பேஸ்புக் போன்ற இணையத் தளங்களில், கண்ணீரையும், காதலையும், வீரத்தையும், வீழ்ச்சியையும் ஒரு பகுதி மக்கள் வடித்த்துக்கொண்டிருக்க சமூகத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் மில்லியன்கள் தவழும் வியாபார வெளியகவும் இது தொழிற்படுகிறது.
வேர்ஜீனியாவில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளுக்கான இடம் ஒன்றில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் ரிவிட்கள் வரை அமரிக்க உளவுத்துறையால்(C.I.A) கண்காணிக்கப்படுகிறது.
உலகில் போராட்டங்களை உளவறிவதிலும் அவற்றை அழித்து அல்லது பயன்படுத்தி தமது பல் தேசிய வியாபார மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் அமரிக்கா முதன்மைப் பாத்திரம் வகிக்கிறது.
ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றவை மட்டும் தான் கண்காணிக்கப்படுவதாக் கற்பனைசெய்துகொண்டால் அது தவறானது. அரபிய மொழிகள், மன்டாரின் போன்ற மொழிகளிலிருந்து தமிழ் போன்ற மேற்கில் அறியப்படாத மொழிகள் வரை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
2008 ஆம் ஆண்டில் அமரிக்க உளவுத்துறை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உலகம் முழுவதும் போராட்டங்கள் உருவாகும் வாய்ப்புக்கள் 2015 இற்குப் பின்னான காலப்பகுதியில் காணப்படுவதாகவும் அப் போராட்டங்களில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு கணிசமானதாக அமைந்திருக்கும் என்று எதிர்வு கூறியிருந்தது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்படுவதற்கான வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது.
பேஸ்புக்கின் ஐரோப்பிவிற்கான கொள்கை வகுப்பாளரான ரிச்சார்ட் அலன் ஜேர்மனிய அரசோடு பேஸ்புக் தரவுகள் குறித்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதான தகவல்கள் இந்த ஆண்டு நடுப்பகுதியில் வெளியாகியிருந்தன. அது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சமூக வலைத்தளங்கள் ஊடாக எகிப்தில் எழுச்சிகள் உருவாவதற்கான வாய்ப்புக்களை முன்னமே கணிப்பிடக் கூடியதாக இருந்தும் எப்போது அது உருவாகும் என்பதை மட்டும் சரியாகக் கணிப்பிட முடியாத நிலையில் இருந்ததாக, அமரிக்க சமூகவலைத் தளங்களுக்கான கண்காணிப்பு மையத்தின் பொறுப்பதிகாரி டாக் நாகின் கூறுகிறார்.
9/11 ஆணைக்குழுவில் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பதன் கணிசமான பாத்திரத்தை பேஸ்புக், ரிவிற்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் கண்காணிப்பு ஆற்றவல்லது என அமரிக்க உளவுத்துறை கூறுகின்றது.
உலகம் முழுவதிலும் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ முயலும் அமரிக்காவிற்கு இந்த சமூக வலைத் தளங்கள் ஒரே புள்ளியில் வைத்து அனைத்தையும் கண்காணிப்பதற்கான இலகுபடுத்தலை ஏற்படுத்திக்கொடுக்கின்றன.
அமரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்னதாக மக்களின் உணர்வுகளை அறிந்து அதனைக் கையாள்வதற்கும் அமரிக்கக் கண்காணிப்புச் சேவை பயன்படுவதாக நாகின் கூறுகின்றார்.
சமூக வலை இணையங்கள் பல் தேசிய நிறுவனங்களாக மாற்றமடைந்துள்ள நிலையில் அவற்றிற்கும் அரசுகளுக்குமான ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.