ஒவ்வொரு அரசும் மாற்றமடையும் போது அது ஒவ்வோர் வகையில் மக்களின் கழுத்தை நெரித்துக் துவம்சம் செய்து கொண்டே இருக்கிறது. எத்தனை அப்பாவிகளை அழித்திருக்கிறார்கள்?
எதுவும் அறியாது வாழ்ந்த தேசிய இனத்தின் ஒரு பகுதியை அழித்துப் போட்டிருக்கிறார்கள். இன்னொரு பகுதியை ஊனமுற்ற சமூகமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆக, பேரினவாதிகள் பலவீனமடையவில்லை. அவர்களின் பலம் நாளாந்தம் அதிகரிக்கின்றது. முப்பது வருடப் போராட்டத்தில் பெற்ற சில இராணுவ வெற்றிகளோடு பெருமிதமடைந்து கொள்வகு மட்டும் போதுமானதா? புலம் பெயர் நாடுகளில் மேடை போட்டு பெருமையடித்துக் கொள்வது மட்டும் போதுமானதா??
நச்சு விருட்சம் போல் பேரினவாதம் வளர்ந்து ஒரு தேசிய இனத்தின் வேர்களை அசைத்துப் பார்க்கின்றதென்றால் நாம் எங்கோ தவறிழைத்திருக்கிறோம் என்றாவது புரிந்து கொள்ளவில்லையா?
நமது போராட்டம் தவறானதல்ல. அது நியாயமானது. அவசியமானது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியது. ஆனால் அது முன்னெடுக்கப்பட்ட வழிமுறையில் தவறிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகின்றது.
உலகதின் பெரும்பான்மை , போராடும் மக்களே. ஒடுக்குமுறை தம்மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அவர்கள் போராடுகிறார்கள். இவர்களை ஒருபோதும் நாம் கண்டுகொண்டதில்லை. இதனால் தான் இந்தியப் பழங்குடி மக்கள் பாரம்பரிய ஆயுதங்களோடு நடத்துகின்ற போராட்டம் உலக மக்கள் மத்தியில் பரம்பலடைந்த அளவிற்குக் கூட விமானங்களை வைத்திருந்த எமது போராட்டம் மக்கள் மயமாகவில்லை.
இதனால் தான் அரை வருடங்களுக்குள் அழிக்கப்பட்ட எமது போராட்டம் அழிக்கப்பட்டது போல கஷ்மீரிகளின் போராட்டம் அழிக்கப்படவில்லை.
அத்தனை வல்லரசுகளும் அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய போது பலஸ்தீனியப் போராட்டம் அழிக்கப்படவில்லை.
வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் இந்தியா இலங்கையில் இனப்படுகொலை நடத்த முடிந்தது. நாகாலாந்து போராளிகளோடு இங்கிலாந்தில் சமாதானப் பேச்சு நடத்துகிறார்கள். சீனாவினதும் இந்தியாவினதும் அழுத்தங்களை மீறி நேபாளிகள் போரில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் மேலாக எம்மிடம் அதிக வலுவிருக்கிறது. இழப்புகளிலிருந்து கற்றுக்கொண்ட நம்பிக்கை இருக்கிறது. இவை அனைத்தும் உறுதியான வெற்றியை நோக்கிய திட்டமிடலை உருவாக்க வழி சமைக்கும். போராட்டங்களை புதிய வழிவில் முன்னெடுக்க உதவும். நண்பர்களை இனம்கண்டு கொள்ளவும் எதிரிகளை எதிர்கொள்ளவும் புதிய வழிகளைத் திறக்கும்.
இது வரைக்கும் புலிகளையும் தேசியத்தையும் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்தவர்கள் இப்போது தம்மிடையே மோதிக்கொள்கிறார்கள். இலங்கை அரசின் உளவுத்துறை, இந்திய அரசின் உளவுத்துறை என்ற அனைத்து அழிவு சக்திகளும் தமது அழிப்பை ஆரம்பித்து நீண்ட நாளாகிவிட்டது. போராட்டம் என்ற பெயரில் புலம் பெயர் மாபியாக்களாக உலாவந்தவர்களிடையேயான மோதல் எதிர்பார்க்கப்பட்டதே. இதில் நம்பிக்கை இழந்து போவதற்கும் விரக்திக்கு உள்ளாவதற்கும் எதுவும் இல்லை.
முப்பது வருடப் போராட்டத்தின் வலுவும், ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் உறுதியும், உலகெங்கும் எம்மை நோக்கி தோழமைக் கரம் கொடுக்கும் ஜனநாய முற்போக்கு சக்திகளின் ஆதரவும் மேலும் நம்பிக்கை தருவன. இவை முன்னைவிட உத்வேகமளிப்பவை. இப்போது பலர் தெளிவடைந்திருக்கிறார்கள்.
இவை அனைத்தும் புதிதாக முளைவிடும் குழுவாதிகளையும், அரசியல் வியாபாரிகளையும் அழித்து நேர்மையான வழியில் போராட்டத்தை வழி நடத்தும்.