிய ஐக்கிய நாடுகள் சபை உட்பட, கொலைகாரர்களை காக்கும் உத்திகளுடன் கூடிய விசாரணையை கோருவதிலோ, வெறும் சர்வதேச விசாரணை தேவை என்பதற்கான கையொப்பங்களை மட்டும் சேர்பதிலோ, பலன் கிடையாது என்பது திண்ணமாகும். இதனை புரிந்து கொண்டு, எமது சமூகத்தில் இருக்கும் துறை சார் நிபுணர்களின் உதவி மற்றும் சிங்கள சமூகத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சக்திகள், துறைசார் நிபுணர்கள் உதவி கொண்டு ஆதாரங்களை சேகரித்து, எமக்கு தேவையான விசாரணையை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, செயற்பாடுகளை முன்னெடுப்பது பலனளிக்கும்.
வெறுமனே சர்வதேச விசாரணை வேண்டும் என்பதற்கான அர்த்தம் யாது? அமெரிக்காவினாலோ, பிரித்தானியாவினாலோ அல்லது இந்தியாவினாலோ முன்மொழியப்பட்டு, சர்வதேச நீதிபதிகளை கொண்டு விசாரித்தாலும், உண்மை வெளிவரப்போவது கிடையாது. அப்படியான விசாரணையை ஆதரிப்பது என்பதும் இனப்படுகொலை செய்ய தூண்டிய, பின் நின்றவர்களை காப்பாற்றுவதை நோக்காக கொண்டதாகும். மேல் குறிப்பிட்டது போன்ற, தமிழ் மக்களுக்கு தேவையான விசாரணையை, ஆதாரங்களுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள், குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாட்டின் உதவியுடன், ஏன் கொண்டுவரமுடியாது? இதனை உங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி நிதிகளிடம் ஏன் நீங்கள் கேட்க கூடாது?
சிங்கள பௌத்த இனவாத அரச இயந்திரத்தினால் கட்டுண்டு இருந்த இனவாதிகள், போரின் போது இலங்கை அரச மற்றும் ஊடகங்கள் கூறியதை அடிப்படையாக கொண்டு, தமிழின படுகொலையை, தமது இனத்துக்கெதிரானவர்கள் அழிக்கப்படுகிறார்கள் என வேடிக்கை பார்த்தனர். ஆனால் இன்று தங்களுடைய அரசின் உண்மை முகம் அறிந்து, புரிந்து, இலங்கை போரின் பின் செயற்பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கபடங்களை அறிந்து, தமிழின விடுதலைப்போரில் கொல்லப்பட்டவர்களிற்கான நீதி கோருவதையும், சுயாதீன விசாரணை கோருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் தமிழர்களாகிய நாமே எமது இனப்படுகொலை பற்றியும், அது ஏன் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதன் பின்னணி பற்றியும், இன்னமும் முழுமையான விபரங்களை அறியாத அறிவிலிகளாகவே உள்ளோம் என்பதே உண்மையாகும். அத்துடன் ஊடகங்கள் வெளியிடும் இனவாத கருத்துக்களினை உள்வாங்கி, ஏதும் அறியாத, எம்மை போன்றே, ஊடகங்களினாலும், அரசியல்வாதிகளினாலும், “இனவாதிகள்” என முத்திரை குத்தப்பட்ட, அப்பாவி சிங்கள மக்களினை, எப்போதும் இனவாதிகள், இனவாதிகள் என குற்றம் சுமத்தாது, அவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்வுகளை கைவிட்டு, அவர்களிடையே உள்ள மாணவர் அமைப்புக்கள், முற்போக்கு சக்திகள், சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் கட்சிகள் ஆகியனவற்றை இனங்கண்டு, அவர்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்வது மட்டும் அன்றி, அவர்களுக்கும், எங்களுக்கும், சகலருக்கும் உரித்தான, சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராடவேண்டும். மற்றும் போலி சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கருத்துக்களை உள்வாங்காது, நாமே, சுயாதீனமாக செயற்படும் துறைசார் நிபுணர்கள், தன்னார்வலர்கள் துணை கொண்டு இனப்படுகொலை, அதன் வளக்கொள்ளையை நோக்காக கொண்ட அதன் பின்னணி பற்றி அறிந்து ஆராய்ந்து, உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிக்கொணர செயற்படுவதே காலத்தின் கட்டாயமாகும்.
சர்வதேச மன்றுகளில் தமிழர்களுக்குப் இழைக்கப்பட்டது, இனப்படுகொலையென ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு, அதிக காலம் செல்லும் என்பதுடன், அதற்காக அதிக காலம் சளைக்காமல் தொடர்ந்தும் போராட வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், தற்போது நடைபெறும் விசாரணையானது, “பாதிக்கப்பட்ட மக்களினால் கோரப்பட்டது அல்ல” என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன், இவ்விசாரணையானது, இனப்படுகொலைக்கு இலங்கை அரச இனவாதிகளிற்கு துணை நின்ற, அமெரிக்க அரசினால் முன்கொணரப்பட்ட, ‘போலி கண்துடைப்பு விசாரணையாகும்’ என்பதனையும் புரிந்து செயற்படவேண்டும் என்பதுடன், தமிழ் மக்களாகிய நாம், எமக்கு அறுபது ஆண்டுகளிற்கு மேலாக இழைக்கப்பட்ட அநீதிகளுடன், மற்றைய இன மக்களிற்கும், எமது விடுதலை போராட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளிற்குமாக, ஒரு நடுநிலையான விசாரணையை, ஏதாவது ஒரு நாட்டின் உதவியுடன், முன்னெடுத்து, இனப்படுகொலையை நிரூபிக்க முடியும் என்பதுடன், சகல மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கும், நீதியை வழங்க முடியும் என்பதுடன், இனப்படுகொலையை நடாத்த பின் நின்ற அமெரிக்க, இந்திய, பிரித்தானிய அரசுகளின் உண்மை முகத்தினையும் வெளிக்கொணரவும் முடியும். இதனை நோக்கி, மற்றைய முற்போக்கு சக்திகளுடனும், மற்றைய விடுதலை அமைப்புக்களுடனும், மற்றைய இன மக்களுடனும் இணைந்து எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக்கூறி, நாமே அயராது போராட வேண்டும் என்பதுடன், வெறும் கோசங்களுடனும், ஆரப்பாட்டங்களுடனும் நில்லாது, மக்கள் மேல் அக்கறை கொண்ட துறை சார் செயற்பாட்டாளர்கள் உதவிகொண்டு சிறந்த போராட்டத்தினை கட்டியமைத்து போராடி எமது விடுதலையை வென்றெடுக்கவேண்டும்.
சிங்கள கவிஞர் ஒருவர் எழுதிய மனதை உறுத்திய கவிதை
“அவர்கள் கருப்பு நிறமா? எனக்கு நிச்சயமாக நீங்கள் உயிருடன் இல்லை என்று தெரியும்.
எங்களுடைய சிங்கள பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உங்களை மிருகம் என்றே வர்ணித்தன.
இருந்தும் நீங்களும் எங்களுடைய இராணுவத்தினரை போன்று, நிலக்கீழ் காப்பரண்களில், வெடி மருந்து மணத்துடன், பல தூக்கமற்ற இரவுகளை கழித்திருப்பீர்கள் என்று எமக்கு தற்போது தான் புரிகிறது.”