Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வரலாற்று நோக்கில் தைத் திருநாள் கொண்டாட்டம் :::: வி.இ.குகநாதன்

இன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடும் ஒரு விழாவாகத் தைத் திருநாள் விழா காணப்படுகின்றது. இன்று வெறும் `பொங்கல்` என்று மட்டும் சுருங்கிப் போயுள்ள இந்தத் திருநாளினை வரலாற்று நோக்கில் பார்க்கும் ஒரு பதிவாகவே இக் கட்டுரை அமைகின்றது. சங்க இலக்கியங்களில் `பொங்கல்` என்ற சொல் இல்லை, ஆனால் `தை` குறித்து அவை பேசுகின்றன. “தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை)” என்பது தமிழ் அறிஞர்களின் கருத்து.

“தைத்திங்கள் தண்கயம் படியும்”: (நற்றிணை 80) ,

தை இத் திங்கள் தண்ணிய தரினும்”: (குறுந்தொகை 196)

இவ்வாறு பல பாடல்களில் தை சிறப்பித்துக் கூறப்பட்டாலும், பின்வரும் புறநானூற்றுப் பாடல் முதன்மையானது.

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த

ஆய் கரும்பின் கொடிக் கூரை,

சாறு கொண்ட களம் போல” : {புறநானூறு 22: 14-16}.

மேலுள்ள பாடலில் குறுங்கோழியூர்க் கிழார் என்ற சங்க காலப் புலவர் `நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன` என்கின்றார். மேலும் பெரும்பாணற்றுப்படையானது “பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்” என அறுவடை செய்யும் உழவரைப் பற்றிச் சொல்லுகின்றது. எனவே அறுவடை நாள் கொண்டாடப்பட்ட தற்கான சான்றுகள் சங்க காலத்திலேயே காணப்படுகின்றன.

பொங்கல் என்ற சொல்லானது ` புழுக்கல்` என்ற பெயரில் பழங் காலத்தில் அழைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

முகிழ்த்தகை முரவை போகிய முரியாவரிசி

விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்” : (பொருந. 113-114)

இங்கு `புழுக்கிய சோறு` என்பது `அவித்த சோறு` என்ற பொருளில் இடம்பெறுகின்றது. புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்” எனச் சிலம்பும் புழுக்கலைக் குறிக்கின்றது. சீவக சிந்தாமணியிலேயே முதன் முதலில் பொங்கல் என்ற சொல், அதே சொல்லாட்சியில் இடம்பெறுகின்றது[CE 9th cent].

மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’

மேலுள்ள சீவகசிந்தாமணிக்கு இடைப்பட்ட காலத்தில், பக்தி இயக்க காலத்திலேயே பொங்கலானது கோயில்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. “நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் “ என்ற சம்மந்தர் தேவாரத்தில் `புழுக்கல்` என்பது `பாற்சோறு ` எனக் கொள்ளப்படுகின்றது.

கல்வெட்டுச் சான்று எனப் பார்த்தால், பிற்காலச் சோழ அரசர் காலத்துக்கே வர வேண்டியுள்ளது. திருவொற்றியூர் செப்பேடுகள் சோழர்காலத்தில் ‘புதியேடு’ பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகக் கூறுகின்றன. முதல் இராசேந்திரனின் காளகத்தி கல்வெட்டில் `பெரும் திருவமுது` (பொங்கல்) படைக்கப்பட்ட தகவலைத் தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். இதுவே பொங்கலின் சுருக்கமான வரலாறாகும்.

முடிவாக, பாவை நோன்பு எனும் விழாவுடன் தொடங்கி, தை நீராடல், புழுக்கல் என ஒரு தொடர் விழாவாகக் கொண்டாடப்பட்ட தைத் திருநாள் விழாவினை தை மரபுத் திங்கள் எனக் கொண்டாடுவதே பொருத்தமானது. இன்று இதனை `போகி` [பழைய ஆண்டினைப் போக்குவதால் போகி], தமிழ்ப் புத்தாண்டு, சிறுவீட்டுப் பொங்கல் [சிறுவர்களின் பொங்கல்], காணும் பொங்கல், கறிப் பொங்கல் எனக் கொண்டாடுவதே பொருத்தமானது.

மேலும் அறிய

https://www.vinavu.com/2020/01/08/tamil-new-year-a-critical-view/

தைப்பொங்கல் – ஒரு வரலாற்று நோக்கு : பனிவெளி

அறியப்படாத தமிழ்மொழி : முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான்

https://inioru.com/when-is-tamil-new-year/

Exit mobile version