இலங்கை பேரினவாத அரசு பலமிழந்துவிடும் என்ற நம்பிக்கை ஜனநாயக முற்போக்கு இயங்களுக்கு அரும்புவிட ஆரம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள் முள்ளிவாய்க்காலிலும் தமிழர்களை இப்படித்தான் கொன்றிருப்பார்கள் என்று வெளிப்படையாக ஊடகங்களில் பேசினர். ஆனால் எந்த தமிழ் அரசியல் கட்சிகளும் சிங்கள மக்களின் போராட்டத்திற்கு ஊக்கமளித்து இலங்கை அரசை பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு துண்டறிக்கை கூட வெளியிடவில்லை.
இதற்காகவெல்லாம் சுமந்திரன் இன்று தாக்கப்படவில்லை. புலம்பெயர் மற்றும் உள்ளூர் லும்பன் அரசியல் கும்பல்களால் சுமந்திரன் மீதான தாக்குதல் அவரின் அரசியல் மீதானதல்ல. அவர்களின் நோக்கம் வேறானது. விக்னேஸ்வரன் போன்ற அடிமை ஒன்றை, தமது வியாபாரத்திற்கு வசதியாக இலங்கையில் தேடிக்கொண்டிருந்த புலம்பெயர் லும்பன் உதிரிக் குழுக்களின் வலைக்குள் சுமந்திரன் சிக்கவில்லை என்பதே சுமந்திரன் துரோகியானதற்கும் விக்கி தியாகியானதற்குமான சுருக்கமான கதை.
சுமந்திரன் மீது இந்த மக்கள் விரோதிகளால் முன்வைக்கப்பட்ட எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் இது வரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. வெறும் அவதூறுகள் மட்டும் தான். புலம்பெயர் மற்றும் உள்ளூர் சந்தர்ப்பவாதக் குழுக்களுக்கு எபோதுமே ஒரு தியாகியும் ஒரு துரோகியும் தேவைப்படுவதுண்டு. இங்கு துரோகி ராஜபக்சக்களுக்கு எதிராக வழக்காடி வென்றிருக்கிறார், தியாகி விக்கி போராளிகளுக்கு எதிராக கடுமையான தீர்புக்கள் வழங்கி அரசின் அடியாள் போல செயற்பட்ட காலங்கள் பலரால் சாட்சியாக்கப்பட்டிருக்கின்றன.
சமூகத்தின் எதிரிகளான இக் கும்பல்களின் தொடர்ச்சியான பிரச்சாரங்கள், குறுக்கு வழிகளிலான நடவடிக்கைகள், கட்சிக்கு உள்ளேயே சுமந்திரனுக்கு எதிராகத் தூண்டப்படும் அணிகள், புலம்பெயர் நாடுகளில் சுமந்திரன் பங்காற்றும் கூட்டங்களில் நடத்தப்படும் கோழைத்தனமான வன்முறைகள், அவதூறுகள் என்ற அனைத்தையும் மீறி தேர்தலில் சுமந்திரன் வென்றிருக்கிறார்.
இதனைச் சகித்துக்கொள்ள முடியாத புலம்பெயர் மற்றும் உள்ளூர் எதிரிகள் சசிகலா ரவிராஜ் உடன் இணைந்து திருட்டு வாக்குகளால் தான் சுமந்திரன் வெற்றிபெற்றார் என்ற புதிய புரளியைக் கிளப்பினர். சுமந்திரனின் எதிரிகள் கூட இறுதிவரை காத்திருந்த வாக்கு எண்ணும் மையத்தில் சுமந்திரன் கடைசி நேரத்தில் நுளைந்து வாக்குகளை மாற்றினார் என அவர்கள் மற்றொரு குற்றத்தை முன்வைத்தனர்.
இதன் மறுபக்கத்தில் தியாகியாக உருவமைக்கப்படும் விக்னேஸ்வரன், தமிழ் பாராளுமன்ற அரசியலில் கடைந்தெடுத்த குற்றவாளி.
புலிகளின் பிடிக்குள் இருந்த காரணத்தால் சுந்திரமாக அரசியல் செய்ய முடியவில்லை என 2013 ஆம் ஆண்டு வட மாகண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக தனது அரசியலை ஆரம்பித்த விக்கி, முதலமைச்சராகப் பதவேயேற்ற பின்னரும் தனது கருத்தைப் புலம்பெயர் நாடுகளுக்கு பயணம் செய்தபோது உறுதிப்படுத்தினார்.
விக்னேஸ்வரன் புலிகளுக்கு மட்டும் எதிரானவர் அல்ல, முழுப் போராட்டத்தையுமே வன்முறையாகப் பல தடவை உருவகப்படுத்தியிருக்கிறார்.
விக்னேஸ்வரனின் வடமாகண ஆட்சிக்காலத்தில் வடக்கில் நடைபெற்ற சுன்னாகம் மின் நிலையம் தொடர்பான ஊழலும் பேரழிவும் வெளிவந்தது. மலேசிய நிறுவனமான எம்.டி.ரி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் உள்ளூர் கிளையான நொதேர்ண் பவர், இலங்கை அரசின் துணையோடு வடக்கின் மின் வினியோக்கத்தைப் பொறுப்பெடுத்துக்கொண்டது. அந்த நிறுவனம் உற்பத்தியின் போது வெளியேறிய தடை செய்யப்பட்ட நச்சு எண்ணை நிலத்தின் கீழே வெட்டப்பட்ட கிணறுகள் ஊடக வெளியேற்றப்பட்டது. அக் கழிவுகள் அண்ணளவாக 5 மைல் சுற்றுவட்டத்தின் நிலக் கீழ் நீரையும் நில வளத்தையும் நாசப்படுத்தியது.
இந்த நிறுவனம் மீதான குற்றங்களை மூடி மறைத்த விக்னேஸ்வரனும் அவரது சகாவான ஐங்கரனேசனும், போலி நிபுணர் குழுவை நியமித்து நீர் மாசடைந்தமைக்குக் காரணம் மலக் கழிவுகள் என நிறுவ முற்பட்டது.
நிலக் கீழ் சுண்ணாபுப் படுகைகளில் சிக்கிய நச்சு அப்பகுதி மக்களின் உடல் நலத்தை பாதித்ததை முரளி வல்லிபுரனாதன் போன்ற மருத்துவ நிபுணர்கள் நிறுவினர். இது தொடர்பாக பேசுவதற்கு விக்கிக்கு எழுதப்பட்ட உத்தியோகபூர்வ கடிதங்கள் கிடப்பில் போடப்பட்டன. இது தொடர்பாகப் பேச மறுத்த விக்கியும் ஐங்கரநேசனும் அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டனர்.
மல்லாகம் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைசெய்து நிறுவனத்தின் செயற்பாடுகளால் நீர் மாசடைந்தது எனத் தீர்ப்பு வழங்கிய போதும், விக்கி அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஐங்கரநேசன் முழு மாகணசபையும் இணைந்தே இக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறி இறுதியில் மாகாண சபை கலைக்கப்படும் காலத்தில் ஊழல் குற்றங்களுக்காக இடை நிறுத்தப்பட்டார்.
ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான மின் நிலையங்களை சிறிய அளவில் உருவாக்கி நீரை மாசுபடுத்திய பலர் கைது செய்யப்பட்டு பல வருடச் சிறைத்தண்டனை அனுபவித்தனர். யாழ்ப்பாணக் குடா நாட்டின் மூன்றில் ஒரு பகுதிய நாசப்படுத்தத் துணை சென்ற விக்னேஸ்வரன் இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்தும் அவர்களின் உள்ளூர் அடியாள் கும்பல்களாலும் உருவாக்கப்பட்ட புதிய தேசியவாதி.
இன்று வரை தனது துணையோடு அழிந்து போன பிரதேசத்தை சுத்திகரிக்கவோ அது தொடர்பாகப் பேசவோ மறுக்கும் ஒரு மனிதன் இன்றைய புதிய தியாகி.
துரோகி தியாகி என்ற விம்பத்தை கட்டமைத்து அதனைத் தனி நபர்கள் மீதான தாக்குதலாகவும் வெறுப்பாகவும் உமிழும் கும்பல்கள் விமர்சனம் சுய விமர்சனம் என்ற அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதில்லை. சுமந்திரனின் வலதுசாரி அரசியல் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதும், விக்னேஸ்வரன் போன்ற விசவேர்கள் மக்கள் முன்னால் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் இன்றைய காலத்தின் அவசரத் தேவை.