அமெரிக்கக்காரன் ஆமி கொண்டுவருவான் என முள்ளிவாய்க்கலில் இருத்திவைத்து கொலை செய்துவிட்டு சோர்ந்து போன புலம்பெயர் அரசியல் மேதைகள், டாக்குதர் மார், ஆய் போகவும் கோட்டுப்போடும் படிச்சவங்கள் எல்லாம் சேர்ந்து ஆய்வு செய்து புதிது புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள்.
கொலைகாரன் ராஜபக்ச மக்களைக் கடிச்சுக் குதறிய பிறகு, பெற்றோல் இருந்திருந்தால் அமெரிக்கன் வந்திருப்பான் என்று பனங்கொட்டையைக் கிலுக்கிப் பெற்றோல் வருகுதா என்று பார்த்த தேசிய வாதிகள் இன்று லைக்காவிடம் தேசியத்தை ஒப்படைத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் ஹரிங்கே என்ற இடத்தில் குர்தீஷ் மக்களின் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. குர்திஷ்தான் விடுதலைக்கான போராட்டத்தை நடத்தும் அமைப்பான குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் ஆதரவு அமைப்புக்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. பல நாடுகளிலிருந்து போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள் வந்து பேசினார்கள். மக்களின் துயரங்களையும், புலம்பெயர் வாழ்வின் அவலங்களையும் படம்பிடித்துக்காட்டும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர்.
ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் புரட்சிகரக் கலை எப்படி அமைந்திருக்கும் என அங்கு சென்றவர்கள் அறிந்திருப்பார்கள்.
தமிழ் மக்களின் தேசியத் தொலைக்காட்சி என்று தன்னைக் கூச்சமில்லாமல் அழைத்துக்கொள்ளும் ஜீ,ரிவி (GTV) இந்த மாதம் 26ம் திகதி லண்டனில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. தென்னிந்தியக் கலை வியாபாரிகள் புடைசூழ புலம்பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த சினிமாக் கூத்தாடிகள் வருகிறார்களாம். சரி போகட்டும் மகிழ்ச்சி என்றால் இப்படித்தான் என டாக்குத்தர் தேசியவாதிகளுக்குப் புரிந்தது இவ்வளவு தான் என்று விட்டால், நிகழ்ச்சியின் அனுசரணையாளர்கள் யார் தெரியுமோ? லைக்கா!!
லைக்கா வழங்கும் பண முடிப்பில் ஓ2 அரங்கத்தில் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் குத்தாட்டத் தேசியத்தையே தாங்க முடிவதில்லை. அதற்குள் தென்னிந்திய கூத்தாடிகளதும் குழந்தைப் பாடகர்களதும் உணர்ச்சி வியாபாரம் லைக்கா அனுசரணையுடன் ஜீ.ரி.வி நடத்துவதை எப்படித் தாங்கிக்கொள்வது. லைக்காவைப் பிடித்து இப்படியெல்லாம் குத்தாட்டம் போட்டால்தான் அமெரிக்கன் வருவானோ?
குர்தீஷ் மக்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் டாக்குத்தர் தேசியத்திற்கும் ஆறு ஒற்றுமைகளைக் கண்டுபிடித்தால் லைக்கா-ஜீ.ரி.வி நிகழ்ச்சிக்கு ஒரு ரிக்கட்டும் ஒரு தேசியக் குளிசையும் இலவசம் என்று விளம்பரம் போட்டிருக்கலாம்.
புலம்பெயர் தேசத்தில் கோடரியோடு அலையும் இவர்களுக்கும் முன்னால் கத்தி கறள் பிடித்த கத்திதான்.
மக்களிடம் எஞ்சியிருந்த போராட உணர்வையும் குத்தாட்டத்துக்குள் புதைத்து புறங்காலால் மண்ணைத் தள்ளி மூடி மரமும் நாட்டிவைத்து விடுவார்கள் இந்தக் கோடரிகளும் அதன் காம்புகளும்.
ஜீ.ரி.வி-லைக்கா கூட்டு இப்படியெல்லாம் ‘தேசியக் கலை’ வளர்க்கிறது என்றால், ஐ.எல்.சி அனைத்துலக உயிரோடைத் தமிழ் மற்றும் அடைப்புக்குறிக்குள், ஜனநாயக வழியில் வன்செயல் நீர்த்த வானொலியின் பங்கு சொல்லத் தேவையில்லை. அதென்ன வன்செயல் நீர்த்த???.. ஆ.. முன்னர் வன்முறை செய்து இப்ப திருந்திவிட்டோம் என்பதா… ஜனநாயக வழி என்றால் என்ன… இப்படிப் பல்வேறு கேள்விகள் தொக்கு நிக்க, ஐ.எல்.சி இல் லைக்கா நடத்தும் ஆதவன் தொலைக்காட்டிசின் விளம்பரம் வந்து போகிறது.
இந்தக் கோடரிகளையும் அதன் காம்புகளையும் வைத்துக்கொண்டு கத்தியை கடாசியுள்ள பதிவு இணையமும் தன்னைத் தேசிய இணையம் என்கிறது.