Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

ipkfஅவனுக்கு மீசை அரும்பய்த்தொடங்கிய நாளிலிருந்தே போராட்டமும் ஆயுதங்களோடு முளைவிட ஆரம்பித்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே அவனது போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. கல்வியன்காட்டிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் தனது சைக்கிளில் இயக்கக் கூட்டத்திற்குச் சென்று வந்திருக்கிறான். நெல்லியடியில் நான்கைந்து இளைஞர்களோடு ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள மற்றொரு வழியும் இருப்பதாக பலிபீடம் என்ற குழு பிரச்சாரம் செய்துவந்த போது அதனோடு இணைந்துகொண்டான்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்க வேறுபாடுகளின்றி, சோசலிசம், வர்க்கம், புரட்சி என்று அனைத்துப் போராளிகளும் உச்சரித்தனர். தீவிர வலதுசாரி இயக்கமாகக் கருதப்பட்ட விடுதலைப் புலிகள் கூட சோசலிசத் தமிழீழம் என்ற கருத்தை முன்வைத்தது.

வெளி நாட்டுக்குப் போவதைப் பற்றி யாரும் பேசிக்கொள்வதில்லை. வெறுப்பின் மொழி அன்னிய தேசத்தின் செல்வச் செழிப்ப்பைப் பற்றி வியந்துகொண்ட காலம் இன்னும் தோன்றியிருக்கவில்லை. அப்போதெல்லாம், வெற்றியின் மொழியே இளைஞர்களுக்குத் தெரிந்திருந்தது. மனிதாபிமானமும் மற்றவர்களை மதிக்கின்ற பண்பும் ஒரு புறத்தில் சமூகத்தில் துளிர்விட ஆரம்பித்திருந்த அதே வேளை வெறித்தனமும் வன்மமும் கூட மறுபுறத்தில் வேர்விட ஆரம்பித்தது.

அவ்வாறான ஒரு சூழலில் தான் ஜே.ஆர் ஐச் சந்திக்கிறேன். 1983 ஆம் ஆண்டின் மத்திய பகுதியாக இருக்கலாம். அது யாழ்ப்பாணத்தின் ஒரு மாலைப்பொழுது. சிறிய ஜீப் களில் அரச புலனாய்வுத் துறை சுற்றித்திரிகின்ற காலம். ஜே,ஆர் ஈழப் போராட்டத்திற்கு தமது குழுவே அரசியல் தலைமை வழங்கும் என்கிறான். ஆயுத மோகமும் இந்தியத் தலையீடும் மக்கள் போராட்டங்களால் அழிக்கப்பட்டுவிடும் எனக் கூறிய ஜே.ஆர், அவற்றிலெல்லாம் தான் சார்ந்த குழுவின் பதிவுகள் நிச்சயமாக இருக்கும் என்றான்.

கல்வியன்காட்டில் இயக்கங்கள் ஒன்றுகூடும் தேனீர் சாலை தான் அக்கா கடை. அங்கு கடை மூடும் வரையும் நாங்கள் பேசிக் கொள்கிறோம்.

அங்கிருந்து ஜே.ஆர் இன் வீடு நீண்ட தூரமில்லை. சைக்கிளில் கதைத்தபடியே சென்று ஜே.ஆர் இன் வீட்டை அடைகிறோம். அங்கு குடும்பத்தில் அத்தனை பேரும் அரசியல் உரையாடலில் பங்கு கொள்கின்றனர்.

நான் சார்ந்த டெலோ இயக்கத்தைப் பலப்படுத்துவதே எனது நோக்கம். இந்திய இராணுவப் பயிற்சியை நானும் எதிர்க்கிறேன் ஆனால் இன்று சமூகம் முழுவதும் அதன் பின்னால் அணிதிரண்டு நிற்பதால் அதானால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க போராளிகளை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்கிறேன். ஜே.ஆர் ஒத்துக்கொள்ளவில்லை. அவரின் அண்ணன் அது சரி என்கிறார்.

ஜே.ஆர். இன் அண்ணன் ராசபாதையில் அமைந்துள்ள நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிந்தார். கராட்டியில் கறுப்புப் பட்டி வரை பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறுகிறர்.

எனக்கு இன்னும் பத்தொன்பது வயதுதான். ஜே.ஆர் இற்கு பதினேழு வயது முடிந்திருக்கவில்லை.

டெலோ இயக்கத்தில் ஜே.ஆர் இன் அண்ணைப் போன்று ஒருவர் இணைந்துகொண்டால் எமது இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராகிவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

இரண்டு நாட்களின் பின்னர் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முன்பாகப் பல மணி நேரம் காத்து நின்று அவரைச் சந்தித்தேன்.

அச்சந்திப்புக்கள் சில நாட்கள் மட்டுமே நீடிக்கின்றன. அவருடன் அரசியல் பேசுவதற்குக் என்னுடன் வந்த மிசோ ராம் என்ற ரெலோ உறுப்பினர் அவரைப் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பிவைத்ததைப் பின்னதாக அறிந்துகொள்கிறேன்.

ஜே.ஆர் இன் குடும்பம் வறுமையின் விழிம்பிலேயே வாழ்ந்துவந்தது. அண்ணைன் உழைப்பு வயதான தாய் தந்தையர், சகோதரிகள் என அனைவரதும் நாளாந்த வாழ்வாதாரமாக அமைந்திருந்தது. வறுமையின் அமைதிக்குள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவித்திருந்த அந்தக் குடும்பத்தின் வேர் அறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

அப்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த அமெரிக்க அடியாள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சுருக்கமாக ஜே.ஆர் என்றே அழைக்கப்பட்டார். பார்த்தீபனின் மூக்கு ஜே.ஆர் ஐப் போன்று நீளமானது என்பதால் அவர் ஜே.ஆர் என நண்பர்களால் அழைக்கப்பட்டதால் பின்னாளில் பார்த்தீபன் மறைந்து போய் ஜே.ஆர் மட்டுமே நிரந்தரமானார்.

ஜே.ஆர் ஐச் சந்தித்து நடந்தவற்றை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சில நாட்களின் பின்னர் மங்கிய மாலைப் பொழுது ஒன்றில் அவனது வீட்டிற்குச் செல்கிறேன்.

எனது குரல் கேட்டதும் தனது வாடகை வீட்டின் சுருங்கிய படலை வரைக்கும் அமைதியாக நடந்துவந்த ஜே.ஆர் என்னை வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்று தூரே அழைத்துச் சென்றார். அண்ணன் இயக்கப்பயிற்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும் அனைவரும் என் மீது கோபமாக இருப்பதாகக் கூறினார்.

நிலைமைகளைத் தான் விளங்கிக் கொண்டுள்ளதாகவும், உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்கு இந்தியாவிற்குச் செல்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் என்னுடன் ஒத்துழைப்பதாகக் கூறினார். இதனால் நாட்டிலிருந்து அரசியல் வேலை செய்பவர்களோடு தான் இணைந்துகொள்வதாகக் கூறினார்.

அதேவேளை ஜே.ஆர் இன் இயக்கத்தை ஆரம்பித்த தேவதாஸ் தென்னிந்தியா சென்ற பின் அவரது தொடர்பும் அறுந்துபோனதாகக் கூறுகிறார்.

சில நாட்களின் பின்னர் நாங்கள் மீண்டும் சந்தித்து டெலோ இயக்கத்தின் அரசியல் பிரிவில் வேலை செய்வதற்காக மனோ மாஸ்ரிடம் ஜே.ஆர் ஐக் கூட்டிச் செல்வதாக உறுதி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்.

அப்போது டெலோ இயக்கத்தில் மத்திய குழு ஒன்றை உருவாக்கி அதனை ஜனநாயக மயப்படுத்த வேண்டும் என்ற மனோ மாஸ்டரின் முயற்சியோடு இணைந்திருந்தவர்களின் நானும் ஒருவன்.

அந்த முயற்சியில் தோல்வியடைந்து மனோ மாஸ்டருடன் வெளியேறிய எனது டெலோ இயக்க வாழ்கை எட்டு மாதங்கள் வரை மட்டுமே நீடித்தது.

மீண்டும் நான் ஜே.ஆர் ஐச் சந்தித்த போது, டெலோ இயக்கம் என்னைத் தண்டிப்பதற்காகத் தேடிக்கொண்டிருந்தது. மரண பயத்யத்தில் எனது தலைமறைவு வாழ்க்கை கிராமங்களுகுள்ளேயே நகர்ந்து சென்றது.

ஜே.ஆர் டெலோ இயக்கத்தின் பிரச்சாரப் பிரிவில் முழு நேரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
இயக்கத்தில் முற்போக்கு அணியொன்று உருவாகிக் கொண்டிருப்பதாகவும், அதனுடன் இணைந்து இயக்கத்தை மாற்றப் போவதாகவும் கூறிக்கொண்டிருந்தார்.

இயக்கங்களை இனிமேல் மாற்ற முடியாது என்றும் அதற்கு வெளியில் புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் நான் வாதிட்டேன். கிராமங்களின் நான் செய்யும் அரசியல் வேலைகள் பற்றி ஜே.ஆர் இடம் கூறிய போது, அதற்குத் தான் உதவி செய்வதாகக் கூறினார்.

1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே டெலோ இயக்கப் போராளிகள் இந்தியாவிலிருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு ஆயுதங்களோடு நாடு திரும்ப ஆரம்பித்திருந்தனர்.

அண்ணைன் வரவிற்காகக் காத்திருந்த ஜே.ஆர் உம் குடும்பத்தினரும் அந்தத் துயரச் செய்தியை அறிந்துகொண்டனர். ஜே.ஆர் இன் அண்ணன் இந்தியாவில் தற்கொலை செய்து மரணித்துப் போனதாக இயக்கப் பொறுப்பாளர் ஒருவர் செய்தி கொண்டு வந்திருந்தார்.

அது தற்கொலை அல்ல உள் முரண்பாடுகளால் நடத்தப்பட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட நீண்டகாலம் எடுத்தது.

டெலோ இயக்கத்தின் உள் கட்டமைப்ப்க்களின் மாற்றம் ஏறடுத்த முடியாது என்ற முடிவிற்கு சில காலங்களின் முன்னதாகவே ஜே.ஆர் வந்திருந்தான். வெளியில் மற்றொரு அரசியல் இயக்கம் தோன்றினால் பல ஆயிரம் தியாக உணர்வுள்ள் போராளிகள் டெலோவை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று ஜே.ஆர் நம்பியிருந்ததால் என்னுடன் கிராமங்களில் வேலை செய்ய ஆரம்பித்தான். தேசிய மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் தெரு நாடகங்களை அரங்கேற்றினோம். அவற்றுடன் ஜே.ஆர் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தான்.

இதே வேளை ஜே.ஆர் இன் அண்ணன் உயிருடன் இயக்கத்தின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது வீட்டுக்கு அருகிலிருந்து இந்தியா சென்று பயிற்சியெடுத்த ஒருவர் கூறியதும், ஜே.ஆர் இன் இன்னொரு சகோதரரை இந்தியாவிற்கு அனுப்பி அவரைத் தேடுவது என குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

மாதகலில் இருந்து கடத்தல் செய்பவர்களின் படகு ஒன்றை ஒழுங்குசெய்து இந்தியா பயணமான அவர், இடை நடுவில் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்துவிடுகிறார்.

இப்போது, ஜே.ஆர் இன் குடும்பம் அவரும் சகோதரியும், வயதான தாய் தந்தையருமாகச் சுருங்கிவிடுகிறது. புத்திர சோகமும் முதுமையின் வலியும் பெற்றோர்களைக் கொன்று தின்றுகொண்டிருக்க, ஜே.ஆர் வேலைக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

அச்சகம் ஒன்றில் பகுதிநேர வேலை பெற்றுக்கொண்ட ஜே.ஆர் இன் ஊதியம் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவனது வயதான தந்தை சினிமா தியட்டர் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்ற ஆரம்பிக்கிறார்.

86 ஆம் ஆண்டில் டெலோ இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான டெலோ போராளிகள் கண்ட இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். பலர் வீடு வீடாகச் சென்று கைது செய்யப்படுகின்றனர். சிலர் விசாரணையின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ஜே.ஆர் உம் அவரது வீட்டுக்கு அருகாமையிலிருந்து பாஸ்கரனும் கைதாகின்றனர். ஜே.ஆர் டெலோவை விட்டு விலகியிருந்ததாலும் அவரது அண்ணனின் படுகொலை தொடர்பான தகவல்களலும் அவர் ஒரு வாரத்தின் உள்ளாகவே எச்சரிக்கைகளின் பின்னர் விடுதலை செய்யப்படுகின்றான்.

பாஸ்கரனின் மரணச் செய்தி சில காலங்களின் பின்னர் அவரது வீட்டாருக்குத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலையான ஜே.ஆர் இன்னும் தீவிரமாக அரசியல் வேலைக செய்யப்பட வேண்டும் என்றும் , மக்களை அணிதிரட்டி எழுச்சி ஒன்றை ஏற்படுத்தத் தவறினால் இலங்கை அரசாங்கம் ஆயுதப் போராட்டத்தை அழித்துவிடும் என்ற கருத்தை முன்வைக்கிறான். இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தலைமறைவு இராணுவக் குழு ஒன்றை மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக கட்டமைக்க வேண்டும் என்ற கருத்தையும் திட்டத்தையும் முன்வைக்கிறான். டெலோ ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த ஜெகன்நாதன் என்பவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அங்கிருந்த கைக்குண்டுகள் சிலவற்றை எடுத்து கிராமம் ஒன்றில் புதைத்து வைக்கிறோம்.

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது இந்திய இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் குண்டுவெடிப்புக்களையும் தயார் செய்ய வேண்டும் என ஜே.ஆர் என்னிடம் வந்து விவாதித்தான்.

பேச்சுக்கள் முறிவடைந்ததும், புலிகள் இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி தென்னிந்தியாவில் தங்கியிருந்த டெலோ இயக்க உறுப்பினர்களை இந்திய இராணுவம் தன்னோடு அழைத்து வந்து பாதுகாப்பு அரண்களிலும், முன்னரங்கங்களிலும் பயன்படுத்திக்கொண்டது.

கல்வியன்காட்டு சந்தியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண் ஜே.ஆர் இன் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்தது. அங்கு காவல் வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் ஜே.ஆர் ஐ அடையாளம் கண்டுகொண்டு அழைத்திருக்கிறார். ஜே.ஆர் அவரோரு நீண்ட நேரம் பேசியிருக்கிறார். நாட்டுக்காகப் போராட அனைத்தையும் துறந்து சென்ற அவர் இந்திய இராணுவத்தின் மாய வலைக்குள் அகப்பட்டிடுப்பதாக ஜே.ஆர் இடம் துயர்பட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு வந்து தமிழீழம் பெற்றுத் தருவதாகவே இந்திய இராணுவம் தங்களைக் கூட்டிவந்ததாகவும் கூறியிருக்கிறார். ஜே.ஆர் தனது அண்ணனுக்கு என்ன நடந்தது எனக் கேட்டிருக்கிறான்.

அதன் பின்னர் அவ்வழியால் போகும் போதெல்லாம் அவர் ஜே.ஆரை இடைமறித்துப் பேச்சுக்கொடுப்பது வழக்கம். இத்தகவல் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்கு எட்டியிருக்க வேண்டும்.

கல்வியன்காட்டுச் சந்திக்கு அருகாமையில் ஜே.ஆர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரால் அவரது தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மட்டும் எனக்குக் கிடைத்தது.

இந்திய இராணுவத்தின் உளவாளி ஒருவரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக கொலை செய்த புலிகளின் உறுப்பினர்கள் அருகிலிருந்தவர்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.

தனது வாழ் நாள் முழுவதும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த ஜே.ஆர் தெருமுனை ஒன்றில் அனாதரவாகக் கிடந்தான்.
ஜே.ஆர் இன் குடும்பத்திலிருந்த மூன்று ஆண்பிள்ளைகளையும் போராட்டம் பலியெடுத்துக்கொண்டது.

நான் பல்கலைக் கழகத்தில் படிப்பைத் தொடர்வதாகத் தீர்மானித்து இரண்டாவது வருடத்தில் தான் கொலை நடந்தது.

அன்று… கணிதத்தில் சிறப்புப் பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டதற்காக விருந்து கொடுக்குமாறு பல்கலைக்கழக நண்பர்கள் கேட்டிருந்தார்கள் பல்கலைக் கழகத்திற்கு முன்னாலிருந்த அபிராமி என்ற உணவுக்கடையில் நண்பர்களை எதிர்பார்த்து தேனீர் ஒன்றை அருந்திக்கொண்டிருக்கிறேன்.

திடிரென ஒரு குரல் என்னைக் கடுமையான வார்த்தைகளால் விசாரித்தது.

‘எங்களது குடும்பத்தையே சிதைத்துவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் தேனீர் சாப்பிடுகிறாயா’ என்று உணவகம் முழுவதும் அதிரும் வகையில் சத்தமிட்டது ஜே.ஆர் இன் அப்பா.

எனக்கு அங்கிருந்து மெதுவாக எழுந்து செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

பின்னர் விசாரித்ததில் பல்கலைக் கழகத்தில் தற்காலிக பாதுகாப்பு உத்தியோகத்தராக வேலை செய்வதற்கு ஜே.ஆர் இன் அப்பா வந்திருந்தாகத் தெரியவந்தது. அந்த தந்தையின் கூற்றில் கோபம் மட்டுமல்ல, நியாயமும் இருந்தது.

நான் வெற்றியின் மொழியைப் பேசி இயக்கத்திற்கு என்ற அழைத்துச் சென்ற நூற்றுக்கணக்கானவர்களுள் ஜே.ஆர் உம் ஒருவன்.

அவர்களில் பெரும்பாலானவர்களை நான் மீளச் சந்தித்ததில்லை. செத்துப் போனவர்கள் எத்தனை பேர் மீண்டவர்கள் எத்தனை பேர் எனக்குத் தெரியாது. என்னுடைய வாழ்கைய ஒருவகையில் செதுக்கிக் கொண்ட சுயநலவாதியாகவே நான் என்னை எண்ணுவதுண்டு. கடந்த கால அழுக்குகளைக் கழுவிக் கொள்வதற்கான மாற்று என்னிடம் இல்லை.

ஆனால் ஜே.ஆர் ஐப் பொறுத்தவரை தியாகி, மாவீரன், என்ற அனைத்து வரைமுறைகளுக்குள்ளும் அடக்கப்படக்கூடியவன்.

ஜே.ஆர் கொல்லப்பட்ட சரியான திகதி எனக்குத் தெரியாது. ஆனால் அவன் கொல்லப்பட்ட முப்பதுவருட இடைக்காலத்தில் புலிகள் சாராத அனைத்துப் போராளிகளும் துரோகிகள் என்ற விம்பத்தை அதிகாரவர்க்கம் திட்டமிட்டு உருவாக்கியது.

சமூகத்தைப் பிளந்து அதன் ஒரு பகுதியைத் துரோகிகளாக்கி ஜே.ஆர் இன் குடும்பத்தைப் பல தடவை கொன்று போட்டிருக்கிறது ஆதிக்க வர்க்கம். இவையெல்லாம் முன்னமே திட்டமிடப்பட்ட செயற்பாடுகள். பல உளவாளிகள் ஆரம்பத்திலிருந்தே இயக்கங்களில் நுளைந்துகொண்டனர். உலகின் உளவு நிறுவனங்களுக்காக வேலைபார்த்த பல்வேறு கூலிகள் இயக்கங்களின் தத்துவார்த்தத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இன்றும் தியாக உணர்வு மிக்க புலிகளின் போராளிகள் கூட எத்தனையோ ஜே.ஆர்களை மறுபடி மறுபடி கொன்று போடுகின்றனர். அவர்கள் தெரிந்துகொண்ட வரலாறும் அவர்களின் பொதுப்புத்தியும், ஏனென்றே தெரியாமல் செத்துப்போன உணர்வு மிக்க போராளி ஜே.ஆர் ஐ இன்னும் நீண்ட காலத்திற்குத் துரோகியாகவே கருதிக்கொள்ளும். இன்றும் அரசியல் சார்ந்த அடையாளத்திற்குப் பதிலாக இயக்கங்கள் சார்ந்த குழுவாதமே முன்னணி சக்திகளை முகாம்களாகப் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.

ஜே.ஆர் இற்கு அருகில் மற்றொரு பிணமாக அனாதையாக நானும் மரணித்துப் போயிருக்கலாமே என பல தடவைகள் துயருற்றிருக்கிறேன். ஒவ்வோரு தடவையும் ஜே,ஆர் கொல்லப்படும் போது நானும் செத்துப் பிழைப்பதாகவே உணர்கிறேன்.

தமது இளவயதின் ஆசாபாசங்களை தொலைத்துவிட்டு, புத்தகங்களுக்கு விடைகொடுத்துவிட்டு போராடுவதற்காக மட்டுமே சென்ற ஆயிரக்கணக்கான தியாகிகள் துரோகிகளாக்கப்பட்டனர். மரணித்தவர்களின் புதைகுழிகளிலும் சாம்பல் மேடுகளிலும் அவர்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்யப்பட்டனர். இக் கொலைகள் தமிழினத்தை கோரமான மனோநிலை கொண்ட மக்கள் கூட்டமாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

மக்களும் போராளிகளும் அப்பாவிகள் என்றும் அதிகார வெறிகொண்ட தலைமைகளும் அவை வரித்துக்கொண்ட அரசியலின் மூலமுமே தமிழர்கள் தொடர்பான தவறான பிரதிவிம்பத்தை வழங்கிவருகிறதுஎன ஈனக் குரலில் சொன்னவர்களின் வாதம் எடுபடவில்லை.

இன்று ஐ.நாவும் ஏகபோக அரசுகளும் போராட்டத்தின் நியாயத்தை அழிப்பதற்காக அத் தவறுகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. போராளிகளின் புதைகுழிகளிகளுக்குள் அவர்களை மீண்டும் கொன்று போடுகின்றன.

ஏனைய இயக்கங்களிலிருந்த சந்தர்ப்பவாதிகள் பலர் புலிகளில் இணைந்து தம்மைத் தியாகிகளாகவும், தமது முன்னை நாள் தோழர்களைத் துரோகிகளாகவும் பிரச்சாரம் செய்தனர். புலம்பெயர் புலிகள் இப் போக்கின் பிரதான கருவிகளாகினர். அவர்கள் பெரும்பாலும் தம்மை நியாயப்படுத்துவதற்காக ஏனைய இயக்கங்களிலிருந்த சற்றுப் பேசத் தெரிந்தவர்களை ஆலோசகர்களாக நியமித்துக்கொண்டனர்.

தமது எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக வெறித்தனமான புலிகள் இயக்க விசுவாசிகளாக அவர்கள் தமது போலித்தனத்தை வெளிப்படுத்திக்கொள்கின்றனர். ஏகாதிபத்தியங்களும் அவற்றின் உளவுப்படைகளும் புலிகள் இயக்கப் போராளிகளைப் போர்குற்றத்திற்காகத் தண்டிக்கும் போது முதலில் காட்டிக்கொடுப்பவர்கள் இவர்களாகத்தானிருப்பார்கள்.

புலிகளை அழித்து சொத்துக்களைக் கையகப்படுத்திக்கொண்ட புலம்பெயர் பினாமிகளில் பெரும்பகுதியினர் தாம் சார்ந்திருந்த இயக்கங்களின் தோழர்களை நினைவுகூர்வதில்லை.

இந்த வியாபாரிகளின் கூட்டிணைவில் நடத்தப்படும் புலம்பெயர் மாவிரர் நிகழ்வில் ஜே.ஆர் என்ற ‘துரோகி’ தலைகாட்டமாட்டான். புலிகளின் தலைவர் பிரபாகரனையே அனாதையாக்கிவிட்டு மாவீரர் வியாபாரம் நடத்தும் இக் கூட்டத்திற்கு ஜே.ஆர் ஒரு கேடா என்ன?

(எதுவும் கற்பனையல்ல…)

Exit mobile version