வன்முறை பொதுக் கோட்பாடாக முன்னிறுத்தப்படும் போது அச் சமூகம் தனது அரசியல் அறத்தைத் இழந்துவிடுகிறது.
இலங்கை அதிராகவர்க்கத்தால் நஞ்சூட்டப்பட்ட சிங்கள மக்களின் ஒரு குறித்த பெரும் பகுதி பேரினவாதத்தால் ஆட்கொள்ளப்பட்ட போது அது ஒரு சமூகமாக வலுவிழந்து போனது. உழைக்கும் சிங்கள மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்ள முடியாமல் தம்மோடு இணைத்துகொள்வதற்காக பேரினவாதம் அதிகாரவர்க்கத்தால் பயன்படுத்தப்பட்டது. பெரும்பான்மை உழைக்கும் மக்களில் போலியான முகத்தையே பேரினவாதம் வெளிப்படுத்தி அவர்களை வலுவிழக்கச் செய்தது.
சிறுபான்மைத் தேசிய இனங்கள் அழித்துத் துவம்சம் செய்யப்படும் போது அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சிங்கள அறிவுசீவிகள் சமூகத்தை வலுவிழக்கச் செய்தனர். சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்படும் பெரும்பான்மையினர் தமது சொந்த வலுவை இழந்துபோயினர்.
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த 72 ஆயிரம் இஸ்லாமியத் தமிழர்கள் அவர்களது சொந்த நிலங்களிலிருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட போது தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மற்றுமொரு தடவை வலுவிழந்துபோனது.
ஏற்கனவே தன்னை வன்முறையாளர்களாக அறிமுகப்படுத்தியிருந்த விடுதலை இயக்கங்களில் பிரதானமானதும், எஞ்சியிருந்ததுமான புலிகள் முஸ்லீம்களை, அவர்களது சொத்துக்களைப் பறித்துக்கொண்டு வெளியேற்றியமை சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை மேலும் வலுவிழகச் செய்தது. அதற்கான தார்மீக நியாயம் கேள்விக்குள்ளானது.
யாழ்ப்பாணத்தில் பிறந்து பெரியவர்களாகி சந்ததிகளாக வாழ்ந்துவந்த முஸ்லீம்கள் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் அல்ல. அரசிற்கு எதிராக விடுதலை இயக்கங்கள் தோன்றிய போது பல முஸ்லீம் இளைஞர்கள் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டனர். சிலர் கொண்டாட்டங்களிலிருந்து விலக்கப்பட்ட ‘மாவீரர்கள்’ ஆகினர்.
பச்சிழம் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என்ற ஒருவர் மீதும் குறைந்தபட்ச மனிதாபிமானமும் காட்டப்படவில்லை. ஐந்து முச்சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்த் ஒஸ்மானியாக் கல்லூரியில் பல தடவைகள் இயக்கப் பிரச்சாரக் கூட்டங்க்ளைக் கேட்பதற்காக முஸ்லீம்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். இந்தத் தடவை, புலிகள் இயக்க உத்தரவின் பேரில் அவர்கள் அங்கு வந்திருந்தார்கள்.
அங்கு அவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. குழந்தகளின் காதுகளிலிருந்த தங்க ஆபரணங்கள் கூடப் பறித்தெடுக்கப்பட்டன. அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு சில மணி நேரங்களே அவகாசம் வழங்கப்பட்டது.
மறு நாள் காலை அந்த நகரத்தின் ஒரு பகுதி வெறிசோடிக் கிடந்தது. முற்றத்தில் மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காணவில்லை. தெரு நாய்கள் கூட மூலைகளுக்குள் முடங்கிக்கொண்டன.
இஸ்லாமியச் சகோதர்கள் இப்போது அங்கில்லை. சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் ஆயுதம் தாங்கிய அமைப்பு இன்னொரு மக்கள் கூட்டத்தை சுத்திகரிப்புச் செய்திருந்தது. அது போராட்டமல்ல, வன்முறை!
இரண்டு தசாப்தங்கள் கடந்து முள்ளிவாய்க்காலின் மூலையில் அந்த இயக்கமும் மக்களும் சிங்களப் பேரினவாத கொலைக் கருவிகளால் அழிக்கப்பட போது வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்னும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கவில்லை.
சிறிது சிறிதாக அரசியல் வலுவிழந்து போன புலிகள் இயக்கமும் போராட்டமும் தனிமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது.
அழிப்பின் பின்னான கடந்த ஆறு ஆண்டுகள் மீண்டும் போராட்டம் முளைவிட்டுவிடக் கூடாது என்பதில் ஏகாதிபத்திய நாடுகளும் இலங்கை அரசும் எச்சரிக்கையாகவுள்ளன.
போராட்டத்தின் நியாயத்தைக் குழிதோண்டிப் புதைத்து மண்ணைத் தள்ளி மூடிவிடுவதற்கு யாழ்ப்பாண முஸ்லீம்களின் வெளியேற்றமும் ஒரு காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஈழப் போராட்டம் என்பதே மக்கள் விரோதமானது என அரச அடியாட்களும், பேரினவாதத்தின் முகவர் குழுக்களும் பிரச்சரப்படுத்த முஸ்லீம்களின் வெளியேற்றமும் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. போரின் சன்னங்களைச் சுமந்துகொண்டு தடுப்புமுகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் முஸ்லீம்களைக் மீள் குடியேற்றுவது மட்டுமே இன்று முக்கியமானது என கூச்சலிட்ட அரச ஆதரவுக் கோமாளிகளின் மனிதாபிமானம் அப்பாவி முஸ்லீம்களுக்கானதல்ல.
அன்று முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதை வரிக்கு வரி நியாயம் சொன்ன பலர் இன்று அரசின் எடுபிடிகள். டீ.பி.எஸ். ஜெயராஜ் போன்ற ஊடகவியலாளர்களுக்கு புலிகள் அழிக்கப்படுவதற்கு முதல் நாள் வரைக்கும் தெரிந்திருக்காத நியாயம் மறு நாள் பேரினவாத அரசின் நிழலில் ஞானம் பெற்றது போல உதித்துவிட்டது.
அரச ஆதரவுக் கும்பல்களின் மறுபக்கத்தில் புலிகளின் புலம்பெயர் பினாமிகள் சுய நிர்ணைய உரிமையைக்கான போராட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்க தம்மாலான அத்தனையையும் செய்யத் தயாராகவுள்ளனர். 2002 ஆம் ஆண்டில் புலிகளின் தலைவர் பிரபாகரன் முஸ்லீம்களை வெளியேற்றியமைக்காக வருத்தம் தெரிவித்திருந்தும், புலம்பெயர் பினாமிகள் தமது பிழைப்பிற்காக வெளியேற்றத்தை நியாயப்படுத்துகின்றனர். பிரபாகரனுக்கு ஒளிவட்டம்கட்டி முள்ளிவாய்க்காலில் அழித்தத்துத் துவம்சம் செய்யத அதே பினாமிகள் போராட்டத்தின் தவறுகளைச் சுய விமர்சனம் செய்யவும், கற்றுக்கொள்ளவும் மறுப்பதற்கு அவர்களின் பிழைப்புவாத நோக்கங்களே காரணம்.
உலக மக்களுக்கு ஈழப் போராட்டத்தை இன்னும் வன்முறையாகவே காட்டிக்கொள்ளும் இவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனமும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளும், இலங்கை இந்திய அரசுகளும் முழுப் போராட்டத்தையும் நியாயமற்றது எனப் பிரச்சாரம் மேற்கொள்ளத் துணை செல்கின்றனர். அருவருப்பான இப் பேர்வளிகள், மக்கள் நலனில் அக்கறையற்றவர்கள். பேரினவாதத்திற்கு மறைமுகமாகச் சேவையாற்றுபவர்கள்.
சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயம் உலக மக்கள் மத்தியில் இன்னும் வலுவிழந்திருப்பதற்கு இவர்கள் அனைவரும் நேரடியாகப் பங்களிக்கின்றனர். இன்று முஸ்லீம் மக்களிடம் ஒவ்வொரு மனிதனும் மன்னிபுக் கேட்பது மட்டும் போதாது, அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்படுவதற்காகக் குரலெழுப்ப வேண்டும். குடியேற்றப்பட்டவர்கள் மீள வழமைக்குத் திரும்புவதற்கு அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பொதுபல சேனா போன்ற அமைப்புக்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த மண்ணில் வாழத் தலைப்படும் முஸ்லீம்களுக்குக் கிடைக்கவில்லை.