Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மதிப்புக்குரிய எம்.ஏ.நுஃமான் , மெளனகுரு …. : அசோக் யோகன்

மட்டக்களப்பில் வாக்குக் கேட்கும் பிள்ளையானுடன் எம்.ஆர்.ஸ்டாலின்
மட்டக்களப்பில் வாக்குக் கேட்கும் பிள்ளையானுடன் எம்.ஆர்.ஸ்டாலின்

எமது ஒடுக்கப்பட்ட மக்களின், அரசியல்- பொருளாதார –சமூக-கலை கலாச்சார- வாழ்வு உரிமைககள் பற்றியும் ,இலங்கை அரசு மற்றும் விடுதலை இயக்கங்களின் , கட்சிகளின், குழுக்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும், ஏகத்துவ அதிகாரத்திற்கு எதிராகவும், மனித உரிமைகளையும்- ஜனநாயகத்தையும் -சுதந்திரத்தையும் கோரி பேசிய கலைஞர்களையும், படைப்பாளிகளையும், இலக்கிய ஆர்வலர்களையும், பெருமளவிலான இடதுசாரி மரபாளர்களையும் கொண்டுதான் புகலிட இலக்கியச் சந்திப்புகள் நடைபெற்று வந்தன.

ஆனால் இன்றைய அண்மைக்கால இலக்கிய சந்திப்புக்களின் வெளிப்பாடுகள் என்னவாக இருக்கின்றன ?

கடந்த சில ஆண்டுகளில் நடந்த இலக்கியச் சந்திப்புக்கள், குறிப்பாக இலங்கையில் நடக்கும் இலக்கிய சந்திப்புக்கள், இந்த அடிப்படையான தார்மீக நெறிகளைக் கைகழுவிவிட்ட ‘’ வெறும் உயிரற்ற ஜடமாகவே ’’ இருந்துவந்திருக்கிறது என்பதனை நாம் வெளிப்படையாகக் காணமுடியும்.

எம்.ஆர்.ஸ்டாலின் – பிள்ளையான்

ஒடுக்கப்பட்ட தமிழ்- முஸ்லீம் -மலைய மக்களின் உரிமை அரசியலில் இருந்தும், ஜனநாயக கோரிக்கைகளிலிருந்தும் அன்னியப்பட்டதாகவே அன்மைய இலக்கிய சந்திப்புக்கள் இருந்து வருகின்றன.

இன்றைய இலக்கியச் சந்திப்புக்களில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், ஒடுக்குமுறையாளர்களோடும், அதிகார சக்திகளோடும் கைகோர்க்கும் மகிந்தா எடுபிடிகளாக , டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் ,கருணா, சிறீரெலோ குழு போன்றவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுபவர்களாக அல்லது இவர்களது அரசியலை ஏற்பவர்களாக இருக்கின்றார்கள் .

இவர்களே அன்மைய ஆண்டுகளின் இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்களாக, இலக்கிய சந்திப்பினுள் அதிகாரம் செலுத்துபவர்களாக வளர்ச்சி பெற்றார்கள் . இந்த அமைப்புக்களைச் சேர்ந்த பலர் அந்தந்த புகலிட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து செயல்படும் பிழைப்புவாதிகளாகவும், “காட்டிக்கொடுப்பாளர்களாவும்” இருக்கின்றார்கள். இவர்களே இன்றைய இலக்கிய சந்திப்பிலும் அதிகாரம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதை சாதாரணமாகவே நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஜனநாயகம், மனித உரிமை, அதிகாரம் தொடர்பான மீறல்களைப் பேசாது, என்றென்றும் மீளமுடியாதபடி இலக்கியச் சந்திப்பை மகிந்தா எடுபிடிகளின் ஆதரவு அமைப்பாக நிரந்தராக மாற்ற முயல்பவர்கள் இத்தகைய அரசியல்வாதிகளே. இவர்களே இலக்கியச் சந்திப்பை அதனது தனித்தன்மையை அழித்துவிட முனைப்புக் காட்டுகின்றார்கள்.

ஒடுக்குமுறையாளர்களோடும், அதிகார சக்திகளோடும் கைகோர்க்கும் – கைகோர்க்கத் துடிக்கும் பலரை நாம் அறிவோம். அவர்கள் எல்லோர் பற்றியும் நாம் கவலையுறுவதில்லை.

தலித் முன்னணி உறுபினர்களுடன் ஞானசார தேரர்

புகலிடத்திலும் ,இலங்கையிலும் இந்த பேரினவாத-மகிந்த ஒத்தோடிகள் நடாத்துகின்ற பல்வேறு நிகழ்வுகளில், சந்திப்புக்களில் கலந்துகொண்டு தங்கள் “புலமைகளை” காட்டி வரும் பலரை நாம் அறிவோம். இவர்களில் ‘’கவிஞர்கள், எழுத்தாளர்கள் , கலைஞர்கள்’’ என்று சொல்லிக்கொள்வோரும் அடக்கம். நாம் இவர்களைப் பற்றியெல்லாம் எப்பொழுதும் கதைக்க நினைப்பதில்லை. கவலை கொள்வதில்லை இவர்களின் வாழ்வு சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக்கொண்டதென்பதை நாம் அறிவோம்.

ஆனால் திரு. எம்.ஏ.நுஃமான் , திரு. மெளனகுரு போன்றவர்கள் அவ்வாறனவர்கள் அல்ல. நல்ல மனிதர்கள் என்போராகிய இவர்கள், இவ்வாறான சரணாகதி அரசியலை மேற்கொள்ளும்போது கேள்விகளும் – கவலைகளும் எமக்கு ஏற்படுகின்றன.

எமது காலத்தின் வழிகாட்டிகளாக, நம்பிக்கையாளர்களாக இருக்கும் இவர்கள் , பேரினவாத ஒடுக்குமுறை -மகிந்தா ஒத்தோடிகளோடு கொள்ளும் அரசியல் – இலக்கிய உறவானது எம்மை பயம்கொள்ளவும், அதிர்ச்சியடையவும் வைக்கிறது.

கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.-மார்ட்டின் லூதர் கிங்.

இலங்கையின் நிழல் உலக அரசியல் சகாக்களுடன் புலம்பெயர் குழுக்கள் : அசோக் யோகன்

EPDP இன் பிரச்சராக் கூட்டத்தில் முன்னை நாள் புலி கருணாகரன்

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)
 

Exit mobile version