Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பஞ்சாப் : வர்க்கம் – சாதி – நிலம் ! : மருதையன்

போலீசின் தண்ணீர் பீரங்கியைத் தனது மார்பில் எதிர்கொண்டு நின்ற இளைஞனை, விவசாயிகள் போராட்டத்தின் குறியீடாக சமூக ஊடகங்களில் பலரும் கொண்டாடியதை நாம் அறிவோம். அந்த “வீரத்தை” பகத்சிங் மண்ணின் இயல்பு எனப் புரிந்துகொண்டு பலர் மகிழ்ந்தனர்.

இதே நாட்களில் வயர் இணையதளத்தில் புக்ராஜ் சிங் என்ற தலித் இளைஞரின் கட்டுரையொன்று வந்திருந்தது. “பஞ்சாபில் நிலவுகின்ற கொடிய சமூக ஏற்றத்தாழ்வினை இந்த விவசாயிகள் போராட்டம் மறைத்துவிடக் கூடும்” என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு.

பஞ்சாபின் விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்களை, ஜாட் சீக்கிய விவ்சாயிகள், கொடிய சாதிய ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுத்துகிறார்கள் என்பதை அக்கட்டுரையில் அவர் சுருக்கமாக விவரிக்கிறார். தண்ணீர் பீரங்கியை எதிர்கொண்டு நின்ற அந்த “சூப்பர் மேன்”, பிம்பத்திற்கு உள்ளே ஜாட் சாதிப் பெருமிதம் ஒளிந்திருப்பதை அவர் கவனப்படுத்துகிறார்.

“சாதிக் கொடுங்கோன்மையை எதிர்த்துப் பிறந்த சீக்கியத்தில் இன்று சாதி ஆதிக்கம் கோலோச்சுகிறது. மீள முடியாத கருந்துளையில் வீழ்ந்திருக்கிறது பஞ்சாபின் விவசாயக் கொள்கை. தனது நெருக்கடியின் சுமை முழுவதையும் தலித் தொழிலாளியின் மீது சுமத்துகிறான் பஞ்சாப் விவசாயி. .. வேளாண் சட்டத்தில் எத்தனை குறைகள் இருப்பினும், விவசாயப் பொருளாதாரத்தில் ஒரு சுதந்திரச் சந்தை தேவை என்பதை மறுக்கவியலாது…

ஆக்கம் வரவேண்டுமானால் ஒரு அழிவு தேவைப்படுகிறது… தண்ணீர் பீரங்கியை எதிர்கொண்டு நிற்கும் அந்த சூப்பர்மேனின் இடத்தில், ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான தொழிலாளி, பஞ்சாபின் குறியீடாக அமைய வேண்டும்” என்கிறார் புக்ராஜ் சிங்.

தலித் மக்கள் மீதான சாதி – வர்க்க ஒடுக்குமுறை மீதான கவனத்தை இந்தப் போராட்டம் பின்னுக்குத் தள்ளுகிறது என்பது உண்மை. அதே நேரத்தில், புக்ராஜ் சிங் விரும்புகின்ற மகிழ்ச்சியான தொழிலாளியையும், நிலப்பிரபுத்துவத்தின் அழிவையும், சுதந்திரச் சந்தையையும் மோடியின் வேளாண் சட்டங்கள் கொண்டுவராது என்பதும் உண்மை.

சாதி – வர்க்க ஒடுக்குமுறை தோற்றுவித்திருக்கும் கசப்புணர்ச்சியிலிருந்து “அழிவை வரவேற்கும் மனநிலைக்கு” ஒருவர் ஆட்படக்கூடும். அத்தகைய அழிவின் காரணமாக கூடுதல் பாதிப்புக்கு ஆளாகின்றவர்களும் தலித் மக்களாகவே இருப்பர். இதைத்தான் அனுபவங்கள் காட்டுகின்றன. இது விழுங்குவதற்குக் கடினமான ஒரு முரண் நிலை.

இந்த முரண் நிலையினூடாகத்தான் கணிசமான தலித் விவசாயத் தொழிலாளர்கள் டில்லியின் திக்ரி எல்லைப்பகுதியில் திரண்டிருக்கின்றனர். 300, 400 கி.மீ பயணம் செய்து வருவதற்கான டிராக்டர் போன்ற வசதிகள் அவர்களிடம் கிடையாது. இருந்தாலும் வந்திருக்கிறார்கள். “ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுடன் வந்திருக்கிறோம்” என்று விவசாயிகள் பலர் சொல்கிறார்களே, அதுபோன்ற பொருளாதார பலமெல்லாம் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடையாது.

இருப்பினும் விவசாயத் தொழிலாளர்கள் இவ்வாறு திரள்வதற்கான காரணம் என்ன என்பதை பஞ்சாபைச் சேர்ந்த கீர்த்தி கிசான் யூனியன், பஞ்சாப் கிசான் யூனியன் தோழர்களிடம் கேட்டோம். புதிய தாராளவாதக் கொள்கைகள் ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கின்ற அழிவும், புதிய வேளாண் சட்டங்கள் தோற்றுவிக்கக் கூடிய பேரழிவும், தாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டு வரும் சாதி – நிலம் – கூலி தொடர்பான பிரச்சனைகளைக் காட்டிலும் பாரதூரமானவை என்ற புரிதலுக்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, இந்த மூன்று சட்டங்கள் நியாயவிலைக் கடைகளையும், இருக்கின்ற உணவுப் பாதுகாப்பையும்கூட ஒழித்து விடும். உணவுப்பொருட்களின் விலையேற்றம் கட்டுக்கடங்காததாகிவிடும்.

“ஏற்கனவே விவசாயம் கட்டுப்படியாகாமல் கடன் வலையில் சிக்கியிருக்கும் ஜாட் சாதியைச் சேர்ந்த சிறு விவசாயிகள், மேலும் கடன் வாங்கி தங்கள் பிள்ளைகளில் ஒருவரையாவது வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகக்கூட அனுப்பி வைக்கும் நிலைதான் உள்ளது. தங்கள் கடனை சமாளிக்க வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் அனுப்பும் பணத்தை சார்ந்திருக்கும் நிலையும் இருக்கிறது.”

“பஞ்சாபின் தொழில்துறை, சேவைத்துறை உள்ளிட்ட அனைத்தும் பெரும்பாலும் விவசாயம் என்ற அச்சை மையமாக வைத்தே சுழல்கின்றன. இந்த மூன்று சட்டங்களில் விளைவாக விவசாயம் அழியுமானால், போவதற்கு இடமில்லாமல் பெரும் பாதிப்புக்கு முதலில் ஆளாகப் போகிறவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

சாதியுடன் – “உடன்படுக்கை” முதலாளித்துவம்

வேளாண் சட்டங்கள் நிலப்பிரபுத்துவ உறவுகளின் இடத்தில் முதலாளித்துவ உறவுகளைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பைத்தான் “ஆக்கத்தை நோக்கிய அழிவு” என்ற சொற்றொடர் மூலம் வெளிப்படுத்துகிறார் புக்ராஜ் சிங். ஆக்கபூர்வமான எதையும் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப் போவதில்லை.

இந்த சட்டங்கள் பின்தங்கிய உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போவதில்லை. முன்னர் கார்ல் மார்க்ஸ் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டதைப் போல, “புதியது எதையும் பெறாத, இருப்பதையும் பறி கொடுக்கின்ற” நிலையைத்தான் இது தோற்றுவிக்கப் போகிறது.

இது கார்ப்பரேட் உணவு மற்றும் சில்லறை விற்பனைக் கழகங்களுக்குத் தோதான முறையில் வேளாண் சந்தை விதிகளை மாற்றியமைக்கும் சீர்திருத்தமேயன்றி, விவசாய சீர்திருத்தமல்ல. விவசாய சீர்திருத்தம் என்பது இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கமாக என்றைக்கும் இருந்ததில்லை.

முதலாளித்துவம் என்பது வரலாற்றின் விளைபொருள். எல்லா நாடுகளிலும் அந்தந்த நாட்டின் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக பொருளாதார உறவுகளிலிருந்து அது எழுகிறது. முதலாளித்துவத்துக்கு முந்தைய உறவுகளையும், நிறுவனங்களையும் அது துடைத்து ஒழித்துவிடுவதில்லை. பழைய உறவுகளில் தன் வளர்ச்சிக்குத் தேவையான பிற்போக்குகளைப் பராமரிக்கிறது, பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறது.

தத்தம் நாட்டின் வரலாற்றுப் பின்புலத்துக்கு ஏற்ப, பெண்கள் மீதான பாலின ஆதிக்கம், வெள்ளையின ஆதிக்கம், மத நிறுவனங்கள், சாதி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாத “தூய முதலாளித்துவம்” என்பது இல்லை. முதலாளித்துவம் வேர் பிடித்த நாடு என்று கூறப்படும் அமெரிக்காவில் இன்றளவும் நிலவுகின்ற கருப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், சமீபத்திய “பிளாக் லைவ்ஸ் மேட்டர்” போராட்டமும் இதற்குச் சான்று.

அந்த வகையில், காலனியாதிக்கத்தின் கூட்டாளியாக வளர்ந்த இந்தியத் தரகு முதலாளித்துவத்துடன் பிறப்பிலிருந்து பின்னிப் பிணைந்தே இருந்து வருகிறது நிலப்பிரபுத்துவம். எனவேதான், விவசாயத்தில் ஏற்கனவே நிலவி வந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் விதத்திலான நிலச் சீர்திருத்தம் எதுவும் இங்கு அமல்படுத்தப் படவில்லை.

அந்த அடித்தளத்தின் மீது கொண்டு வரப்பட்டதுதான் பசுமைப்புரட்சி,. இது இடைநிலை ஆதிக்க சாதி பணக்கார விவசாய வர்க்கத்தை நாட்டின் பல பகுதிகளில் உருவாக்கியது. பஞ்சாப், அரியானா, மேற்கு உ.பி ஆகிய பகுதிகளில், இந்த வர்க்கத்தினரில் முக்கியமானவர்கள் ஜாட் சாதியினர். அந்தப் பகுதிகளில் சமூக பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் பல்வேறு கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்துபவர்கள் இவர்கள்தான்.

தற்கொலைகள் கூறும் உண்மை என்ன?

1990 களில் தொடங்கியது பசுமைப் புரட்சியின் வீழ்ச்சி. உரம், பூச்சி மருந்து போன்ற உள்ளிடு பொருட்கள் மற்றும் டிராக்டர், எந்திரங்கள், பம்புசெட்டுகள் போன்றவற்றுக்கான செலவு அதிகரிப்பு, அதன் விளைவான கடன், இன்னொரு புறம் விலைவீழ்ச்சி, நிலத்தின் வளம் குன்றுதல் போன்ற பல பிரச்சனைகளை பசுமைப்புரட்சி கொண்டு வந்தது.

பசுமைப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் தீவிரமடையத் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் புதிய தாராளவாதக் கொள்கைகளும் அறிமுகமாகத் தொடங்கின. உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனை அடிப்படையில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு வெட்டு, கொள்முதல் குறைப்பு, வங்கிக் கடன் வெட்டு உள்ளிட்ட “சிக்கன” நடவடிக்கைகள் அறிமுகமாகத் தொடங்கின. பல்வேறு மாநிலங்களில் பெருமளவிலான விவசாயிகளைக் கடனாளிகளாக்கி, தற்கொலைக்குத் தள்ளியவை இந்தக் கொள்கைகள்தான்.

2012-17 ஆம் ஆண்டுகளில் பஞ்சாபை ஆண்ட சிரோமணி அகாலி தளம் – பாஜக கூட்டணி அரசின் உத்தரவுப்படி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழகம், குருநானக் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வின்படி, 2000 – 2015 வரையிலான 15 ஆண்டுகளில் பஞ்சாப்பில் மட்டும் 16,606 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில்

44% பேர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு ஹெக்டேருக்கும் (2.4 ஏக்கர்) குறைவான நிலம் உள்ள குறு விவசாயிகள்.

30% பேர் 2 ஹெக்டேர் வரை நிலமுள்ள சிறு விவசாயிகள்.

18% பேர் 2.5 ஹெக்டேர் வரை நிலமுள்ள அரை – நடுத்தர விவசாயிகள்,

7% பேர் 4 ஹெக்டேர் வரை நிலம் உள்ள நடுத்தர விவசாயிகள்.

1% பேர் 4 ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள பணக்கார விவசாயிகள்.

வர்க்கத் தரம் குறையக்குறைய தற்கொலை விகிதம் கூடுவதை நாம் அவதானிக்க முடியும்.

பஞ்சாபில் 85.7% விவசாயக் குடும்பங்கள் கடன் பிடியில் சிக்கியிருக்கின்றன. அவர்களுடைய சராசரிக் கடன் ரூ.5.52 லட்சம். உள்ளீடு பொருட்கள் மற்றும் எந்திரங்கள்தான் இந்தக் கடனுக்கு முதன்மைக் காரணம். விவசாயத் தொழிலாளர்களைப் பொருத்தவரை அவர்களுடைய சராசரிக் கடன் 91,000 என்று கூறுகிறது இந்த ஆய்வு.

“தலைகீழ் குத்தகை” – மெல்லச் சாகும் சிறுவீத உற்பத்தி!

அரசின் விவசாய சென்சஸ் 2015-16 அளிக்கின்ற புள்ளிவிவரங்களின் படி, பஞ்சாபில் 33.1% சிறு – நடுத்தர விவசாயிகள், 33.6% அரை நடுத்தர விவசாயிகள். அரியானாவில் 68.5% சிறு நடுத்தர விவசாயிகள்.

இந்திய அளவில் விவசாய நிலவுடைமையின் அனைத்திந்திய சராசரி என்பது 1.08 ஹெக்டேர் என்ற அளவிலேயே உள்ளது. ஆனால் பஞ்சாபின் சராசரி நிலவுடமையின் அளவு 3.62 ஹெக்டேர்.

1990-91 இல் நாடு முழுவதும் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 8 கோடி 35 லட்சமாக இருந்தது. 2010-11 இல், இது 11 கோடியே 76 லட்சமாக அதிகரித்து விட்டது. வாரிசுகளிடையே நிலம் பங்கிடப்படுதல் காரணமாக ஏற்படும் நிலச்சிதறலே இதற்குக் காரணம்.

பஞ்சாபின் நிலைமை இதற்கு நேர் எதிரானது. 1990-91 இல் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் பஞ்சாபில் 5 லட்சம் பேர் இருந்தனர். 2010-11 இல் இவர்களின் எண்ணிக்கை 3. 6 இலட்சமாக க் குறைந்து விட்டது. காரணம் தலைகீழ் குத்தகை முறை.

பண்ணையார்கள் தமது நிலத்தை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு விட்டதும், அந்த குத்தகைதாரர்களின் உரிமைக்காக கம்யூனிஸ்டுகள் போராடியதும் அந்தக் காலம். இப்போது பஞ்சாபில் நாம் காண்பது, சிறு விவசாயிகள் பணக்கார விவசாயிகளுக்குத் தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுகின்ற “தலைகீழ் குத்தகை” முறை (Reverse tenancy).

பஞ்சாபில் மொத்த விவசாயிகளில் 30 முதல் 35% பேர் தமது நிலத்தை இவ்வாறு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது மோடியின் பி.எம்.கிசான் திட்டம் அளிக்கும் புள்ளி விவரம்.

கடன் காரணமாக சிறு நடுத்தர விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு, நிலமற்றவர்களாகிறார்கள். அல்லது உள்ளிடு பொருள் மற்றும் நவீன எந்திரங்களுக்கு செலவிட முடியாத காரணத்தினால் தங்கள் நிலத்தை பணக்கார விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டு விவசாயத்திலிருந்தே ஒதுங்கி விடுகிறார்கள்.

கூலி குறைப்பு, குறைந்த கூலிக்கு புலம்பெயர் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துதல் போன்ற வழிமுறைகள் மூலம் தங்கள் நெருக்கடியை தலித் விவசாயிகள் மீது தள்ளி விடுகிறார்கள் நடுத்தர, பணக்கார விவசாயிகள். இந்த வர்க்க முரண்பாடு, தலித் மக்கள் மீதான ஜாட் சாதி ஆதிக்கம் என்ற வடிவத்தில் தீவிரமடைகிறது. புக்ராஜ் சிங் குறிப்பிடும் பிரச்சனை இதுதான்.

இதன் எதிர்மறையாக விவசாயத் தொழிலாளர் சங்கங்களுடன், சிறு-நடுத்தர விவசாயிகளின் சங்கங்கள் ஐக்கியப்படும் போக்கும் உருவாகி வளர்ந்து வருகிறது. இதனை இந்தப் போராட்டத்தில் நாங்கள் கண்டோம்.

“குறைந்த பட்ச ஆதவு விலை கேட்கிறீர்களே, அதே போல விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நீங்கள் கொடுக்க வேண்டுமல்லவா?” என்று விவசாயிகள் சங்கத்தினரிடம் கேட்டோம். ஒரு கணம் திகைத்தார்கள். பதிலும் சொன்னார்கள். இது பற்றிப் பின்னர் எழுதுகிறோம்.

Exit mobile version