Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகளிரின் பால்நிலைச்சமத்துவத்தினை மறுதலிக்கும் மதங்கள் :வி.இ.குகநாதன்

மார்ச் 8 இல் இன்னொரு அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறபோதிலும், இன்றும் பெண்கள் பால்நிலை சமத்துவத்திற்கு வெகுதூரத்திலேயே உள்ளனர்.

உலகளவிலேயே இன்றளவும் மிகமிக ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் என்றால் அது பெண்கள்தான். இதனைத் தரம், அளவு (quality and quantity)என்ற இரு கோணங்களிலும் நிரூபிக்கமுடியும். பெண் ஒடுக்குமுறைக்குப் பல காரணங்களிருந்தபோதும் அவற்றுள் மிக முக்கிய இடத்தினை வகிப்பது மதமேயாகும்.

மற்றைய அடக்குமுறைகளை ஆகக்குறைந்தளவு மனதளவிலேனும் எதிர்க்கமுடியும், ஆனால் மதரீதியான ஒடுக்குமுறையினை மனதளவில் எதிர்ப்பதற்குக்கூட தெய்வக்குற்றம் என்றரீதியில் பயப்படவேண்டியுள்ளது. மற்றைய ஒடுக்குமுறைகள் மனிதருடன் தொடர்புடையது ஆனால் இந்த மதரீதியான ஒடுக்குமுறையானது கேள்விகளிற்கப்பாற்பட்ட கடவுள் தொடர்பானது. எனவேதான் மதமே பெண் ஒடுக்குமுறைகளில் கடுமையானது.

மதங்களினை நோக்கி இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போதெல்லாம் மதங்களில் தவறில்லை, மதங்களினைப் பின்பற்றுவோரிலும், மதகுருமார்களிலுமே தவறு என்றுகூறி மதங்களிற்கு காலகாலமாக வெள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. இவ்வாதத்தினை எதிர்கொள்வதற்காகவே இந்த சிறு ஆய்வில் மதங்களின் புனிதநூல்களில் இடம்பெற்றுள்ள பெண்ணடிமைத்தனக் கருத்துகளும் அவற்றின் நடைமுறைகளும் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுசெய்யப்படுகின்றன. இப் புனிதநுல்கள் கடவுளால் அருளப்பட்டவை என்று மதங்கள் கூறுவதனால் மேற்குறித்த மதங்களிற்கு வெள்ளையடிக்கும் முயற்சி இங்கு பலனளிக்காது.

இந்துமதத்தின் பெண்ணடிமைத்தனம்:

மற்றைய மதங்களில் புனிதநூலிருந்துதான் பிரச்சனைகள் ஆரம்பிக்கும் என்றால் இந்துமதத்தில் புனிதநூல் எது என்பதிலேயே பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்தச்சிக்கலிற்குள் சிக்காமல் இந்துமத புனிதநூல்களில் எவ்வாறு பெண்ணடிமைத்தனம் நியாயப்படுத்தப்படுகிறது எனப்பார்ப்போம். பகவத்கீதையின் 9வது இயலின் 32வது பாடலில் (9:32)பெண்கள் அனைவருமே (சாதிவேறுபாடின்றி )பாவயோனியில் பிறந்த பாவிகள் எனக்கூறப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் அனைவரும் சூத்திரர், வைசியருடன் சேர்த்து தாழ்த்தப்பட்டவர்களாகக் கூறப்படுகிறது. இதனாலேயே சூத்திரர், வைசியருடன் பெண்களும் பூசகர்களாக வரமுடியாதநிலை (கருவறைத்தீண்டாமை), அவர்களிற்கு கல்விகற்கும் உரிமையில் பாரபட்சம் போன்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

மேலும் கீதையில் கர்மா(முற்பிறவிப்பலன்)என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் எழுச்சியடையமுடியாத நிலை நுட்பமாக தோற்றுவிக்கப்பட்டது. ரிக் வேதத்தின் ஒரு பகுதியில் (Rig veda8:33:17)பெண்கள் புத்திக்கூர்மை குறைந்தவர்களாகக் கூறப்படுகிறது. யசூர் வேதமும்(Yaiur veda-Taittriya samhita)பெண்களை மந்த புத்தியுடையவர்களாகவும் பலம் (உடல், உள)குறைந்தவர்களாகவும் கூறுகிறது. இவற்றின் நீட்சியே பின்னர் பெண்புத்தி பின்புத்தி என்ற முதுமொழியாகவும், இன்றும்கூட பெண்கள் முடிவெடுக்கத்தகுதியற்றவர்கள் என்ற நிலைப்பாடாகவும் தொடர்கிறது.

மனுதர்மத்தின் ஒரிடத்தில்(Satapatha brahmana 14:1:1:31)பெண்களை பொய்யர்கள் எனக்கூற , மற்றொரிடத்தில் (manusmrthi 7:149-150)பெண்களை மிருகங்கள் மாதிரி கருதி இவற்றுடன் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும் எனக்கூற, மேலுமொரிடத்தில்(manusmrthi 9:2-4) பெண்கள் பகல் இரவு எனஎப்போதும் ஆண்களில் தங்கியிருக்கவேண்டும் எனவும் பெண்கள் சுதந்திரத்திற்குத் தகுதியற்றவர்கள் எனத்தெளிவாகவும் நேரடியாகவும் கூறப்படுகிறது. ஸ்திரிதர்மானது (Stri dharma)கணவனைக் கடவுள் போல வழிபடவேண்டும் எனக்கூறுகின்றது. புனிதநூல்கள்தான் இவ்வாறு என்றால் புராணங்களின் நிலை இன்னமும் மோசம். இராமயணத்தில் சீதையின் தீக்குளிப்பு , சூர்ப்பனகை மார்பு, மூக்கு என்பன அறுப்பு என கேவலமான முறையில் இராமபிரான் என்ற கடவுள் சித்தரிக்கப்படுகிறார். மகாபாரதத்திலோ கிருஸ்ணர் கோபியப்பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது அவர்களின் உடையினை களவாடிவிட்டு, உடை தேவையாயின் நிர்வாணமாகக் குளத்திற்கு வெளியே வருமாறு கூறப்படுகிறது. இதற்கு விளக்கம் கூறும் சிலர் கடவுளிடம் மறைப்பதற்கு என்னவிருக்கிறது எனக்கேட்கிறார்கள்.

இதனையே இன்று நித்தியானந்தா, பிரேமானந்தா, யெயந்திர சுவாமிகளும் கேட்கிறார்கள் போலும். மற்றொரு சிவனின் அவதார புராணக்கதையினை அடிப்படையாகக்கொண்டே சதி, உடன்கட்டையேறல் போன்ற முறைகள் 19ம் நூற்றாண்டு வரை நடைமுறையிலி ருந்து பின்பு ஆங்கிலேயர்களால் சட்டமூலம் தடைசெய்யப்பட்டது. ஆயினும் இன்றுவரை கணவனை இழந்த பெண்கள் விதவைகள் எனக்கூறப்பட்டு பல்வேறு அவலங்களிற்கு உள்ளாக்கப்பட்டுவருகிறார்கள்.

மேலும் கடவுள்களிற்கே பல மனைவிகள் எனக்கூறப்பட்டு பலதார மணம் ஊக்குவிக்கப்படுகிறது. இவற்றின் உச்சமாக நளாயினி கதை காணப்படுகிறது. இவ்வாறு இந்துமதத்தின் பெண் ஒடுக்குமுறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கிறிஸ்தவமும் பெண்ணடிமைத்தனமும்:

கிறிஸ்தவ மதத்தினைப் பொறுத்தவரையில் பெண்அடிமைத்தனமானது மனிதனின் படைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது. அதாவது (Genesis 2:4- 3:24)முதலில் ஆண் படைக்கப்பட்டு, பின்பு ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண் படைக்கப்பட்டாள் என்பதன் மூலம் ஆண்களிற்கான முன்னுரிமையும், பெண்களின் தங்கியிருக்கும் நிலையும் வெளிப்படுத்தப்படுகிறது. இதன் உச்சமாக ஆணின் மகிழ்சிக்காகவே பெண் படைக்கப்பட்டாள் எனக்கூறப்படுகிறது. (Genesis 2:18-20) (Woman was created for the glory of the man). மேலும் வைபிளின் சில பகுதிகளை(Luke1:41 & Luke 18:15) ஆதாரமாகக்கொண்டு பெண்களிற்கு அவர்களின் உடல் மீதான உரிமையே (கருக்கலைப்பு உரிமை ) மறுக்கப்படுகிறது.

இதனால் சிக்கலான மருத்துவநிலைகளின்போது கூட கருக்கலைப்பு உரிமை மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டு தாய் மரணிக்கும் சந்தர்ப்பங்களும் இடம்பெறுகின்றன. வைபிளின் இன்னொரு பிரிவில் (Genesis 3:16)காணப்படும் “துன்பத்தில் பிள்ளை பெறுவாய்” என்ற வசனமும் பெண்ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாகே உள்ளது. இதன் நீட்சியாகவே இங்கிலாந்தினைச் சேரந்த ஐேம்ஸ் யங் சிம்சனால் மயக்கமருந்து (chloroform) கண்டுபிடிக்கப்பட்டபோது கிறிஸ்தவ திருச்சபை கடும் எதிர்ப்பினை வெளியிட்டது.

ஏனெனில் இந்த மயக்கமருந்தினைப் பாவித்து பிரசவநோக்கிலான அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் . (Genesis 3:16)காணப்படும் “துன்பத்தில் பிள்ளை பெறுவாய்” என்ற தேவவசனம் பொய்த்துப்போகும் என்ற பயமே காரணமாகும். இப்போது புரிகிறதா மதத்தின் மனிதாபனம். மேலும் பழைய ஏற்பாட்டில் புதைந்திருக்கும் பெண்ணடிமைத்தனக்கருத்துகளோ கணக்கிலடங்காது.

இஸ்லாமும் பெண்அடிமைத்தனமும்:

குரானினில்(Quran 4:3)ஆண்களிற்கு பலதார மனைவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர் முகமது நபிகளிற்கு 12 மனைவிகள், அதில் முக்கியமான ஆயிசாவிற்கு திருமணத்தின்போது 9வயது, நபிகளிற்கு53வயது.இவ்வாறு இஸ்லாத்திற்கு முன்னுதாரணம் தரப்பட, அது இன்றுவரை பரவலாகப் பின்பற்றப்பட்டுவருகிறது . குரானின்படி(4:11) சொத்துப்பங்கீட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது. அதாவது சொத்தில் இரு பங்கு ஆணிற்கு , பெண்ணிற்கு ஒரு பங்கே உரித்துடையவர். இன்னொரு பகுதியில்(2.282)சாட்சி சொல்லும் விடயத்தில் ஒரு ஆணின் சாட்சிக்குப்பதிலாக இரு பெண்களின் சாட்சி தேவைப்படுகிறது. இவற்றின் உச்சமாக அமைகிறது வசனம்(4:15) இதன்படிபெண் ஏதாவது மானக்கேடான செயலில் ஈடுபட்டாள் என்று சந்தேகதித்தாலேயே அவளை மரணம்வரை வீட்டிலேயே தடுத்துவைக்கும் அதிகாரம் ஆணிற்கு வழங்கப்படுகிறது. மனைவியினை அடிப்பதனை நியாயப்படுத்துவதாகவும், பெண் தன்னைத்தானே நிர்வகிக்கமுடியாதவள் எனவும் குரான்(4:34) குறிப்பிடுகிறது.

குரானது(4:24) வசனமானது போரில் கைப்பற்படும் பகுதியிலுள்ள பெண்களை எவ்வாறு நடத்துமாறு கூறுகிறது என்றால் அது நாகரீக உலகமே வெட்கித்தலைகுனிய வேண்டியவிடயம். இதற்கு வேறு விளக்கம் கூறுவோர் தயவுசெய்து முகமது படையினரின் வரலாற்றினையும், முகமது வழிநடத்தலையும் ஓரு முறை திரும்பிப்பார்ப்பது நல்லது. இதன் நீட்சியே இன்றைய IS பயங்கரவாதிகளின் பாலியல் கொடுமைகள். இதே வசனத்தினை (4:24)அடிப்படையாகக்கோண்டே சவூதியிலிருந்து சடலங்களாக திரும்பிவரும் வீட்டுப்பணிப்பெண்களின் (அடிமைப்பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் ) விடயத்தினையும் நோக்கவேண்டும். பெண்களின் நிலமை மிக மோசமாக உள்ள நாடுகளின்(UNDP Gender-related development index)பட்டியலில் 80வீதத்திற்கு அதிகமான நாடுகள் இஸ்லாமிய நாடுகளாகவிருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல.

பொதுவாக மதக்கலவரங்களின் போது பாதிக்கப்படும் முக்கிய பகுதியினராக பெண்கள் காணப்படும்போதும், அவர்களை ஒடுக்குவதில் மதங்களிற்கிடையில் முரண்பாடு எதுவமேயில்லை.

பெண்கள் கடந்துவந்தபாதை:

பெண்கள் இன்னமும் பால்நிலை சமத்துவத்திற்கு வெகு தொலைவிலேயே உள்ளனர் என்பது எவளவு உண்மையோ , அந்தளவு உண்மை அவர்கள் இரு நூற்றாண்டிற்கு முன்னர் இருந்தநிலையிலிருந்து வெகுதூரம் முன்னேறிவந்துள்ளனர் என்பதுமாகும்.. இந்த உலகளாவிய முன்னேற்றத்திற்கு இரு நிகழ்வுகள் காரணமாகக்காணப்பட்டன.

1.பிரென்சுப் புரட்சி- (இதன்பின் மதமானது சட்டவாக்கத்திலும், நடைமுறைகளிலும் தூரத்தே வைக்கப்பட்டது)

2. சோவியத்தின் சோசலிசப்புரட்சி- (இதன்போது மதத்தின் இருப்பே கேள்விக்குள்ளானது)

இவ்விரு நிகழ்வுகளின் பின்னரே பெண்களிற்கு வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்துரிமை போன்ற உரிமைகள் உறுதிசெய்யப்பட்டு அவர்களின் நிலையானது உலகளாவியரீதியில் முன்னேற்றம் கண்டது. மதப்பாரம்பரியங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நிலமை இன்றும் மோசமானதாகவே இருந்திருக்கும்.

பெண்களின் இன்றைய நிலை:

கடந்தகாலத்தினைப் பார்த்தோம். இப்போது நிகழ்கால நடைமுறைக்குக்கு வருவோம். அண்மையில் யுனெஸ்கோ ஆதரவில் UNDP இனால் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் வாழ்க்கைத்தரம், பெண்களின் உரிமைகள் தொடர்பான ஆய்வின்(UNDP Gender-related development index)முடிவில் ஒரு தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அத்தரவரிசையில் அடிமட்டநிலையில் மோசமான நிலையிலுள்ள நாடுகளாவன முறையே ஆப்கானிஸ்தான், கொங்கோ குடியரசு, ஈராக், நேபாளம்(உலகின் ஒரேயொரு இந்துநாடு), சூடான், கௌதமாலா,மாலி, பாகிஸ்தான், சவூதிஅரேபியா, சோமாலியா ஆகியனவாகும். இந்த நாடுகள் எல்லாவற்றையும் நோக்கினால் பொதுவான அம்சம் யாதெனில் இவற்றில் மதரீதியான சட்டங்கள் , மதப்பாரம்பரியங்கள் என்பன கடுமையாகப் பின்பற்றப்படுவதே அப் பொதுவான இயல்பாகும்.

உதாரணமாக சவூதியினை எடுத்துக்கொண்டால் அது செல்வந்த நாடாகக்காணப்பட்டபோதும் இப் பட்டியலில் மோசமான நிலையில் காணப்படுவதற்கு மதத்தின் பங்களிப்பே முக்கியகாரணமாகும். அதேபோன்று அப்பட்டியலில் சிறப்பான நிலையிலுள்ள நாடுகளினை (முறையே ஐஸ்லாந்து, நோர்வே, அவுஸ்ரேலியா, கனடா, அயர்லாந்து, சுவீடன், சுவிஸ்லாந்து, யப்பான், நெதர்லாந்து, பிரான்ஸ்)எடுத்துக்கொண்டால் இவற்றில் மதரீதியான சட்டங்கள்,பாரம்பரியங்களை விட பொதுச் சிவில் சட்டத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.எனவே இந்த தரவரிசைப்பட்டியலானது மதப்பாரம்பரியங்களிற்கும் பெண்களின் வாழ்கைக்குமுள்ள நேரடித்தொடர்பினை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

முடிவு;

முடிவாகக்கூறுமிடத்து மதங்களானது ஆணாதிக்கவாதிகளால் பிற ஆதிக்க நோக்கங்களுடன் பெண்ணடிமைத்தனத்தினையும் நிலைநாட்டும் நோக்குடனேயே தோற்றுவிக்கப்பட்டன. மதப்புனிதநூல்கள் , மதப்பாரம்பரியங்கள் என்பவும் இவ்வாதிக்க நோக்கத்துடனேயே தோற்றுவிக்கப்பட்டன. மதப்பிற்போக்குத்தனத்தினை உடைப்பதன் மூலம் மட்டுமே பெண்விடுதலை சாத்தியமில்லைத்தான், ஆனால் இந்த மதப்பிற்போக்குத்தன மறுப்பின் மூலம் பெணவிடுதலைக்கான முக்கிய ஒரு தடைக்கல் உடைக்கப்படும். இந்த உண்மையினை உணராதவ ரையில் மார்ச்-8 மகளிர் தினங்கள் வெறும் சம்பிரதாயச்சடங்குகளாகவே அமையும்.

Exit mobile version