மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் முகவர்கள் மூலமே வேலைவாய்ப்புக்களைப் பெறுகின்றனர். சுமார் 24 வீதமானவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் வேலைவாய்ப்புக்களைப் பெறுகின்றனர்.வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத்தரும் முகவர்கள் கட்டணமாக பெருமளவு தொகையைக் கோருகின்றனர். முகவர்களுக்குரிய கட்டணம், பயணச்சீட்டு மற்றும் ஏனைய செலவுகளுக்குரிய பணத்தை இவர்கள் 15 – 30 வீத வட்டிக்குப் பெறுகின்றனர்.
இலங்கைப் பெண்பணியாளர் ஒருவருக்கு தற்போதைய நிலைமையின்படி சுமார் 100 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றது, 71 வீதமானவர்கள் இதை விட குறைந்தளவு அதாவது 95 டொலர்களை மாதச்சம்பளமாகப் பெறுகின்றனர்.
ஒப்பந்தப்பணியாளர்களில் 57.3 வீதமானவர்கள் ஒப்பந்தம் முடிவு காரணமாகவும், நோய் மற்றும் காயங்கள் போன்ற காரணங்களால் 6.8 வீதமானவர்களும், மிக கடுமையான வேலை காரணமாக 5.8 வீதமானவர்களும் நாடு திரும்புகின்றனர்.
வீடுகளில் வேலைக்கமர்த்தப்படுபவர்களின் நாளாந்த வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்துள்ளதாக Human world Watch இன் அறிக்கையொன்று சுட்டிக்காட்டுகிறது. இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்வு வழங்கப்படுவதில்லை எனவும் வரையறுக்கப்பட்ட வேலை நேரம் இல்லாத நிலையும், போதுமான சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளற்றவர்களாகவும் இவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள் எனவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது,
லெபானில் தொழில் புரியும் பெண்கள் பற்றிக் குறிப்பிடும் போது நீண்டநேர வேலையும் குறைந்தளவு ஊதியத்திற்கும் பணிப்பெண்கள் வேலை செய்கின்றனர் எனவும் சில இடங்களில் பணிப்பெண்கள் முகவர்களாலும் மற்றும் தாம் பணிபுரியும் வீடுகளில் இருப்பவர்களாலும் உடல் மற்றும் மனரீதியான துன்பங்களுக்குள்ளாக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடுகிறது. வெளிநாடுகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் ஒன்றும் இரகசியமானதல்ல, உள்ளூர் ஊடகங்கள் மிகவும் துயரமான துஷ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன, சுவையின்றிய உணவை சமைத்தமைக்காக இலங்கைப் பெண் எரிகாயங்களுக்குள்ளாக்கப்பட்டார், பணிப்பெண் “சோம்பேறி”யாக இருந்தமையால் கொல்லப்பட்டார், இலங்கைப் பெண் பணியாளர் “பூனைக்குரிய உணவை” உண்ணும் படி வற்புறுத்தப்பட்டார் என்ற செய்திகளை வெளியிடுகின்றன.
இலங்கைக்கு ஆதாயம் வழங்கும் வழிகளில் வெளிநாடுகளில் உழைப்புசக்தியை விற்பது முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இலங்கையர் தமது உழைப்பை விற்றதன் விளைவாக இலங்கைக்கு 2.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது. இது தேசியவருமானத்தில் 9 சதவீதம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான முகவர் அமைப்பு ஒன்றை 1985 இல் அமைத்தது (SLBFE). வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் போட்டியும் ஊழலும் நிறைந்த இந்த தொழிற்துறை தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உத்தரவாதப்படும் கட்டுப்பாட்டுகள் மற்றும் மேற்பார்வை அமைப்புக்களையோ கொண்டிருக்காததுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் முறைப்பாடு செய்வதற்கான வசதி வாய்ப்புக்கள் எதையும் கொண்டிருக்கவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நஷ்டஈடு வழங்கும் வழி முறைகளையோ ஏற்படுத்தவில்லை.
பெருமளவு அந்நியசெலாவணியை ஈட்டித் தரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்துள்ளது. இவர்களுக்கு குறுகிய காலப்பயிற்சியும், 12 நாட்களுக்கான மொழிப்பயிற்சியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பாடசாலையில் பல வருடங்களாக கற்பிக்கப்படும் ஆங்கிலமொழியையே எம்மால் ஒழுங்காக பேசமுடியாம்ல கஸ்டப்படுகிறோம், 12 நாட்களில் படித்து முடிக்கும் அரபுமொழி நாளொன்றுக்குப் பல மணித்தியாலங்களில் வேலையில் ஈடுபடுவதற்கு போதும் என்று முடிவு செய்திருப்பது இன்னும் பல மரணதண்டனைகளுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கைக்கு பெரும் வாயை ஈட்டித்தரும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலனின் இலங்கை அரசு அக்கறை காட்டுவதுடன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களது ஊழைப்புக்குத் தகுந்த ஊதியம், ஓய்வு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்குமான உத்தரவாத த்தை உறுதி செய்ய வேண்டும்
சவுதி அரேபியா, குவைத், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியங்களில் பணிபுரியும் இலங்கைத் தூதரகங்கள் தமது நாட்டுப் பிரஜைகளின் நலன் தொடர்பாக மேலதிக கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாத இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு அந்நிய நாட்டுச்சட்டின் மதச்சட்டங்களுக்குள் மறைந்து கொள்ளத் தேவையில்லை.