Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் தோல்வி குறித்து உரையாடல் – தத்துவார்தப் பின்புலம் : சபா நாவலன்

கருத்துச் சுதந்திரம் -புலிகளிலிருந்து புலி எதிர்ப்பு ஜனநாகயம் வரை

பேரினவாதத்திற்கு எதிரான ஒற்றுமை – அரசியல் படமாக்கல்

மேற்குறித்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாக இந்த இடுகையை விரித்துக்கொண்டால் மேலும் அர்த்தமுடையதாகும். பருமட்டான கருத்துக்களாக முன்வைக்கபடும் இக்கட்டுரையை உங்கள் அனைவரதும் பங்களிப்புடன் செழுமைப்படுததலாம்.

தேசியம் என்ற கருத்தியலின் உருவாக்கம்

தேசம் தேசியம் அவற்றின் உட்கூறுகளெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சமூக விஞ்ஞான விவாதக் கருப்பொருளாக அமைந்திருந்தது. ஆயிரமாயிரமாய் தமிழ் பேசும் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை, இந்திய மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்குப் பின்னதாக, நடத்தப்படுகின்ற இனச்சுத்திகரிபிற்கு எதிராக குறைந்த பட்ச இணைவிற்குக்கூட வரமுடியாத தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து இப்பிரச்சனை குறித்த விவாதம் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகினும் சமூக அக்கறை உள்ள சக்திகளின் மத்தியிலேனும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும்.

தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கருத்தாக்கத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது, சட்டங்கள் விதிகளிலிருந்ததா? லெனின் அல்லது ஸ்டாலினிருந்தா?

தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? தேசியம் என்பதன் உள்ளர்த்தம் என்ன? தேசியம் யாருக்கானது? என்ற பொதுவான கேள்விகளுக்கான விடைகளிலிருந்தே குறிப்பான சூழலில் தேசம் குறித்த கருத்துக்களுக்கு முன்வர இயலும்.

தேசியம் குறித்த கருத்தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் 16ம் நூற்றாண்டின் பிந்திய பகுதிகளில் உருவான தேசங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. பல்வேறு தலையங்கங்களின் கீழ் அழைக்கப்பட்ட ஐரோப்பிய தேசிய அரசுகள் குறித்த விஞ்ஞான பூர்வமான விளக்கம் பின்னதாக கவுத்ஸ்கி, லெனின், ஸ்டாலின் போன்றோரால் முன்வைக்கப்படுகிறது.

ஆக, தேசியம் என்பது மன்னர் காலத்தைய நிலப்பிரபித்துவ சமூக அமைப்பை உடைத்து அதன் அத்தனை கூறுகளுக்கு எதிராகவும் போராடி இறுதியில் தேசிய அரசுகளாக உருவாகிறது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலங்களைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருபோரே அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தனர். அந்தச் சமூகத்திலிருந்து வர்த்தகம் வளர்ச்சியடைய பணப் பரிமாற்றம் ஏற்படுகிறது. நிலங்களில் விவசாயம் செய்வதற்கு அப்பாலான உற்பத்தி முறைகள் உருவாகின்றன. அவ்வாறான உற்பத்தி முறைக்கு மூலதனம்(Capital) பிரதான காரணியாகிறது. நிலத்தை உடமையாக வைத்திருப்போருக்குப் பதிலாக மூலதன உடமையாளர்கள்(Capital owners) ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கின்றனர்.

அவர்களுக்கு ஒரு சந்தை அவசியமாகின்றது. அதனை நிறுவனப்படுத்த அரசுகள், சட்டம், ஒழுங்கு என்பன அவசியமாகின்றன. இவை தேசிய அரசுகளாகின்றன. தேசிய அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் தேசிய இனங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றனர். பிரான்ஸ் போன்ற நாடுகளில் 50 வீதத்தினர் மட்டுமே பேசிய கோலுவா என்ற மொழி சில வருடங்களுக்கு உள்ளாகவே பிரஞ்சு தேசத்தின் மொழியாகிறது. பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த இனம் பிரஞ்சுத் தேசிய இனமாகின்றது. இவ்வாறே தேசிய இனங்கள் உருவாகின்றன. ஆக, தேசிய இனங்களின் உருவாக்கம் என்பது முதலாளித்துவக் காலகட்டத்திர்கு உரித்தானது. வரலாற்றின் குறித்த காலகட்டமான முதலாளித்துவக் காலகட்டத்திற்கு உரித்தான மக்கள் கூட்டமே தேசிய இனங்களாகும்.

பெருந்தேசிய ஒடுக்குமுறை…

முதலாளித்துவம் சமச்சீராக வளர்ச்சியடையாத பல நாடுகளில் பல்வேறு பிரதேசங்களில் சந்தைகள் உருவாகின்றன. ஆக, பல் வேறு தேசிய இனங்களும் உருவாகின்றன. பால்கன் நாடுகளில் இவ்வாறான ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயே பல தேசிய இனங்கள் உருவாகின. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு பகுதியின் சந்தைக்கு உரித்தானவர்கள் இன்னொரு பகுதியை ஆக்கிரமிக்க முனைந்த வேளையில் தேசிய இனப்பிரச்சனைகள் உருவாகின. குறிப்பாக பெருந்தேசியவாதம் முன்வைக்கப்பட்டு சிறிய தேசிய இனக்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாகின. இவ்வேளைகளில் எல்லாம் தமது தேசிய இனங்களை விடுதலை செய்து தமக்கு உரித்தான சந்தையைக் கைப்பற்றிக் கொள்வதற்காக அத் தேசிய இனங்களைச் சார்ந்த முதலாளிகள் போராட ஆரம்பித்தனர். அவ்வாறான போராட்டங்கள் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்களாக பரிணாமம் அடைந்தது.

தேசிய இனங்கள் பிரிந்து சென்று அரசை அமைப்பதற்கான சந்தைப் பொருளாதாரத்தையும் அதற்குரிய அமைப்பையும் கொண்டிருந்தன. பெருந்தேசிய ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்ட காலங்களில் தேசிய இனங்கள் பிரிந்து சென்று அரசை அமைப்பதற்கான நியாயத்தை விஞ்ஞான பூர்வமாக வரலாற்றை அணுகிய சமூகப்பற்றுள்ள அனைவரும் ஆதரித்துள்ளதைக் காணலாம். இவ்வாறு தனியாகப் பிரிந்து சென்று அரசை அமைப்பதற்கான போராட்டம் தேசிய முதலாளிகளின் நலன்களின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டது.

முகாமைத்துவ வர்க்கம்(managerial class)

ஐரோப்பிய நாடுகளின் தேசிய அரசுகள் முதலாளித்துவத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக ஏகாதிபத்திய அரசுகளாக மாற்றமடைந்தன. இதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் சமூகப்பொருளாதார அமைப்பில் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. இவை ஐரோப்பியத் தேசிய அரசுகளின் உள்ளேயே பல சிக்கலான அமைப்புக்களைத் தோற்றுவித்தது.

தேசிய முதலாளிகள் ஏக போக முதலாளிகளாக மாற்றமடைந்தனர். தமது தேசத்தின் எல்லையை அவர்களது மூலதனம் கடந்து சென்று ஏனைய நாடுகளை ஆக்கிரமித்தது. அதே வேளை தமது நாட்டின் எல்லைக்குள் ஏக போக முதலாளிகளுக்கு உறுதியாக ஆதரவு வழங்கும் வர்க்கம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டனர். உற்பத்தித் திறனற்ற இந்த வர்க்கம் மத்தியதர வர்க்கத்தினதும், மேல் மத்தியதர வர்க்கத்தினதும் வரை முறைகளைக் கடந்து புதிய சிக்கலான அடுக்குகளைக் கொண்டு உருவாகிற்று. முகாமைத்துவ(managerial) ஆதவை வழங்கிய இவர்கள் முகாமையாளர்கள், கணக்காளர்கள், என்று ஆரம்பித்து லிகிதர்கள் வரை சென்றது. இவர்களின் பணி ஏகபோக முதலாளிகளையும் அவர்களின் மூலதனத்தையும் பாதுகாப்பதாகவே அமைந்தது.

உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சி…

இதே உற்பத்தித் திறனற்ற முகாமைத்துவ வர்க்கததை(managerial class) தமது முதலீடுகள் பரவியிருந்த ஏனைய நாடுகளிலும் உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் ஏகபோக முதலாளிகளின் தரகுகளாக அந்தத நாடுகளில் செயற்பட்டனர்.

ஏகாதிபத்திய நாடுகளின் உள்ளே அங்கு உருவான தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்கள் அதிகரிக்க உற்பத்திய மூன்றாமுலக நாடுகளின் தரகுகளின் உதவியோடு உற்பத்தியை அந்த நாடுகளை நோக்கி நகர்த்தினர். குறிப்பாக எழுபதுகளில் ஆரம்பமான இந்த நகர்வு எண்பதுகளின் இறுதிப்பகுதியில் மேலும் விரிவடைந்தது.

மூன்றாம் உலக நாடுகளின் முகாமையாளர்கள் அல்லது தரகுகள் ஐரோப்பிய மூலதனச் சொந்தக்காரர்கள் அளவிற்குப் பலம் பெறலாயினர். மூன்றாம் உலக நாடுகள் இப்போது உற்பத்திக்காக மட்டுமன்றி, சந்தையாகவும் உருவானது. உலக மயமாதலின் பின்னதாக உருவான புதிய சூழல் வறிய நாடுகளின் சந்தையை அழித்து வந்த ஏகபோகங்கள் அவற்றைப் பயன்படுத்தும் நிலௌ உருவானது.

இந்த நிலையில் உலக முதலாளித்துவம் பலமான சமூகமாக உருவாகிறது. இந்தச் சமூகத்தில் மூன்றாம் உலகத் தரகுகள் கூடப் பங்காளர்களாக இணைந்து கொள்கின்றனர். ஆக, உலகத்தின் வழங்களையும் மக்களையும் சுரண்டுகின்ற உலக முதலாளித்துவம் விரல்விட்டெண்ணத்தக்க மனிதர்களையும் அதே வேளை அவர்களைப் பாதுகாக்கும் அரசுகளையும் கொண்டு உருவாகிறது. இப்போது மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் உலக முதலாளித்துவத்திற்குச் சேவையாற்றும் அரசுகளாக மாற்றமடைகின்றன. அவ்வரசுகளின் ஆதார சக்திகளாக உற்பத்தித் திறனற்ற கொள்வனவு மனோபாவம் கொண்ட புதிய முகாமைத்துவ வர்க்கம் ஒன்று உருவாகிறது.

ஆக, உலக முதலாளித்துவத்தின் பங்குதாரர்கள், முகாமைத்துவ அணி, மேல் மத்தியதர வர்க்கம் என்பன அதிகாரத்தின் ஆணிவேராக மூன்றாமுலக நாடுகளில் அமைகின்றன. இவர்களோடு இப்போது உலகப் பொருளாதார மாற்றங்களோடு சிதைவடைந்து அதிகார அமைப்புக்களோடு இணைந்துகொள்ளும் நில உடமையாளர்களும் பிரதான அதிகார சக்திகளாகக் காணப்படுகின்றனர். இவர்களின் பின்பலமாக ஏகபோக முதலாளித்துவமும், அவர்களை நிறுவனப்படுத்தும் ஏகபோக அரசுகளுமே திகழ்கின்றன.

எகபோகங்களின் நோக்கம்…

ஆக, உலகமயமாதலுக்கும் முன்னதாகவோ அல்லது அதன் பின்னான காலப்பகுதியிலோ, தேசிய உருவாக்கத்தை ஆதரிக்கும், தேசியப் பொருளாதாரத்தில் தங்கியிருக்கும், தேசிய நலனுக்காகப் போராடும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் எப்போதுமே இருந்ததில்லை.

தவிர ஐரோப்பாவில் உருவானது போன்ற முதலாளித்துவம் மூன்றாம் உலக நாடுகளில் உருவானதில்லை. முதலாளித்துவ உருவாக்கம் இல்லையெனின் தேசிய இனங்கள்கூட அங்கு இல்லை என்று ஆகிவிடுமா? மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவமும் அதன் அரசமைப்பும் ஏகாதிபத்திய நாடுகளால் அவற்றின் சுரண்டல் நோக்கங்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டன. அதனோடு கூடவே சந்தையும் சந்தப் பொருளாதரமும் இயங்கு திறனற்றுக் காணப்பட்டது. அவற்றின் இயங்கு திறன் ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காக அவற்றால் கட்டுப்படுத்தப்பட்டது. இன்று உலக முதலாளித்துவத்தின் தேவைக்காக அது பயன்படுத்தப்படுகின்றது. அதன் ஒரே நோக்கம் உலக வழங்களைத் தமது மூலதனத்தைப் பெருக்கும் நோக்கோடு ஒட்டச் சுரண்டிக்கொள்வதே.

இலங்கையில் தேசிய இனங்களின் வளர்ச்சி…

இவ்வாறான சமூகப் புறச் சூழல் ஒன்றின் பின்னணியில் தான் தேசிய இனங்கள் உருவாகி வளர்ச்சியடையும் நாடாக இலங்கை காணப்பட்டது. ஆக, தேசிய இனங்கள் ஐரோப்பிய தேசிய இனங்களைப் போன்றனவாகக் காணப்படவில்லை. சாதிய ஒடுக்கு முறை, பிரதேச ஒடுக்குமுறை போன்ற பல உள்ளக முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட வளர்ச்சியடையும் நிலையிலான தேசிய இனங்களே இலங்கையில் காணப்பட்டன. மறு புறத்தில் இத் தேசிய இனங்களின் முழுமையை நோக்கிய வளர்ச்சியை தலைமைதாங்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கமும் காணப்படவில்லை. ஆக, இரண்டு முதன்மையான முடிபுகளை இங்கே முன்வைக்கலாம்.

1. தேசிய இனங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே காணப்பட்டன.

2. அவற்றின் வளர்ச்சியைத் தலைமை வகிக்கும் தேசிய முதலாளித்துவமும் காணப்படவில்லை.

ஐரோப்பிய சூழலில் பெருந்தேசிய ஒடுக்கு முறை என்பது சிறுப்பான்மைத் தேசிய இனங்களின் சந்ததையைக் கையகப்படுத்தும் ஒடுக்கு முறையாகவே ஐரோப்பாவில் நிகழ்ந்தது. இலங்கை போன்ற நாடுகளைப் பொறுத்தவரை இது முற்றிலும் சரியானதல்ல. தேசியப் பொருளாதாரம் உருவாகுதலைத் தடுக்கும் நோக்குடன் பெருந்தேசியம் சிறுபான்மைத் தேசிய இன அழிப்பை மேற்கொள்கிறது. இதன் பின்னணியில் சந்தையைக் கைப்பற்றும் செயற்பாட்டை ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்கின்றன. தேசிய இன முரண்பாட்டையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் இவ்வாறே ஏகபோகங்கள் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

தேசிய இன ஒடுக்குமுறை…

ஆக, இரண்டு முதன்மையான முடிபுகளை முன்வைக்கலாம்:

1. பெருந்தேசிய ஒடுக்கு முறை என்பது தேசிய சந்தையைக் கையகப்படுத்துவதற்கான அரசியல் செயற்பாடாக இருக்கவில்லை.

2.ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து தேசியப் பொருளாதாரத்தை அழிப்பதற்கான செயற்பாடாகவே காணப்பட்டது.

இவை தவிர தேசியப் பொருளாதாரத்தை அழிப்பதற்கான ஏகாதிபத்தியச் செயற்பாடுகளை இரண்டு காலக் கூறுகளாக வகைப்படுத்தலாம்.

1. உலகமயமாதலிற்கு முற்பட்ட காலப்படுகுதி.

2. உலகமயமாதலுக்குப் பின்னான காலப்படுகுதி.

இவற்றுள் முதலாவது காலப்படுகுதியில் ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான நிகழ்ச்சி நிரலில் தேசியப் பொருளாதாரத்தைச் சிதைப்பதும் தேசிய உற்பத்தியை மட்டுப்படுத்துவதும் பிரதான நோக்கங்களாக அமைந்தன. இரண்டாவது காலப்பகுதியில் தேசியப் பொருளாதாரம் அழிக்கப்படுதல் ஒரு புறம் நிகழ்ந்த அதே வேளை மறுபுறத்தில் தேசிய உற்பத்தையை மட்டுப்படுத்தலுக்குப் பதிலாக அதனை ஏகாதிபத்தியச் சந்தைக்குச் சார்பாக பயன்படுத்தல் என்பது முதன்மையான பகுதியாக அமைந்தது.

இதன் அடிப்படையிலேயே முன்பு புலிகள் போன்ற இயக்கங்களைத் தேசிய உற்பத்தியை அழிப்பதற்காகப் பயன்படுத்திய ஏகாதிபத்தியங்கள், பின்னர் தேசிய உற்பத்தியை தன்னுடைய நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவிக்கும் நோக்கோடு அவற்றை அழித்தன. 2000ம் ஆண்டுகளின் பின்னர் புலிகள் போன்ற இயக்கங்களின் தேவை அற்றுப்போன சூழலில் அவற்றை பொதுவான அரசியலுக்குக் அழைத்துவர ஏகாதிபத்தியங்கள் முயன்றன. இதனூடாக சந்தையைப் பயன்படுத்தும் சமாதான சூழலை உருவாக்க முயன்றன, அது சாத்தியமற்றுப் போன சூழலில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது.

இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுணைவில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு அனைத்து நாடுகளும் வழங்கிய ஆதரவின் அரசியல் பின்னணி என்பதே சந்தைக்கு உகந்த சூழலை உருவாக்குதல் என்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலே.

(புலிகள் இயக்கம்உட்பட விடுதலை இயக்கங்கள் ஏகாதிபத்தியங்களின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் தகவமைப்புக்களை எவ்வாறு கொண்டிருந்தது? அதற்கான வர்க்கப் பின்னணி என்ன?அதன் பின்னதான அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமைந்தன? போன்றவற்றின் அடிப்படைகளும் அவற்றின் புலம்பெயர் நீட்சிகள் எவ்வாறு உருவாகின அவற்றின் வர்க்கப் பின்னணி என்ன என்பனவும், இவற்றிலிருந்து எதிர்காலம் எவ்வாறு மீட்கப்படலாம் என்பதும் அடுத்த பதிவில் ஆராயப்படும். எது எவ்வாறாயினும், ஏனையோரின் காத்திரமான பங்களிப்பின்றி இம் முயற்சி முழுமை பெற முடியாது.)

Exit mobile version