Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்

prapakaranபிரபாகரன் குழுவில் அவரோடிருந்த அனைத்து உறுப்பினர்களும் மத்திய குழு ஒன்றை அமைப்பதற்கான முடிவிற்கு வருமாறு அவரை வற்புறுத்துகின்றனர். மத்திய குழு அமைப்பது என்பது இயக்கத்தின் இராணுவ அரசியலுக்கு எதிரானது என்ற கருத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாயிருக்கின்றார். இதே வேளை குட்டிமணி தங்கத்துரை போன்றோர் தமது தொழிலை மட்டுப்படுத்திக்கொண்டு அரச எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் தமது கவனத்தைக் குவிக்கின்றனர். அப்போது அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்ற அமைப்பாக உருவாகியிருந்தனர் என அறிந்திருந்தோம்.

இந்தப் பெயரை எப்போது உத்தியோக பூர்வமாக அறிவித்தனர் என்றோ அவர்களின் நடவடிக்கை குறித்த விபரங்களையோ நான் அறிந்திருக்கவில்லை.

பிரபாகரனின் இராணுவ வலிமை குறித்து தங்கத்துரைக்கு நேர்மறையான கருத்துக்களே இருந்தது. அவர் பிரபாகரன் உறுதியான போராளி என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

புதிய புலிகளாக நாம் செயற்பட்ட காலப்பகுதியிலும் அதன் பின்னர்ரும் பல தடவைகள் தங்கத்துரை குட்டிமணி போன்றோர் எம்மிடம் பயிற்சி பெற்றிருக்கின்றனர். தவிர, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் முதல் முதலாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் கூட தங்கத்துரை குட்டிமணி போன்றோரின் இராணுவ நடவடிக்கைகள் சில எம்மால் மேற்கொள்ளப்பட்டதாகவே உரிமை கோருமாறு அவர்கள் அனுமதித்திருந்தனர். தங்கத்துரை குட்டிமணி போன்றோர் தனியான குழுவாகச் செயற்பட்டாலும் எம்மத்தியில் பகை முரண்பாடு நிலவியதில்லை.

இவ்வேளையில் தங்கத்துரையும் பிரபாகரனும் சந்தித்துக் கொள்கின்றனர். இவ்வாறு சந்தித்த வேளையில் பிரபாகரனிடம் தங்கத்துரை அனுதாபம் காட்டியிருக்கிறார். புலிகள் இயக்கம் பிரபாகரனது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பதென்பதையும் அவர் தான் முதலில் தமிழீழத்திற்கான புலிகள் இயக்கத்தை பலம்மிக்கதாக உருவாக்கியவர் என்பதையும் தங்கத்துரை பிரபாகரனிடம் கூறியது மட்டுமன்றி புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்குத் தான் அதிக உரிமை உண்டு என்பதையும் கூறியிருக்கிறார்.

மேலும் பிரபாகரனுக்கு ஏனைய எல்லோருடனும் அதிர்ப்தி இருந்தால் தம்மோடு இணைந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இதன் பின்பதாக சில நாட்கள் பிரபாகரன் சார்ந்த குழுவிலிருந்தவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய குழு தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறை இவர்களை ஓரணியில் இணைத்திருந்தாலும், ஏனைய எல்லா உறுப்பினர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததால் பிரபாகரனால் அவர்களுடன் நீடிக்க முடியவில்லை.

இறுதியில் பிரபாகரன் புலிகள் இயகத்திலிருந்த ஏனையோரிடம் எஞ்சியிருந்த பணம், ஆயுதங்கள் ஆகியவற்றை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரையும் கூட, அந்தப் பெயரை அவர் இனிமேல் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிய வழங்கி விட்டுச்செல்கிறார்.

இவ்வாறு பிரபாகரன் விலகிச்சென்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆளுமை செலுத்துபவர்களாக அன்டன், மனோ மாஸ்ரர், தனி, ராகவன் போன்றோர் திகழ்ந்தனர். மனோ மாஸ்டர் போன்றோர் பின்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்க்கு தாமே உரிமையுடைவர்கள் என்று குறிப்பிட்டதை அறிந்திருக்கிறேன்.

புலிகளிலிருந்து தனியாக விலகிச்சென்ற பிரபாகரன், தங்கத்துரை வழி நடத்திய ரெலோ என்ற அமைப்பில் இணைந்து கொள்கிறார்.

துரையப்பா கொலை நடத்தப்பட்ட சில நாட்களின் பின்னர் இலங்கை அரச படைகளால் பிரபாகரனோடு இணைந்திருந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவ்வேளையில் பிரபாகரன் தனிமைப்பட்டிருந்தார். எமது உதவியை நாடி எமது ஊரை நோக்கி அப்போது அவர் வந்த வேளையில் உண்பதற்கு மூன்றுவேளை உணவோ, தங்குவதற்கு நிரந்தர இடமோ இருந்ததில்லை. பதினேழு வயது பிரபாகரனின் தனியனாக நின்றிருந்தார்.

யாருமற்ற அவரிடம் ஆயுதம் தாங்கி இலங்கை அரசிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சியிருந்தது. அதே போன்று தான் சார்ந்த இயக்கத்திடமிருந்து அனைவராலும் நிராகரிக்கப்பட்டு தனிமையடைந்த இரண்டாவது நிகழ்வு இவ்வேளையில் நடைபெறுகிறது.

இனிமேல் தனது வாழ் நாள் போராட்டம் என்று வரித்துக்கொண்ட பிரபாகரன் போராடுவதற்காகவே தங்கத்துரை குட்டிமணி சார்ந்த அமைப்பில் இணைந்து கொள்கிறார்.

பிரபாகரன் எந்த நடவடிக்கைக்கும் மறுவார்த்தையின்றி ஒத்துழைக்கும் போக்கைக் கொண்டிருந்தவர் பேபி சுப்பிரமணியம். அவரும் பிரபாகரனோடு சென்று தங்கத்துரை – குட்டிமணி குழுவில் இணைந்து கொள்கிறார்.

1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதி வரைக்கும் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே பிரபாகரன் செயற்பட்டார்.

1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுந்தரம் கொலை செய்யப்பட்ட வேளையில் தமிழ் நாட்டில் என்னோடு தங்கியிருந்த நாகராஜா, சுந்தரத்திற்கு அஞ்சலித் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறார். அப்போது ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினம், பிரபாகரன் ஆகிய இருவரும் நாகராஜாவைக் கொலைசெய்வதற்காகக் கடத்தி சென்ற சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையிலும் பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே செயற்பட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சித்திரா அச்சகத்தில் சுந்தரம் கொலைசெய்யப்பட்ட நடவடிக்கையானது பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, ரெலோ இயக்கத்தில் அவர் உறுப்பினராக இருந்த வேளையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

மனோ, அன்டன், தனி,ராகவன்,சசி,பண்டிதர்,சங்கர்,ஆசீர், போன்ற- பேபி சுப்பிரமணியம் தவிர்ந்த – அனைவரும் பிரபாகரனோடு ரெலோ இயக்கத்திற்குச் செல்லாமல் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாகச் செயற்பட ஆரம்பிக்கின்றனர்.

தங்கத்துரை குழுவோடு இணைந்த பிரபாகரன் சில நாட்களிலேயே பண்டிதர், சங்கர், போன்றோருடன் தனித்தனியாகப் சந்திக்கிறார். அவர்களுக்கு இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ரெலோவில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு கோருகிறார். உடனடியான இராணுவச் செயற்பாடுகளற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளில் விரக்தியுற்ற இளைஞர்களான பண்டிதர், சங்கர், ஆசீர், புலேந்திரன் போன்றோர் பின்னதாக ரெலோ அமைப்பில் இணைந்து கொள்கின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவராக இணைந்து கொண்டதும் மறுபுறத்தில் மனோ மாஸ்டர், ராகவன், தனி, அன்டன் போன்றோர் தனிமைப்பட்டுப் போகின்றனர்.

அன்டன் ராகவன் போன்றோர் சில காலங்களின் பின்னர் இணைந்து கொள்ள மனோ மாஸ்டர், தனி ஆகியோர் தொடர்புகளற்று செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மனோ மாஸ்டர் சிறீ சபாரத்தினம் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டதாக அறிந்தேன். பின்னதாக 1984 காலப்பகுதியில் வல்வெட்டியில் புலிகளால் அவர் கொலை செய்யப்பட்டார்.

*1980 ஆம் ஆண்டின் காலிறுதிப் பகுதியில் நடைபெறும் உடைவுகளும், இணைவுகளும் நிறைந்த இந்தச் சம்பவங்கள், பலர் மத்தியில் வெறுப்பையும் விரக்த்தியையும் உருவாக்குகின்றன. பல போராளிகள் போதைக்கு அடிமையாகின்றனர்.

இச் சம்பவங்கள் நடைபெற்ற அதே வேளையில் புளொட் இயக்கமாகப் பெயர் சூட்டப்பட்ட எமது குழுவில் பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. சந்ததியார் முழு நேரமாக எம்மோடு செயற்பட ஆரம்பிக்கிறார். சுந்தரம் மற்றும் உமா மகேஸ்வரனின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. இராணுவத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் இயக்கதை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெறுகின்றன.

நாம்  எவற்றிற்கு எதிராகப் போராடினோமோ அவை அனைத்தும் மறுபடி உருவாக்கப்படுவதாக பலர் விரக்க்திக்கு உள்ளக்கப்படுகின்றனர். சமூகப் புறச் சூழல் மனிதர்களை உருவாக்குகின்றது என்பது உண்மையாயினும் ஒவ்வொரு தனி மனிதனதும் பாத்திரம் வரலாற்றின் போக்கில் தற்காலிகத் திரும்பல்களை ஏற்படுத்துகின்றது. நாம் மக்கள் போராட்டம் என்ற அடிப்படையை முன்வைத்து உருவாக்கிய புதிய பாதை உமா மகேஸ்வரனின் வருகையோரு வேறு திசையில் பயணிப்பதாக உணர்கிறோம்.

*சம்பவங்களை நினைவிலிருந்தே எழுதுவதால் இனியொரு வாசகர்களின் பின்னூட்டங்களிலிருந்தும், என்னோடு முன்பிருந்தவர்களுடனான உரையாடலின் மூலமும் செழுமைப்படுத்திக் கொள்கிறேன். முன்னைய பதிவில் 1980 பின்பகுதி என்பது 1979 பின்பகுதி எனத் தவறாகப் பதியப்பட்டதற்கு வருந்துகிறேன்.

குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும்  நூலின் பின்னிணைப்பிலும்  இனியொருவிலும்  சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.

(இன்னும்வரும்..)

தொடரின்  முன்னைய பதிவுகள்…

பாகம் 23 பாகம் 22 பாகம் 21 பாகம் 20 பாகம் 19 பாகம் 18 பாகம் 17 பாகம்16 பாகம்15 பாகம்14
பாகம்13 பாகம்12 பாகம்11 பாகம்10 பாகம்9
பாகம்8 பாகம்7 பாகம்6 பாகம்5 பாகம்4
Exit mobile version