Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பல் தேசிய நிறுவனங்களின் பகிரங்கமான‌ அடாவடித்தனங்களும், கொள்ளைகளும்…

விழித்தெழுவார்களா மக்கள்?

விளம்பரமொன்றினால் தமக்கெதிராக போராடும் போராளிகளை கேவலப்படுத்தும் “பெப்சி” எனும் பல்தேசிய நிறுவனம் – இணைப்பு

இந்திய நாட்டில் வெளியான பெப்சி நிறுவனத்தின் விளம்பரத்தில், அந்நிறுவனத்தினை எதிர்த்து போராடுபவர்களை கேலி செய்யும் வகையில், அந்நிறுவனத்தினை எதிர்த்து நடத்தப்படும் ஒரு போராட்டத்தில் பங்கு பற்றும் இளைஞர் ஒருவர், தாகத்தின் போது, “பெப்சி” ( Pepsi ) பானத்தினை அருந்துவது போன்ற காட்சி உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரம், இந்நிறுவனங்களின் ஏதேச்சையான மேலாதிக்க போக்கினை எடுத்து காட்டுவதுடன், உலகெங்கும், இந்நிறுவனங்கள், மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாது, அரசுகளின் உதவியுடன் சர்வாதிகாரமாக செயற்படுவதையும் எடுத்துக்காட்டுகின்றது.

அத்துடன் தமிழ்நாடு மற்றும் இந்திய நாட்டில் உள்ள பெரும் பகுதியான நில, நீர்ப்பரப்புகள், எண்ணெய் மற்றும் கனிம வள அகழ்வு நடவடிக்கைகளால் மாசடைய செய்யப்படுவதுடன், விவசாயிகள் மற்றும் மக்களிற்கு அத்தியாவசியமான, நீர், நில வளங்கள், அரசுகளினால் முறைகேடான முறையில், பல்தேசிய நிறுவனங்களிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் அல்லாமல், கனிம வளங்கள், இந்திய தரகு முதலாளிகளான, மிட்டல் சகோதரர்கள், அம்பானி சகோதரர்கள், அதானி, மற்றும் குறுந்தரகு முதலாளிகளுக்கும், முறை கேடான வகையில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளி நாட்டில் இருந்து போலி பெயர்களில் இயங்கும் பல்தேசிய நிறுவங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு, மக்களுக்கு சேர வேண்டிய வளங்கள் சூறையாடப்படுவதுடன், வளங்கள் முறையான அளவுகளில் அகழப்படாது, ஆய்வாளர்களால், முறையாக குறிப்பிடப்பட்ட அளவுக்கும் அதிகமா,க அகழப்பட்டு சூழல் மாசுபடுத்தப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ( இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில், மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, போலி பல் தேசிய நிறுவனத்தின் வளக்கொள்ளைக்கு அனுமதி அளித்த இராஜஸ்தான் மாநில அரசு தொடர்பான செய்திக்குறிப்புக்கு இங்கே சொடுக்கவும். ) அது மட்டும் அல்லாமல் “Nestle” எனும் நிறுவனத்தால், அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் நீர்வளம், அந்நிறுவனத்தின் தேவைக்காக, வழங்கப்பட்ட அனுமதிக்கும் மாறாக, முற்றாக உறிஞ்சப்பட்டு, அம்மாநிலத்தில் வறட்சி நிலை ஏற்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ( இது தொடர்பான கட்டுரையினை வாசிக்க இங்கே சொடுக்கவும். ) இதே போன்று, இலங்கையின் வெரிவேலியா எனும் இடத்தில், தம்மிக பெரேரா எனும் வியாபர முதலைக்கு சொந்தமான, பல்தேசிய நிறுவனம் ஒன்றினால், நீர் வளம் மாசடைய செய்யப்பட்டது என்பதுடன், அதனை எதிர்த்து போராடிய மக்களை, அரச படைகள் சுட்டு கொன்றதும் ( இது தொடர்பான கட்டுரையினை வாசிக்க இங்கே சொடுக்கவும். ), அண்மையில் அம்பாந்தோட்டை பகுதியில், நீர் வசதி கேட்டு போராடிய மக்கள் மீது, தடியடி நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்லாது ( இது தொடர்பான கட்டுரையினை வாசிக்க இங்கே சொடுக்கவும். ), அண்மையில் இலங்கையின் நீர்த்தேவைக்கு பயன்படும் களனி கங்கை, இன்னுமொரு பல்தேசிய நிறுவனமான கோக்கா கோலா நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் மாசடைய செய்யப்பட்டது என்பதுடன்( இது தொடர்பான கட்டுரையினை வாசிக்க இங்கே சொடுக்கவும். ), இலங்கையின் வட பகுதியின் நிலத்தடி நீர் வளம், நிராஜ் தேவாவின் நிறுவனமான எம்.ரி.டி வோக்கர்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எண்ணெய் கழிவினால் மாசடைய செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது( இது தொடர்பான கட்டுரையினை வாசிக்க இங்கே சொடுக்கவும். ). அத்துடன் இந்நிறுவனங்கள் மீதான வழக்குகளை அரசுகள் நிறுவனங்களிற்கு சார்பாக கிடப்பில் போடுவதுடன், குற்றவாளிகளான இந்நிறுவனத்தின் உரிமையாளர்களை, ஒரு போதும் தண்டித்ததும் இல்லை, என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், அரசுகள், இந்நிறுவனங்களின் பணம் சம்பாதிக்கும் பேராசைக்கு அமைய, நீரை முற்றிலும் உறிஞ்சுவதற்கு அனுமதி வழங்குவதுடன், மக்களின் அத்தியாவசிய தேவையான நீர்வளத்தினை, மக்களின் தேவையினை பொருட்படுத்தாது, விற்பனை செய்யும் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு, விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சம்பவங்கள், தற்போது உலகெங்கும் பல்தேசிய நிறுவனங்களின் துணை கொண்டே, ஆட்சிகள் நடைபெறுகின்றன என்பதினை எடுத்துக்காட்டுகின்றன

பல் தேசிய நிறுவன‌ங்களின் வள கொள்ளைகள், உழைப்பு சுரண்டல்கள், அவற்றினால் ஏற்படுத்தப்படும் சூழலியல் அழிவுகளுக்கு எதிராக போராடுவதுடன், அவற்றிற்கு பின்னால் இயங்கும் சதிகாரார்கள், அவற்றிற்கு சார்பாக இயங்கும் தன்னார்வ நிறுவன‌ங்கள் மற்றும், அவற்றிற்கு சார்பாக இயங்கும் அரச அதிகாரிகளை, அம்பலப்படுத்துவதன் ஊடாக, அனைவரும் ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும். தொடர்ந்தும் பல்தேசிய நிறுவனங்களினால், மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கையில், உலக நாடுகள் எங்கும் உள்ள ஆர்வலர்கள், அமைதியுடன் வேடிக்கை பார்ப்பது, கவலைக்குரியது என்பதுடன், வழமையான துறை சார் பணிகளுடன் கூடிய அமைப்புக்கள், உலக நாடுகள் எங்கும், மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதுடன், தம்மை தாமே ஆளும் வகையில், அரசினை கட்டியெழுப்ப, அனைத்து மக்களும் முன்னின்று உழைக்க முன்வரவேண்டும், என்றும் கோரி நிற்கிறோம். இன்னமும் தாமதிக்க, உலகில் உள்ள‌ அனைத்து பிரதேசங்களும், வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசங்களாக, மாற்றப்பட்டு விடும் என்பதில், சற்றும் ஐயம் இல்லை என்பதுடன், இக்கட்டுரையின் உண்மை நோக்கம் அறிந்து, மக்கள் அனைவரும் சாதி, மத, நிற, இன, மொழி, தேச வேறுபாடுகளை களைந்து, இணைந்து செயற்பட்டு, இவ்வாறான‌ பல் தேசிய நிறுவனங்களினை முற்றிலுமாக‌ கருவறுக்க போராடுவதுடன், உங்கள் உரிமைகளை வென்றெடுக்க போராட முன்வரவேண்டும்.

-தெனீசன்

Exit mobile version