Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிட்டண்ணைக்கு புட்டவிச்ச காலத்தில இருந்து…… பகுதி – 1

கிட்டண்ணை லண்டனில இருந்த காலத்தில இருந்து நான் உங்க இயக்க வேலசெய்ய தொடங்கின்னான். கிட்டண்ணா ஒரு சிறந்தபோராளி மட்டுமல்ல, ஒரு ஞானியும் கூட என்பது என்ர தனிப்பட்ட கருத்து. யாருக்கும் மாற்று கருத்திருந்தா அதநான் கேக்க விரும்பல. கிட்டண்ணை எப்பவும் எதாவது வாசிச்சுகொண்டே இருப்பார். வாசிச்சத எங்களுக்கும் சொல்லுவார். இங்கிலிஸ் றெஸ்ரொரன்டில கோப்ப கழுவிக்கொண்டிருந்த எங்களுக்கு TRTechல இங்கிலிஸ் படிக்க வழிவகுத்து தந்தவர். முதல் முதல் தமிழர் விளையாட்டு போட்டிய லண்டன்ல தொடக்கினதும் அண்ணதான் பாருங்கோ. கிட்டண்ணே லண்டனில இருக்கேக்கதான் தமிழ் மக்களுக்கு உதவவென பல தமிழ் அமைப்புகள் உருவாகியது. இதுக்கு கிட்டண்ணா பிரதான காரணமா இருந்தவர். அதுமட்டுமில்ல பாருங்கோ, இயக்கம் வியாபார முதலீடுகள் செய்யோணும் எண்டு சொல்லி, 1986ல வீரச்சாவடஞ்ச அருச்சுனாவின்ர அண்ணண் பெரிய மகேசன்ர பேரில, முதல் பெற்றோல்சற்ர வாங்கினவர்.


கிட்டண்ணே இருக்கேக்க அரசியல் நடவடிக்கைகள் கொடிகட்டி பறந்தகாலம். எரித்திரியா, தென்னாபிரிக்கா போன்ற விடுதலை போராட்ட அமைப்புகளோட‌ எல்லாம் நல்ல உறவில இருந்தவர். இந்தியன் ஆமியோட அடிபட ஏலாது எண்டு கடிதம் குடுத்துபோட்டு, லண்டன் வந்த போராளிகளை எல்லாம் கூப்பிட்டு வேலைதிட்டங்கள் கொடுத்தவர். கிட்டண்ணைய பிரித்தானிய அரசுதான் விசா கொடுத்து லண்டனுக்கு அழைச்சு வந்தது. அதுக்குகாரணம் அப்ப உலக ஒழுங்கில நடந்து வந்த மாற்றத்தால, இந்துசமுத்திர பிராந்தியத்தில தங்கட நலன்கள் பாதிக்காம இருக்க புலிகள கையுக்க வச்சிருக்க வேண்டி இருந்தது. அப்பேக்க பனிப்போர் முடிவுக்கு வராத காலம். சோவியத் முகாமுக்கு சார்பான இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தமை; இதுக்கு எதிரா புலிகள் போர் புரிந்தது; இது எல்லாம் சேந்து கிட்டண்ணைய லண்டனுக்கு கொண்டு வந்து சேத்திற்று. லண்டன் வந்தாபிறகு, கிட்டண்ணாக்கு ஒரு interpreter இருந்தவர். அதால யாரும் கிட்டண்ணைக்கு இங்கிலிஸ் தெரியாது எண்டு நினைச்சுப்போடாதேயுங்கோ. இந்த மொழிபெயர்ப்பாளரின் பெயர் சாந்தன். இவர interpreterஆ வைச்சிருக்க சொல்லி பிரித்தானிய Special Branch*1 கிட்டண்ணாவ கேட்டுக்கொண்டவை. இவர் Hong Kongஇல பிரித்தானிய ஆட்சி இருக்கேக்க, அங்க Special Branchக்கு வேலைபாத்திட்டு, லண்டனுக்கு திரும்பி வந்திருந்தவர். இவர பற்றி நான் சொல்லுறதவிட பிரத்தானிய அரசு சொன்னத சொல்லுறன்.

“He was in regular contact with Special Branch throughout this period. He told them in detail of his contacts with and relationship with the LTTE, and was undoubtedly helpful to the British government in understanding the views and position of the LTTE.”

இப்பிடியே இயக்க வேலையல்ல கிட்டண்ணே மும்மரமா இருக்க, சாந்தனும் தன்ர கடமையில கவனமா இருந்தவர். சாந்தன் கடமைய சரிவர செய்ததால, கிட்டண்ணே பிரித்தனியாவைவிட்டு போகவேண்டி வந்திட்டு. அதுசரி தலைப்புக்கும் உம்மட கதைக்கும் என்ன சம்மந்தம் எண்டு நினைக்கிறியளோ? கிட்டண்ணைக்கு புட்டெண்டா பிடிக்கும். அத அந்தாளுக்கு அவிச்சு குடுக்கிற பாக்கிம் எனக்கு கிடைச்சது; அதுதான் இந்ததலைப்பு.

புட்டவியல் தொடரும்……….

1 – https://en.wikipedia.org/wiki/Special_Branch

2- http://www.tamilnet.com/img/publish/2011/08/CHRISHANTHAKUMAR_sr_12jun09.pdf

– செங்கோடன் –

Exit mobile version