Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெ. சந்திரசேகரன் பற்றிய எனது நினைவுகள்: லண்டனிலிருந்து பி.ஏ. காதர்

முதலாவது தேர்தல் அனுபவம்…

இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் தொடர்பான அனுபவமுள்ள எவரும் எம்மத்தியிலிருக்கவில்லை. சந்திரசேகரன் சிறந்த பேச்சாளர். ஆனால் அவருக்கும் தேர்தல் பணிகள் தொடர்பாக பெருமளவு அனுபவம் கிடையாது. நான் பிரதம அமைப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தேன். எனினும் எனக்கு இத்துறையில் அகரம் கூட தெரியாது. எனது நோக்கம் தேர்தல் ஊடாக எமது தொடர்பை பலப்படுத்தி விரிவான ஒரு அமைப்பைக் கட்டி எழுப்புவதாகவே இருந்தது. இதனை மனதிற் கொண்டு நுவரெலிய மாவட்டத்தில் எம்முடன் அரசியல்ரீதியாக தொடர்புள்ளவர்களில் திறமையானவர்களை அமைப்பாளராக நியமித்து அவர்களுடாக தேர்தல் பிரச்சார கூட்டங்களை ஏற்பாடு செய்வதை முதற்கட்ட பணியாகக் கொண்டோம்.

ஆனால் சந்திரசேகரன் இதில் மாத்திரம் திருப்தி காணவில்லை. அவர் அமைப்பு பணிவேறு தேர்தல் பணி வேறு எனவும் முதலில் தேர்தல் பணியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் பின்னர் இதன்மூலம் உருவாகும் மக்கள் தொடர்பை பலப்படுத்தும் வகையில் கட்சியை அமைக்க வேண்டும் எனவும் கருதினார். இதனை நாமும் ஏற்றுக்கொண்டோம் ஆனால் யாருக்குமே எவ்வாறு இப்பணியை திட்டமிட்ட முறையில் முன்னெடுப்பது என்பது புரியவில்லை. கடைசியில் சந்திரசேகரன் இத்துறையில் அனுபவம்வாய்ந்த ஐதே கட்சியைச் சேர்ந்த புத்திரசிகாமணி இதொகாவைச் சேர்ந்த எஸ். சதாசிவம் ஆகிய இருவரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கேட்பது நல்லது என அபிப்பிராயப்பட்டார்.

இவ்விருவரும் அப்போது சந்திரசேகரனின் நண்பர்கள். அத்துடன் அவ்விருவரும் அத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக தத்தம் கட்சிகள் தம்மைத் தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்த்து அவ்வாறு நடக்காததால் அதிருப்தி கொண்டிருந்தார்கள். 

இதன்படி புத்திரசிகாமணியை சந்திப்பதற்கான ஏற்பாட்டை வீடி செய்தார். சந்திரசேகரனும் நானும் வீடியும் புத்திரசிகாமணியின் வீட்டில் அவரை சந்தித்தோம். புத்திரசிகாமணியை நான் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் சந்தித்திருந்தேன். அப்போது அவர் துடிப்புள்ள ஒரு இளைஞர். அந்த சந்திப்பைப்பற்றி அவர் அன்று மகிழச்சியோடு நினைவு கூறினார். நான் ஏற்கெனவே ‘மலையக மக்களின் எதிர்காலம்’ என்ற எனது முதலாவது நூலைப்பற்றி குறிப்பிட்டிருந்தேனல்லவா. அந்நூல் வெளியீட்டு விழா தெல்லிப்பளை நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை கட்டுவன் நாகலிங்கம் செய்திருந்தார். அந்நூல் ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தோற்றுவித்தது. அதில் மாவை சேனாதிராஜாவும் அன்று கலந்து கொண்டார். அதன் பின்னர் அந்நூல் அறிமுகக்கூட்டங்கள் இரண்டு அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாயிருந்த மு. நித்தியானந்தன் நிர்மலா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டன.

அவற்றை ஒழுங்கு படுத்துவதில் மனிதநேய தோழராயிருந்து காணாமல் போன குகமூர்த்தி முக்கிய பங்கு வகித்தார். இவ்வாறு றிம்மர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீகாந்தாவும் காலஞ் சென்ற யாழ் எம்பி யோகேஸ்வரனும் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விரு கூட்டங்களுக்கும் அப்போது யாழ் பல்கலை கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவராக இருந்த சீலன் கதிர்காமர் தலைமை தாங்கினார். இது சம்பந்தமான பத்திரிகை செய்தி ஒன்று வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தது. இச் செய்தியை வாசித்துவிட்டு புத்திர சிகாமணியும் அவரது நண்பர்களும் தாம் ஏற்பாடு செய்த கருத்தரங்கொன்றுக்கு என்னை சிறப்பு பேச்சாளனாக வருகை தருமாறு யாழ் பல்கலைகழகத்திற்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள்.

அவ்வழைப்பை ஏற்றுக்கொண்டு நுவரெலியாவில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு நான் சென்று சொற்பொழிவாற்றிய போதுதான் நான் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. அந்த வேடிக்கையான அனுபவத்தை புத்திரசிகாமணி நினைவு கூர்ந்தார். 

சந்திரசேகரனும் வீடியும் அவருடன் மிகவும் அந்நியோன்யமாகவும் கலகலப்பாகவும் பழகினர். அதிலிருந்து அவர்கள் நெருக்கமானவர்கள் என்பது புரிந்தது. புத்திரசிகாமணி தேர்தல் தொடர்பான தனது அனுபவங்களை மனம் திறந்து கூறினார். நுவரெலிய மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் எப்படியெப்படி பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது பற்றி தெளிவாக விளங்கப்படுத்தினார். உதாரணமாக பொகவந்தலா பகுதியில் மறைந்த மலையக தலைவர் வெள்ளையனுக்கு இன்னும் மிகுந்த மரியாதை இருக்கிறது. அங்கு மக்களைக்கவர வெள்ளையனைப்பற்றி கொஞ்சம் புகழச்சியாகப் பேசவேண்டும் அவரது குறைகள் பற்றி பேசக்கூடாது என அவர் விளக்கினார். 

பின்னர் சந்திரசேகரனும் நானும் சதாசிவத்தை அவரில்லத்தில் சந்தித்தோம். அவர் சற்று தயக்கத்தோடுதான் பேசினார். சௌ. தொண்டமானுடன் மீண்டும் சந்திரசேகரன் இணையவேண்டும் என வலியுறுத்தி இது பற்றி தான் தொண்டமானுடன் பேசுவதற்கு தயார் எனக் கூறினார். சந்திரசேகரனும் பிடிகொடுக்காமல் பேசினார். இடையில் நான் அவரது தேர்தல் அனுபவங்களைப் பற்றி கேட்டபோது அவர் எமக்கு அதுவரை புரியாமலிருந்த ஒரு விடயத்தை புரியவைத்தார். ‘உங்கள் கூட்டங்களுக்கு நிறைய மக்கள் திரண்டுவருகிறார்கள் என அறிகிறேன். நீங்கள் உங்களுக்கு வரும் கூட்டத்தை வைத்து உங்களுக்கு விழும் வாக்குகளைக் கணக்கிடாதீர்கள். நீங்கள்  கூட்டம் நடத்திய பல இடங்களில் மொத்தமே சில நூறு வாக்குகள்தான் இருக்கின்றன. நீங்கள் எங்கெங்கே வாக்குகள் அதிகம் இருக்கிறதோ அங்கு விசேட கவனம் செலுத்த வேண்டும்’ என தெளிவு படுத்தினார்.

இவ்விருவரோடும் கதைத்த பின்னரே தேர்தல் வேலை என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு எமக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் வாக்காளர் பட்டியலை வாங்கி வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் இடங்களை அடையாளம் காண்பது – அவற்றுக்கான வாக்கு நிலைய முகவர்களை தேர்ந்தெடுப்பது – ஆகிய பணிகளைக் கவனிப்பதற்கு தனியான பிரிவு ஒன்றை அமைத்தோம். அதற்கு பொறுப்பாக இருந்து இரவு பகலாக பாடுபட்டவர் எம். நாகலிங்கம் (கட்டுவன் நாகலிங்கம் அல்ல). இவர் லோகி தோட்டத்தைச் சேர்ந்தவர். சந்திரசேகரனின் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர். 

சந்திரசேகரன் இவரை மரியாதையாக ‘சேர்’ என்றே அழைப்பார். இவர் சண்முகதாசன் காலத்திலிருந்து மலையத்தில் எழுச்சியை ஏற்படுத்திய பல அமைப்புகளுடன் குறிப்பாக மலையக வெகுஜன இயக்கத்துடன் இணைந்திருந்தவர். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பவர். 

எமது தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்து பாடுபட்டவர்களில் பிரதானமானவர்கள் பட்டியலில் மீண்டும் பி.செல்வராஜை குறிப்பிட வேண்டும். இன்னொருவர் வீ.செல்வராஜ். இவர் வீடி தர்மலிங்கத்தின் தம்பி. சந்திரசேகரனின் பள்ளி நண்பர்களில் ஒருவர். பின்னர் ஸ்ரீ பாத ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார்.

இவரது பங்களிப்பு ஆரம்பத்தில் மிகவும் அற்புதமாக இருந்தது. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் செயற்படுவதில் இவர் அவரது அண்ணன் வீடி தர்மலிங்கத்தைப் போலிருந்தார். அப்போது நடைபெற்ற பிரதான கூட்டங்கள் அனைத்தையும் தொகுத்கு வழங்குபவராக இவர் திகழ்ந்தார். பத்திரிகைகளுக்கு சந்திரசேகரன் விடும் பல அறிக்கைகளை இவர் தயாரித்துக் கொடுத்தார். சில பகுதிகளில் எமக்கு அமைப்பாளர்களே இருக்க மாட்டார்கள். இவர் எப்படியாவது ஒரு திறமையானவரை அங்கிருந்து தேடி கொண்டுவருவார். (ஆனால் பிற்காலத்தில் இவர் தானாகவே அரசியல் அதிருப்தி காரணமாக ஒதுங்கிக் கொண்டார்.) அடுத்து நமசிவாயம் மாஸ்டர். இவர் என்னோடு சிறையிலிருந்தவர்.

வட்டவளை பகுதியைச் சேர்ந்தவர். தேர்தல் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தார். முழு நேரமும் காரியாலயத்திலிருந்து கொண்டு பிரச்சினைகளை சமாளித்தற்கு பி. செல்வராஜிக்கு உறுதுணையாக இருந்தவர். இவர் தேர்தல் முடிந்த சில நாட்களில் பச்சை வேனில் கடத்தப்பட்டு காணாமல் போனார். 

அக்காலகட்டத்தில் இடுப்பொடிய எமக்காக இரவுபகலாக படுபட்ட பலர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பட்டியலிட்டால் கட்டுரையை விட பெயர்பட்டியல் நீண்டுவிடும். ஆனால் சிலரது பெயரைக்குறிப்பிடாமலிருக்க முடியாது. அப்படி மறைவாக மரத்தின் வேர் போலிருந்து கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த மற்றொருவர் மல்லிகை சி குமார். இவர் மலையகத்தின் மாணிக்கங்களில் ஒருவர். தொழிலாளி. அதிசயிக்க விதத்தில் மக்கள் பிரச்சினைகளை வைத்து கவிதை வடிப்பார். சிறுகதை எழுதுவார். ஓவியம் வரைவார். ஒரு பிறவி கலைஞர். இவர் நாட்கணக்கில் கால் கடுக்க நின்று நூற்றுக்கணக்கில் வரைந்த சுவரொட்டிகளே எமது தேர்தல் பிரச்சாரத்திற்கு கம்பீரம் சேர்த்தன.  

இத்தேர்தலில் சந்திரசேகரன் பிரதம வேட்பாளராக போட்டியிட்ட அதேசமயம் அவரோடு சக வேட்பாளர்களாக போட்டி போட்டவர்கள் வருமாறு: மு.சிவலிங்கம்: இவர் மலையகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர். சாகித்திய அக்கடமி பரிசு வாங்கியவர். நகைச்சுவையாக மேடைகளில் தனது கருத்துகளை முன்வைப்பதில் வல்லவர். காலஞ்சென்ற மலையகத்தலைவர்களான எ.அசீஸ் வி.பி. கணேசன் ஆகியோரோடு அரசியல் உறவு வைத்திருந்தவர். நான் மலையக மக்கள் முன்னணியை விட்டு வெளியேறிய பின்னர் அதன் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டவர். எஸ்.கிருஸ்ணன்: இவர் இதொகாவின் ஹட்டன் மாவட்ட தலைவராக இருந்தவர். அப்போது இதொகாவின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினராகவும் திகழ்ந்தார். சந்திரசேகரன் இதொகாவை விட்டு வெளியேறிய போது அவரோடிணைந்த இதொகாவின் ஒரேயொரு மாவட்ட தலைவர் இவர்தான். சந்திரசேகரன் காலமாகும் வரை அவரைவிட்டு பிரியாமலிருந்தார். வி.மயில்வாகனம: பார்ப்பதற்கு நடிகர் விஜயகாந்தைப் போலிருப்பார்.

சந்திரசேகரனாலும் கட்டுவன் நாகலிங்கத்தாலும்  அவர்களது கலை கலாச்சார அபிவிருத்தியணியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட முத்துக்களில் ஒருவர். பல திறமைகள் கொண்ட ஒரு கலைஞர். சிறந்த பாடகர். குரல்களை மாற்றி மிகிரி செய்வதில் வல்லவர். இவர் மேடையில் ஏறினால் கூட்டம் கலகலக்கும். மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகால வளர்ச்சியில் இவருக்கு நிறைய பங்குண்டு. கே.கமலநாதன்: இவர் இடதுசாரி கருத்து கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். புளொட் அமைப்பின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டார். எஸ். நாகேந்திரன்: கொட்டகலை பகுதியைச் சேர்ந்த ஒரு சமுக சேவகர். அக்காலகட்டத்தில் தொண்டமானின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியிருந்து இதொகாவை எதிர்த்து போட்டி போடுவதற்கு அபார துணிச்சல் வேண்டும். எஸ். தங்கராசா: தொண்டமானின் வீட்டின் கொல்லைப்புறம் பூண்டுலோயா. இங்கு தொண்டமானின் உறவினர்களுக்குச் சொந்தமான தோட்டங்கள் பல இருந்தன. இப்பகுதியில் எமக்காக துணிந்து இறங்கிய இளைஞர் இவர். அடுத்து எச். டி. பியதாச டி. எம் விக்ரமசிங்க (பிற்காலத்தில் சந்திரசேகரனுடன் இணைந்து பிரச்சார செயலாளராக செயற்பட்ட ஒருவரது பெயரும் விக்ரமசிங்க. ஆனால் இவர் அவரல்ல) ஆகிய இரு சிங்கள இளைஞர்கள்.

இவ்விருவரும் இராகலை ஹரஸ்பெத்தயைச் சேர்ந்தவர்கள். காமினி யாப்பாவின் இடதுசாரி அரசியலூடாக வந்து இணைந்தவர்கள். பெரிய பணக்காரர் யாரும் அப்பட்டியலில் இருக்கவில்லை. 

இன்னொரு விடயம் சந்திரசேகரன் இதொகாவை விட்டு வெளியேறிய போது இதொகா வின் முக்கியஸ்தர்கள் ஒருவர் கூட அவரோடு வந்து இணையவில்லை. இதொகாவை விட்டு பெரிய மக்கள் அணிஒன்று பிரிந்து வந்து இணைந்துகொள்ளவுமில்லை. தiவாக்கெலையைச் சுற்றிவர இருந்த சுமார் 09 மைல் வட்டத்திலிருந்த தோட்டங்களைச் சேர்ந்த துடிப்பான தொழிலாளர்களே இவருக்காக உயிர் கொடுக்கவும் துணிந்து களத்தில் இறங்கினர். மற்றபடி எல்லாமே படித்த இளைஞர்கள்தான். இவர்கள்தான் மூலைமுடுக்கெங்கும் அன்று ஏற்பட்ட எழுச்சியை ஏந்திச் சென்றனர். அப்போது பணக்காரர்கள் எம்மைப்பார்த்து சிரிப்பதற்குக் கூட பயப்பட்டார்கள். சிலர் ‘இது ஆபத்தான முயற்சி என்று’ அறிவுரை கூறினர். தலவாக்கெலை நகரில் கூட நான் முன்னர் குறிப்பிட்ட ஆறுமுகம்; தனலெட்சுமி ஸ்டோர்ஸ் முதலாளி; கனகரட்ணம்; ஆசாரி குமார் ஆகிய நான்கு முதலாளிகளே வெளிப்படையாக சந்திரசேகரனை ஆதரித்தனர். இவர்கள் யாருமே பெரிய பணக்காரர்கள் அல்லர்.

தலவாக்கெலைப் பகுதிக்கு வெளியே சந்திரசேகரனுக்கு ஆதரவு திரட்டியதில் வீடி தர்மலிங்கத்திற்கும் அருள்மொழிவர்மனுக்கும் விடி செல்வராஜுக்கும் வி.சந்திரசேகரனுக்கும் (இவர் சென் டிலெறி தோட்டத்தில் பாடசாலை அதிபராக இருந்தார்) பெரும்பங்கு இருந்தது. வீடி தர்மலிங்கம் ஹட்டன் பொகவந்தலா ஆகியபகுதிகளில் பாடசாலை அதிபராக கடமையாற்றியவர். அவரிடம் கல்விகற்ற அரசியல் ஆர்வமுள்ள பல இளைஞர்கள் ஹட்டன் பொகவந்தலா மஸ்கெலிய ஆகிய பகுதிகளில் துணிந்து எமக்காக செயற்பட்டனர். அவர்களோடு சென் டிலரி சந்திரசேகரன் இணைந்து அப்பகுதி தேர்தல்பணிகளுக்கு தலைமை தாங்கினார். நுவரெலிய கந்தப்பொல இராகலை உடபுசல்லாவ பகுதிகளில்அருள்மொழிவர்மன் எமது பணிகளை முன்னெடுத்துச்சென்றார்.

கருப்பு சிவப்பு கொடியின் மகிமை: எமது தேர்தல் பிரச்சாரத்திற்கும் எம்மைப்பற்றி உருவாகியிருந்த ‘புரட்சியாளர்கள்’ இமேஜுக்கும் மேலும் கம்பீரம் சேர்ப்பதில் புளொட் எமக்களித்த கருப்பு சிவப்பு வர்ணக்கொடி ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. மலையகத்தில் கருப்பு சிவப்பு கொடிக்கு ஒரு வரலாறு உண்டு. தென்னிந்தியாவிலே அண்ணா தலைமையில் தி.மு.கா. எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த வேளையில்.

அதன்பாதிப்பு தமிழ் உலகெங்கும் எதிரொலித்தது. 1948 நவம்பர் மாதம் 11 ந் திகதிமுதல் இலங்கையில் காத்த முத்து இளஞ்செழியன் தலைமையில் இலங்கை திராவிட கழகம் இயங்கிவந்தது. 1949 செப்தம்பர் 17ல்; தி.க.விலே இருந்து பிரிந்து சி. என் அண்ணாதுரை தலைமையில் திமுக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு இலங்கையிலும் இலங்கை திராவிட கழகம் இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றஞ் செய்யப்பட்டு ஏ. இளஞ்செழியன் தலைமையில் புனருத்தாரனம் செய்யப்பட்டது. மலையகத்தில் நாடற்றவா பிரச்சினை பற்றியும் அரசியல் மலையக மக்களின் அரசியல் உரிமை பற்றியும் குரல் கொடுத்த ஓரே அமைப்பாக இது மலையகத்தில் மெல்ல வேரூன்ற தொடங்கியது. 1963 ஜுலை 15ந் திகதி பண்டாரவளையில் நாடற்றவர் பிரச்சினைக் கெதிராக கருப்பு சிவப்பு கொடிஏந்தியபடி ‘நாம் இந்நாட்டின் பிரஜைகள்.

எமக்கு உரிமை வேண்டும்’ என கோஷமெழுப்பியவண்ணம் இதிமுக தலைமையில் தோட்டதொழிலாளர் ஊர்வலம் வந்த போது – அப்போது மலையகத்தில் சிங்கள இனவாத வன்முறை இயக்கமாக செயற்பட்ட –  கே.எம.;பி இராஜரட்ண தலைமையிலான ஜாதிக விமுக்தி பெரமுன (ஜேவிபி) ஆதரவாளர்கள் ‘கள்ளத்தோணிகள் வெளியேற வேண்டும்’ என்று எதிர் கோஷமிட்டபடி போட்டி ஊர்வலம் நடத்தினர். இருதரப்பும் மோதிக்கொள்ளும் கொந்தளிப்பான நிலைமையை பொலிசார் தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆயினும் அவ்வெழுச்சி ஊர்வலத்தில் கலந்து கொண்டு; பதுளை வெலிமட ஹாலிஎல ஹப்புத்தல தியத்தலாவ திரும்பும் வழியில் தோட்டத்தொழிலாளர் வழிமறித்து தாக்கப்பட்டனர். அக்காலத்தில் கருப்பு சிவப்பு கொடி என்பது இலங்கையை ஆக்கிரமிக்க முயலும் திராவிடர்களின் கொடியாக சிங்கள மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. பண்டாரவளை தாக்குதலுக்கு பின்னர் கருப்பு சிவப்பு கொடியை மலையகத்தில் ஏந்த எவரும் துணியவில்லை. இக்கொடியை நாம் ஏந்திப்பிடித்தபோது அதுவே எமது துணிச்சலை பறைசாட்டுவதாக அமைந்தது. மலையக தமிழ் இளைஞர்களைக் கவர்வதற்கு எமது பேச்சுகளையும் செயற்பாடுகளையும் போலவே கருப்பு சிவப்பு கொடிக்கும் ஒரு பங்கு இருந்தது. என்னுடன் பேசும்போது வி.டி. செல்வராஜ் ஒருமுறை இதுபற்றி அழகாகக் கூறினார்: ‘புளோட் எமக்கு தந்த நிரந்தரமான பரிசு இந்த கருப்பு சிவப்பு கொடிதான்’. பிற்காலத்தில் கருப்பு சிவப்பு வண்ணக்கொடியே மலையக மக்கள் முன்னணியின் கட்சிக்கொடியானது.

நங்கூரசின்னம்:

புளொட்டின் கருப்பு சிவப்பு வண்ணக்கொடி எந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வதற்கு எமக்கு சாதகமாக இருந்ததோ அதே அளவுக்கு அவர்களின் நங்கூரசின்னம் எமக்குத் தடையாக இருந்தது. மலையக தோட்டடத்தொழிலாளருக்கு நங்கூரம் என்றால் என்ன என்றே தெரியாது. நங்கூரம் என்றால் என்ன என்பதை விளக்குவதே எமக்கொரு மேலதிகவேலையாக இருந்தது. அதனை தமது தோட்டங்களில் வரைவதற்கு தொழிலாளர்கள் சிரமப்பட்டார்கள். வாக்குப்பத்திரங்களிலும் ஏனைய கட்சிசின்னங்களைப்போல அதனை இலகுவாக இனங்காணமுடியாமலிருந்தது. நாம் அப்போது அங்கு பிரபலமாயிருந்த நங்கூர பால்மாவின் உறையைக்காட்டி நங்கூரத்தை விளக்க வேண்டியிருந்தது.

(இன்னும்வரும்…)

முன்னயவை:

முதலாம் பாகம்

இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

Exit mobile version