Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேற்கும் லிபியாவும் – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 2) : சபா நாவலன்

கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 2)

முதலாவதும் முக்கியமானதுமாக முவமர் கடாபியும் அவரின் சர்வாதிகாரமும் யாருக்கும் முன்னுதாரணமாகிவிட முடியாது. மேற்குலக ஊடகங்களின் புரட்டுக்களையும் பொய்களையும் தவிர்த்துப் பார்த்தால் கூட கடாபி தனது அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்வதற்காகப் பலரைக் கொன்று குவித்திருக்கிறார் என்பதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அரபுலகிலும் ஆபிரிக்காவிலும் உருவான அனைத்து சர்வாதிகாரிகளிடமிருந்தும் கடாபி பல வகைகளில் வேறுபடுகிறார். குறிப்பாக 2000 ஆண்டுவரை கடாபியின் அரசியலில் இழையோடிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்த வேறுபாடுகளின் மையப் பகுதியாக அமைகிறது.

அரேபியர் மத்தியிலும் ஆபிரிக்க நாடுகளிலும் கடாபிக்குக் காணப்பட்ட ஆதரவுத் தளம் பரந்துபட்டது. மேற்கின் கூலிகளாகச் செயற்பட்ட அரசியல் தலைவர்கள் கூட கடாபியை எதிர்த்து அரசியல் பேச முடியாத நிலையே காணப்பட்டது. தென்னாபிரிக்க சுதந்திரதின விழாவில் சொற்பொழிவு நிகழ்த்திய பில் கிளிங்டன் கடாபியின் ஆபிரிக்கா மீதான ஆதிக்கம் இல்லாதொழிக்கப்பட்ட வேண்டும் எனத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரான நெல்சன் மண்டேலா பின்வருமாறு குறிப்பிட்டார்.

“எமது இருண்ட காலங்களில் எமக்கு உறுதுணையாக இருந்த ஒருவர் குறித்து பில் கிளிங்டன் கூறும் அவதூறுகளோடு நான் இணைந்து கொள்ளத் தயாரில்லை”

லிபியாவில் வாழ்கின்ற அரேபிய இனக்குழுவைச் சார்ந்த கடாபி தனது ஆரம்ப நாட்களிலிருந்தே அரேபியர்களும் ஆபிரிக்கர்களே என்று மறுபடி மறுபடி கூறிவந்தவர். ஆபிரிக்க நாடுகளில் கடாபியின் மக்கள் ஆதரவின் மூலைக் கல்லாக இந்தக் கூற்று அமைந்திருந்தது. ந்கிகி ந்ரோஜி என்ற கென்னியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கடாபி கறுப்பின ஆபிரிக்கர்களுக்கு வழங்கிய சிறப்புரிமையும் வெள்ளையின ஆதிக்கத்திற்கு எதிரான கடாபியின் செயற்பாடுகளும் மேற்கை அச்சத்திற்கு உள்ளாக்கியிருந்தது என்கிறார்.

கென்னியா உட்பட பல ஆபிரிக்க நாடுகளுக்கு கடாபி வழங்கிய பொருளாதார உதவிகள் பல மேற்கின் அதிராகத்திற்கு எதிரான மாற்று அதிகாரத்தை உருவாக்க முனைந்தது. குறிப்பாக உலக வங்கியின் ஆதிக்கத்திற்கு எதிராக ஆபிரிக்க வங்கியை உருவாக்க வேண்டும் என்ற கடாபியின் முன் மொழிவும் செயற்பாடுகளும் ஆபிரிக்காவில் அவரின் செல்வாக்கை அதிகரித்திருந்தது.

கடாபியை பயங்கரமான கோமாளியாகச் சித்தரிக்க மேற்கின் ஊடகங்களின் தொடர் முயற்சிகள் அரபு நாட்டு மக்களையும் ஆபிரிக்க நாடுகளையும் சென்றடையவில்லை.

1. ஐரோப்பிய அமரிக்க செய்மதி வலைக்கு எதிராக ஆபிரிக்க செய்மதித் வலையை உருவாக்க முயன்றமை.

2. உலக வங்கிக்கும் I.M.F இற்கும் எதிராக ஏ.எம்.எப்(A.M.F ) ஐ உருவாக்க முயன்றமை.

3. ஐக்கிய ஆபிரிக்க அரசு ஒன்றை உருவாக்க முயன்றமை.
போன்ற கடாபியின் நீண்ட காலச் செயற்பாடுகள் கடாபி கொல்லப்பட வேண்டிய எதிரியாகவே அமரிக்காவும் ஐரோப்பாவும் கணித்திருந்தன.

ஆபிரிக்க நாடுகளிலும் அரபுலகிலும் கடாபிக்கு பரந்தளவில் காணப்பட்ட மக்கள் ஆதரவு இதுவரைக்கும் வேறு யாருக்கும் கிடைத்ததில்லை.

மேற்கின் அத்தனை ஊடகங்களும் ஒருங்கிணைந்து கடாபி குறித்த மிகைப்படுத்தப்பட்ட அவதூறுகளைப் பரப்பிவந்த போதும் கூட கடாபியின் ஆதரவு வட்டத்தை உரசிப்பார்க்கக் கூட முடியவில்லை.
எதியோப்ப்யா, சாட், மாலி போன்ற நாடுகளுக்கு கடாபியின் பொருளாதார உதவிகள் மேற்கின் பிரச்சாரத்தை விடப் பலமடங்கு பலம் வாய்ந்தாக அமைந்திருந்தது.

கடாபி குறித்த பன் நாட்டு நிறுவனங்களின் ஊடகப் பொய்களும் திருட்டுத்தனங்களும் அருவருப்பானவை. கடாபி 200 பில்லியன் சொத்துமதிப்பைக் கொண்ட உலகத்தின் மிகப்பெரிய பண முதலை என்ற பிரச்சாரங்கள் அனைத்து ஊடகங்களிலும் முடுக்கிவிடப்பட்டன. இச் சொத்துக்களை மேற்கின் வங்கிகள் முடக்கியுள்ளதாகவும் லிபியாவின் மீள் கட்டுமானப் பணிக்காக பகுதியான பணம் முதலில் வழங்கப்படும் என்றும் ஊடகங்கள் இரச்சல் தாங்கமுடியாத அளவிற்கு சத்தமிட்டன.

இதையெல்லாம் கிரகித்துக்கொண்டவர்கள் ஏமாற்றப்பட்ட பின்னர் முக்கியத்துவப்படுத்தப்படாத செய்தி ஒன்று வருகிறது.
Central Bank of Libya, the Libyan Investment Authority, the Libyan Foreign Bank, the Libyan National Oil Corp. and the Libya African Investment Portfolio. போன்ற அரச நிறுவனங்களின் பெயரிலேயே பெரும்பாலான பண வைப்பீடுகளும் முதலீடுகளும் காணப்படுவதாகவும் அவை கடாபி குடும்பத்தினருக்கு தேவையான போது திரும்பிப் பெறப்படும் நிலையிலேயெ இருப்பதாகவும் காதோடு காதாகத் தகவல் வெளியிட்டனர். கடாபி லிபியாவைக் கொள்ளையடித்தார் என்பதை உரத்த குரலில் கொக்கரித்த மேற்கின் ஊடகங்கள், அவை கடாபியின் பெயரில் இல்லை என்பதை சவுதி அரேபிய தொலைக்காட்சியை ஆதாரம் காட்டி வெளியிட்டன.

இதில் கேவலம் என்னவென்றால் ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணை வளத்தைக் கொண்டிருக்கும் லிபியாவைக் கொள்ளையிட மேற்கு நாடுகள் நடத்திய இனப்படுகொலையை விட லிபிய மக்களின் $200 பில்லியனையும் கொள்ளையிடப் போகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதைத் தான் ஒட்டச் சுரண்டுவது என்பார்களே, அதையே அயோக்கியர்கள் நடத்தினால் இப்படித்தான் அருவருப்பாக இருக்கும்.
இத்தாலி ஆக்கிரமிப்பில் பிறந்த கடாபியை அமரிக்க ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் இறைச்சித் துண்டு போன்று இறந்தபின்னரும் தெருக்களில் விசியெறிந்து விளையாடியதைக் கண்ட மனிதகுலம் தலைகுனிந்தது. அதைப் பார்த்து ரசித்த அமரிக்கப் பெண் கிலாரி கிளிங்டன் கைதட்டிக் குதூகலித்தார்.

அதனை அமரிக்க ஐரோப்பிய சார்பு ஊடகங்கள் மகிழ்ச்சி பொங்க வெளியிட்டு தமது ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்திக்கொண்டனர். மேற்கு நாடுகள் ஒட்டவைத்த ஜனநாயகத்தில் பிறந்த நமது “தேசியக்” குழந்தைகள் ஆய்வு செய்து கிலாரி கிளிங்டனை ஜெயலலிதாவிற்குப் பின்னரான தமிழ்த் தாயாகத் தத்தெடுத்துக் கொண்டனர்.

இதற்கு முன்னதாக 1988ம் ஆண்டு பான் அமரிக்கன் விமான நிறுவனத்திற்கு உரிமையான விமானம் ஸ்கொட்லாந்தில் வெடித்துச் சிதறிய போது மேற்குலகம் அதன் பிரச்சார ஊடகங்களின் துணையோடு பழியை கடாபி மீது சுமத்தியது. பயணித்த 259 பிரையாணிகளில் யாரும் உயிர் தப்பவில்லை. இக் குண்டு வெடிப்பிற்கு எதிராக இரண்டு லிபியர்களை பிரித்தானிய அமரிக்க விசாரணைகள் குற்றம் சுமத்தின. அவர்களை விசாரணைக்காக பிரித்தானியாவிற்கு அனுப்புவதற்கு மறுத்துவந்த கடாபி, 2009 ம் ஆண்டு குறைந்தபட்ச உடன்பாட்டின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில் குற்றவாளியாக, சாட்சிகளின் அடிப்படையில், இனம்காணப்பட்ட மகதி என்ற லிபியப் பிரஜை சிறைத்தண்டனைக்கு உள்ளானர். பின்னதாக மகதிக்கு எதிராகச் சாட்சி கூறியவருக்கு அமரிக்கா $4 மில்லியன் சன்மானமாக வழங்கியதற்கான ஆதாரங்கள் வெளியாகின.

லிபியா 1.7 மில்லியன் பரல் எண்ணையை நாளாந்தம் உற்பத்தி செய்கின்றது. 2000 ஆம் ஆண்டு வரைக்கும் தேசியமயமாக்கப்படிருந்த எண்ணை மற்றும் ஏனைய உற்பத்தியும் இணைந்த அரைவாசிப் பகுதி 2000ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2003 இல் தனியார் மயப்படுத்தப்படுகிறது.

கடாபி உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் லிபியாவை உள் நுளைத்துக் கொண்ட பின்னர் பொருளாதாரம் சிறிது சிறிதாக வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. கடாபி மரணித்துப் போகும் வரை கூட சிங்கப்பூர் போன்ற மத்திய வருமான நாடாகவே உலக வங்கியால் லிபியா கணிக்கப்பட்டது.
லிபிய மக்களின் வாழ்க்கைத் தரமும் கடாபியின் இனக்குழு அரசியலும், மேற்கின் பெரு நிறுவன ஊடகங்களின் பிரச்சாரங்கள், சாட்சியின்றி நிகழ்தப்பட்ட இனப்படுகொலை, இலங்கை இனப்படுகொலையின் தொடர்ச்சி, போர்க்குற்றங்கள், லிபியாவின் எதிர்காலம் போன்ற கட்டுரையின் ஏனைய பகுதிகள்

விரைவில்..

Exit mobile version