முள்ளிவாய்க்காலில் மூன்றே நாட்களில் ஐம்பாதயிரம் மக்கள் துவம்சம் செய்யப்பட்டது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் அதே கணத்தில் இன்னொரு அழிப்பு உலகின் மறு மூலையில் ஆரம்பிக்கப்படுகிறது.
இவை எல்லாம் தெளிவாகத் திட்டமிடப்பட்ட அழிவு அரசியல் ஒன்றினூடாக அதிகாரவர்க்கம் நிறைவேற்றுகிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிறுபான்மையான இந்த அதிகார வர்க்கம் கட்டமைக்கின்ற புதிய அழிவு அரசியலுக்கு சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பலியாகின்ற உப கூறுகளைக் காண்கின்றோம். இவர்களின் திட்டமிடலைப் புரிந்து கொள்ளாமல் அழிவை எதிர்கொள்வது சாத்தியமற்றது.
இதற்கு எதிரான தெளிவான அரசியல் முன்வைக்கப்படுவதும் அதனைத் திட்டமிடுவதும், இதனை எதிர்கொள்வதற்கு அவசியமானதாகின்றது. ஒரு புறத்தில் தமது வியாபார இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சாரிசாரியாகக் கொலைகளைக் கூட நிறைவேற்றத் தயாரான அதிகார வர்க்கம், மறுபுறத்தில் பெரும்பான்மையாகப் பலம் மிக்க ஆனால் அரசியல் வழிமுறை இன்றிப் பலவீனமான மக்கள் என்ற தெளிவான வேறுப்பாட்டைக் காண்கிறோம்..
இவ்வாறான ஒரு கடந்துபோன சூழலிலேயே கார்ல் மார்க்ஸ் உலகப் புகழ் பெற்ற நூலான மூலதனத்தை எழுதினார்.
“நிதி முதலாளித்துவம் ஒவ்வொரு கோணத்திலும் இருந்து அடிவாங்கிக்கொண்டிருக்கின்றது இந்தக் கணத்தில் கார்ல் மார்க்ஸ் மகிழ்ச்சியடைந்திருப்பார்” என்று பிரித்தானியப் பத்திரிகை கார்டியன் அமரிக்காவில் பொருளாதாரம் 2008ம் ஆண்டில் அடிவாங்க ஆரம்பித்த போது தலையங்கம் எழுதியிருந்தது. “It is a moment Karl Marx would have relished. From every angle financial capitalism is taking a battering” (The Guardian).
“கார்ல் மார்க்ஸ் மிகச் சரியாகவே முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அபாயம் குறித்து ஆராய்ந்திருக்கிறார்” என்று இரண்டு வருடங்களின் முன்பதாக குறிப்பிட்டது வேறு யாருமல்ல. கன்டபரி கிறிஸ்தவ பிரதான மதகுரு ரோவன் வில்லியம்ஸ். மார்க்ஸை கிறீஸ்தவ மத நிறுவனங்கள் 20ம் நூற்றாண்டின் ஆபத்தான பிசாசு என வர்ணித்து 150 ஆண்டுகளின் பின்னர் தவிர்க்க முடியாமல் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் இது.
கடந்தவாரம் தோலிவியடைந்த பிரஞ்சு அதிபர் நிகோலா சார்கோசி என்ற அடிப்படைவாத வலது சாரி கார்ல்மார்க்சின் மூலதனம் நூலை படித்துக்கொண்டிருப்பது போன்ற படத்தை வெளியிட அனுமதி வழங்கினார். ஜேர்மனிய நிதி அமைச்சர் பியேர் ஸ்ரேன்புரூக் கால்ர் மார்க்ஸ் மறுபடி வந்துவிட்டார் என வருத்தப்பட்டுக்கொண்டார். உலகத்தில் வர்த்தக நிறுவனங்கள் எங்கெல்லாம் கொள்ளையிடலாம் எனத் தேடிக்கொண்டிருந்த பொருளியல் வல்லுனர்கள் கார்ல் மார்க்ஸ் ஐப் படித்திருந்தால் இன்றைய உலகத்தை பல வருடங்களின் முன்னமே புரிந்து கொண்டிருப்போம் என்கிறார்கள்.
நியூ யோர்க் ரைம்ஸ் கால் மார்க்சை மறுபடி இழுத்துவந்து அறிமுகப்படுத்துகிறது. உலகின் மேட்டுக்குடி ஊடகங்கள் எல்லாம் கார்ல் மார்க்ஸ் சொன்னதெல்லாம் சரி என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்தன.
ஜேர்மனியில் முன்னணி கல்வித்துறை வெளியீட்டாளர்களான டியெட்ஸ் வேஹ்ர்லாக் நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் அதிக விற்பனையான நூல் கார்ல் மார்க்சின் மூலதனம் என்று கூறுகிறது.
இவை அனைத்துக்கும் மத்தியில் மார்க்சியம் குறித்த வெறுப்பும் அது குறித்த தவறான பார்வைகளும் மூன்றாம் பலர் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் உலக நாடுகளில் அதிலும் போரையும் மனித அழிவையும் கடந்துசென்ற இலங்கை போன்ற நாடுகளின் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மத்தியில் மார்க்சியம் குறித்த வெறுப்புணர்வு திட்டமிட்டே விதைக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்டுக்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்ற கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் மார்க்சியத்தின் உள்ளடக்கத்தை முற்றிலுமாக மாற்றத்திற்கு உள்ளாக்கிவிடுவதுண்டு.
இலங்கையில், தேசிய விடுதலைப் போராட்டம் “களைகட்டியிருந்த” 80 களின் ஆரம்பப் பகுதிகளில் மூலதனத்தை அதன் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாமலே சோகமாக வாசித்துத் தொலைத்திருக்கிறோம். உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிவாரணியக – அதிலும் பெரிய மருந்துப்பொட்டலமாக – மூலதனத்தை கேள்விப்பட்டிருந்தோம். மிகவும் அரிதாகவே அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அப்போதெல்லாம் ஐம்பதிற்கு மேற்பட்ட விடுதலை இயக்கங்கள் முளைவிட்டிருந்தன. இன்றைய தன்னார்வ நிறுவனங்களைப் போல. ஈழப் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)என்பதும் அவற்றுள் ஒன்று. அதன் தலைவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட பாலசுப்பிரமணியம் என்பவரை அப்போது சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
சிவப்பு நிறத் தொப்பியும் இராணுவ உடையும் அணிந்து, சிறிய ரக இயந்திரத் துப்பாகியோடு அவர் தன்னைப் படம் பிடித்து அதனை ஒரு நூலின் அட்டைப்படமாக்கியிருந்தார். அந்த நூல் தான் ஈழ மார்க்சிஸ்டுக்களின் கொள்கைப் பிரகடனம் என்றார். மூலதனத்தை முற்றாகப் படித்து “ஞானம் பெற்றே” அந்த நூலை எழுதியதாக வேறு சொல்லிவைத்தார். தாம் தான் முதலில் கொம்யூனிச ஈழம் பற்றிப் பேசியதால் தம்மைக் கடந்தே எல்லா இயக்கமும் போக வேண்டி வரும் என்றார்.
மறு நாளே கோவில் ஒன்றின் முன்னால் தன்னுடன் ஆறுதலாகப் பேசுவதற்கு நாள் குறித்துத் தந்திருந்தார். மூலதனம் படிக்கும் ஆர்வத்தோடு தலங்காவற் பிள்ளையார் கோவிலுக்கு அவரைச் சந்திக்கச் சென்ற போது ஒரு வாகனத்தினுள் சில பெண்களைக் காண்பித்து தமது தோழர்கள் என்றார். ஆனையிறவு முகாமை அடித்துத் தகர்த்துவிட்டு மூலதனத்தில் எழுதியவற்றை பிரயோகித்து கம்யூனிச ஈழம் கட்டப் பொவொவதாகச் சொன்னார். மூலதம் பேசப்படவில்லை. சில காலங்களில் அவரது இயக்கத்திலிருந்த பெண்கள் கொடுமைப்படுத்தப் படுவதாக ஏனைய இயக்கங்களை நோக்கி ஓடிவந்தது எனக்குத் தெரியும்.
பாலசுப்பிரமணியம் இப்போது எங்கே என எனக்குத் தெரியாது. அவர் தோன்றிய காலத்தில் அவரைவிடப் பெரிய வியாபாரிகளால் விழுங்கப்பட்டுவிட்டார். ஆனால் இப்போது பல பாலசுப்பிரமணியங்கள் அழுக்கு மேடுகளிலிருந்து புழுக்கள் போல நெளிந்து வருகிறார்கள். இவர்கள் எதிர் கொள்ளப்பட வேண்டிய அளவிற்கு இன்னும் ஆபத்தானவர்களாக வளரவில்லை. ஆனல் மார்கிசியத்தின் அடிப்படைகளாவது சொல்லப்படாவிட்டால் ஏகாதிபத்தியங்களின் பாவனைப் பொருளாக பாலசுப்பிரமணியங்கள் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
பாலசுப்பிரமணியத்தோடு மூலதனத்தை வாசித்தலுக்கு ஏற்பட்ட தோல்வியின் பின்னர், 80 களின் இறுதியில் அதனை மறுவாசிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
இன்னனும் அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. 90 களின் ஆரம்பத்தில் பிரஞ்சுப் பல்கலைக் கழத்தில் கணிதம் படித்துக்கொண்டிருந்த போது, பல்கலைக்கழகப் படிப்பகத்தில் தற்செயலாக பூரியரின் நூல் ஒன்றைக் காணக் கிடைத்தது. கணிதத்தில் பிரபலாமன பூரியர் தொடரை எழுதியவரின் நூல் என்று தவறாகப் புரிந்து கொண்டு வாசித்தால் கற்பனாவாத சோசலிசம் குறித்து எழுதிய சார்ள்ஸ் பூரியரின் நூல் நூல் என்ற அறிந்துகொள்ள நேரமெடுக்கவில்லை. பிரஞ்சு மொழியில் பல பக்கங்கள் முடியும் வரை படித்துமுடித்த நூல் என்றவகையில் நினைவில் நிற்பது மட்டுமல்ல பூரியர் மற்றும் புருதோன் குறித்து மார்க்ஸ் எழுதியவை இன்னொரு கோணத்தில் நினைவுக்கு வந்தன.
அவ்வப்பொது மூலதனத்தைப் பிரஞ்சு மொழியில் படிக்க முனைந்தும் புரிதல் கடினமானதகவே அமைந்தது. சில பாகங்களை வேறொரு கோணத்தில் அறிந்துகொள்ள முடிந்தது.
சில வருடங்களின் முன்னர் டேவிட் ஹார்வியின் “மூலதனத்தை வாசித்தல்” விரிவுரைகளைக் கேட்ட போது, மூலதனம் என்ற மனித குலத்தின் பொக்கிசத்தினுள் பொதிந்திருந்தவற்றை ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது. பின்னர் தமிழில் மூலதனத்தை வாசித்த போது 80 களில் இருந்த நிலையில் நான் இருக்கவில்லை.
ஆக, மூலதனம் குறித்த வாசிப்பையும் புரிதலையும் முழுமையாக முன்வைக்கும் முயற்சியே இது.
சமூகப் பற்றுள்ள அனைவரும் தவறுகளை விமர்சிக்கவும் சரியானவற்றைச் செழுமைப்படுத்தவும் இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மார்க்ஸ் தான் எழுதத் திட்டமிட்டிருந்தவற்றுள் எட்டில் ஒரு பகுதியையாவது எழுதி முடிக்க இயலவில்லை என்று பேராசிரியர் டேவிட் ஹார்வி கூறுகிறார். அந்தப் பகுதி மட்டுமே உலகின் இன்றை பல சிக்கல்களை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னமே எதிர்வு கூறியுள்ளது என்பது தான் அதன் சிறப்பு.
-முதலாளித்துவ சமூக அமைப்பு.
-வர்க்கங்கள், உழைப்புசக்தி,உற்பத்தி
-பணச்ச்சுற்று
-உற்பத்தித் திறனற்ற வர்க்கம்.
-தனியார் மயமாக்கம்.
-கடன் பொறிமுறை
-அரசு.
-உழைப்புப் பிரிவினை
– சர்வதேச உழைப்புப் பிரிவினை.
– பரிமாற்றம்.
– வரி
– அரச கடன்.
– பொதுத்துறை கடன்.
– காலனிகள்.
– உலகச் சந்தையும் நெருக்கடியும்.
– ஏற்றுமதியும் இறக்குமதியும்
போன்ற விடயங்களை ஆராயப் போவதாக கார்ல் மார்க்ஸ் மூலதனத்தை எழுத ஆரம்பிக்கிறார்.
தனது வாழ்வின் நாற்பது வருடங்களை முழுமையாக மூலதனத்தை எழுதுவதற்காக அர்பணித்துள்ள கார்மார்க்ஸ் மூலதனத்தின் வறுமையே கொன்று போட்டது.
கார்ல் மார்க்ஸ் எழுத ஆரம்பித்த அத்தனை விடயங்களும் இன்னமும் யாராலும் முழுமையாக முடித்துவைக்கப்படவில்லை. கார்ல்மார்க்சின் மூலதனத்தைப் புரிந்துகொள்ள முயற்சிபவர்களே அருகிப்போயிருந்த சூழல் மாற்றமடைகிறது நம்பிக்கை தருவதாக உள்ளது.
திரிபுகளையும் அழிவுகளையும், சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் முன்வந்து எதிர்கொள்ள புதிய முன்னேறிய சமூகப்பிரிவை கடந்த பத்தாண்டுகளின் உலக நெருக்கடி உருவாக்கியுள்ளது.
மூலதனத்தின் முதற்பாகத்தை விளங்கிக்கொள்வதே கடினமானது. ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று கூட புரிந்துகொள்ளக் கடினமானது. உற்பத்திப் பண்டம் குறித்தே முதல் பாகம் முழுவதும் பேசப்படுகிறது. தனது பிரஞ்சுப் பதிப்பின் முன்னுரையில் கார்ல்மார்க்ஸ் இது குறித்துக் கூறியுள்ளார்.
பிரஞ்சுப் பதிப்பைத் தொடராக வெளியட பதிப்பகத்தார் தீர்மானித்த போதே கார்ல் மார்க்ஸ் அதற்கான முன்னுரையை எழுதுகிறார். இதுவரை பொருளாதர ஆய்வுகளில் பயன்படுத்தாத பகுப்பாய்வு முறை பிரயோகிக்கப்படாமையால் ஆரம்பப் பகுதிகள் புரிந்து கொள்ளக் கடினமானவையாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார். ஆக, ஆரம்பப் பகுதிகளைப் படித்துவிட்டு நூலையே நிராகரிக்கின்ற தன்மை ஏற்படும் என எச்சரிக்கிறார்.
மூலதனத்தை மறு வாசிப்புச் செய்தல் குறித்த இந்தத் தொடரை எழுத முற்பட்ட போது ஆரம்பப் பகுதிகளை நிராகரிக்க முடியாதாயினும் இலகுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவானது.
மார்க்சிச ஆய்வு முறை குறித்த புரிதல் வாசிப்பதற்கு முன்னமே ஏற்பட்டிருந்தால் வாசிப்பு இலகுவானதாகும்.
ஆக, அடுத்த பகுதியின் ஆரம்பத்தில் மார்கசிய ஆய்வு முறை குறித்தும் அதன் திரிபுகள் குறித்தும் புரிதலில் இருந்து மூலதனதை வாசித்தல் குறித்து விரிவாக்கலாம் என நம்புகிறேன்..
தொடரும்……