விஜி 85 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் பின்னதாகக் கொல்லப்பட்டுவிட்டார். ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்க்கையைப் பலியெடுத்த பேரினவாதத் தீயில் வெந்து சாம்பலாகிப் போன தியாகிகளில் விஜியும் ஒருவர்.
இரவுகளை மட்டுமல்ல நகரங்களையும், ஏழ்மையையும் அவலங்களையும் கடந்து சென்ற புகையிரதம் மூன்றாவது நாள் இரவை அண்மித்த போது நாங்கள் இறங்குவதற்கான இடம் வந்துவிட்டதாகக் கூறினார்கள்.
புகையிரத வாழ்க்கை முடிந்துபோகிறது என்ற மகிழ்ச்சியில் நாங்கள் ஆறுதலடைந்தோம். நாங்கள் நூறுபேரும் ஒரு சிறிய கேட்பாரற்ற புகையிரத நிலையம் ஒன்றில் அதிகாலையை அண்மித்த வேளையில் இறக்கப்படுகிறோம். அங்கு அந்த வேளையில் எம்மைத் தவிர வேறு யாரும் நின்றிருக்கவில்லை. அனைவரும் அங்கு இறங்கியதை உறுதிப்ப்படுத்தியவுடன் புகையிரத நிலையத்திற்கு வெளியே தயாராகவிருந்த பஸ் வண்டிகளில் எம்மை மீண்டும் ஏறுமாறு பணித்தார்கள். வெளியெ சென்றதும் இரண்டு பஸ் வண்டிகள் எம்மை எங்கோ ஏற்றிச்செல்ல தயார் நிலையிலிருந்தன.
பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திற்கு உள்ளாக எமக்குப் பின்னலிருந்து ஒருவர் எழுந்து யாராவது இங்கு ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்களா என்றார். அப்போது ஒருவர் அவரின் ஆங்கிலத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்கிறார்.
எம் எல்லோருக்கும் குளிருக்கு அணிவதற்கான மேலங்கிகளும் சப்பாத்துக்களும் தரப்படும் என்றும் அளவில் வேறானதாக இருந்தால் அதனைப் பின்னதாக மாற்றிக்கொள்ளலாம் என்றார்.
குளிர்ப் பிரதேசம் ஒன்றை நோக்கியே நாம் கொண்டுசெல்லப்படுகிறோம் என்பதை அப்போது என்னால் அனுமானிக்கக் கூடியாதவிருந்தது. நீண்ட பயணத்தில் அனைவருமே களைத்துப் போயிருந்தோம். எங்கோ இனம் புரியாத தொலைவில் விடுதலைக்காக வந்திருக்கிறோம். இராணுவப் பயிற்சியெடுத்து விடுதலைக்காகப் போராப்போகிறோம் என்ற கனவு புதிய உத்வேகத்தை வழங்கியிருந்தது.
நாம் உத்திரப் பிரதேசத்தில் இந்திய இராணுவப் பயிற்சிக்காக செல்கிறோம் என்ற விபரங்கள் எதுவும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. பயணித்துக்கொண்டிருக்கிம் போதே எமக்கு குளிருக்கான மேலங்கியும் சப்பாத்துக்களும் தரப்பட்டன.
பஸ் நகர்ந்துகொண்டிருந்தது. எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் சற்று வயது முதிர்ந்தவர். சில ஆண்டுகள் அதிகமானால் கூட பெரியவராகக் மிகைப்படும் இளமை அரும்பும் வயதில் அவர் குளிர் மேலங்கிகளை அணிவதற்குத் தயாரான போது அவர் கைகள் முழுவதும் வெட்டுக்காயங்களைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன்.
எனக்கோ பல களங்களைக் கண்ட தியாகி ஒருவரின் அருகில் அமர்ந்திருப்பதான மதிப்பு ஏற்பட்டது. தயக்கத்தின் மத்தியில் எப்படி அந்த வெட்டுக்காயங்கள் கைகளில் ஏற்பட்டது எனக் கேட்கிறேன். முதலில் எம்மை அறிமுகப் படுத்திக் கொள்கிறோம். நான் எனது பெயர் கிளின்டன் என்றது அவர் மணி தனது பெயர் என்கிறார்.
கைகளில் எப்படி வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது என்று கேள்வியெழுபியதும் மட்டக்களப்பு சிறையிலிருந்த போது ஏற்பட்டது என்றார்.
அக்காலப்பகுதியில் தான் மட்டக்களப்புச் சிறையிலிருந்து அரசியல் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பியிருந்த சம்பவம் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் மிகவும் பிரபலமானதாகப் பேசப்பட்டது. அப்போ நான் மட்டக்களப் சிறை உடைப்பின் போதா வெளிய்ல் வந்தீர்கள் எனக் கேட்கிறேன். அவர் ஆம் எனப் பதிலளித்ததும் அவர் மீதான மதிப்பு இன்னும் அதிகரிக்கிறது.
சற்று நேரத்தின் பின்னர் எப்படிக் கைதானீர்கள் எப்படியெல்லாம் இலங்கை இராணுவம் சித்திரவதை செய்தது என்று ஆர்வம் மிகுதியால் கேட்கிறேன். சில கணங்கள் மௌனித்த அவர், தான் திருடியதால் தான் கைது செய்யப்படேன் என்கிறார்.
பஸ் நேராக நெஞ்சை நிமிர்த்தி, போராட என இளமைக்காலக் கனவுகளைத் துறந்து வெளிவந்த எம்மை சுமந்து அன்னியமான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை நான் ஆயிரம் அடிப் பள்ளத்தாக்கை நோக்கித் தள்ளப்பட்டதான உணர்வு ஏற்பட்டது. திடீரென ஒரு வெறுமை பற்றிக்கொண்டது.
என்னைச் சமாதானம் செய்துகொண்டு சிங்களச் சிறைக்காவலர்கள் தானே அவரைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் என்று கேட்கிறேன். அவரோ, அவர்கள் வெட்டவிலை தானாகவே கைகளை வெட்டிக்கொண்டதாகக் கூறுகிறார். எனக்கு இன்னும் அதிர்ச்சியாகவிருந்தது. சிறையில் விசாரணை என்று அடித்தால்வெளியில் காயங்கள் தெரியாமலேயே அடிப்பார்கள். தானே வெட்டிக்கொண்டால் மருத்துவ மனையில் அனுமதித்டு விடுவார்கள் என்பதால் தானே வெட்டிக்கொண்டதாகக் கூறுகிறார்.
அதற்கு மேல் பேசுவதற்கு எனக்கு எதுவும் இருக்கவில்லை.இளைஞர்கள் பஸ்சிலேயே நண்பர்களாகிவிட்டோம் மணி பஸ்சினுள்ளேயே மணியண்ணையாகிவிட்டார்.
புகையிரதத்தில் பயணம்செய்த போது வந்த பயிற்சிக்கு போராளி ஒருவருக்கு அங்கு பொறுப்பாக இருந்த இருவர் அடித்தார்கள் என்ற சம்பவம் பேச்சாக அடிபடுகிறது. புகையிரத்தில் பயணம் செய்தபோது சிகரட் புகைத்தார் என்பதால் மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று அவரைத் தாக்கியிருக்கிறார்கள். இது பஸ்சில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எல்லோரும் அது தவறான நடவடிக்கை என்றும் எப்படி ஒருவரை அடிக்க முடியும் என்பதையும் பேசிக்கொள்கிறோம்.
அப்போது எமக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட பெரிய நந்தன் எமக்கு முன்னால் அமர்ந்திருந்தார். திடிரென எழுந்த அவர் சாரமாரியாக கெட்டவார்த்தைகளால் எம் அனைவரையும் திட்ட ஆரம்பித்துவிட்டார். ஒருவரும் பேசக்கூடாது என உத்தரவிட்டார். ஏதாவது பேச வேண்டுமானால் பயிற்சி முகாமிற்குச் சென்றதும் பேசிக்கொள்ளலாம் இப்போது வாய்திறக்கக்கூடாது என்கிறார்.
நாமெல்லம் இன்னொரு இடத்திற்கு வந்து சேர்கிறோம். அங்கே நான்கைந்து கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேனீர்ரும் சிற்றுண்ட்யும் கிடைத்தது. நாமோ அதுதான் பயிற்சி முகாம் என எண்ணினோம். சற்று நேரத்தின் பின்னர் அங்கிருந்து வேறு இடத்திற்குப் பயணம் செய்ய வேண்டும் என தெரிந்துகொண்டோம்.
சற்று நேரத்தில் அங்கே மலைப் பாதைகளில் பயணம்செயக் கூடிய இராணுவ பஸ் ஒன்று வந்து சேர்கிறது. அந்த வண்டியில் மலைகளைக் கடந்து தனிமைப்பட்ட பகுதிகள் ஊடாக நள்ளிரவு பன்னிரண்டு மணி வரைக்கும் பயணம் செய்கிறோம். நள்ளிரவில் எமது நீண்ட பயணத்தின் முடிவில் பயிற்சி முகாமை அடைகிறோம். இந்திய இராணுவ அதிகாரிகளோடு எமக்கு முதல் பயிற்சியெடுத்த சிலரும் அங்கே எமக்காகக் காத்திருக்கிறார்கள்.