கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணை இரண்டு தேச
மக்களின் தீர்வை பெற்றுக் கொடுக்க ஏன் பாராளுமன்றம் போகவேண்டும்? தமிழ் மக்களது எந்த உரிமை பாராளுமன்றத்தில பேசியதால கிடைச்சது? செல்வநாயகம் ,அமிர்தலிங்கம், சம்பந்தன் இவை எல்லாரும் பாராளுமன்றத்தில பாய் விரிச்சுப் படுத்தோ கிடந்தவை? அவை உரிமை வேணும் எண்டு கேட்டு ஒண்டுமே பேசவே இல்லையோ? அப்பிடிப் பேசியிருந்தால், கேட்டும் குடுக்கேல்லை எண்டா, கஜேந்திரன் எப்புடி ரண்டில ஒண்ட வாங்குவார்?
பாராளுமன்றத்தில போய் அழுது அழுது கேட்பாரோ? நேற்று ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவரிடம் கஜேந்திரன் சொல்லுறதை செய்வான் போல கிடக்கு அவருக்கே புள்ளடி போடலாமே என்று கேட்டன். அதுக்கு அவர் சொன்னார் “தம்பி, உழுற மாடு ஊருக்குள்ளையே உழும், பாராளுமன்றத்தில போய் உழவேண்டியதில்லை “என்று.
இன்னொருவரிடம் கேட்டேன் விலை போகாத தலமை , தூய்மையிலும் தூய்மை என்றெல்லாம் சொல்லுறாங்களே அவங்களை ஏன் நீங்கள் நம்பிப் புள்ளடி போடக்கூடாது என்று. அதுக்கு அந்த மனுசன் சொன்னபதில் எனக்கு கன்னத்தில விளாசினது போல இருந்திது. ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ எண்டிறது அவன் விடுற விடுகையில இல்லைத் தம்பி அவன்ர வரலாறைப் பாருங்கோ எண்டார். அதுக்குப் பிறகு சொன்னார், அடி ஆமணக்கு நுனி நொச்சி மரம் எண்டு சொன்னா நம்புறதுக்கு நான் என்ன தம்பி அடி முட்டாளோ என்று.
விலை போகாத தலைமை ஏன் அமெரிக்காவின்ர நிதி நிறுவனத்தோட நிக்குது? விலை போகாத தலைமை ஏன் அமெரிக்கன் உயர்ஸ்தானியத்துக்கு அடிக்கடி போட்டு வருது.
இரண்டு தேசம் ஒரு நாடு. சொல்லும்போது நல்லாத்தான் இருக்கு ஆனா எப்பிடி இதை எடுப்பியள் எண்டு சொல்ல வேணும் தானே. பாராளுமன்றத்தில பறந்து பறந்து சுப்பர் மான் போல அடிச்சுக் கேப்பியளோ இல்லை, நல்லூர் கோயில் வாசலில நிண்டு நாதஸ்வரத்தில ஊதிக் கேப்பியளோ இல்லை, இரணமடுக் குளத்தில குதிச்சு செத்திடுவன் ஒரு தேசத்தை தா எண்டு கேப்பியளோ இல்லை, வடமாகாண சபைக்கு முன்னாலை அவித்துப் போட்டு ஆடுவம் தீர்வு வைக்கேல்லை எண்டா எண்டு மிரட்டுவியளோ அல்லது வடிவேல் பாணியில் அமெரிக்காவுக்கு போய் கடுப்பேத்திறார் மை லோட் என்று முழங்கிக் கேப்பியளோ? எப்பிடி எடுப்பியள். சொல்லத்தானே வேணும். அக்காக்கு பிடிச்சது ஆலமரப் பேய் எண்டு சொல்லுறமாதிரி தீர்வு சொல்லுறதே? பேய் பிடிச்சா ஒரு கட்டு வேப்பிலை. குறுக்கால போவாரே நீங்கள் சொல்லுறதுக்கு பலி குடுக்க வன்னில இனிச் சனம் இல்லை.
தாத்தன் பிரசா உரிமை பறிச்சு மிஞ்சிப்போன சனத்தில கொஞ்சம் வன்னியில இருக்கு அங்கை போய் எப்பிடி ராசா வாக்குக் கேட்பியள். உங்களை நாயை விரட்டிறமாதிரி நாட்டை விட்டு விரட்டின கட்சி அள்ளிப் போடுங்கோ என்று கேப்பியளோ?
வன்னியில சனம் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு அலையுதுகள். இவங்கள் அங்கை போய் வீரம் பற்றிக் கதைக்கிறாங்கள். முல்லைத்தீவுக்குப் போன் போட்டு கேட்டேன் ஒரே கஜேந்திரன் அலை போலகிடக்கு உண்மையோ என்று. அந்தாளுக்கு கோவம் வந்திட்டுப் போல. சொல்லிச்சு அப்பன் கிடந்தானாம் கோவணத்தோட மகன் சொன்னானாம் இழுத்துப் போத்துவிடப்பா என்று. நாங்கள் பட்ட காயம் ஆறேல்லை கொழும்பில சொகுசாப் படுத்துக் கிடந்திட்டு இரண்டு கொட்டை ஒரு பழம் எண்டு வாறாங்கள் என்று.
உண்மையாய் சொல்லுங்கோ. அம்மாவாணை இரண்டு தேசம் ஒரு நாடு எண்டா என்ன? கோதாரி விழ கூட்டமைப்பை விட இவங்கள் பெரும் கில்லாடிகளாய் எல்லோ கிடக்கு. வெளிநாட்டுக் காசு. அமெரிக்காவில இருந்து அட்வைசு, எலக்சன் கேட்க முன்னாள் போராளியள். உண்ணாணை சொல்லுங்கோ இந்த முன்னால் பின்னால் போராளியள் யாரவை? மகிந்தவுக்குப் பின்னால போனவையா, சனத்துக்கு முன்னாலை போய் சரண்டைந்தவையா? அமெரிக்காவோட நிண்டு காட்டிக் குடுத்தவையா, கேபியோட போனவையா, விமான நிலையத்தில பாப்போவோட நிண்டு தப்பிப் போகாமல் கோத்தாவுக்கு காக்கா பிடிச்சவையா? யார் ராசா இந்த முன்னாள் போராளியள்?
உது என்ன விளையாட்டு? மக்கள் உயிரை வைச்சு என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு? பகிடி விட உங்களுக்கு இரண்டு தேசம் ஒரு நாடு தான் கிடைச்சுதோ? விளையாடுங்கோ. கொழும்பில இருந்து வந்து எவ்வளவு காலத்துக்குத்தான் ஆடுறியள் எண்டு பாப்பம்.
ஐயனாரே ஒரு ஆட்டுக் கிடாய் நேந்து விடுறன் இருக்கிற மீதிச் சனத்தை நீதான் காப்பாத்தோணும்