ஊடகங்களுக்கான அறிக்கை
இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் தற்போது வட மாகாணத்தில் பெண்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நடவ்டிக்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக்கேந்திரத்தின் இணை அழைப்பாளர்களான இ. தம்பையா, டபிள்யூ.சோமரத்ன ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி, கணேசபுரம் பாரதிபுரம் கிராமங்களை சேர்ந்த 109 தமிழ் யுவதிகளை ஸ்ரீ லங்கா சேர்த்துக் கொண்ட நடவடிக்கையானது தமிழ் மக்களை பேரினவாத இன அழிப்பு சதிக்குள் மாட்டுவதாகும். அது குறித்து எமது கேந்திரத்திற்கு கிடைத்திருக்கும் தகவல்கள் சாதாரண மனிதாபிமானிகளை கூட ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது.
யுத்தத்தினால் அன்புக்குரியவர்களை இழந்து அவமானப்பட்டு உடமையிழந்து, மனம் நொந்து நடை பிணங்களாக வாழும் தமிழ் மக்களுக்கு யுத்தம் முடிவடைந்தும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக முகங்கொடுக்க வேண்டிய சவால்கள் வானளவு உயர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு தேவை யுத்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நல்லிணக்க நடவ்டிக்கைகள், புனர்வாழ்வு, இயல்பு வாழ்க்கை, எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்கான அரசியல் தீர்வு.
பாதிக்கப்பட்டு வறுமைபட்டிருக்கும் தமிழ் மக்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது என்ற தோரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லாத தங்களை ஆக்கிரமித்த தங்கள் உடன் பிறப்புகளின் உயிரிழப்புகளுக்கும் பெண்களின் சீரழிந்த நிலைமைகளுக்கும் காரணமானதென்ற படிமங்களை கொண்ட ஸ்ரீ லங்கா இராணுவத்தில் நிர்பந்திக்கப்பட்டு சேர்க்கப்படுவதை மனப்பூர்வமாக ஏற்கும் நிலையில் இல்லை என்பதை எமது கேந்திரம் நன்கு அறியும்.
யுத்தத்தின் போதும் பின்பும் அதிகமாக உடல் உள ரீதியாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அடக்குமுறையாளர்களின் மிகவும் மலிந்த செயற்திட்டம் என்பதை எல்லோரும் அறிவர். தமிழ் பெண்களை இராணுவத்தில் சேர்க்கும் ந்டவ்டிக்கையானது அத்தகைய அடக்கு முறைகளின் நீட்சியாக இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
யுத்த அழிவிலும் அடக்கு முறைகளிலிருந்தும் இன்னும் மீளாதிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் பெண்களை ஸ்ரீ லங்கா இராணுவத்தில் இணைப்பது என்பது இன அழிப்பினதும் , அடக்கு முறையினதும் இன்னொரு வழிமுறை என்றே நாம் கருதுகிறோம். இது எவ்வகையிலும் இன நல்லிணக்கத்துக்கான வழிமுறையாகவோ தேசிய இன பிரச்சனைக்கு தீர்வாகவோ அமையாது. மாறாக தமிழ் மக்களின் மனங்களில் அழுத்தங்களையும் கிலேசங்களையும் ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
தமிழ் மக்கள் இலங்கை தமது நாடென்ற நிலைமைக்கு இன்னும் திரும்பவில்லை இந்நிலையில் அவர்கள் வெறுத்து ஒதுக்கும் மன நிலையிலிருக்கும் ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்படுவதை ஏற்கப்போவதில்லை.
எனவே தமிழ் இளைஞர்களையும், யுவதிகளையும் ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்ப்பதை விடுத்து இன நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக அரசியல் நடவ்டிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை வலியுறுத்தும் சக்திகளின் தற்போதைய தலையாய கடமை என்பதை எமது கேந்திரம் நினைவு படுத்துகிறது. இது குறித்த திட்டமிட்ட, ஐக்கியபட்ட அல்லது பொது இணக்கப்பாட்டுடனான நடவடிக்கைகளை வலியுறுத்திகிறது.
இப்படிக்கு,
இ. தம்பையா
டபிள்யூ. சோமரத்ன
இணை அழைப்பாளர்கள்
இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?
இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ள ஒடுக்குமுறை: பாதுகாப்பு இயக்கம்