Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குணம் மிக்க மலையகத் தேசியவாதியாக சந்திரசேகரன்….(நான்காம் பாகம்) : பி.ஏ.காதர்

ஒரு தகவல்.
1960 மார்ச் 19 ல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலிலே அதுவரை எதிரும் புதிருமாயிருந்த இதொகா தலைவர் தொண்டமானும் ஜதொக தலைவர் அசீஸூம் தமது இரு அமைப்புகளும் கூட்டு சேர்ந்து போட்டியிட்டால் இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகள் சிதறாமல் தேர்தலில் வெற்றிபெறலாம் எனக் கருதினர். இந்நோக்கத்திற்காக இவ்விரு அமைப்புகளும் சிடிசி (Ceylon Democratic Congress) என்ற பெயரில் தற்காலிகமாக ஒன்றிணைந்தன. இதன் சார்பில் தொண்டமான் நுவரெலிய தொகுதியிலும் அசிஸ் கொழும்பு மத்திய தொகுதியிலும் போட்டியிட்டு இருவருமே தோல்வியடைந்தனர். இந்திய வம்சாவளி மக்களின் வாக்குபலம் எந்தளவுக்கு அப்போது பலவீனப்பட்டிருந்தது என்பதனை இது காட்டுகிறது. – ஆசிரியர்.

முதலாம் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்

1977 முதல் 1985 வரை:

வடக்கு கிழக்கு இனைஞர்களுடன் தொடர்பு

இத்தேர்தலில் யாழ்ப்பாணத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்கு தமிழர் விடுதலை கூட்டணியின் ஆதரவு தொண்டமானுக்கு தேவைப்பட்டது. தமிழ் ஆசிரியர் சங்கம் மகாசிவம் தலைமையில் தொண்டமானை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பிரச்சார வேலையில் ஈடுபடுவதற்காக தமிழிளைஞர் பேரவையின் பல இளைஞர்கள் நுவரெலிய மாவட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களோடு சந்திரசேகரனுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் என். நாகலிங்கம். இவர் உமாமகேஸ்வரனின் மைத்துனர். கட்டுவனைச் சேர்ந்தவர். சிறந்த பேச்சாளர். மலையக மக்களின் மேம்பாடு தொடர்பாக மிகவும் அக்கறை கொண்டிருந்தார். தலவாக்கெலை சென் பெற்றிக்ஸ் பாடசாலையில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவர் தலவாக்கெலையில் சந்திரசேகரனோடு தங்கிவிட்டார். தேர்தலின் பின்னர் இவரும் சந்திரசேகரனும் இணைந்து மலையக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.

இத்தேர்தலில் நுவரெலிய-மஸ்கெலிய தொகுதியிலிருந்து மிகக் கூடுதலான 65,903 வாக்குகளைப் பெற்று முதலாவது எம்பியாக ஐதே கட்சி சார்பில் போட்டியிட்ட காமினி திசாநாயக்கவும் இரண்டாவது கூடுதலான 48,776 வாக்குகளைப் பெற்று இரண்டாவது எம்பியாக சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட அநுர பண்டாரநாயக்கவும் மூன்றாவது அதிகப்படியான 35,743 வாக்குகளைப் பெற்று மூன்றாவது எம்பியாக இதொகா சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட தொண்டமானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐதே கட்சி ஐந்தில் நாலு பெரும்பான்மையுடன் 168 ஆசனங்களில் 140 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. வரலாற்றில் முதற்தடவையாக 18 ஆசனங்களைப் பெற்று தமிழரசுக்கட்சி பிரதான எதிர்க்கட்சியானது. அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார். தமிழர் கூட்டணியின் மூன்று பெரும் தமிழ் தலைவர்களில் அப்போது உயிரோடிருந்த ஒரே தலைவரான சௌ. தொண்டமான் ஆளும் கட்சியோடு இணைந்து கால்நடை அபிவிருத்தி அமைச்சரானார்.

1978 மே 22 ந் திகதி ஜே ஆர் ஜயவர்தன அரசு புலிகள் தடைச்சட்டத்தை கொண்டுவந்ததைத் தொடர்ந்து பொலிசார் தேடப்படும் 38 தமிழ் வாலிபர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டனர். அவர்களது படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் நாடுபூராவும் ஒட்டப்பட்டு அவர்கள் பற்றிய தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்பட்டியலில் வே. பிரபாகரன் உமா மகேஸ்வரன் ஆகியோரது பெயர்களும் அடங்கியிருந்தன. அப்போது கொழும்பில் அளவையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த உமா மகேஸ்வரன் உடனடியாக தலைமறைவானார். ஆனால் வடக்கே செல்லும் வாகனங்களும் நபர்களும் கடும் சோதனைக்குள்ளான படியால் அவரால் வடக்கே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்த இக்கட்டான சூழலில் அவர் தலவாக்கெலை வந்து சந்திரசேகரனைச் சந்தித்தார். உமா மகேஸ்வரன் வடக்கிற்கு செல்லும்வரை சந்திரசேகரனே அவரை பாதுகாப்பாக தங்க வைக்கும் ஏற்பாட்டை செய்தார். இதனால் உமா மகேஸ்வரனுக்கு இவர் மீது அலாதி பிரியம் இருந்தது.

அமைச்சர் தொண்டமானின் அபிமானத்துக்குரியவராக…

இப்போது சந்திரசேகரன் இதொக அரசியலோடு மெல்ல மெல்ல சங்கமாகத் தொடங்கிவிட்டார். தொண்டமானுக்கு இவர்மீது ஏற்பட்டிருந்த நல்லபிப்பிராயம் பற்றி அப்பகுதி மக்கள் அறியத் தொடங்கினர். அவர்கள் தமக்கும் தமது தோட்ட நிர்வாகத்துக்கு மிடையிலான பிரச்சினைகளைக் கூட இவரிடம் முறையிடத் தொடங்கினர். தலைவர் நடேசனூடாக அவற்றை அவர் ஆரம்பத்தில் கையாண்டார். பின்னர் தலவாக்கெலை இதொகா காரியாலயத்திற்கு நேரடியாவே சொல்லி அவற்றைக் கவனிக்கச் செய்தார். தொண்டமான் இவரை நம்புகிறார் இவர்மீது நல்லபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்ற விடயம் இதொகவுக்குள் கசியத்தொடங்கியது. எனவே சந்திரசேகரனை இதொக உத்தியோகத்தர்கள் மதிக்க தொடங்கினர். இதொகாவின் ஹட்டன் மாவட்ட அரசியல் அமைப்பாளரும் இதொகாவின் முக்கி புள்ளிகளில் ஒருவருமான ராஜூ அவர்களும் இவரை வந்து அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தார். இவருக்கு தொண்டமானுடன் ஏற்பட்டு வந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி படித்த இளைஞர்களும் வர்த்தகர்களும் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள அல்லது சில காரியங்களை சாதித்துக் கொள்ள முயன்றனர். எனவே இவர்களை அழைத்துக்கொண்டு தொண்டமானை சந்திப்பதற்காக கொழும்புக்கு அடிக்கடி போய் வந்தார். இதொகாவில் லஞ்சம் வாங்காத மிகசிலரில் இவர் ஒருவர் என்பதால் தலைமையகத்திலும் இவருக்கு தனியான மரியாதை உருவானது. இப்படி தொண்டமானுடனான நல்லுறவு வளர்ந்த அதே சமயத்தில் இவருக்கு தோட்டதொழிலாளருடன் தொடர்பும் உறவும் மறுபுறத்தில் வளர்ந்து வந்தது. அதற்கான பாலத்தை தொண்டமானால் அவருக்கு வழங்கப்பட்ட சமாதான நீதிவான் பதவி அமைத்துக் கொடுத்தது.

மக்கள் ஜே.பியாக….

அப்போது அப்பகுதியில ஒரு தமிழ் சமாதான நீதிவான் (துரளவiஉந ழக வாந Pநயஉந) தானும் இருக்கவில்லை. முழு மலையகத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தமிழ் ஜேபிக்களே இருந்தனர். பிறப்பு சான்றிதழ் பெறுவது முதல் பிரஜா உரிமை பெறுவது வரை பல பத்திரங்களுக்கு ஜேபியின் கையொப்பம் தோட்ட தொழிலாளர்களுக்கு தேவைப்பட்டது. சிங்கள ஜேபிக்களிடம் சென்று கையெழுத்து வாங்குவது மொழிபிரச்சினை காரணமாகவும் கெடுபிடிகள் காரணமாகவும் சிரமமாக இருந்தது. எனவே தமிழ் ஜேபிக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றிருந்தது.

தொண்டமான் அமைச்சர் பதவியேற்றதும் தமிழ் சமாதான நீதிவான்கள் பத்துப்பேர் முதற்கட்டமாக கொழும்பிலும் மலையகத்தின் பலபகுதிகளிலும் நியமிக்கப்பட்டனர். தலவாக்கெலை பகுதிக்கு சந்திரசேகரன் மாவட்ட தலைவர் நடேசனின் சிபாரிசின் பேரில் சமாதான நீதிவானாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரை தெரியாத – அவரிடம் ஏதாவதொரு தேவைக்கு சென்று ஜேபி கையெழுத்து வாங்காத – தமிழர் எவருமே அப்பகுதியில் கிடையா எனக்கூறுமளவுக்கு அவர் மக்கள் ஜேபி யாக மாறினார். தினமும் பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸில் அவரை சந்தித்து கையெழுத்து வாங்குகதற்காக ஒரு கியு காத்திருந்தது. அனைவருக்கும் கட்சி பாகுபாடின்றி லஞ்சம் வாங்காமல் அன்போடும் சிரித்த முகத்தோடும் அவர் கையெழுத்து வைத்து கொடுத்தார். வருபவர்களுக்கு சத்தியகடதாசி தயாரித்து கொடுப்பதற்காக பி. செல்வராஜ் என்ற அருமையான உதவியாளர் ஒருவர் இருந்தார். அவர் முகம் சுளிக்காமல் அனைவருக்கும் தேவையான சத்திய கடதாசிகளை தட்டச்சு செய்து கொடுத்தார். இவர் சந்திர சேகரினின் மக்கள் தொடர்புக்கு பெரிதும் பங்களிப்பு செய்த ஒருவர். சந்திரசேகரனை மக்கள் அதன்பின்னர் சில ஆண்டுகள் பெயர் சொல்லி அழைக்கவில்லை ஜேபி என்றே அன்புடன் அழைத்தனர். அந்த பகுதியில் ஜேபி என்றால் அது சந்திரசேகரனை மாத்திரமே குறிக்கும் சொல்லாக மாறியிருந்தது.

இக்கால பகுதியில் சந்திரசேகரனுக்கு பக்கபலமாக உமா மகேஸ்வரனின் மைத்துனர் நாகலிங்கமும் வந்து இணைந்து கொண்டார். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் – அது கரபந்தாட்ட போட்டியாக இருக்கலாம் கோயில் திருவிழாவாக இருக்கலாம் – ஜேபி தலைமையில்தான் அது நடைப்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நாகலிங்கமும் நடேசன் தலைவரும் கலந்து கொண்டனர். இப்போது இவர்களது அணியில் மற்றொருவரும் இணைந்து கொண்டார். அவரது பெயர் மகாலிங்கம். இவர் பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸில் ஒரு தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு தைத்து வந்தார். அற்புதமான அமைப்பாளர். அவர் தனது தையல் வேலைமுடிந்ததும் தோட்டங்களுக்கு சென்று ஏதாவது கலந்துரையாடல் அல்லது பிரச்சார கூட்டத்தை ஜேபிக்காக ஏற்பாடு செய்வார். சந்திரசேகரினின் மக்கள் தொடர்பை பலப்படுத்தியதில் செல்வராஜ் மகாலிங்கம் இருவருக்கும் கணிசமான பங்குண்டு.

இதொகா அரசியல்பிரிவின் தலவாக்கெலை மாவட்ட அமைப்பாளராக..

சந்திரசேகரனின் செயற்துடிப்பையும் அவருக்கு இப்பகுதி மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் செல்வாக்கையும் தொண்டமான் அவதானித்து வந்தார். சந்திரசேகரன் ஏதாவது பிறரது தேவைக்காக – அது ஒருவரின் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினையாக இருக்கலாம் அல்லது ஒரு பாடசாலையின் நிலப்பிரச்சினை பற்றியதாக இருக்கலாம் -அவர் தனது சொந்தகாரில் சொந்த செலவில் ஏற்றிக்கொண்டுபோய் அடிக்கடி கொழும்பு சென்று தொண்டமானைச் சந்தித்தார். இவரது இரு தளபதிகளாக இருந்த நடேசன் தலைவர் மீதும் நாகலிங்கத்தின் மீதும் தொண்டமானுக்கு பெரும் மரியாதை இருந்தது. அக்காலகட்டத்தில் உமாகேஸ்வரனின் புளொட் அமைப்பே பிரதான அமைப்பாக இருந்தது. அப்போது உமாகேஸ்வரன் மீது தொண்டமான் மிகுந்த அபிமானம் வைத்திருந்தார். 1983 அக்டோபர் இரண்டாம் வாரம் அவர் உமாகேஸ்வரனை சென்னையில் இரகசியமாக சந்தித்தமை அப்போது அங்குவந்த ஜனார்த்தனனுக்கு தெரியவந்து அவ்விடயம் வெளியே கசிந்து அதனால் சிங்கள அரசியல்வாதிகள் தொண்டமானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது பலருக்கு நினைவிருக்கலாம். நாகலிங்கம் உமாமகேஸ்வரனின் மைத்துனர் என்பதானால் மாத்திரமல்ல அவரது மலையக ஈடுபாடு காரணமாகவும் அவரை தொண்டமான் மிகவும் நேசித்தார். நாகலிங்கம் சந்திரசேகருடன் இணைந்து செயற்பட்டதால் சந்திரசேகரன் வடக்கு இளைஞர் அமைப்புகளின் ஆதரவைப் பெற்றவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வந்தது. இவையாவும் சந்திரசேகரனுக்கு மேலதிக அனுகூலத்தைச் சேர்த்தன. ஆகவே அவர் 1977 ல் இதொகாவுடன் இணைந்த பின்னர் மிக குறுகிய காலத்துக்குள் – ஒரு வருடத்துக்குள் – 1978 ல் இதொகா அரசியல்பிரிவின் தலவாக்கெலை மாவட்ட அமைப்பாளராக தொண்டமானால் நியமிக்கப்பட்டார்.

மலையக கலை கலாச்சார அபிவிருத்தி அணி…

நாளடைவில் இவர்கள் மலையக கலைச்சார அபிவிருத்தி அணி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அப்பகுதி தோட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வந்தனர். தோட்டவாரியாக துடிப்புள்ள இளைஞர்களை சிறு வட்டங்களாக இணைத்து அவர்களது இயல்பூக்கங்களை வெளியே கொண்டு வருவதே இதன் நோக்கமாக இருந்தது. குறிப்பாக அவர்களது கலை ஆர்வங்களுக்கு தளம் அமைத்து கொடுப்பதையும் வாசிகசாலைகள் அமைத்து கொடுப்பதையும் பிரதான பணியாக கொண்டிருந்தது. இதற்காக சந்திரசேகரன் தனது செலவில் ஒரு மண்டபத்தை தலவாக்கெலையில் வாடகைக்கு வாங்கியிருந்தார். இங்கு கலாச்சார போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றன. 1982 ல் இங்கு நடைபெற்ற பாரதி நூற்றாண்டு விழாவில் அப்போது யாழ் பல்கலை கழகத்தில் விரிவுரையாளராக இருந்த வரதராஜபெருமாள் (பின்னர் வடக்கு கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக இருந்தவர்) பிரபல எழுத்தாளர் செ. கணேசலிங்கன் ஆகியோருடன் நானும் ஒரு பேச்சாளானாக கலந்துகொண்டது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.
இப்பகுதியிலிருந்து சிறந்த பேச்சாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் முயற்சியில சந்திரசேகரன் தானே ஒரு சிறந்த பேச்சாளராக உருவாகியிருந்தார். பிற்காலத்தில் மலையக அரசியல்வாதிகள் ஏனைய அனைவரை விடவும் மிக சிறந்த பேச்சாளாராக இவர் கருதப்பட்டார். ஆரம்பத்தில் அவரது செயற்பாடுகள் கலை இலக்கியம் சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தது. எனினும் கலை கலாச்சார பணிகளோடு மாத்திரம் சந்திரசேகரனால் தனது பணியை நிறுத்திக் கொள்ள முடியதாளவுக்கு மலையகத்தின் அரசியல் நிலைமைகள் வேகமாக மாறிவந்தன.

முதலாவது தமிழ் கிராமசேவகர் நியமனம்….

சந்திரசேகரனால் உருவாக்கப்பட்டிருந்த மேற்கூறிய தலவாக்கெலை காலச்சார மண்டபம் படிப்படியாக மலையகத்தின் அரசியல் பாசறையாக மாறத்தொடங்கியிருந்தது. நாகலிங்கம் இதொகவின் தொழிலாளர் கல்வி பிரிவுக்கு 1978 ல் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தோட்ட தொழிலாளருக்கான பல கருத்தரங்குகளும் கல்வி பட்டறைகளும் இம்மண்டபத்தில் தான் நடைபெற்றன. இம்மண்டபத்திற்கும் செல்வராஜ் அவாகளே பொறுப்பாயிருந்தார். செல்வராஜின் அமைப்புத் திறனும் ஆலோசனைகளும் இதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. சந்திரசேகரன் – நாகலிங்கம் நடத்திய கல்விபட்டறைகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் மலையகத்தின் பலபகுதிகளிலிருந்தும் தோட்ட தொழிலாளர்கள் வரத்தொடங்கினார்கள். அவற்றிலெல்லாம் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நான் அடிக்கடி பேச்சாளனாக அழைக்கப்பட்டேன். எனது ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ என்ற நூல் இம்மண்டபத்தில் நான் நிகழ்த்திய சொற்பொழிவாகும். இச் சொற்பொழிவு முதலில் தட்டச்சு வடிவில் பிரதிசெய்யப்பட்டு மலையகத்தின் பல பகுதிகளுக்கும் சந்திரசேகரனாலும் நாகலிங்கத்தாலும் இதொகவின் தொழிலாளர் கல்வி பிரிவினூக விநியோகிக்கப்பட்டன. இங்கு இவர்களால் நடத்தப்பட்ட கருத்தரங்குகளும் கந்துiரையால்களும் வெறும் சலப்புகளாக ஓய்ந்து விடவில்லை. மலையக மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக அன்றி ஏனைய மக்களுக்கு சமதையாக வாழ்வதற்கான நடைமுறை வேலைத்திட்டங்கள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டன விவாதிக்கப்பட்டன.
இங்கு இவர்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு கலந்துரையாடலுக்கு மலையகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அரசியல் ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அக்கூட்டத்திற்கு சந்திரசேகரன் தலைமை தாங்கினார். அக்கலந்துரையாடலின் போது மாத்தளையைச் சேர்ந்த கதிர்வேலு என்பவர் மலைய தமிழ் மக்கள் அரசியல் நிர்வாகத்துறையில் எவ்வாறு பாரபட்சமானமுறையில் நடத்தப்படுகிறார்கள் என்பது சம்பந்தமான அருமையான விளக்கமொன்றை வழங்கிவிட்டு முழு மலையகத்திலும் ஒரு தமிழ் கிராமசேவகர் தனானும் இல்லாத இழிநிலையைச் சுட்டிக்காட்டி அதனால் வாக்காளரைப் பதிவு செய்வதிலும் மலையக மக்களுக்கு அரசின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதிலும் காட்டப்படுகின்ற பாரபட்சத்தையும் சுட்டிக்காட்டி மலைய மக்களின் சமஉரிக்கான நடவடிக்கையை தமிழ் கிராமசேவகர் நியமனத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என கோடிட்டு காட்டினார். இவ்விடயத்தை இவ்வளவு ஆழமாக நாம் அதுவரை சிந்தித்ததில்லை. அவரது விளக்கம் அக்கலந்துரையாடலை இன்னொரு கட்டத்திற்கு இட்டுச்சென்றது.
அதுவரை தோட்டபுறங்களில் வாழும் மலையக மக்கள் தோட்டங்களில் கூலிக்கு வேலைசெய்யும் அந்நிய தொழிலாளர்களாக மாத்திரமே கருதப்பட்டனர். தொழிலாளர் என்றமுறையில் அவர்கள் எதிர்நோக்கிய சம்பளம் வேலை தொழில் உறவு சம்பந்தமான பிரச்சினைகள் மாத்திரமே பேசப்பட்டு வந்தன. அவர்களின் வீடு கல்வி மருத்துவம் முதற்கொண்டு குடிநீர் வழங்கள் வீதிகள் அமைத்தல் வடிகால் பரிமறிப்பு தபால் விநியோகம் மின்சாரம் வழங்கல் போன்ற அனைத்து சேவைகளும் தோட்ட நிர்வாகத்தால் மாத்திரமே கவனிக்கப்பட்டு வந்தன. 70களில் மனிதாபிமான அமைப்புகளின் தொடர்ச்சியான அழுத்தங்காரணமாக தோட்ட பாடசாலைகள் பொது நீரோட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் ஏனைய சேவைகள் இன்னும் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பிலேயே இpருந்தன. அரசாங்கம் இவர்களை ஒரு மக்கள் சமூகமாக் கருதவில்லை. அவர்களுடைய சேவாநலன்களை கவனிப்பது தனது கடமை என நினைக்கவில்லை. இந்த நிலைமை மாற்றப்படுதல் வேண்டும். மலையக மக்களுக்காக சேவைகளை வழங்குவது அரசின் கடமை. ஆகவே அவற்றை தோட்ட நிர்வாகத்தின் கைகளிலிருந்து அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மலையகத்துக்கு தமிழ் கிராமசேவகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்ற கோஷமும் இங்குதான் முதன்முதலாக கருவெடுத்தது.
அதைத் தொடர்ந்து சந்திரசேகரனின் பேச்சுக்கள் புதுவீச்சு பெற்றன. அரச நிருவாகத்தில் மலையக தமிழ் மக்களின் பிரதிநதித்துவமின்மை தொடர்பாக அவர் உணர்சியைக் கிளறும் வகையில் முழங்க ஆரம்பித்தார். கிரமசேவகர்களாகவும் பொலிஸ்காரர்களாகவும் மலையக தமிழ் இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்தார். தொண்டமானிடம் இதுதொடர்பாக சந்திரசேகரனும் நாகலிங்கமும் நடேசன் தலைவரும் பேசினர். நானும் அதுவிடயமாக பேசுவதற்கு அவர்களோடு சென்றிருந்தேன். நான் தொண்டமானை நேரில் சந்தித்து அதுவே முதற்தடவை. அவர் என்னைப்பற்றி ஏற்கெனவே அறிந்திருக்க வேண்டும். மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். தொண்டமான் எமது விளக்கத்தை ஏற்றார். ஜே.ஆர் ஜயவர்தனவிடம் அது பற்றி தொடர்ச்சியாக வலியுறுத்தினார். அக்கோரிக்கையிலுள்ள நியாயத்தன்மையை ஒத்துக் கொண்டு அதன் அடையாளமாக ஒரு தமிழ் கிராமசேவகரை உடனடியாக நியமிக்க ஜே ஆர் முன்வந்தார். உடனே சந்திரசேகரனிடம் தொண்டமான் இந்த மகிழ்ச்சியான செய்தியை தொலைப்பேசியில் கூறி அந்த முதலாவது மலையக தமிழ் கிராமசேகரை தெரிவு செய்யும் பொறுப்பை சந்திரசேகரனிடம் ஒப்படைத்தார். அன்று நான் தலவாக்கெலையில் சந்திரசேகரனுடன் இருந்தேன். சந்திரசேகரன் நாகலிங்கத்தையும் நடேசன் தலைவரையும் அழைத்து அந்த விடயத்தைச் சொன்னார். மலையக மக்களின் 150 வருடகால வரலாற்றில் முதற்தடவையாக மலையகத்தைச் சேர்ந்த கிராமசேவகர் ஒருவர் மலையகத்துக்காக நியமிக்கப்படப் போகிறார் என்ற எண்ணமும் அதற்கு தாமும் ஒருகாரணமாக இருந்திருப்பதையும் நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
அதற்கான தகைமையுடைய பல இளைஞர்களின் பெயர்ப் பட்டியலில் ஒன்று அவர்களால் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டது. அதில் தியாகராஜாவின் பெயரை – அவர் ஒரு தொழிலாளியின் மகன் என்பதற்காக – மூவரும் ஒருமனதோடு தேர்ந்தெடுத்தனர். இந்த இளைஞரை அழைத்துக் கொண்டு அடுத்தநாள் கொழும்பு சென்று தொண்டமானை சந்தித்தார்கள். இவ்வாறுதான் மலையகத்தின் முதலாவது கிராமசேவகராக அக்கரபத்தனையைச் சேர்ந்த தியாகராஜா நியமிக்கப்பட்டார்.

1977- 81-83 வன்செயல்களும் – மலையக மக்களின் பாதுகாப்பும்.

கடந்த சிறிமாவின் அரசாங்கத்தில் சொல்லொண்ணா சோதனைகளுக்கு முகங்கொடுத்த மலையக மக்கள் அவ்வரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு தமது அபிமானத்துக்குரிய ஐதே கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால் இனி நிம்மதியாக வாழலாம் என நம்பினர். அவர்கள் எந்தளவுக்கு ஐதே கட்சிமீது மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை 77 தேர்தல் உணர்த்தியது. அவர்கள் ஐ.தே கட்சி சின்னமான யானைக்கு வாக்களித்து பழக்கப்பட்டு போய் அத்தேர்தலிலும் யானைக்கே வாக்களித்தனர் இல்லையென்றால் தொண்டமான் மிகக் கூடுதலான வாக்கைப்பெற்ற முதலாவது அபேட்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். இத்தேர்தல் தொகுதியில் வாழந்த யாழ் வாக்காளர்களின் ஒட்டுமொத்தமான வாக்குகளும் தொண்டமானுக்கே கிடைத்தன. இல்லை என்றால் அவருக்கு அதைவிடவும் குறைவான வாக்குகளே கிடைத்திருக்கும். அந்தளவுக்கு தோட்ட தொழிலாளர் அபிமானம் வைத்திருந்த ஐதேகட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ஜே.ஆர் செய்த முதலாவது காரியம் ‘யுத்தம் என்றால் யுத்தம். சமாதானம் என்றால் சமாதானம்’ என அறிக்கைவிட்டு மலையக தமிழருக்கெதிரான வன்செயலை கட்டவிழ்த்துவிட்டதுதான். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட 1977 ஆகஸ்ட் வன்செயலால் அதிர்ச்சியடைந்த மலையக மக்கள் ‘இது தோல்வியடைந்த சுதந்திர கட்சியினரின்’ வேலை என ஜே.ஆர் அரசு கூறியதையும் நம்பினர். ஆனால் 1980ன் பின்னர் வருடாவருடம் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் வன்செயல் கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்கள் நம்பிக்கையிழந்து கதிகலங்கினர்.

இக்காலப்பகுதியில் இதொகவிடம் தொழிலளர்கள் அல்லாத இளைஞர்களை உள்வாங்கக் கூடிய அமைப்பு எதுவும் இருக்கவில்லை. அத்துடன் தொண்டமானின் தலைமையை ஏற்காத இளைஞர்கள் மலைய மக்கள் இயக்கம் போன்ற அமைப்புகள் செயலிழந்து போயிருந்த சூழலில் போக்கிடமற்று அரசியலில் நிர்க்கதியாக நின்றனர். இப்பின்னணியில் வி டி தர்மலிங்கத்தை தலைவராகவும் தேவசிகாமணியையும் என்னையும் இணைச் செயலாளர்களாகவும் ஏ லோறன்சை பிரதம அமைப்பாளருமாகக் கொண்ட ‘மலையக் வெகுஜன இயக்கம்’ 1978 ல் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு விரிவான அரசியல் விவாதங்களை பல்வேறு தளங்களில் நடத்தியது. இதன் தீவிர உறுப்பினர்களாக சந்திரசேகரனும் நாகலிங்கமும் சரத் அத்து கோரளையும் இருந்தனர். சரத் அத்து கோரளை இலங்கை ஆசிரியர் சங்க செயற்பாட்டினூடாக எனக்கும் சந்திரசேகரனுக்கும் அறிமுகமான ஒரு சர்வதேசியவாதி. இவர் குருநாகலையில் பிறந்தவர். 1971

ஜேவிபி இயக்கத்தில் இருந்தவர். சிறைசென்று 3 வருடங்களின் பின்னர் விடுதலையானவர். தலவாக்கெலை பகுதியிலுள்ள தோட்டமொன்றில் உத்தியோகத்தராக இருந்தார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரஎலிய மாவட்ட தலைவராக இருந்த சென்டிஸ் என்பவரோடு சேர்ந்து இனவாதத்திற்கு எதிராகவும் சில சமயங்களில் அங்கு ஏற்பட்டிருந்த சிங்கள தமிழ் முறுகல் நிலைமைகளை தணிப்பதிலும் அவர் துணிச்சலோடு செயற்பட்டிருக்கிறார். தற்போது மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளராகவும் உபதலைவராகவும் இருக்கிறார்.

சந்திரசேகரன் மலையக் வெகுஜன இயக்கத்துடன் இணைந்து செயற்பட்ட அதேசமயம் தனது வேலைத்திட்டங்களையும் நாகலிங்கத்தோடு சேர்ந்து சுயாதீனமாக முன்னெடுத்துச் சென்றார். சந்திரசேகரன்- ‘மலையக் வெகுஜன இயக்க’ கூட்டு இருவிதமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதுவரையில் மலையகத்தில் உருவாகியிருந்த படித்த வாலிபர் அமைப்புகள் யாவும் தொண்டமான் எதிர்ப்புவாதத்தை முன்வைத்தன. இதொகாவுக்கும் படித்த வாலிபர்களுக்குமிடையே ஒரு சீனமதில் உருவாகியிருந்தது. சந்திரசேகரன் இக்காலப்பகுதியில் இதொகாவில் இணைந்திருந்தாலும் இதொகா அல்லாத படித்தவாலிபர்கள் அவரை ஒரு நேசசக்தியாகவும் இதொகாவிலுள்ள ஒரே ஒரு முற்போக்கு சக்தியாகவும் கருதி அவரோடு தொடர்பு கொண்டனர். இப்படியான ஒரு முற்போக்கு இமேஜ் உருவாவதற்கு சந்திரசேகரன் – ‘மலையக் வெகுஜன இயக்க’ கூட்டு ஒருவகையில் காரணமாக இருந்தது. மறுபுறத்தில் தொண்டமான் – பாரளுமன்றத்திலோ தொழிற்சங்கத்திலோ நாட்டமில்லாத- மலையக் வெகுஜன இயக்கத்தை தனக்கொரு சவாலாக கருதவில்லை. மலையக வெகுஜன இயக்கத்தின் கருத்துகளை அவர் மதித்தார். இக்கூட்டுச் செயற்பாட்டுக்கு குறுக்கே நிற்கவில்லை. பிற்காலத்தில் மலையக வெகுஜன இயக்கத்தின் தலைமை பாத்திரம் வகித்த அனைவரையும் மலையக மக்கள் முன்னணி தனது உயர்மட்ட தலைவர்களாக கொண்டிருந்தமை சந்திரசேகரனின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவ்வாலிபர் அமைப்பு எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தியது என்பதை உணர்த்துகிறது.

1977 வன்செயலையடுத்து மலையக மக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை முதன்மை பெறத்தொடங்கியது. இப்பிரச்சினைக்கு தீர்வு என்ன என்ற கேள்விக்கு பதில் கண்டாகவேண்டிய நிர்ப்பந்தம் அப்போதிருந்தது. மலையகத்தைச் சேர்ந்த சில படித்த வாலிபர்கள் ‘இனி இந்த நாட்டில் வாழ்வதில் அர்த்தமில்லை. எமது தாயகமான தமிழ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதுதான் சரியான தீர்வு’ என தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர். மறுபுறத்தில் ஈரோஸ் இயக்கம் அப்போது மலையகம் தொடர்பாக விசேட கரிசனைகாட்டத் தொடங்கியிருந்தது. பல ஆய்வுகளை நடத்தி வந்தது. ஐயர் பாலாவின் பெயர் மலையக இளைஞர் மத்தியில் அடிபடத் தொடங்கியது. இரத்தின சபாபதியும் சங்கர் ராஜும் மலையக மக்களையும் ஈழவர் என்ற தமது வரையறைக்குள் வைத்து பார்த்தனர். பாட்டாளி வர்க்கமான தோட்ட தொழிலாளரை அடித்தளமாகக் கொண்டால் மாத்திரமே ஈழத்துக்கான போராட்டம் வெற்றி பெறும் என்றனர். அத்துடன் சிங்கள கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் மலையகத்தில் மலையக தமிழர்களால் பாதுகாப்புடன் வாழமுடியாது ஆகவே அவர்களை வன்னியின் எல்லைப்புறங்களில் குடியேற்றவேண்டும் இதனால் மலையக மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுவதுடன் ஈழபோராட்டமும் வலுபெறுமென வாதிட்டனர்.

இந்த கருத்தின் அடிப்படையில் எஸ் ஏ டேவிட் டாக்டர் இராஜசுந்தரம் சந்ததியார் ஆகியோர் தலைமையில் இயங்கிய காந்தீய இயக்கம் புhயனொலையஅ ளுழஉநைவல மலையகத்திலிருந்த சில தொண்டர் நிருவனங்களுடாக தமிழ் குடும்பங்களை தோட்டப்புறங்களிலிருந்து வன்னிக்கு அழைத்துச் சென்று குடியேற்றும் பணியை ஆரம்பித்தது.

புரட்சிகர மலையக தேசியவாதத்தை பிரதிநிதிப்படுத்துபவராக..


1981 வன்செயல் மலையகத்தை மீணடும் ஒரு குலுக்கு குலுக்கியது. மலையக மக்களின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குரியாக்கப்பட்டது. பெரும்பாலான மலையக மக்கள் நாம் இந்தியர்கள் இந்நாட்டில் எமக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது எனவே மீண்டும் இந்தியா திரும்பிச் செல்லவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இதொகா காரியாலயங்களுக்கு படையெடுத்து தம்மை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரினர். 1980ல் பதுளையிலே நடைபெற்ற இதொகா மாநாட்டில் பேராளர்கள் தொண்டமனை சூழ்ந்து கொண்டு தம்மை இந்தியாவுக்கு திருப்பியனுப்புமாறு கோரினர்.
மறுபுறத்தில் வடக்கே சென்று குடியேறுவதுதான் சாத்தியமான தீர்வு என்ற பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் மலையகம் எமது மண் என்ற கோஷத்தை முன்வைத்த இளைஞர் அணியை மலையக வெகுஜன இயக்கம் ஒன்றுதிரட்டி அவ்விரு கோஷங்களையும் எதிர்த்து பிரச்சராம் செய்து வந்தது. மலையகம் என்று குறிப்பிடப்படும் பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியைக் குறிக்கின்றன. இங்கு நெல்விளைவதில்லை. எனவே நெல்லை அடிப்படையாகக் கொண்ட குடியேற்றங்களோ கிராமங்களோ இங்கு கோப்பி- தேயிலை பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்ட 19ம் நூற்றாண்டு வரை உருவாகியிருக்கவில்லை. அதனாற்றான் மலையகத்தில் 200 வருடங்களுக்கு முற்பட்ட எந்த ஒரு புராதன கட்டிடத்தையும் காணமுடியவில்லை. வனவிலங்குகள் மாத்திரமே வாழ்ந்த மனிதவாடையற்ற காட்டை அழித்து மனிதர் வாழும் பூமியாக அதனை மாற்றியவர்களும் இம்மண்ணில் முதன்முதலாக குடியேறியவர்களும் மலையக தமிழர்கள் தான். அவர்களே மலையக மண்ணின் சொந்தக்காரர்கள். எனவே கண்டிய சிங்களவரிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட நிலம் என்ற வாதம் மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றுத் திரிபேயாகும் என இவர்கள் வாதிட்டனர். இதனை நிருபிக்கும் பல ஆய்வுகளையும் ஆதாரமாகக் கொண்டனர்.
இந்த புதிய கருத்து மலையக மக்களின் சிந்தனை போக்கில் ஒரு பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மலையகம் எமது மண். எமது பாதுகாப்பிற்காகவும் உரிமைக்காகவும் இம்மண்ணிலிருந்தே போராட வேண்டும் என்ற புதியசிந்தனைப் புயல் உருவாகி மலையக தேசியவாதத்திற்கு ஒரு அரசியல் அடிதளத்தையும் வீச்சையும் கொடுத்தது..
அதேசமயம் 1981 வன்செயல்களின் போது சில தோட்டங்களில் வீரஇளைஞர்களின் தலைமையில் தோட்டத் தொழிலாளர்கள் தம்மை தாக்க வந்த சிங்கள காடையர்களை அடித்து துரத்தி தம்மை பாதுகாத்துக் கொண்ட சம்பவங்கள் நடைபெற்றன. இத்தகைய மாற்றங்கள் மலையக வெகுஜன இயக்கத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. சந்திரசேகரன் நாகலிங்கம் நான் தேவசிகாமணி வி டி தர்மலிங்கம் லேறன்ஸ் சரத் மற்றும் பலர் வன்செயலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விரிவாக நாட்கணக்கில் பேசியிருக்கிறோம். இறுதியில் ‘எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எம்மை தாக்க வருவோரை திருப்பித்தாக்கும் உரிமை எமக்குண்டு’ என்ற கோஷத்தை மலையக வெகுஜன இயக்கம் முன்வைத்தது. சந்திரசேகரனும் நாகலிங்கமும் இக்கருத்தை முன்வைத்து தோட்டந்தோறும் கூட்டங்களை நடத்தி தொழிலாளர் மனதில் வீரத்தை விதைக்கத் தொடங்கினர். தொண்டமான் இக்காலப்பகுதியில் ‘தாக்குதல்தான் சிறந்த தற்பாதுகாப்பு’ என வெளிப்படையாகப் பேசிவந்தார். இது மலையக வெகுஜன இயக்கத்தினதும் சந்திரசேகரனினதும் பிரச்சாரத்திற்கு மேலும் வலுவைச் சேர்த்தன. சந்திரசேகரன் கலை இலக்கிய உலகிலிருந்து புதிய அரசியல் திசையில் தனது முதலாவது காலடியை எடுத்து வைத்தார்.
மறுபுறத்தில் படித்தவாலிபர் மத்தியில் இக்கருத்தை லோறன்சும் தேவசிகாமணியும் விடி தர்மலிங்கமும் முன்னெடுத்துச் சென்றனர். லோறன்ஸ் மாணவனாக இருக்கும்போதே தீவிர இடதுசாரி கருத்துகளால் கவரப்பட்டவர். மற்றவர்களைப்போல பேச்சில் மாத்திரம் புரட்சியாளனாக அன்றி செயலிலும் இருக்கவேண்டும் என நினைத்தவர். அக்காலப்பகுதியில இரகசியமாக இயங்கிவந்த தீவிர இடதுசாரி இயக்கங்களில் ஒன்றான காமினி யாப்பா தலைமையிலான கீழைக்காற்று இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு கைதாகி சிறைவாசம் அனுபவித்தவர். விடுதலையாகி படித்து பட்டதாரியானவர். இளம் லோறன்ஸ் பல மலையக இளைஞர்கள் இடதுசாரிகளாக உருவாவதற்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறார். சந்திரசேகரன் இவர்மீது தனியான அபிமானத்தை அப்போது கொண்டிருந்தார். பிற்காலத்தில் இவர் மலையக மக்கள் முன்னணியின் இரு உபதலைவர்களில் ஒருவரானார்.
இக்காலப்பகுதியில் இந்தியா செல்வாதா வடக்கிற்கு சென்று குடியேறுவதா அல்லது மலையகத்திலிருந்து உரிமைக்காகப் போராடுவதா ஆகிய மூன்று கருத்துகள் முட்டிமோதின. ஹட்டன் நகரில் அமைந்திருந்த ஹட்செக் என்ற தொண்டர் நிறுவத்திற்கு அப்போது காந்தீயத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களான டாக்டர் இராஜசுந்தரம் சந்ததியார் ஆகியோர் அடிக்கடி வருகை தந்து வடக்கே வந்து குடியேறுங்கள் என்ற தமது கருத்தை பிரச்சாரம் செய்து வந்தனர். அவ்வாறு குடியேற விரும்பியோருக்கு அதற்கான பொருளாதார உதவிகளையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்கிவந்தனர். லோறன்ஸ் இவர்களது கருத்தினையும் வேலைத்திட்டடத்தையும் எதிர்த்து அவர்களோடு வாதம் புரிந்து வந்தார். இதனால் ஹெட்செக்கில் இயங்குனர்களான பணிபுரிந்த சுப்பிரமணியம் பிரான்ஸில் ஆகிய இருவரும் மலையக வெகுஜன இயக்கத்தின் ஆதரவாளர்களாக மாறினர். காந்தீயமும் மலையக வெகுஜன இயக்கமும் இது தொடர்பான ஒரு பகிரங்க விவாதத்தை நடத்த ஹெட்செக் நிறுவனத்தினூடாக ஏற்பாடு செய்தனர். இவிவாதத்தில் காந்தீயம் சார்பில் டாக்டர் இராஜசுந்தரமும் மலையக வெகுஜன இயக்கம் சார்பில் நானும் கலந்து கொள்வதாக இருந்தது. இவ்விவாதம் ஹட்டன் ஹெட்செக் மண்டபத்தில் நடைபெற்றது. தவிர்க்க முடியாத காரணத்தால் டாக்டர் இராஜசுந்தரம் சமூகமளிக்கவில்லை. அவருக்கு பதிலாக அப்போது மலையகத்தில் இயங்கிய தமிழரசு கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் பொதுசெயலர் ஜீ எல் கோவிந்தராஜ் வடக்கே செல்லவேண்டும் என்ற கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வாதிட்டார். நான் ‘மலையக தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் எனது ஆய்வை சமர்ப்பித்து மலையகமே மலையக மக்களின் தாய்பூமி இம்மண்ணிலிருந்து கொண்டுதான் இம்மக்கள் தமது உரிமைக்காக போராட வேண்டும் எனவும் இந்திய தமிழர் என மலையக மக்களை அடையாளப்படுத்துவது ‘அவர்களுக்கு இந்நாட்டில் தேசிய உரிமை கிடையாது. அவர்கள் இந்தியர்கள். அந்நியர்கள். தோட்டங்களில் தொழிலாளர்களாக மாத்திரம் வேலைசெய்து விட்டு இந்தியாவுக்கு அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும்’ என்ற சிங்கள இனவாத கருத்தை வலுபடுத்தும். ஆகவே இம்மக்களை மலையக தமிழர் என்றே அழைக்கவேண்டும் – இப்பதம் நாம் இம்மண்ணுக்குரியவர்கள் எமது உரிமைக்காக இம்மண்ணிலிருந்து கொண்டு போராட வேண்டும் இம்மண் சிங்கள குடியேற்றங்களால் பறிபோகாமல் தடுக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் என வாதிட்டேன். மண்டபம் நிறைய இளைஞர்கள் திரண்டிருந்த அந்த மண்டபத்தில் விவாதமுடிவில் எமது கருத்தை அபரிபெரும்பான்மையினர் ஆதரித்தனர்.
எனது இந்த ஆய்வு கட்டுரை சந்திரசேகரானால் தட்டச்சு பிரதிசெய்யப்பட்டு பரவலாக விநியோகிக்கப்பட்டது. பின்னர் சந்திரசேகரனின் தூண்டுதலால் நாகலிங்கம் இதொகாவின் தொழிலாளர் கல்வி பிரிவின் ஊடாக ‘தோட்ட தொழிலாளரின் எதிர்காலம் எது?: என்ற தலைப்பில் சிறு நூலாக வெளியிட்டார். இதுவே எனது முதலாவது நூலாகும். மலையக வெகுஜன இயக்கத்தினது இக்கருத்தின் தாக்கம் சந்திரசேகரனை நிரந்தரமாக பாதித்தது. அதன் பின்னர் அவரது பேச்சுக்கள் மலையக தேசியவாத கனலைக் கக்க ஆரம்பித்தன. அவரோடு நாகலிங்கத்தின் எழுச்சி பேச்சுகள் இக்கருத்துக்கு உயிர் கொடுத்தன. 1983ன் பின்னர் மலையக வெகுஜன இயக்கம் செயலிழந்து போனது. அதன்பின்னர் புரட்சிகர மலையக தேசியவாத எழுச்சியை சந்திரசேகரனே முன்னெடுத்துச் சென்றார். அவரது பேச்சாற்றல் மக்கள் தொடர்பு செயற்திறன் துணிச்சல் காரணமாக புரட்சிகர மலையக தேசியவாதம் சந்திரசேகரனோடுதான் அடையாளம் காணப்பட்டது.

இன்னும் வரும்……

Exit mobile version