கடந்த மே மாதம் 18ம் திகதி லண்டனில் நடைபெற்ற மாவீரர் தினத்தில் இரண்டு புலம்பெயர் குழுக்களிடையே அருவருப்பான மோதல் ஒன்று நடைபெற்றிருப்பதை ஊடகங்கள் மறைத்திருக்கின்றன. இந்த மோதல் இன்னும் அதிகமாகி சமூகத்தை மேலும் சிதைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தெளிவுபடுத்துவதும், இதன் பின்னால் செயற்பட்ட அழிவு சக்திகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதும் எதிர்காலத்தில் மோதலைத் தவிர்ப்பதும் அவசியமானது.
மோதல் என்பதைவிட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்ற அமைப்பின் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) மீதான தாக்குதல் என்பதே சரியாயானது என்பதைத் தகவல்கள் கூறுகின்றன.
TCC அமைப்பு தாக்குதலை ஆரம்பித்தது என்பதை அவர்களே நிராகரிக்கவில்லை. தாம் வன்முறையில் ஈடுபட்டதற்கான காரணம் புலிச் சின்னம் தாங்கிய கொடியை BTF ஏந்தவில்லை என்பதே. . பிரித்தானிய போன்ற சட்ட ஒழுங்குகள் இறுக்கமாக உள்ள நாடு ஒன்றிலேயே TCC இன் வன்முறை இது முதல்தடைவையல்ல.
TCC வன்முறையில் ஈடுபடுவதும் அதனை நியாயப்படுத்துவதற்கு என பிழைப்புவாதக் கும்பல் ஒன்றை ஏற்படுத்தி வைத்திருப்பதும், வன்முறையை அப்பிழைப்புவாதிகள் நியாயப்படுதுவதும் வழமையானது.
இந்த நிலையில் பீரீஎப் இன் சார்பில் பேசவல்ல ஒருவரைத் தொடர்புகொண்ட வேளையில் வழங்கப்பட்ட தகவல்களையும் அதன் பின்னர் பெறப்பட்ட பொதுவான தகவல்களையும் அடிப்படையாக்கொண்டு நடந்த சம்பவங்களின் சாராம்சத்தையும் அதன் சூத்திரதாரிகளையும் இங்கே தருவதற்கு முயற்சிக்கிறோம்.
மோதல்கள் தொடர்பான பீரீஎப் இன் கருத்து:
“முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மேடையை அமைப்பதகென பிரித்தானியத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்து பிரித்தானிய போலிஸ் பிரிவிடம் அனுமதி பெற்றிருந்தது. ரீசீசீ ஐச் சேர்ந்த சிலர் பீரீஎப் இற்கு முன்னதாகவே மேடை அமைக்கப்படுவதற்கான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர்.
அங்கு பீரீஎப் மோதலைத் தவிர்த்துக்கொண்டு மேடை அமைப்பதற்கு சற்றுத் தொலைவில் வேறு இடத்தைத் தெரிந்தெடுத்துக்கொண்டது. அதன் பின்னர் மேடையை வாகனம் ஒன்றில் கொண்டுவந்த பீரீஎப் இனரை ரீசீசீ குழுவினர் இடைமறித்து தங்களை மக்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிரட்ட ஆரம்பித்தனர். வாய்த்தர்க்கம் தள்ளுமுள்ளு என்பன அதிகரிக்கும் அந்த இடத்தில் மதுரா என்றழைக்கப்படும் ரீசீசீ இன் முக்கிய உறுப்பினரும் நின்றிருந்தார்.
இக்குழுவிலிருந்து பீரீஎப் சுதாகரித்துக்கொண்டு மேடை அமைப்பை முடித்துவிட்டு அங்கு நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மேடையில் ஏறி அமர்ந்த ரீசீசீ குழுவினர் கொடி ஏற்றாமைக்கான காரணத்தை பீரீஎப் கூறியாகவேண்டும் என மிரட்ட ஆரம்பித்தனர்.
இதனால் அங்கு அழைக்கப்பட்ட பேச்சாளர்கள் சிலர் நிகழ்வை விட்டு விலகிச் சென்றனர். இவ்வேளையில் இந்த நிகழ்வுகள அனைத்தையும் பதிவு இணையத்தளத்தின் எழுத்தாளர் ஒருவர் படம் பிடித்துக்கொண்டிருந்தார். ரீசீசீ இன் பின்னணியில் செயற்படும் ரஞ்சித் என்ற இவர் மோதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கியமானவர்.”
உலகம் முழுவதும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பல்வேறு பரிமாணங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன. ஈழத் தமிழர்களின் போராட்டம் மட்டுமே இவ்வளவு இலகுவாகவும் விரைவாகவும் உலக சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒரு சில நாடுகளின் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் சிறிய மூலை ஒன்ற்றினுள் மனிதகுலத்தின் ஒரு பகுதி அழித்துச் சிதைக்கப்பட்ட போதும் உலகின் மனிதாபினானிகள் மத்தியில் அவை எடுத்துச்செல்லப்படாமல் அழிக்கப்பட்டதற்கான பிரதான காரணம் புலம்பெயர் அமைப்புக்களே. பல்ஸ்தீனிய விடுதலைப் போராட்டமாகட்டும், குர்தீஸ் மக்களின் விடுதலைப் போராட்டமாகட்டும். பிலிப்பைன்ஸ் விடுதலைப் போராட்டமாகட்டும், ஏன் இந்திய மாவோயிஸ்டுக்களின் போராட்டமாகட்டும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஜனநாயகவாதிகள் மத்த்யிலும் மக்கள் மத்தியிலும் எடுத்துச்செல்லப்பட்டு சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது. ஈழப் போராட்டம் மட்டும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க ஐரோப்பிய அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்த ஒன்றாக குறுகிய வட்டத்தினுள் முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் அதன் கூறான ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசை கையாளும் அதே வேளை அமெரிக்க அணியின் பின்னால் புலம்பெயர் அமைப்புகள் அணிவகுக்க, மொத்தப் போராட்டமும் அமெரிக்க அணியிடமும் அதனூடாக இலங்கை அரசிடமும் முடக்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கான காரணம் தற்செயலானதல்ல. தெளிவாகத் திட்டமிடப்பட்டுச் நகர்த்தப்படும் செயற்பாடாகும். உலகின் விடுதலைப் போராட்டங்களிலிருந்து மாறுபட்டு திட்டமிட்டு அழிக்கப்பட்டதன் பின்னணியில் பிரித்தானிய உளவுத்துறையும் செயற்பட்டிருக்கிறது.
இச் செயற்பாட்டின் மற்றொரு ஆதாரமாக அமைந்தது அடையாளங்களாகும். ரீசீசீ ஐப் பொறுத்தவரை, அவர்கள் முன்வைக்கும் ஒரே அரசியல் இதுதான் “புலி இலச்சனை பதிக்கப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடியை ஏந்தாத அனைவரும் துரோகிகள்” என்பதே அவர்களின் முழு முதற் கோட்பாடு.
இதன் மறுபக்கத்தில் இலங்கையில் முள்ளிவாய்க்காலின் பின்னால் நடத்தப்படும் அழிவுகளுக்கு எதிராக ரீசீசீ இதுவரை எதையாவது முன் நகர்த்தியிருக்கிறதா எனக் கேட்டால் பதில் கிடையாது. மாவீரர் தினம் வரும் வரைக்கும் காத்திருந்து, அதில் கிடைக்கும் வருமானததை பகிர்ந்துகொள்ளும் வியாபாரத்தைத் தவிர ரீசீசீ இதுவரைக்கும் எதையும் சாதித்ததில்லை.
அவ்வப்போது ராஜபக்ச பிரித்தானியா வருகின்ற போதும், ஜெனீவாவில் மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற போதும், புலிக் கொடிகளுடனும், பிரபாகரனின் உருவப்படத்துடனும் பொதுமக்களை அழைத்துச் சென்று ‘எமது மண் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்’ என முழக்கமிடுவதைத் தவிர இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இராணுவ உடையுடனான உருவப்படத்தைக் கண்ட ஐரோப்பியப் பொதுமக்கள் அவரை இலங்கை இராணுவ அதிகாரிகளில் ஒருவர் எனக் கேட்ட சம்பவங்களும் உண்டு.
குறுக்கு வழிகளில், தமக்கு ஆதரவானவர்களை இணைத்துக்கொண்டு ஒரு சந்தர்ப்பவாதிகள் கூட்டம் ஒன்றை தோற்றுவித்துள்ள இக் குழுவினரை இன்று இயக்குவது பிரித்தானிய உளவுத்துறை என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்திருக்கிறோம். இதன் மேலதிக ஆதாரங்கள் இக் கட்டுரையைத் தொடர்ந்து முன்வைக்கப்படும்.
இன்று ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் செயற்படும் மக்களவை, நாடுகடந்த தமிழீழம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றை இணைத்து அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதே வேளை பிரித்தானிய உளவுத்துறையின் ஐந்தாம் படையாக ரீசீசீ இயங்குவதற்கான ஆதாரங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும்.
எந்த அரசியல் திட்டமும் இல்லாமல் புலி இலச்சனை பதிக்கப்பட்ட கொடி ஒன்றை கைகளில் ஏந்தி ‘எமது தலைவர் பிரபாகரன்’ என பிரித்தானியத் தெருக்களில் வலம் வருவத மட்டுமே போராட்டம் என மக்களை நம்பவைத்து ஏமாற்றிய ரீசீசீ குறித்த கொடியை ஏந்தாத அனைவரும் துரோகிகள் எனக் கூறுவதற்கான காரணம் எதனையும் முன்வைக்காதது போல பீரீஎப் கொடியை ஏந்தக்கூடாது என்பதற்கும் எந்த வலுவான காரணத்தையும் முன்வைக்கவில்லை.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஏழு வருடங்களில் போராட்டத்தை அழித்த ஐரோப்பிய அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளும் அவற்றால் இயக்கப்படும் இலங்கை அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளன. அழிவுகள் திட்டமிட்ட வேறு வடிவங்களில் தொடர்கின்றன. பல்தேசிய நிறுவனங்களால் தேசியப் பொருளாதாரம் அழிக்கப்பட அவற்றை ஆதரிக்கும் அரசியல் வாதிகள் அழிவைத் துரிதப்படுத்துகின்றனர். நில ஆக்கிரமிப்பும் அழிப்பும் தொடர்கின்றன. சுன்னாகம் அழிப்பிற்குப் பின்னணியில் செயற்பட்ட பல்தேசிய நிறுவனம் புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புக்களின் முகவர்களான சீ.வீ.விக்னேஸ்வரன், ஐங்கரனேசன் ஆகியோரால் பாதுகாக்கப்படுகின்றது. நுகர்வுக் கலாச்சாரம் எமது தேசியக் கலாச்சாரத்தைப் பிரதியிட அந்த இடைவெளிக்குள் சிங்கள பௌத்த பேரினவாதம் தனது நிலைகளை நிறுவிக்கொள்கிறது.
ரீசீசீ பிரித்தானிய உளவுத்துறையின் செல்லப்பிள்ளை என்றால், பீரீஎப் பிரித்தானிய அரச அதிகாரத்தின் அடிவருடிகள் போன்று செயற்படுகின்றனர். உலகின் பதினாறுக்கும் மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்கிறார்கள். வன்னி இனப்படுகொலையின் பின் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தையும் தியாகங்களையும் அவலங்களையும் அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியங்களிடம் ஒப்படைத்து அதன் ஊடாக இலங்கை அரசிடம் ஒப்படைத்த குற்றச் செயலுக்கு பிரித்தானியத் தமிழர் பேரவையும் துணை சென்றிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் இந்த இரண்டு அமைப்புக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் இந்த ஏகாதிபத்தியங்களும் அவற்றின் நேரடி முகவர்களுமேயாகும்.
மேலதிக வாசிப்பிற்கு…
பிரித்தானிய உளவுப்படையின் அடியாட்களாக மாறிப்போன TCC- இன்னொரு முள்ளிவாய்க்கால் தயாராகிறது:ரஞ்சித்
புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் (பாகம் 2)
புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் : இனியொரு…