அங்கிருந்துதான் இந்தியாவை நோக்கி விசைப்படகு ஒன்று பயணிக்கும் எனவும் அதில் தான் எம்மைக் கூட்டிச் செல்வார்கள் எனவும் அப்போது தான் அறிந்தோம். நாம் அங்கு தரயிறங்கிய போது எம்மைப் போல பலர் அங்கு இந்தியா செல்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
அங்கே அனைவரும் இந்தியா நோக்கிய படகுக்காகக் காத்திருக்கிறோம். அப்போது அங்கு ஏற்கனவே எமக்காகக் காத்திருந்த ஓட்டி ராஜன் மற்றும் மன்னார் ஞானி ஆகியோர் என்னிடம் வருகின்றனர். டெலோவின் முக்கிய உறுப்பினரான ஞானி என்னிடம் கேட்கின்றார் என்னால் கண்ணாடி இல்லாமல் சுட முடியுமா என்று. நான் உடனே சுதன் எனக்கு தந்த கடிதத்தை அவர்களிடம் காண்பிக்க முற்படுகிறேன். ஞானி கடித்ததைப் பார்க்கவில்லை. கடிதம் தரப்பட்டிருந்தால் போகலாம் ஆனால் இந்தியாவில் பயிற்சியெடுக்க அனுமதிப்பார்களோ தெரியாது என்றார். தீவிலிருந்து பதினைந்து பேர் வரையில் தான் இந்தியக் கரைகளுக்கு ஒவ்வொரு தடவையும் அழைத்துச் செல்லப்படுவதால் நாங்கள் அங்கு ஐந்துநாள் வரை வரையில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.
ஐந்தாவது நாளில் எனது முறை வருகிறது. ஓட்டி ராஜன் தான் படகைச் செலுத்துகிறார். தமிழ் நாட்டுக் கரை நோக்கிய பயணம் ஆரம்பமாகிறது. படகில் என்னோடு பயணம் செய்த அனைவருமே முகமறியாதவர்கள். வழியில் இலங்கை நேவிப்படை எம்மைக் கண்டு துரத்துகிறது கடலில் வேகமாகச் செலுத்திச் செல்கிறோம். கடலின் இருள் கவ்விய நீர் வெளியில் இலங்கைக் கடற்படை அழிப்பட்தற்காத் துரத்திவர அதற்கு ஈடு கொடுக்காமல் ராஜன் படகைச் செலுத்துகிறார். நீண்ட இன்னல்களின் மத்தியில் நள்ளிரவு கடந்த வேளையில் தமிழ் நாட்டுக் கரையி அடைகிறோம். இலங்கைக் கடற்படை துரத்தியதில் குறிப்பிட்ட நேரத்திற்கு எம்மால் வந்தடைய முடியவில்லை. எமக்காக ராமேஸ்வரம் கடற்கரையில் யாரும் காத்திருக்கவில்லை.
கரையில் இறக்கபட்ட எம்மை, கடற்கரையிலிருந்து உள் நோக்கி நடந்து செல்லுமாறு ஓட்டி ராஜன் பணிக்கிறார். அங்கே தொலைவில் தெரிந்த மின் விளக்கு வெளிச்சத்தை நோக்கிச் செல்லுமாறும் அங்கே சிறீராம் லாட்ஜ் என்ற விடுதியை அடையுமாறும் கூறுகிறார்.
விடுதியைச் சென்றடைந்ததும் குட்டிமணியின் ஆட்கள் வந்திருப்பதாகச் சொன்னால் அவர்கள் ஏனையவற்றைச் செய்து தருவார்கள் என்று எமக்குச் சொல்லிவிட்டு அவர் மறுபடி கடலுக்குள் திரும்பிவிட்டார்.
ஓட்டி ராஜன் என்னை அழைக்கிறார். கண்ணாடி, என்று விழித்த அவர், லாட்ஜ் வரை கூட்டிச் செல்வதற்கு நீதான் பொறுப்பு என்கிறார்.
அன்னிய நாட்டின் எல்லையில் யாரையும் தெரியாமல், நள்ளிரவு கடந்த வேளையில் நாங்கள் பதினைந்து பேர்வரை தனியே விடப்பட்டிருந்தோம். அச்சமும் வியப்பும் மேலிட நாங்கள் அனாதரவாக நின்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தைத் தேடிப் போவது பாதுகாப்பானதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எம்மோடு வந்த அனைவரையும் கரையிலேயே இருக்குமாறு சொல்லிவிட்டு நான் காத்தான் என்ற ஒருவருடன் விளக்கை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறோம். அங்குதான் சிறீராம் லாட்ஜ் இருபதாகச் சொல்லப்பட்டது.
ராமேஸ்வரம் நகர்ப்பகுதியை அடைந்தவுடன் எமக்கு வியப்ப்பு மேலிடுகிறது. நாம் இருவரும் மிகுந்த சத்தத்துடன் இலங்கை வானொலியைக் கேட்கிறோம். எல்லாக் கடைகளிலுமே இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன.ஒரு கணம் இலங்கையின் இன்னொரு பகுதிக்கு வந்தடைந்து விட்டோமா என்ற அச்சம் மேலிடுகிறது. அங்கே நின்ற குதிரை வண்டில்களையும் இந்தியத் தமிழையும் கேட்டபோது தமிழ் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறோம் என உறுதிப்படுத்திக்கொண்டோம்.
ஒருவாறு சிறீராம் லாட்ஜைக் கண்டுவிட்டோம். அங்கே உள்ளேசென்று நாம் குட்டிமணியின் ஆட்கள் வந்திருப்பதாகச் சொல்லவேண்டும். நாம் இருவரும் அது பாதுகாப்பானதா என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்துகொண்டு லாட்ஜின்முன்னால் அங்குமிங்கும் நடந்து நோட்டம் விடுகிறோம்.
நாங்கள் பதினைந்துபேரும் தண்ணீர் அள்ளிக் குளித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு அருகிலிருருந்த எங்களோடு பயணித்தவர் என்னை கேட்டார் உமாமகேஸ்வரன் எப்போது வருவார் என்று.
எனக்கு இன்னொரு முறை தூக்கிவாரிப் போட்டது. நானோ அவர் இயக்கம் மாறி வந்துவிட்டார் என்று எண்ணி நீங்கள் எந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்ன அவர் நாகப்படையில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காவே தான் வந்திருப்பதாகக் கூறினார். அப்போது நான் அவருக்கு விபரங்களைக் கூறுகிறேன். உமா மகேஸ்வரன் புளட் இயக்கத்தின் தலைவர். நாங்கள் நாகப்படை இல்லை டெலோ என்று கூறப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்கிறேன்.
அதற்கு எந்த சலனமும் இன்றி, எந்த இயக்கமானால் என்ன பயிற்சிபெற்று இராணுவத்தை அடிப்பதுதானே நோக்கம் என்று பதில் சொல்கிறார்.
தொடரும்…
முன்னைய பதிவுகள்: