Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வால்காவிலிருந்து கங்கை வரை(1) : ராகுல்ஜி

பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய நாவல். மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை இருபது கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.
இவைகள் வெறும் கதைகளல்ல. சரித்திரத்தை படிக்கும் சலிப்போ, தத்துவத்தைக் கற்கும் சிரமமோ இல்லாமல் வெகு இயல்பான , சுவையான நடையில் கூறப்பெற்றுள்ள அறிவுப் பெட்டகம் இந்தப் புத்தகம்.
கி.மு 6000 த்திலிருந்து 20 நூற்றாண்டு வரை உள்ள காலங்கள் ஆதாரபூர்வமாக அலசப் பெற்றுள்ளன.
உலகின் மிகப்பெரும் அறிஞரான ராகுல்ஜீ, 36 மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். அறிவுத் தேடலில் உலகின் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்தவர். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தவர். தனது உழைப்பால் சேகரித்துக்கொண்டவற்றை 150 நூல்களாக மக்களுக்கு வழங்கியவர். ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ என்ற நூலை இணைய வாசகர்களுக்காக தொடர் பதிவுகளாகத் தருவதில் மகிழ்ச்சிய்டைகிறோம்.
-இனியொரு

நிஷா

அத்தியாயம் 1 பகுதி1

இடம் : வால்கா நதிக்கரைப் பிரதேசம்
இனம்: ஹிந்தோ ஐரோப்பியர்
காலம் : கி.மு. 6000

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சூரியனைக் காண முடிந்திருக்கிறது. மத்தியான வேளை ஆனால் இன்னும் உச்சிக்கு நேரே சூரியன் வரவில்லை. பொழுது புலர்ந்து நான்கு ஐந்து மணி நேரமாகியும் சூரியனுடைய ஒளியில் அவ்வளவு உஷ்ணத்தைக் காணோம். அவனை- சூரியனை மேகங்கள் மறைக்கவில்லை. பனிப்படலங்களும் மூடவில்லை. பெரிய காற்றோ புயலோ கிடையாது. இந்த நிலையில் உடம்பைத் தொட்டுக்கொண்டிருக்கும் அவனுடைய கிரகணங்கள் மனதுக்கும் தேகத்திற்கும் எவ்வித ஆனந்ததைக் கொடுக்கின்றன!

சரி நாலா பக்கங்களிலும் இருக்கும் காட்சிகளை நோக்க்குவோமே!

மேலே நீலநிறமான ஆகாயம்; கீழே க்ற்பூரத்தைப் போன்ற பனிப்படலங்கள் கவ்விக்கொண்டிருக்கும் பூமி. கடந்த இருபத்துநான்குமணிநேரமாகப்பனி விழாததால், பூமியின் மீது படிந்திருக்கும் பனித்திரள் கொஞ்சம் கெட்டியாகிவிட்டது. பனி மூடிய இந்தப்பூமி எங்கும்வியாபித்திப்பதாக நீங்கள் நினைத்துவிடவேண்டாம். அதேஇருமருங்கிலும்மலைகளின் மீதுள்ள மரக்கூட்டங்களின் நடுவே சில மைல்கள் தூரம் மேடும் பள்ளமுமாக, வடக்கிலிருந்துதெற்கு நோக்கி வெள்ளிப்பலகை மாதிரி கிடக்கிறது இந்தப் பூமி.

வாருங்கள்; இனி அந்த மரக்கூட்டங்களைக்கொஞ்சம் நெருங்கிப்பார்ப்போம். இங்கே இரண்டு விதமான விருட்சங்கள் அதிகமாயிருக்கின்றன. ஒரே வண்மை நிறமாயும் ஆனால் இலைகளே இல்லாத கொம்புகள்-கிளைகள் உள்ளனவாயும் நிற்பன ஒரு வகை; ஓங்கி வளர்ந்து,ஆனால் அடர்ந்த கிளைகளையும் ஊசியைப் போன்ற முனையான இலகளையும் உடைய தேவதாருவிருட்சங்கள் மற்ற வகை. அடர்ந்த கிளைகள் அந்த மரங்களை அப்படியே மூடிக்கொண்டிருப்பதும். கண் கொள்ளாக் காட்சியாயிருக்கிறதல்லவா?

தனிமையில் இருக்கும் நாம், கொஞ்சம் உற்றுக் காதுகொடுத்துக்கேட்போமா? பட்சிகளின் சப்தமாவது கேட்கிறதா? மிருகங்களின் இரைச்சலாவது கேட்கிறதா? சிறிய வண்டுகளின் ரீங்காரமாவது கேட்கிறதா? இல்லை. பயங்கரம் நிறைந்த நிசப்தத்தியின் ஆட்சி ஆரண்யமெங்கும் நிலவியிருக்கிறது.
சரி வாருங்கள் அதோ மலையின் மீதூயர்ந்து வளர்ந்திருக்கும் தேவதாருமரத்தின்மீது ஏறி நாலா பக்கங்களின் காட்சிகளைப் பார்ப்போம் யார்கண்டார்கள்? பனிக்கட்டி தேவதாரு விருட்சங்கள் இவைகளையயல்லாமல் வேறு ஏதாவது அந்தப் பக்கம் தென்படாதா?அப்படி ஒன்றையும் காணோம் .எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரங்களும், பனியுந்தானா? புற்களோ ,புதர்களோ இந்தக் காட்டில் முளைக்கவே செய்யாதா?

ஆனால் இவைகளைப்பற்றியெல்லாம் அபிப்பிராயம் கூறுவதற்காக நாம் இங்கு வரவில்லையே ? பனி சூழ்ந்த இரண்டு பாகங்களைக் கடந்து கடைசிப் பாகத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.இந்த வருஸ்ம் பனியும் அதிகமென்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? இவ்வளவு பனியிலும் நின்று கொண்டிருக்கிற இந்த மரங்கள் எவ்வளவு பருமனாயிருக்கின்றன! அளந்து பார்ப்பதற்கு கூட நம்மிடம் சாதனம் இல்லை ஆனால் சுமாராகச் சுற்றளவு எட்டு முழம் இருக்குமல்லவா? அதற்கு மேலும் இருக்கும்.

இந்த உயரமான மரத்தில் ஏறி நிற்கும் நாம் என்ன பார்க்கிறோம்? அதே பனிப்படலம் . அதே மரங்களின் கூட்டம். மேடு பள்ளமான அதே மலைப்பிரதேசம்! அதே புகை; ஆம் உண்மையிலேயே புகைதான் இந்த நிசப்தமான வளர்ந்ததரத்தில் புகை எங்கிருந்து வந்தது? நமக்கு ஆச்சரியமாயும். ஆனால் சந்தோசமாயும் இருக்கிறதல்லவா? வாருங்கள், போய்ப் பார்த்து விடுவோமே!.

புகை கிளம்புவது உண்மைதான் . ஆகாயம் நிர்மலமாயிருப்பதனாலும் ,நாம் உயரத்தில்நிற்பதாலும் சமீபமாகத்தெரிகிறது. இருந்தாலுமென்ன? நெருங்கி வந்து விட்டோம். பிண நாற்றமும் மாமிசவாசனையும் நம்முடைய மூக்குக்கு முதல் விருந்தாகக் கிடைத்திருக்கிறது. அதோ சப்தம்: ஆம் சிறு குழந்தைகளின் சப்தம்: ஜாக்கிரதை; நாம் ரொம்ப மெதுவாக நடக்கவேண்டும். காலடிச் சத்தங்கூடக் கேட்கக்கூடாது. மூச்சும் மெதுவாகவிட்டால் நல்லதுதான்.யார் கண்டார்கள்! நம்மை வரவேற்பதில், அவர்களைப் பார்க்கிலும் அவர்களுடைய நாய்கள் முந்திக்கொண்டால்?

இந்தக் குழந்தைகளைப் பார்த்தீர்களா? உண்மையிலேயே சின்னஞ்சிறிய குழந்தைகள். அதோ யாவற்றிலும் பெரிய குழந்தைக்கு எட்டு வயதிருக்கும்.சின்ன குழந்தைக்கு ஒரு வயது இருக்குமல்லவா?

ஆம் ஒரே வீட்டில் ஆறு குழந்தைகள்; இது வீடில்லையே; மலையின் இயற்கைக் குகை உட்பக்கம் ஒரே இருட்டாகவல்லவா இருக்கிறது! இது எவ்வளவு அகலமும் நீளமும் இருக்கும்? எவ்வளவும் இருக்கட்டுமே! நீளத்தையும் அகலத்தையும் பார்ப்பதற்காகவா நாம் வந்திருக்கிறோம்?

இனி இங்கு வசிப்பவரைக் கவனிப்போம். ஒரு பழுத்த கிழவி, அழுக்குப் படிந்து வெண்மையாய், ஆனால் சடை மாதிரி கற்றை கற்றையாக விரிந்து. அவளுடைய முகத்தையே மூடிக்கொண்டிருக்கின்றன , ரோமங்கள்! தன்னுடைய கைகளினால் அந்த ரோமக்கற்றைகளை விலக்குகிறாள். அவளுடைய புருவ ரோமங்களும்கூட ஒரே வெண்மை நிறம். அவளுடைய வெண்மையான முகத்தில் விழுந்துள்ள சுருக்கங்கள் அவளுடைய வாய்க்குள்ளிருந்து வெளிக் கிளம்புவன போன்று காட்சியளிக்கின்றன.

புகையும் நெருப்பும் வெளித் தோன்றும் அந்தக் குகைக்குள்ளே தான் குழந்தைகளும் கிழவியும் வசிக்கிறார்கள்.அவளுடைய உடம்பில் எந்த ஓர் ஆடையையும் காணோம்.குழந்தைகளின் சப்பதத்தைக்கூட அவளால் கேட்கமுடிகிறது. இந்த நேரத்தில் ,ஒரு குழந்தை கத்துகிறது.அவளுடைய கண்கள் அந்தப் பக்கம் திரும்பின, கிட்டத்தட்ட ஒன்று- ஒன்றரைவயதுள்ள இரண்டு குழந்தைகள்; ஒன்று ஆண் குழந்தை; மற்றது பெண். மஞ்சள் படிந்த வெண்மையும்மிருதுவுமான ரோமமும் பெரிய நீல நிறமான விழிகளையுமுடைய அந்தப் பையன் அழுது கொண்டிருக்கிறான்.வாயில் ஓர் எலும்பை வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கும் சிறு பெண் பக்கத்தில் நிற்கிறாள்.

Exit mobile version