நியூஸ் 18 குணா, செந்தில், ஆசிஃப் ஆகியோரை வெளியேற்றுமாறு “பார்ப்பனக் கும்பினியார்” இட்ட உத்தரவை பனியா கம்பெனி நிறைவேற்றவிருக்கிறது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
இவர்களைக் குறி வைத்து கொஞ்ச நாட்களாக பங்களா நாய்கள் குரைத்தன. ஒதுக்குவதற்கோ, நீக்குவதற்கோ வெளிப்படையாக சொல்லத்தக்க காரணம் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது எதிரிகளின் பலவீனம். அதுதான் நமது பலம். எதிரிகளை வெளிப்படையாக விமர்சிக்கும் தைரியம் ஊடகத்துறையினரிடம் இல்லை என்பது நமது பலவீனம். இதுதான் எதிரிகளின் பலம்.
“பிழைப்பதற்கான வழிகள் எனப்படுபவை மென்மேலும் மானங்கெட்டவையாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மானமுள்ளவர்கள் இன்னமும் நாட்டில் எஞ்சியிருக்கிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறோம். கல்லெறிந்த பத்திரிகையாளர்களே, தமிழ்ச் சமூகத்தின் மானத்தைக் காப்பாற்றியமைக்கு எங்கள் கோடானுகோடி நன்றிகள்” என்று ம.க.இ.க வின் சார்பில் அப்போது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். இன்றும் அதையே வலியுறுத்துகிறேன்.
யாராவது ஒருவரேனும், அநீதி இழைக்கும் நிர்வாகத்தின் மீது “கல்” எறியுங்கள். தொலைக்காட்சியின் “நடுநிலை – நேர்மை” என்ற நடிப்புக்குப் பின்னால் இருக்கும் வண்டவாளங்களை சந்திக்கு கொண்டு வாருங்கள்.
000
மோடிக்கு “தண்ணி” காட்டிய கரண் தபாரை, எல்லா தொலைக்காட்சிகளும் ஓரங்கட்டின. இன்று வயர் இணையதளத்தில் எல்லைப் பிரச்சனை தொடர்பாக அவர் எடுக்கும் பேட்டிகள், மோடியை துன்புறுத்துகின்றன. கரண் தபார் படத்தைப் போட்டு “சீனக் கைக்கூலி” என்று வசை பாடுகிறது ஆர்கனைசர். தனக்கு கொலை மிரட்டல் வந்தவண்ணமிருப்பதாக என்.டி.டி.வி ராவிஷ் குமார் சொல்கிறார்.
என்.டி.டி.வியின் நிதி ராஸ்தான், ஹார்வர்டில் ஆசிரியப்பணிக்குச் செல்கிறார். ஊடகப்பணியிலிருந்து வெளியேறுகிறார். இருப்பினும், பாஜக வின் சம்பித் பாத்ராவை “விவாத அரங்கிலிருந்து வெளியேறு” என்று அவர் கம்பீரமாக உத்தரவிட்ட காட்சி இன்னும் நம் கண்ணில் நிற்கிறது.
வட இந்தியாவில் பாஜக வை எதிர்த்து நிற்பவர்கள் தம் உயிரையே பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். “புலம்பெயர் தொழிலாளிகளுக்கு ரேசன் விநியோகிக்கப்படவில்லை” என்று அம்பலப்படுத்தியதற்காக இமாச்சல் பிரதேச தைனிக் ஜாக்ரன் பத்திரிகை நிருபர் மீது “பாண்டமிக் ஆக்ட்” இல் வழக்கு. இது பற்றி அவர் மோடிக்கு புகார் செய்தார். விளைவு – இன்னொரு வழக்கு. 55 செய்தியாளர்கள் கொரோனா செய்திகளுக்காக மட்டுமே வழக்கை சந்திக்கிறார்கள்.
வட இந்தியாவை ஒப்பிடும்போது தமிழகம் சொர்க்கம். உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாரேனும் ஒருவராவது உடைத்துப் பேசுங்கள். அந்த நடவடிக்கைதான் எதிரிகளை அச்சுறுத்தும்.
000
ஊடகங்களில் முதலாளிகள் போடுவது பணம் மட்டும்தான். செய்திகள், நிகழ்ச்சிகள் மூலம் நிறுவனத்தை வளர்த்து, மக்கள் மத்தியில் அந்த ஊடகத்துக்கு ஒரு அங்கீகாரத்தையும் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தியவர்கள் நீங்கள். அந்த மதிப்பை அவர்கள் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
சில கைத்தடிகள் மூலம் உங்களை மதிப்பைக் குலைக்கிறார்கள். பின்னர் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியேற்றுகிறார்கள். உண்மையை அம்பலப்படுத்தி விட்டு வெளியெறுங்கள். அதுதான் சுயமரியாதையுள்ள நடவடிக்கை. நடந்து கொண்டிருப்பது “உங்கள் தனிப்பட்ட விவகாரம்” என்று நீங்கள் கருதினால் அது பெரும் தவறு. தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சதியையும் சதிகாரர்களையும் பற்றிய உண்மைகளை வெளியிடாமல் இருப்பது, நிச்சயமாக உங்கள் தனிப்பட்ட விவகாரம் அல்ல.
பேசுங்கள். நீங்கள் இன்று வெளியேற்றப்படுவதைப் பற்றி மட்டுமல்ல, நீங்கள் பணியாற்றிய காலத்தில் திரைமறைவில் நடந்த எல்லா உண்மைகளையும் பேசுங்கள்.
தமிழகத்தில் அடித்தளமே இல்லாத பாஜக வையும், பல அநாமதேயங்களையும் தமிழக தொலைக்காட்சிகள்தான் ஆளாக்கி நிறுத்தின. “ஊடக முதலாளிகளின் ஆதாயம்” என்ற ஒரு காரணத்தைத் தவிர இந்த பார்ப்பனக் கைக்கூலித்தனத்துக்கு வேறு எந்த நியாயமும் இல்லை. “இது ஊடகநெறிக்கு எதிரானது” என்று பேசுபவர்கள் “காலச் சூழ்நிலை புரியாத முட்டாள்கள்” என்று சொல்லத்தக்க அளவுக்கு இதுவே “புதிய ஊடக நெறியாக” மாறி விட்டது.
இதுபோன்ற இருட்டடிப்புகள் இன்னும் எத்தனை, அரசியல் விவாதங்களின் நிகழ்ச்சி நிரல்கள் எப்படியெல்லாம் செட்-அப் செய்யப்பட்டன என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். உங்கள் பேச்சுதான் அந்த ஊடகத்தின் நம்பகத்தன்மையை பொதுவெளியில் கேள்விக்குள்ளாக்கும்.
000
ஊடகத்துறையில் கொரோனாவைச் சொல்லி ஆட்குறைப்பு செய்து நூற்றுக்கணக்கானோரை வெளியேற்றுகிறார்கள். அப்போதும் ஊடகத்துறையினர் சங்கமாகத் திரளவில்லை. எதிர்ப்புக் குரல் எழுப்பவுமில்லை. இதற்கு என்னதான் முடிவு?
“வெளியில் இருப்பவர்கள் பேசலாம். உள்ளே இருப்பவர்கள் பேசினால் இன்னொரு ஊடகத்தில் எப்படி வேலை கிடைக்கும்?” என்று மிகவும் இயல்பாக பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது ஊடகத்துறையில் தொழிற்சங்க இயக்கமே இல்லாமல் போனபின், கடந்த சில பத்தாண்டுகளில் வந்திருக்கும் “புதிய இயல்புநிலை”.
ஊடகத்துறையில் ஜனநாயகமே இல்லாத இந்த இயல்புநிலையை அப்படியே பராமரித்துக் கொண்டு, பாஜக வுக்கு எதிராக மட்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது எப்படி சாத்தியம்?
நான் கூறுவது குற்றச்சாட்டும் அல்ல, அறிவுரையும் அல்ல.
“இந்த சானல்களை மக்களும் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்” என்று முகநூல்களில் எழுதுகிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று எதிரிகளுக்கும் தெரியும். அதற்கான மாற்று மருந்துகளுடன்தான் பாசிஸ்டுகள் இந்த ஆட்டத்தையே தொடங்கியிருப்பார்கள்.
பார்ப்பனர்களை மட்டும் வைத்து சானல் நடத்தினால் அது தியாகய்யர் உற்சவம் போலவும், மியூசிக் அகாதமி கச்சேரி போலவும் அக்ரகாரத்தில் முடங்கி விடும் என்பது அவாளுக்கும் தெரியாதா?
வீடணர்கள் இல்லாமல் ராமனுக்கு வெற்றி கிடையாது. தமிழகத்தில் வீடணர்களுக்கா பஞ்சம்? இந்த அநீதியை எதிர்த்து நியூஸ்18 இலிருந்து எத்தனை பேர் வெளியே வரப்போகிறார்கள், எத்தனை பேர் தங்கள் தோலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களைக் கைகழுவப் போகிறார்கள் – பார்ப்போம்.
கைகழுவுகிறவர்கள் குற்றவுணர்ச்சிக்கு ஆளானதுபோல சில நாட்கள் நடிப்பார்கள். பிறகு, தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக முதலாளியை நியாயப்படுத்தி பேசத் தொடங்குவார்கள். அந்த சத்சூத்திரர்கள் பேசத்தொடங்குவதற்கு முன்னால் நீங்கள் பேசவேண்டும். “பார்ப்பன பாசிச எதிர்ப்பின் அரணாக தமிழகம் இருக்கிறது” என்ற நம்பிக்கை இந்தியாவின் பிற மாநிலங்களில் இருக்கிறது. அந்த நம்பிக்கை பொய்த்துவிடக்கூடாது. அதற்காகவாவது நீங்கள் பேசவேண்டும்.