Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிசார் புலம்பெயர் குழுக்களுக்கு மக்கள் பற்றிருந்தால்…? : அஜித்

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கை உலகின் குறித்துக் காட்டத்தக்க பல அரசியல் தளங்களில் ஈழத் தமிழர் போராட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. மனிதாபிமானிகள், சமூக உணர்வு மிக்கோர் போன்ற பலர் இன்று ஈழப் போராட்டத்தையும் அதன் ஊற்றுமூலமாக அமைந்த அவலத்தையும் திரும்பிப் பார்க்கிறார்கள். ஈழத்தில் பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்படவில்லை மாறாக மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை உலக மக்களின் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்வதற்கான வெளியை இது உருவாக்கியுள்ளது.

அழிவுகளை தடுப்பதற்கான இடைவெளியாக இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள நிறையவே வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இலங்கை அரசின் பாசிச சர்வாதிகாரம் குறித்த உலகளாவிய பொது அபிப்பிராயத்தை உருவாக்கவும் அதனூடாக இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் வழங்கவும் நிபுணர் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்பினை மக்கள் பற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரச உளவுத்துறையினதும் அரச துணைக் குழுக்களதும் கொலைக் களமாக மாற்றமடைந்துள்ள வடக்கு கிழக்கில் குறைந்தபட்ச ஜனநாயக வெளியை ஏற்படுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அரசியல் சக்திகள் அறிக்கையையைப் பயன்படுத்திக் கொள்வார்களானால் அழிவுகளை மட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கலாம்.

ஆக, தாம் வாழ்ந்த தேசத்தின் மீதும் மக்கள் மீதும் பற்றுள்ள ஒவ்வொருவரும் நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை அரசிற்கு எதிராகப் பயன்படுத்தத் தவறின் ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியையும் அதன் பின்னால் அணிதிரளும் பேரினவாதிகளையும் மிக நீண்ட காலத்திற்கு அழிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.

வெளியாகியுள்ள யுத்தக் குற்றங்கள் குறித்த அறிக்கையின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை அரசின் கோர முகத்தைக் கண்டுகொள்ளும் அதே வேளை புலிகளின் யுத்தக் குற்றங்களும் சுட்டிக்காட்டுள்ளப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். இலங்கை அரசு தன் மீதான குற்றச் சாட்டுக்களை நிராகரிக்கும் அதே வழிமுறையில் புலி சார் அமைப்புக்கள் புலிகளின் மீதான குற்றங்களை நிராகரிக்குமானால் அதன் எதிர்விளைவுகள் மக்கள் சார்ந்ததாக அமையாது. இரண்டு யுத்தக் குற்றவாளிகளுக்கு இடையேயான பிரசாரப் போர் போன்றே அது கருதப்படும்.

ஆக, அறிக்கையைப் பெறுமானமுடையதாக உள் வாங்கிக் கொள்ள வேண்டியதும், அதன் பெறுமானங்களை மக்கள் சார்பானதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு மனிதனதும் பொறுப்பு.
இந்த நிலையில் புலி சார் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழர் பேரவை,ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் தமிழர் பேரவைகள், உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், சர்வதேசச் செயலகம், தலைமைச் செயலகம் போன்ற அனைத்தும் மூன்று பிரதான விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

1. புலிகள் என்ற அடையாளத்தைத் தொடர்ச்சியாகப் பேணுதல் குறித்து மறு பரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

2. தமது கடந்தகால அரசியல் குறித்த வெளிப்படையான சுய விமர்சனத்தை முன்வைத்தல்.

3. தொடர்ச்சியான வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்ற அரசியலை முன்னெடுத்தல்.

முதலில், புலிகளின் கொடி, சின்னம், அடையாளம் போன்றன தொடர்ச்சியாகப் பேணப்படுமானால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் யுத்தக் குற்றங்களையும் நாம் பேணிக்கொள்கிறோம் என உலக மக்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுவதாக அமையும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த குறியீடுகள் அடையாளங்களுக்கு அப்பால் அழிவிலிருந்து பாதுகாத்தலே இன்றைய பிரதான பிரச்சனையாக அமைந்திருக்கிறது. குழுவாதம்; அதிலிருந்து வெளிப்படும் குறுகிய நலன்கள் போன்ற இன்னொரன்ன புலம் பெயர் புலிசார் அமைப்புக்களின் நலன்கள் அவர்களுக்கு அன்னியமானது.

இரண்டாவதாக, புலிசார் அமைப்புக்கள் தம்மை வெளிப்படையாகச் சுயவிமர்சனம் செய்துகொள்ளத் தவறின் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளும் யுத்தக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தியே இனம்காணப்படும். இலங்கை அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கும் இவர்களுக்கும் வேறுபாட்டைப் பிரித்தறிய உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளுக்கு இவ்விமரசனம் பயன்படும். விமர்சனங்கள் அழிந்துபோவதற்காக அல்ல, செழுமைப்படுவதற்கே பயன்படுகின்றன.

மூன்றாவதாக, சுய விமர்சனத்தினூடான வெளிப்படைத் தன்மை உருவாகுமானால், தொடர்ச்சியான புலம் பெயர் அரசியலை அது மேலும் வலுவடையச் செய்ய்யும்.

இவை அனைத்தையும் புலி சார் அமைப்புக்கள் கருத்தில் கொள்வார்களானால்,

1. அவர்கள் குறுகிய குழுவாதத்திற்காக அன்றி மக்களின் நலன்களுக்காகவே போராடுகிறார்கள் என்ற தோற்றப்பாடு உருவாகும்.

2. இலங்கை அரசும் அதன் ஆதரவுக் குழுக்களும் புலம்பெயர் அமைப்புக்களை நோக்கி விரலை நீட்டி “நீங்கள் இன்னும் குற்றவாளிகள் ” என்று கூற முடியாத நிலை உருவாகும்.

3. நிபுணர் குழுவின் அறிக்கையை உலகின் முன்னால் கறைபடியாத கரங்களோடு கொண்டு செல்ல முடியும்.

4. வன் முறை யுத்தமாக மட்டுமே கருதப்பட்ட போராட்டம் செழுமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்பாட்டு முன் நகர்த்தப்படும்; வளர்ச்சி பெறும்.

5. இனவாதமாகக் கருதப்பட்ட போராட்டம், புதிய சிந்தனைத் தளத்தில் முன்னேசெல்லும்.

6. சிங்கள மக்கள் மத்தியிலும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலும் ஆரோக்கியமான உரையாடல் வெளியும் அதனூடாக ராஜபக்ச சர்வாதிகாரத்திற்கு எதிரான இணைவும் உருவாகும்.

7. தேசியத்தைப் பயனபடுத்தி அரசியல் களத்தில் வியாபாரிகளாக உலாவும் பலர் வெளிச்சத்திற்கு வருவார்கள்.
குறுகிய தேசிய வாதத்தையும் அதன் வழியேயான அடையாளத்தையும் தமது அரசியலாகக் கொண்ட புலிசார் அமைப்புகள் தம்மை புதிய அரசியலை நோக்கிச் செலுத்துவதற்கான சோதனக் களமக இத்னைக் கருதிக்கொள்ளலாம். இன்னும், குறுங் குழுவாதமா அன்றி மக்கள் நலனா பிரதானமானது என்ற வினாவிற்கான விடையை அவர்களிடமிருந்தே எதிர்பார்க்க வேண்டும். மீண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்பினை மக்கள் பற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Exit mobile version