2009 இனப்படுகொலையின் பின்னர் புலம்பெயர் நாடுகளில் கால்பந்தாட்ட கிளப்புகள் போன்ற, அடையாளத்தை வியாபாரம் செய்வதற்கான மாற்றமடைந்திருந்த மாவீரர் நிகழ்வுகள், புலிகளின் கொடிகள்,மேற்சட்டைகள்,தொப்பி,சால்வைகள் போன்றன அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் 50 ஆயிரம் வரையான மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதுண்டு. பெரும் பணச்ச்செலவில் வாடகைக்கு எடுக்கப்படும் எக்செல் மண்டபம் போன்றவற்றில் நடைபெறும் இந்த நிகழ்வின் இலாப நட்டக் கணக்குகள் வெளியிடப்படுவதில்லை. தவிர, ரெண்டருக்கு விடப்படும் சிறிய உணவகங்கள், தேனீர்க் கடைகள் போன்ற, வாகன வசதிகள் போன்ற அனைத்துமே புரட்சிகர அரசியலுக்கான ஒரு களமாக மாவீரர் நிகழ்வுகள், பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரு மதத் திருவிழா போன்றே நடத்தப்பட்டுவந்தன.
நமது சந்ததியின் ஒரு பகுதி போராடியே மாண்டு போயிருக்கிறது, அத்தனை தியாகத்தின் அரசியலையும் எதிர்கால சந்ததிக்கானதாக மாற்றுவதற்கு மாவீரர் நாள் ஒரு புள்ளியாகக் கூடப் பயன்படுத்தப்படுவதில்லை. இலங்கையில் இனப்படுகொலையை நிறைவேற்றத் துணை சென்ற பிரித்தானியக் கட்சிகளது பாராளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் செய்தியை வழமை போல வழங்கிவிட்டு அடுத்த தேர்தலில் கிடைக்கக்கூடிய சிறிய வாக்குத் தொகையை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர் தமிழ்த் தலைமைகளின் அரசியல் வியாபாரம் முன்னைப் போன்று இல்லாமைக்குக் காரணம் கொரோனா நோய்த் தொற்று மட்டுமல்ல.
இதற்கு பிரதான காரணம் மக்கள் மீதும், போராட்டத்தின் மீதும் நடத்தப்படும் உளவியல் யுத்தம். 2009 ஆம் ஆண்டு புலிகள் அழிக்கப்பட்ட சில நாட்களிலிருந்தே புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற போலிக் கதைகள் பரப்பப்படன. தென்னிந்தியாவிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பரப்பப்பட்ட இவ்வாறான கட்டுக்கதைகள் மட்டுமே 2009 இற்குப் பின்பான ஐந்து வருடங்கள் வரை பேசு பொருளாக இருந்தது.
இனிமேல் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சாத்தியமற்றது என்ற அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் உளவியல் யுத்தம் பின்னதாகக் ஆரம்பமானது. இதுவரை நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் என்பது தவறுகளே அற்ற விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இனிமேல் பிரதியடப்படமுடியாத போராட்டம் என்ற பிரச்சாரம் புலம்பெயர் நாடுகளிலிருந்து மட்டுமல்ல தென்னிந்தியாவிலிருந்தும் முன்னெடுக்கப்பட்டு அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுகிறது. ஆக,இனிமேல் போராட்டம் என்பது சாத்தியமற்றது என ஒரு சந்ததி நம்பவைக்கப்படுகிறது.
இந்த நம்பிக்கையற்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புறச் சூழல் என்பது மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளை வெற்றுச் சடங்காக மாற்றிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இது முழுமையான பண்டிகையாக மாறிவிடும். போர்க்குணமும், மனித நேயமும், மனிதாபிமானமும் அதிகாரவர்க்க எதிர்ப்பும் இணைந்திருக்கவேண்டிய ஒரு நிகழ்வு வெற்றுச் சடங்காக அழிந்து போவதற்கு அச்சம் தரும் வகையில் நடத்தப்படும் இந்த உளவியல் யுத்தமும் ஒரு காரணம்.
தவிர, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் புதைக்கப்பட்ட இடத்தில் வழமையாகக் கொண்டாடப்படும் மாவீரர் தினம் என்பது, புத்தகங்களை காவிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் வயதில் போராட்டத்திற்கு என்று மட்டும் வீடுகளிலிருந்து சென்று இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கான ஏனைய இயக்கப் போராளிகள் இந்தத் தினத்தில் துரோகிகளாக்கப்படுதை ஒரு அங்கமாகக் கொண்டிருந்தது. இது அவர்களை மீண்டும் மீண்டும் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும், புலிகள் இல்லாமல் போன பின்னரும் இதனை இக் கொலைகள் தொடர்வதன் பின்னால் மனிதாபிமானம் புதைக்கப்படுகிறது என்பதை எப்படி நிராகரிக்க முடியும்?
புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நிகழ்வு என்பது முன்னைப் போல் இல்லாமல் போனாலும், தமிழகத்திலிருந்து ஈழ அரசியலை வைத்து அரசியல் இலாபம் தேடும் சிறிய கூட்டமும் இலங்கையில் மோதிக்கொள்ளிம் வாக்குப் பொறுக்கிகளும் தமது நலன்களுக்காக இதனைப் பயன்படுத்திக்கொள்கிறார்க்ள். தமிழகத்தில் சீமானிலிருந்து, புலிகளின் பிடிக்குள் இருந்ததால் சுந்திரமாக அரசியல் செய்ய முடியாமல் இருந்தது என்று கூறி தேர்தல் அரசியலுக்கு வந்த சீ.வீ.விக்னேஸ்வரன் வரை, தமது சொந்த நலன்களுக்காக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி மாண்டுபோன ஆயிரக்கணக்கானவர்களின் தியாக உணர்வை விலை பேசுகிறார்கள்.
வரலாறு இதுவரையில் காணாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் வாக்குத் தேவையற்றது என ஒரு சனாதிபதி வெளிப்படையாகப் பேசுகிற அளவிற்கு தாம் பிறந்து வளர்ந்து வளப்படுத்திய சொந்த மண்ணிலேயே தமிழ்ப் பேசும் மக்கள் நாடற்றவர்கள் ஆக்கப்படுகிறார்கள். இனிமேல் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்ற திடத்துடன் செயற்படும் புலம்பெயர் புலிகள் ஆதரவுக்குழுக்களாகட்டும், வாக்குப் பொறுக்கும் அரசியல் வாதிகளாகட்டும் இந்த மண் எங்கள் சொந்த மண் இதைப் போராடிப் பெறுவோம் என்ற உணர்வுக்குப் பதிலாக அமெரிக்காவையோ இந்தியாவையோ அழைத்துவந்து மீட்டுக்கொள்வோம் என்று கூச்சலிடுகிறார்கள்.
இலங்கை அரசின் ஆட்சிக் கோட்பாடாகப் பேரினவாதமே காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்தியே சிங்கள மக்களின் எதிர்ப்பை இலங்கை அரசு எதிர்கொள்கிறது. எதிர்வரும் காலங்களின் தமிழ்ப் பேசும் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதுமே இலங்கை அரசின் ஒடுக்குமுறை வடிவமாக அமையும்.
புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்றும் சிங்கள மக்களை அதன் பிடியிலிருந்து காப்பாற்றுவேன் என்றும் தன்னை வெளிப்படுத்தும் கோத்தாபய ராஜபக்ச என்கிற காட்டுமிராண்டித் தனமான பேரினவாதியின் அரசு, மாவீரர் நிகழ்வுகளைத் தடை செய்தது. இன்றைய உலகின் முதல் தர அரச பயங்கரவாதியான கோத்தாபயராஜபக்சவைப் பலவீனப்படுத்தும் எந்த அரசியல் தந்திரோபாயமும் மாவீரர் தினத்தைப் பயன்படுத்தி இலாபமடையும் எந்த அரசியல் வாதியிடமும் இல்லை.
இலங்கையில் போராடாமல் விடுதலை என்பது சாத்தியமற்றது. புலிகளின் போராட்டங்களிலிருந்த அரசியல் தவறுகளைக் கற்றுக்கொண்டு புதிய விமர்சன சுய விமர்சன அடிப்படையில் போராட்டத்தைத் திட்டமிடுவதற்கு தயாரானால் மட்டுமே மாவீரர் நாள் அதன் உண்மையான அர்த்தைத்தைப் பெறும். அந்த மாவீரர் நாளில் மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளும் நினைவு கூரப்படுவார்கள். சந்தர்ப்பவாதிகளும் வியாபாரிகளும் கருவறுக்கப்படுவார்கள்.