Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லிபியாவில் நேட்டோ நாடுகளின் மனிதப்படுகொகைகள் – எங்கே இணைந்து கொள்வது? : சபா நாவலன்

அரபு நாடுகளின் மக்கள் எழுச்சியின் சமூக அரசியல் பின்புலம் குறித்த ஆய்வுகள் பல சந்தர்பங்களில் உணர்ச்சி மிக்க வெற்று முழக்கங்களாக மரணித்துவிடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய உலக சூழல், புதிய அரசியல் மாற்றங்கள், மேற்கின் மீள முடியாத பொருளாதார நெருக்கடி, தன்னை மறு ஒழுங்கமைக்க முயலும் ஏகாதிபத்தியம் போன்ற அனைத்து அரசியல் நகர்வுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அரபு நாடுகளின் மக்கள் எழுச்சி குறித்த ஆய்வுகளில் மட்டுமன்றி உலகின் ஒவ்வொரு மூலையிலும் நிகழ்கின்ற மாற்றங்களின் பின்னணியில் இவற்றின் மறு தாக்கங்களைக் காணமுடியும். இலங்கையின் இனப்படுகொலையின் பின்னான அதிகார நிறுவனங்களின் அணிசேர்க்கை தெற்காசியாவின் குறிப்பான புறச் சூழலின் புதிய மாற்றங்களை அறிவிக்கின்றது.

ஈழப் போராட்ட வரலாற்றில் பின் தங்கிய பழமைவத சிந்தனையை உருவாக்கிய அரசியல் தலைமையைப் போன்றே அரபு நாடுகளின் பின் தங்கிய உற்பத்தி முறையும் கூட அமைந்திருந்தது. எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே அமரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள், கழுகுகள் போல அரபு நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அரபு நாடுகளிலிருந்த பெரு நிலப் பிரபுக்கள் எண்ணைப் பிரபுக்களானார்கள்.எண்ணைப் பிரபுக்கள் அதிகாரம் செலுத்தும் சமூக அமைப்பு முறையை வளர்ச்சிகளின்றிப் பாதுகாப்பதற்கு மேற்கு நாடுகள் தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டன.

அரபு நாடுகளின் உற்பத்தியின் வளர்ச்சி திட்டமிட்டுத் தடுக்கப்பட்டது. பிரபுக்களின் அதிகாரத்தை நிலைபெறச் செய்வதற்கான சிந்தனை முறை, சட்டவமைப்புக்கள், நீதித்துறை, மத ஒழுங்கமைப்பு என்பன உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட மாறா நிலைச் சமூகம் என்பதும் அதன் உற்பத்தி முறை என்பதும் ஒற்றைப் பரிமாணத் தலைமைக்கு உரியதாக அமைக்கப்பட்டது. சில நாடுகளில் மன்னர்களும், சில நாடுகளில் மன்னர்கள் போலச் செயலாற்றிய சர்வாதிகாரிகளும் நிலவிய நிலப்பிரபுத்துவம் சார்ந்த சமூகக் கட்டமைப்பின் தலைவர்களானார்கள்.

எண்ணை தவிர எந்த வகையான ஏனய உற்பத்தியும் அங்கு வளர்ச்சியய்டைவில்லை. மனித குல வரலாற்றின் முன்னோக்கிய வளர்ச்சி என்பது இயற்கைக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையிலிருந்தே ஆரம்பமாகிறது. அரபு நாடுகளில் இயற்கையைப் பயன்படுத்துகின்ற நிகழ்வுப் போக்கே காணப்பட்டது. பண்ணையடிமை முறை அங்கு இலாதிருந்தாலும், எண்ணை விற்பனையில் பங்குபோட்டுக்கொண்ட வருவாய் என்பது மாற்று உற்பத்திக்கான தேவையை அருகச் செய்திருந்தது. இந்த நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மன்னர்கள் அல்லது சர்வாதிகாரிகளின் அதிகாரம் போதுமானதாக இருந்தது. உழைக்கும் வர்க்கம் ஒன்று அங்கு காணப்படவில்லை. அரபு நாடுகளின் அடிப்படைவாதம் இழையோடிய இஸ்லாமும் இந்த சமூக கட்டமைப்பை மேலும் வலுப்பெறச் செய்வதாக அமைந்திருந்தது.

மேற்குலக ஏகாதிபத்தியங்களும் இவ்வகையான உழைக்கும் வர்க்கத்தைக் கொண்டிராத சமூக அமைப்பை பேணுவதனை ஊக்குவித்தன. அவர்கள் இந்த நாடுகளைச் சுரண்டுவதற்கு ஏதுவாக அமைந்ருந்த அவ்வகையான அமைப்புக்கள் நிலப்பிரபுத்துவ சிந்தனை முறையையே கொண்டிருந்தன.

முதலாளித்துவப் பொருளாதாரம் எழுபதுகளில் நெருக்கடிக்கு உள்ளான போது உலகமயமாதல் என்ற ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது. வறிய நாடுகள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தும் உலக மயமாதல் 90 களின் பின்னான காலப்பகுதியில் அதன் உச்ச நிலையை அடைகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. 2000 ஆம் ஆண்டுகளின் பின்னர் உலகமயமாதல் கொள்கையின் முழுமையான திட்டமிடல் நடைமுறைக்கு வருகின்றது. மேற்குக் கலாச்சாரத்தின் ஏற்றுமதி, மொழி ஆதிக்கம், தன்னார்வ நிறுவனங்களின் விரிவாக்கம் என்ற பல சமூக மற்றும் நிர்வாக அலகுகளை இது கொண்டிருந்தது.

2000 இற்குப் பின்னான பத்தாண்டுகளில் உலக மயமாதல் அரபு நாடுகளிலும் ஊடுருவுகின்றது. அங்கே எண்ணை தவிர்ந்த புதிய உற்பத்திகளும் உருவாகின்றன. தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம், ஆடைத் தொழில், கட்டுமானத் தொழில், சேவைத் துறை, உல்லாசப் பயண நிறுவனங்கள் போன்ற பல்வேறு உப உற்பத்தித் துறைகள் உருவாகின்றன.

இவ்வாறான உற்பத்தி வளர்ச்சியில் பங்கேற்ற படித்த மத்திய தர வர்க்கமும், உழைக்கும் மக்கள் பிரிவும் உருவாகின்றது. இவர்களின் பணச் சுழற்சிக்கு மன்னராட்சி அல்லது சர்வாதிகார அரசுகள் ஏதுவானதாக இருக்கவில்லை.

தவிர உலகமயமாதலின் பின்னான சுரண்டல் அமைப்பு எண்ணை மூலதனத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.

அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான வெறுப்புணர்வு மக்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது. துனிசியவைத் தொடர்ந்து யெமென், எகிப்து, ஈராக், சிரியா போன்ற பல நாடுகளில் மக்கள் எழுச்சிகள் சர்வாதிகார அரசுகளை அசைத்துப் பார்க்கின்றன.

உலகின் எந்தப் போராட்டமும் இரண்டு வர்க்கங்களின் தலைமையை உருவாக்க வல்லது. ஒன்றில் ஒடுக்கும் வர்க்கம் அன்றி ஒடுக்கப்படும் வர்க்கம். வரலாற்றின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் நடைபெற்ற போராட்டங்களை இந்த எல்லைக்கு அப்பால் சென்று நியாயம் கற்பிக்க முடியாது. முதலாளித்துவப் பொருளதார அமைப்பில் ஒடுக்கப்படும் வர்க்கம் பாட்டாளிகளாகவும், ஒடுக்கப்படும் வர்க்கம் தேசிய முதலாளிகளாவும் திகழ்கின்றன. உலக மயமாதலின் பின்னான சூழலில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்பதன் இருப்பு கெள்விக்குள்ளாக்கப்படுகின்றது. ஆக, இரண்டு எதிர் எதிர் வர்க்கங்களாக ஏகாதிபத்திய மூலதனத்தின் தரகர்களாகத் செயற்படும் தரகு முதலாளித்துவ வர்க்கமும், சமூகத்தின் அடிநிலையிலுள்ள உழைக்கும் மக்களும் உருவாகின்றன.

தேசிய இனங்கள் ஒடுக்கபடும் போதோ, தேசிய அரசுகள் அழிக்கப்படும் போதோ, இந்த இரண்டு வர்க்கங்களில் யார் தலைமதாங்குவது என்பது சிக்கலான ஒன்றல்ல. சுய நிர்ணய உரிமை கொண்ட தேசங்களின் தன்னாதிக்கத்திற்கு எதிரான தரகு முதலாளித்துவமா அன்றி அதற்கு எதிரான உழைக்கும் மக்களா என்பது தான் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வினா.

அரபு நாடுகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆக, உழைக்கும் மக்களின் தலைமையில் நடத்தப்படாத எந்தப் போராட்டமும் தரகு முதலாளிகளின் அதாவது ஏகாதிபத்தியத் தரகர்களின் பிடியில் சிக்குண்டு சிதைந்துவிடும். ஈழத்தில் கூட இதுதான் நடைபெற்றது.தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கருதும் தேசிய விடுதலை இயக்கப் போராளிகள் இராணுவத் தாக்குதலின் போது கொக்கொகோலா அருந்தும் கலாசாரத்தை ஈழத்தில் மட்டும் தான் காணமுடியும். ஆக, தலைமையற்ற அரபுலக எழுச்சிகளெல்லாம், ஏகாதிபத்தியத் தரகர்களின் கைகளில் மறுபடி சிக்கிக் கொண்டது. இப்போது துனிசியாவிலும், எகிப்திலும் சில்லறைச் சீர்திருத்தங்களோடு அமரிக்க ஏகபோக அணியின் முகவர்களே ஆட்சிக்கு வந்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் இவ்வாறான போராட்டங்கள் அனைத்தும் அமரிக்க உளவுத்துறையின் ஆலோசனை மையம் எதிர்வு கூறுவது போன்று எதிர்வரும் பத்தாண்டுகளின் “சிக்கலான”, “எதிர்கொள்ளப்பட வேண்டிய” பிரச்சனையாக அமையும்.

ஆனல் இவ்வாறான போராட்டங்கள்,

1. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் மக்கள் போராட்டங்களில் நம்பிக்கை தரவல்லன.
2. அரபு நாடுகளின் மீதான தொடர்ச்சியான ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் வகையில் அரபுலக மக்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
3. ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கம் மிகத்தெளிவாக வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது.
4.ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் ஒருமைப்பட்டையும் ஒன்றிணைந்த சக்தி உருவாவதற்கான சாத்தியங்களை உருவாக்கியுள்ளன.
5. மேற்கு அதிகாரவர்க்கத்தின் நிறவாத அரசியலுக்கு அப்பால் போராடும் பிரிவினரிடையேயான ஐக்கியம் வளர்ச்சிய்டைதற்கான சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

லிபிய நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தப்படும் தாக்குதல்கள் அரபு மக்களுக்கு ஏகபோக அரசுகளை  அடையாளம் காட்டியுள்ளது. கடந்த வாரம் மரோக்கோ நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் பிரன்சிற்கு எதிரான சுலோகங்களும் முன்வைக்கபட்டன.

சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டியங்கும் கடாபி எதிர்ப்பு ஆயுதக் குழுக்களை நேட்டோ நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன.

“அரபு தேசியத்தின்” பிதாமகனாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொண்ட கடாபி ஆரம்பதில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகவே தனது விம்ப்பத்தை உருவமைத்துக்கொண்டர். அமரிக்க இரடைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் ஏகாதிபத்திய அரசுகளோடு தற்காலிகமாகச் சமரசம் செய்துகொண்டதும் அரபு நாடுகளில் கடாபியின் அரபுத் தேசியம் வலுவிழந்து செல்வாக்கற்ற நபராகிவிடுகிறார்.

2008ம் ஆண்டிற்குப் பின்னர் கடாபி இழந்த செல்வாக்கை மீளப் பெறும் நோக்கில் பல முனைப்புக்களை மேற்கொள்கிறார்.

1. வெனிசூலா, கியுபா போன்ற அமரிக்க எதிர்ப்பு நாடுகளோடு உறவை வலுப்படுத்துகிறார்.

2. ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடையும் சீனாவுடனான பல வியாபார ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன, 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள், பெற்றோல் குதங்களிலும், கனிமச் சுரங்கங்களிலும் வேலைசெய்கிறார்கள்.

மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் மேற்கிற்கு லிபியாவை கடாபியிடமிருந்து விடுதலை செய்து முற்று முழுதான மேற்குலத்தை சார்ந்த சர்வதிகாரியிடம் ஒப்படைப்பதே நோக்கமாகவிருந்தது. ஆப்கானில் அல்கைதாவை உருவாக்கியது போன்றே லிபியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை லிபிய சர்வாதிகாரி கடாபிக்கு எதிராக அமரிக்கா ஊக்குவித்தது.

380 குடும்ப உறுப்பினர்களை அரசின் பிரதான அதிகார மையங்களில் உயர்பதவிகளில் அமர்த்தியிருக்கும் ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை விஞ்சிய கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியைப் பயன்படுத்திக்கொண்ட மேற்கு ஆதரவு ஆயுதக் குழுக்கள் அமரிக்க ஆதரவுடன் அதிகாரத்தைக் கையகப்படுத்த முனைகின்றன.

இவர்களுக்கு ஆதரவாகவே நேட்டோ நாடுகள் இதுவரைகாலமும் ஆதரவு வழங்கிவந்த முஹ்மவர் கடாபியின் அரசை கவிழ்க்கும் நோக்கோடு மக்கள் குடியிருப்புக்கள் மீதும் ஆயுத வன்முறையை மேற்கொள்கின்றன.

ஈராக்கிலும் ஆப்கானிலும் லிபியாவிலும் மட்டுமல்ல, சரிந்துவிழும் ஏகாதிபத்திய அமைப்பை மறுசீரமைத்துக்கொள்வதற்காக அமரிக்க அரசு இன்னும் பல நாடுகளில் “ஜனநாயகத்தை” மீட்கும் பணிக்காக மக்கள் குடியிருப்புக்கள் மீது ஆயுதத் தாக்குதல்களை நடத்துவது தவிர்க்கமுடியாதாகிவிட்டது.

உலகில் இரண்டு முகாம்கள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவதாகப் பலவீனமடைந்துவரும் ஏகாதிபத்தியம் இரண்டாவதாக பலமடைந்துவரும் ஒடுக்கப்படும் மக்கள்.

அமரிக்க ஐரோப்பிய நலன்களுக்காகவன்றி, லிபிய மக்களின் நலன்களை முன்வைத்து கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகின்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் முகாமில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் தன்னை இணைத்துக்கொள்ளுவதனூடாகவே தேசியத் தன்னுரிமையை வென்றெடுக்க முடியும்.

Exit mobile version