புத்தர் துறவியாவார் என்று சோதிடர்கள் சொன்னதால், அவ்வாறு ஆகி விடாமல் தடுக்க அவரை வெளி உலகமே தெரியாமல் வளர்த்ததாக நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர் எதேச்சையாக ஒரு நாள் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்ததாகவும், இன்னொரு நாள் நோயாளி ஒருவரைப் பார்த்ததாகவும், இன்னொரு நாள் மரணம் எய்திய ஒரு மனிதனைப் பார்த்ததாகவும் அவற்றின் மூலம் இவ்வுலகின் “நிலையாமைத்” தத்துவத்தைப் புரிந்து கொண்டதாகவும் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். உலகின் நிலையாமையைக் கண்டு “மனம் கலங்கிய” அவர் இதற்கு விடை தேடும் பொருட்டுத் துறவு பூண்டார் என்றும், அதன் பின் ஒரு நாள் போதி (அரச) மரத்தடியில் திடீரென ஞானம் உதித்ததாகவும், தர்க்கவாதத்திற்குச் சற்றும் பொருத்தம் இல்லாத கதையை வலுக்கட்டாயமாக மக்களின் மனங்களில் திணித்து வைத்து இருக்கிறார்கள்.
ஆனால் அது உண்மையா? இல்லவே இல்லை. உண்மை இதற்கு முற்றிலும் மாறானது. புத்தர் துறவு பூண நேர்ந்த காரணத்தை அண்ணல் அம்பேத்கர் அவருடைய “புத்தமும் அவருடைய தம்மமும்” என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார்.
கபிலவஸ்து சாக்கியர்களின் தலைநகரம். அங்கே சாக்கிய மன்னர் சுத்தோதனரின் மகனாகப் பிறந்தவர் தான் புத்தர். .பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் கவுதம சித்தார்த்தர். கவுதம சித்தார்த்தர் மற்றவர்களைப் போல் தான் வளர்க்கப்பட்டாரே ஒழிய வெளி உலகம் தெரியாமல் வளர்க்கப்படவில்லை. அவருக்கு இருபது வயது நிரம்பிய உடன் சாக்கிய சங்கத்தில் உறுப்பினராக இணைக்கப்பட்டார். அவர் சங்கத்தில் சேர்க்கப்பட்டு எட்டு ஆண்டுகள் வரை பிரச்சினை இல்லாமல் காலம் சுமுகமாகவே சென்றது. அவருடைய இருபத்து எட்டாவது வயதில் ஒரு பி
ரச்சினை தோன்றியது.
சாக்கிய நாடும் கோலிய நாடும் அண்டை நாடுகள். இரு நாடுகளும் விவசாயத்திற்கு ரோகினி ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொண்டு இருந்தன. நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் இரு நாட்டினருக்கும் இடையே சச்சரவுகள் வருவதும் பேச்சு வார்த்தைகள் மூலமாகவோ சிறு சிறு மோதல்களினாலோ தீர்வு காண்பதும் வழக்கமான ஒன்றாக இருந்தது. அந்த ஆண்டு சச்சரவு மிகப் பெரிதாகி, போர் தொடுக்கும் அளவிற்கு முற்றி விட்டது. இதைப் பற்றி விவாதிக்க, படைத்தலைவர் சங்கத்தைக் கூட்டினார். நடந்த சச்சரவுகளை விளக்கி விட்டு இதைத் தீர்க்கக் கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் கவுதம சித்தார்த்தரும் அவருடைய நண்பர்கள் சிலரும் போர் தேவை இல்லை என நினைத்து விவாதித்தனர். வினாவிற்கு விடையும், விடைக்கு மேல் வினாக்களுமாக விவாதம் தொடர்ந்தது. இறுதியில் கவுதம சித்தார்த்தரின் அறிவுக் கூர்மையான விவாதம் கோலியர்களுக்குத் தண்ணீர் தர மறுப்பதும், அவர்கள் மீது போர் தொடுக்க முனைவதும் நியாயம் அல்ல என்று உணர்த்தியது.
ஆனால் படைத் தலைவர் விவாதத்தைத் திசை திருப்பி வாக்கெடுப்பு நடத்த வேண்டினார். அவ்விதமே வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் போர் நடத்தவே விரும்பினர். ஆனால் கவுதம் சித்தார்த்தரால் இம்முடிவை ஏற்க முடியவில்லை.
சங்கத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முடிவு செய்தால், மற்றவர்களும் அதன்படி நடக்க வேண்டும். அப்படி நடக்க மறுப்பவர்களுக்குத் தண்டனை அளிக்கச் சங்கத்திற்கு அதிகாரம் இருந்தது. சங்க விதிகளின்படி, சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட மறுப்பவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம்; அல்லது அவரை நாடு கடத்தலாம்; அல்லது அவருக்கு மரண தண்டனை அளிக்கலாம்.
ஆனால் கவுதம சித்தார்த்தர் விஷயத்தில் தண்டனையை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. சாக்கிய நாடு கோசலப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசாக இருந்தது. கவுதம சித்தார்த்தர் அறிவிலும் அழகிலும் பண்பிலும் மிகச் சிறந்த மனிதராக இருந்தார். அவருடைய ஆளுமை கோசலப் பேரரசரை மிகவும் கவர்ந்து இருந்தது. பேரரசர் கவுதமர் மேல் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். இப்பொழுது அவருக்குத் தண்டனை அளித்தால் பேரரசர் நிச்சயமாகத் தலையிடுவார். அப்படித் தலையிட்டால் சங்கத்தின் முடிவு தவறு என்று உணர்ந்து சங்கத்தின் மீதே நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார்.
இக்கட்டில் மாட்டிக் கொண்ட படைத் தலைவர் கவுதம சித்தார்த்தரிடம் பேரரசரின் அன்பைப் பெற்ற ஆணவத்தில் சங்கத்தை எதிர்க்கிறாயா எனக் கோபமாகக் கேட்டார். கவுதம சித்தார்த்தர் தனக்கு அவ்வித ஆணவம் இல்லை என்றும், இந்த இக்கட்டில் இருந்து மீள்வதற்கான தீர்வைத் தானே தருவதாகவும் கூறினார். சங்க விதிகளின்படி நாடு கடத்துவது ஒரு தண்டனை ஆகும் என்று சுட்டிக் காட்டி, அதற்கு ஈடாகத் தானே துறவு பூண்டு நாடு விட்டுச் சென்று விடுவதாகக் கூறினார். சங்கத்தைப் பொறுத்த மட்டில் அவரை நாடு கடத்தியது போல் ஆகி விடும் என்றும், பேரரசர் சங்கத்தின் மேல் குறை காண முடியாது என்றும் விளக்கினார்.
இவ்வாறு கூறி, கவுதம சித்தார்த்தர் துறவறம் பூண்டு சென்றார் .புத்தரின் துறவறம் இந்தச் சூழ்நிலையில் தான் நிகழ்ந்ததே ஒழிய, பார்ப்பனர்கள் கட்டி விட்ட கதைகளின் போல் அல்ல.