Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? : மருதமுத்து

paraiவரலாற்றுக்கு முந்தைய தென்னிந்தியாவில்(தமிழகத்தில்) முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட முக்கியமான “மரம்” மூங்கில் எனலாம். பழைய கற்கால ஆயுதங்களில் முதன்மை வாய்ந்ததாக காம்போடு இணைக்கப்பட்ட கூரிய கல்லாயுதம் இருந்தது.

இந்தக் கற்காலக் கோடரியின் காம்பாக ஆரம்பத்தில் விலங்குகளின் எலும்புகள் பயன்படுத்தப் பட்டன. பிறகு எலும்பை ஒத்த மூங்கில் கழிகள் பயன்படுத்தப் பட்டன. மூங்கில்கழிக் காம்புகளை சிரமப்பட்டு உருவாக்கவேண்டியதில்லை. எலும்புகளைப் போல, கிடைக்கும் நிலையிலேயே பயன்படுத்தலாம்.

மலைசார்ந்த காட்டுப் பகுதிகளில் கோடரிக்கு அடுத்தபடியாக வேலும், வில்லும் மிக முக்கியமான ஆயுதங்கள் ஆயின. அவற்றுக்கும் மூங்கில் பயன்பட்டது. பழைய தமிழ் இலக்கியத்தில் மூங்கிலுக்கு மற்றொரு பெயர் “காம்பு” என்பது–

“காம்பு தலை மணந்த ஓங்கு மலைச் சாரல்” (அகநானூறு: 172).

இவ்வாறாக மூங்கிலும், முருகக் கடவுளும், முல்லைநிலக் குடிகளும் நீண்ட நெடுங்காலமாக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தனர். புல் என்ற வகைப்பட்ட மூங்கிலைக் கொண்டு பின்னுவதில் வல்லவர்களான புலையர் மரபினர் குறிஞ்சியில் தொடங்கி மருதம் வரை தமிழகம் முழுவதையும்
பொதுப்பண்பாட்டால் பின்னிப் பிணைத்து வைத்திருந்தனர். இவர்கள்தான் குறிஞ்சியின் கடவுளைத் தம் முல்லைநிலக் குலமுதலாகக் கொண்டு சிறப்புற வளர்த்தெடுத்து எல்லா நிலத்தவரோடும் பகிர்ந்துகொண்டனர்.

இதுவே ஆரியத்தின் வரவுக்கு முந்தைய தமிழகத்தின் பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்கு அடித்தளமாக இருந்தது.

இம்மாபெரும் சமூகப் பணியின் காரணமாக புலையர்குடியில் பிறந்தோர்க்கு ஒரு சிறப்புரிமையை அன்றைய தமிழ்ச் சமூகம் நல்கியிருந்தது. அதுதான் முழுமுதல் கடவுளாம் முருகப் பெருமானுக்குப் புரோகிதராயிருக்கும் தனியுரிமை.

புராதன வட இந்தியாவில் யாகம் வகித்த இடத்தை அன்றைய தமிழகத்தில் விழவு (விழா) வகித்தது. இரண்டு சமயச் சடங்குகளிலும் கடவுளோடு மக்கள் தொடர்பு கொண்டனர். இரண்டிலும் புரோகிதர்கள்தான் இடையில் தொடர்புபடுத்தும் புனிதப் பணியாளர்கள்.

ஆனால் இவ்விருவகைச் சடங்குகளுக்கும் இடையே அடிப்படையான வேறுபாடு இருந்தது.

வைதிக யாகம் அல்லது வேத-வேள்வி என்பது மக்களில் மேல்சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. பெரும்பான்மையான மக்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் இறையருளுக்கு அருகதையற்றவர்களாக ஒதுக்கப் பட்டார்கள்.

ஆனால் தமிழக விழவு என்பதோ எல்லோருக்கும் உரியதாக இருந்தது. ஊருக்கு ஊர் நடத்தப் பட்டது.
யாகத்தின் புரோகிதர்கள் மக்களை அருவருப்போடு ஒதுக்கி உயரே நின்றார்கள்.

விழவின் புரோகிதரான வேலன்மார் மக்களோடு, மக்களாகக் கலந்து உறவாடினர். இவர்களை அக்காலத்திய “மக்கள்-புரோகிதர்” (Peoples’ Priests) எனலாம்.

“வீழ்” என்பத்திலிருந்து தோன்றியதே “விழவு” என்ற சொல்.
வீழ்தல் என்றால் விரும்புதல் (விழைதல் என்றும் வரும்). இறைவனிடம் இன்னது வேண்டும் என்று விழைவதுதான் மக்களின் இயல்பு. போரில் வெற்றியை விழைதல் அன்று மிக முக்கியமானது. அத்துடன் மழை இல்லாதபோது மழை வேண்டி விழா எடுத்தார்கள். மழை மிகுந்தபோது அது நிற்க வேண்டும் என்று விழவு நடத்தி பலி கொடுத்தார்கள். (புறநானூறு: 143).

இன்றும்கூட புழக்கத்தில் உள்ள “வேண்டுதல்” என்ற சொல் கடவுளிடம் விண்ணபித்தலைக் குறித்து நிற்கிறது.

இதுதான் விழவின் மைய நோக்கம்.

வைதிகர்களின் யக்ஞம் தமிழில் வேள்வி எனப்படும். இதன் நிகர்ச்சொல்லே விழவு.

இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் நாயகனாக அன்று இருந்தவன் வேலன் என்ற பட்டம் தாங்கிய புலையன் ஆவான். இவன் நாவில் மந்திரசக்தி இருந்ததென்று நம்பப் பட்டது. அது தமிழ்மந்திரமான “வேல்! வேல்!” என்பதாக இருந்தது. சொல்லில் மட்டும் வேல் இருக்கவில்லை. வேலனின் நாவில் உண்மையாகவே வேல் செருகப்பட்டது. அது (அலகு குத்திக்கொள்வது) இன்றுவரை நடைமுறையில் நீடித்துவருகிறது.

வேத-வேள்வியில் ஓதப் பட்ட வேதச் சொல்லில் “பிரம்மம்” என்ற மகத்தான தெய்விக சக்தி இருப்பதாக சொல்லப்பட்டது. அது இன்றுவரை மெத்தப் படித்த பிராமணர்களால் நம்பிப் போற்றவும் படுகிறது.
அதற்கு நிகராக விழவின் நாயகனாம் வேலனிடம் அன்றைய தமிழர்கள் தங்கள் சமூக சாரமான புனித சக்தி ஒன்றைக் கண்டார்கள். “வேல்” என்ற மூத்த தமிழ்ச்சொல்லை அவன் நாவில் தரித்தமையால் அவனை “முதுவாய் வேலன்” என்று புனிதனாகக் கொண்டு போற்றினார்கள், (நற்றிணை: 287).

அந்தத் தமிழ்ப் புரோகிதனுடன் விழாக்களில் பாடிப் பறையறைந்து பரவிய பாணர்களும், பறையர்களும், ஆடிய விறல்மிக்க விறலியரும் கூட முருகனின் புரோகிதர்களாகவே பணியாற்றினர்.

பார்ப்பனிய வேள்வியில் வேத கோஷங்கள் எழுப்பும் துணைப் புரோகிதர் கூட்டம் எப்படி முக்கியமானதோ அதுபோலவே முருகனின் விழவில் பாணர் பாட்டும், பறைகளின் ஒலியும் இன்றியமையாத புனிதத் தன்மை வாய்ந்தவையாக இருந்தன. அக்காலத்தில் “பூக்கோள்” என்ற சடங்கு நிகழ்த்தாமல் போர்புரியச் செல்லமாட்டார்கள் தமிழர்கள். அதைப் பறையறைந்து அறிவிப்பவனும், நடத்துபவனும் புலையன். பிணப்பறை, மணப்பறை இரண்டுமில்லாமல் அந்தச் சமூகச் சடங்குகளுக்கு

அன்று மதிப்பில்லை. இரண்டும் புலையர் குடியினரின் தனியுரிமை.

இவ்வாறெல்லாம் பழந்தமிழகத்தில் புலையர் பண்பாடு பெருஞ்சிறப்பும், மரபுவழிப் பெருமையும் பெற்றிருந்த காரணத்தால்தான் நூற்புலமை வெகுவாக முன்னேற்றம் கண்டபிறகு கூட தமிழ்ப் புலவர்பெருமக்கள் தங்கள் பாடல்களில் பாணர்களையும், விறலியரையும் முன்னிறுத்திப் பாடினர். தலைசிறந்த தமிழ்ச் சான்றோர் கூடத் தங்களைப் பாணர்களாகவும், விறலியராகவும் பாவித்துப் பல பாடல்களை இயற்றியுள்ளனர். அப்புலவர்களில் பலர் புலையர் குடிப் பிறந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.
நான் இதுவரை கூறியவற்றை மறுக்க சிலர் சங்க இலக்கியப் பாடல்களையே கூட ஆதாரமாகக் காட்டக் கூடும்.

சங்க இலக்கியப் பாடல்களில் வைதிக, பார்ப்பனியத் தாக்கம் அதிகம் இல்லாத பாடல்களில் கூட சில, புலையரை “இழிபிறப்பாளன்” என்றும் “இழிசினன்” என்றும் குறிப்பிட்டுள்ளன.

ஒரு புறநானூற்றுப் பாடல் (எண்: 363) ஒரு மன்னனின் இறுதிச் சடங்கில் பிண்டம் அளிப்பவன் புலையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே பாடலில் அந்தச் சமூகமதிப்பு மிக்கப் புரோகிதப் பணி செய்யும் அப்புலையனை “இழிபிறப்பினோன்” என்றும் அழைக்கிறது.

இன்னொரு புறநானூற்றுப் பாடல் (எண்: 287) இப்படித் தொடங்குகிறது:
“துடிஎறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!”
பெருமிதம் பொங்க, பறையறைபவரை எழுச்சியோடு அழைக்கும் இப்பாடல் இவ்வாறு கூறுகிறது:
“ஓ துடி (உடுக்கு) அடிக்கும் புலையனே!
எறிகோல் (எறி ஈட்டி) ஏந்திய இழிசினனே!

மழைபோல அம்பு தைத்தாலும், கெண்டைமீன் வடிவு கொண்ட வேல் நெஞ்சைப் பிளந்தாலும், போர்யானையின் கொம்பு மார்பில் அழுந்தினாலும் களத்தை விட்டு ஓடாமல் போர் செய்யும் வீரர்க்குப் போரில் வெற்றி கிட்டுமானால் பகைவனது ஊரின் செல்வம் கிடைக்கும். போரில் வீர மரணம் எய்தினாலோ வானுலக இன்பம் பெறலாகும். எனவே வரட்டுமே எதிரியின் சேனை! வா, இங்கே நின்று நோக்கலாம் அதன் வருகையை!”

இதுதான் அப்பாடலில் ஒரு வீரன் புலையனிடம் சொல்வது. துடி என்றால் “இடைசுருங்குபறை” என்று பொருள் தந்துள்ளது தமிழ் லெக்சிகன். அதாவது உடுக்கு. இதைக் கொட்டும் போர்க் கலைஞனான புலையன் தானும் ஒரு போர்மறவனாகவே இருந்துள்ளான். ஒரு கையில் சிறுபறையும் மறுகையில் எறிகோலும் ஏந்தியுள்ளான். எறிகோல் என்றால் வீசி எறியப் படும் ஈட்டி (javelin) என்கிறது தமிழ் லெக்சிகன்.

இந்தப் பாடலின் தொனி மிக முக்கியம். மரணத்துக்கு அறைகூவல் விடும் மறத்தன்மை (Defiance) இப்பாடலில் முதன்மையாக வெளிப்படுகிறது. இப்பாடலில் மறவன் புலையனோடு இணைந்து நிற்கிறான். புலையன் படையின் ஒரு முக்கிய அங்கத்தினனாக உள்ளான். இசை மூலம் மறத் தன்மையை மேம்படச் செய்வது அவனது வேலை. இன்றும் படைகள் அனைத்திலும் தாளக் கருவிகளும் இசைக் கருவிகளும் தாங்கிய படைப் பிரிவினர் உண்டு. கொடி ஏந்திச் செல்லும் வீரர் போல், இசைப் பிரிவினர்க்கும் தனிச் சிறப்பு உண்டு. அதே நேரத்தில் இவர்கள் போரில் பங்கு பெறவும் செய்வர்.

இந்த உண்மைகளின் அடிப்படையில் ஆய்ந்தால் “இழிசினன்” என்ற சொல் இழிவு படுத்தும் பொருள் கொண்டதாக இருக்கமுடியாது என்பது உறுதி.

“இழிசினன்” என்பதும், “இழிபிறப்பாளன்” என்பதும் அன்றைய தமிழகத்தில் சிறப்புமிக்க பட்டப் பெயர்களாக ஆளப் பட்டிருந்தன என்பது எனது முடிவு.

இது சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். ஆனால் அதற்குக் காரணம் இடைப்பட்ட ஈராயிரம் ஆண்டுகளில் திட்டமிட்டு செய்யப் பட்டுள்ள திரிபுகள்தான்.

ஆய்வுத் துறையில்கூட வைதிகத் தாக்கத்தால் தவறான பயிற்றுவிப்பும், மனப் பழக்கமும் ஏற்பட்டுள்ளன.
இதோ ஒரு மிக முக்கியமான புறநானூற்றுப் பாடல் செய்தி. (புறம்: 82)

“சாறு தலைக் கொண்டென, பெண் ஈற்று உற்றென,
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர் கொள வந்த பொருநனோடு
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே!”
இதன் பொருள்:–

ஓர் “இழிசினன்” கட்டில் பின்னிக்கொண்டிருக்கிறான். மாலை மயங்கி, இருள் விரைந்து கவியத் தொடங்கிவிட்டது. போதாக் குறைக்கு மழையும் பெய்து தடை செய்யலாயிற்று. அவனது மனைவியோ பிள்ளை பெறும் தறுவாயில். எல்லாவற்றுக்கும் மேலாக ஊரில் விழவு தொடங்கும் நேரம் நெருங்கி விட்டது. கடவுட்குரிய கட்டில் உடனே அணியமாக்கப் படவேண்டும். இந்த நிலையில் அந்த “இழிசினன்” கையில் உள்ள ஊசி விரைந்து இயங்குவது போல அவ்வளவு விரைவாகப் போர் செய்து முடித்துப் பகைவனை வென்றான் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி.

மேற்குறித்த பொருள் தரும் புறப் பாடல் இலக்கண அறிஞர்களுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.

மன்னன் ஒருவனுக்கு உவமை காட்ட ஏன் ஓர் “இழிசினனைத்” தேர்ந்தெடுத்தார் புலவர்?
உயர்ந்த ஒருவனுக்கு இழிந்தவன் ஒருவனை ஒப்பாகக் காட்டுவதா?

இறுதியாக உரையாசிரியர்கள் ஒரு சவுகரியமான முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் கருத்துப் படி இங்கே சோழ மன்னனுக்கு இழிசினன் உவமை இல்லையாம். சோழன் நிகழ்த்திய போரின் விரைவும், இழிசினனின் கையில் இருந்த ஊசியின் விரைவும் தான் ஒப்பிடப் பட்டுள்ளனவாம்.
இது முற்றிலும் தவறான விளக்கம்.

சாதிக் கருத்தியல் இந்த அறிஞர்களின் பார்வைக்குத் திரை போட்டுவிட்டது.

இவர்களின் விளக்கத்தில் சோழமன்னன் காணாமல் போய்விட்டான். காரணம் இழிசினனை எப்படியாவது ஒதுக்கியாக வேண்டுமே?
உண்மைப் பொருள் என்ன?
ஒருவன் பேருந்தில் பயணம் செய்வதாக வைத்துகொள்வோம். அந்தப் பேருந்து நன்கு விரைந்து செல்லுமானால் அதன்
விரைவுக்கு அப்பயணி பொறுப்பில்லை. ஆனால் அவனே ஓட்டுநராக இருப்பின் வேகத்துக்கு யார் பொறுப்பாவது?
யாருடைய திறமை அங்கே வெளிப்படுகிறது?
அதே போன்று தான் இங்கும்.
புறநானூற்றுக் காலத்தில் இயந்திரத்தால் தானாக இயங்கும் ஊசி ஏதுமில்லை. ஊசியின் விரைவுக்குப் பொறுப்பானவன் அந்த இழிசினனே. எனவே பெருமை அவனையே சேரும். மன்னனுக்கு உவமையாவதும் அவனே.

இப்பாடலில் வரும் உவமை இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைப் பன்முக உவமை எனலாம்.

பாடலில் வரும் மன்னனும் இழிசினனைப் போலவே ஊர்நலனுக்காகத் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அது விழவு நெருங்கிவிட்ட நேரம். அந்த இழிசினனுக்கு ஒரு சமூகக் கடமை உள்ளது. விழாக் களத்தில் ஊர் நலனுக்காகக் கடவுளை வழிபடும் புரோகிதக் கடமையே அது. அவன் பின்னிக் கொண்டிருக்கிற கட்டில் கடவுட்கட்டிலாகும். அக்கட்டிலைப் பின்னுகின்ற அவனே விழாவில் வெறியாடும் வேலனாக இருத்தலும் கூடும். அல்லது அவனைச் சேர்ந்த இன்னொரு புலையர்குடியான் வேலனாக இருப்பான்.

“வேலன் புனைந்த வெறி அயர் களம்,” என்கிறது குறுந்தொகை(பாடல் எண்: 53)

எனவே வெறியாடல்களம் அமைத்தல் முதலிய பணிகள் புலையன்மார்க்கு உரியது என்று தெரிகிறது.
வைதிகரின் வேள்விக்களமும் இவ்வாறே பார்ப்பனப் புரோகிதரால் வெகு கவனமாக உருவாக்கப் படுவதாகும். தலைமைப் புரோகிதரின் மேற்பார்வையுடன் பல பார்ப்பனர் இப்பணியில் ஈடுபடுவர். எள்ளளவு தவறு நேர்ந்தாலும் யாகம் தோல்வியுறும், அதன் விளைவாகத் தீங்கும் நேரிடும் என்று நம்பப்பட்டது.

இதற்கு நிகரான விழவுக்களப் பணிகளையும் (கடவுட்கட்டில் தயாரித்தல் உட்பட) செய்தவர்கள் அன்றைய தமிழகத்தில் புலையன்மாரே.

வேலனின் விழாக்களமாயினும் வேத வேதியர் வேள்விக் களமாயினும் அங்கே கடவுள் வந்து தோன்றுவான் என்பதால் அப்பணிகள் மிகப் புனிதமானவையாகக் கருதப்பட்டன. அவற்றைச் செய்வோரும் புனிதரே. அதாவது வேள்விப் பார்ப்பார் போலவே தமிழ்ப் புலையப் புரோகிதரும் அன்று புனிதராக மதித்துப் போற்றப் பட்டனர்.

இந்தப் புலையர்குடி வேலன்மார் அமைத்த வெறியாடுகளம் பிற்காலத்தில் இயற்றப் பட்ட திருமுருகாற்றுப்படையில் கூட முருகக் கடவுளின் உறைவிடங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது, (“திருமுருகாற்றுப்படை”–222)

அனைத்தையும் ஒருசேர ஆய்கையில் இப்புறநானூற்றுப் பாடலில் வரும் இழிசினன் ஒரு புரோகிதன் என்ற வகையில்தான் கடவுட்கட்டிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் எனலாம்.

களம் அமைத்து அதில் அந்தக் கட்டிலை வைத்து அதன் மீது ஏதேனும் ஒரு படிமம் வைத்து அதன்கண் முருகனை வந்து உறையுமாறு வேண்டுதல் மரபாக இருந்திருக்கிறது. முரசுகட்டில் அமைத்து அதன்மீது போர்முரசை வைத்து வழிபடும் முறையெல்லாம் அன்று இருந்துள்ளது.

எனவே இங்கு இழிசினன் ஊசி கொண்டு கட்டில் பின்னியது ஊர் மக்களுக்கு மிக முக்கியமான விழவுக்காகவே என்பதை நம் கவனத்தில் கொண்டு பார்க்கவேண்டும். இக்காலத்தில் ஒரு எளிய கைவினைஞன் தெருவோரம் கட்டிலோ, கூடையோ பின்னுவது போன்ற நிகழ்வல்ல இது.

இந்தப் புலையப் புரோகிதன் தன் சமூகக் கடமையிலேயே கண்ணாக இருக்கிறான். இருள் சூழ்ந்தாலும், மழை வந்தாலும், மனைவி பிரசவ வேதனையில் தவித்தாலும், அவன் கவனம் சிதறாமல் விரைந்து கடமையாற்றுகிறான். அவனைப் போன்றே சோழ மன்னனும் விரைந்து போர் முடித்து பகை வென்று ஊர் காக்கிறான்.

“ஊர் கொள வந்த பொருநனோடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!”
என்கிறது பாடல். அதாவது ஊரை அழிக்கவந்த பகைவனோடு போர் செய்த மன்னன் எல்லாத் தடைகளையும் கடக்கிறான்; தன் காதல்மனைவியின் நினைவும் அவன் உள்ள உறுதியைக் குலைக்கவில்லை. (ஒப்பீடு: இழிசினனின் மனைவி நிலை).
இவ்வாறு அரசனின் பெருமைக்குப் புலையனின் பெருமை ஈடாகக் காட்டப் பட்டுள்ளது.
அப்படியானால் “இழிசினன்”, “இழிபிறப்பாளன்” என்பதெற்கெல்லாம் அன்று என்ன பொருள்?
“இழிவு” என்பதற்கு மிகப் பழங்காலத்தில் “கீழ்த்தரமான” (base, vile) என்ற பொருள் முதன்மையானதாக இருக்கவில்லை. பிற்காலத்தில் இந்நிலை மாறியது. இதில் பார்ப்பனியத்தின் பங்குதான் முக்கியமானது.
ஆரம்பத்தில் “இளி” என்பதுதான் “கேவலம்” என்ற பொருள் கொண்டிருந்தது. மற்றவர்களின் நகைப்புக்கு (“இளித்தல்”) இடமாதல் “இளிவரல்” எனப் பட்டது.

ஆனால் “இழிதல்” என்றால் அன்று “இறங்குதல்” என்று பொருள். அது “இழிதரல்” என்று பண்டை இலக்கியத்தில் பயின்று வரக் காண்கிறோம்.

“இழிதரல்” என்பதைப் பிரித்துப் பார்க்கையில் “இழி” என்பது பெயர்ச்சொல்லாக தனித்து நிற்கக் கூடியதே என அறியலாம். “இளி” என்பதும் இவ்வாறு பெயர்ச்சொல் தான்.

“இழி”, அதாவது “இறங்குதல்” என்பதன் சரியான ஆங்கில மொழியாக்கம் “Descent” (descend-verb) என்பது. சம்ஸ்கிருத மொழியில் இதன் நிகர்ச்சொல் “அவதாரம்” என்பது. அவதரித்தல் என்றால் “மேலேயிருந்து கீழிறங்குதல்” என்று பொருள்படும். அப்படிக் கீழே இறங்குவதுதான் “அவதாரம்”.

அதாவது,
அவதரித்தல்(வினை)> அவதாரம் (பெயர்ச்சொல்)
இழிதரல் (வினை)> இழி (பெயர்ச்சொல்)

வெறியாடுகளத்தில் பறையோசை முழக்கத்தினூடே வேலன் எனும் புரோகிதன் ஆவேசம் கொண்டு ஆடிக் குதித்து அழைக்கும்போது முருகக் கடவுள் தன் முதற்பெரும் உறைவிடமாம் மலையிலிருந்து (குன்றிலிருந்து) “இழிதரல்” செய்வான். The Descent என்று இதைக் கூறவேண்டும். அதாவது அவனது அவதாரம் நிகழ்கிறது.

ஆக அவ்வாறு இறங்கிவரும் கடவுளே இழி எனப்பட்டான்.

வடமொழியில் “அவதாரம்” எனும் சாதாரணச் சொல் இறைவனைக் குறித்து நிற்கையில் அது உயர்திணைச் சொல்லாகிறது. “இழி” என்பதும் பழந்தமிழகத்தில் முருகனைக் குறித்து நின்றமையால் பொருட்சிறப்பின் காரணமாக உயர்திணைச் சொல்லாகவே இருந்துள்ளது.

பறையோசையும், வேலனாட்டமும் உச்ச கட்டத்தை எய்துகையில் “இழி” நேர்கிறது. சினம் மிக்க முருகன் சீற்றமுடன் தன் இனத்தவனாகிய புலையப் புரோகிதனாம் வேலனின் உடலில் இறங்குகிறான். பிறகு பலி பெற்று அருள் பாலிக்கிறான்.

புலையர்குடிப் பெண்களுக்கும் இப்பாக்கியம் நேரலாம்.

“முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல” என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல் (எண்: 259).
கேரளத்தில் “செறு மக்கள்” என்று இழிநிலையில் வைக்கப் பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட பறையர் முதலிய சாதியாரின் உடலில் முருகன் புகுந்து அருள் செய்வது நீண்ட கால வழக்கம். அப்படி வெறியாடும் “கீழ்ச்சாதியானை”

(புலையனை) இக்காலத்திலும் கேரளத்தினர் “வேலன்” என்றே அழைக்கின்றனர். (வெறியாடும்போது, மலையாளம் மட்டுமே அறிந்த கேரளப் புலையர் அதிசயமான முறையில் தமிழ்ச் சொற்களைப் பேசுவர் என்று நான் கேள்விப் பட்டுள்ளேன். முருகன் தனித்தமிழ்க் கடவுள் என்பதற்கும், புலையர் அவனது புராதனப் புரோகிதர் என்பதற்கும் இது இன்னொரு ஆதாரமாகலாம்)

தமிழகத்தில் இன்று வரை சாமானிய மக்கள் மத்தியில் சாமியாடுவது என்பது நிகழ்ந்துவருகிறது. இதன் முடிவில் “சாமி மலையேறிவிட்டது” என்பார்கள். இது பல்லாயிரம் ஆண்டுக் காலச் சொல்லாட்சி. சாமி அல்லது கடவுள் என்றால் பண்டைத் தமிழகத்தில் அது முருகன் ஒருவனே. அவனது இருப்பிடம் மலை. அங்கிருந்து இறங்கிவந்து ஆடியவன் மீண்டும் “மலையேறி”விடுகிறான். இக்காலத்தில் எல்லாச் சாமிகளுக்கும் பயன்படுத்தப் படும் சொல்லாகிய

மலையேறல் என்பது முன்பு முருகனுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்துள்ளது.
அக்காலத்தில் “இழி” தந்த முருகன் மீண்டும் மலையேறிச் சென்றான்.

யாருக்குள் அந்தச் சினம் மிக்க கடவுள் இழிசெய்தானோ அந்தப் புலையன் இழியின் (முருகனின்) சினம் தனக்குள் எய்தப் பெற்றதால் “இழிசினன்” என்று அழைக்கப்பட்டான்.
(சினம் என்பதிலிருந்து சினன் என்று உருவானது. இதுபோலவே
அறம் செய்பவன் அறன் என்று அழைக்கப்பட்டதற்குப் பழைய இலக்கியத்தில் ஆதாரம் உள்ளத–பரிபாடல்: எண்:3,வரி:5).

இதைத்தான் பார்ப்பனியம் திரிபு செய்து “இழிசினன்” என்றால்

இழிந்த, கீழான பிறவி என்று மாற்றியது.  இழிபிறப்பாளன் என்பதும் இப்படித் தோன்றிய சொல்லே. இழி, அதாவது முருகன், தனக்குள் பிறக்கும் (தோன்றும்) பண்பு கொண்டவன் என்பதால் புலையப் புரோகிதன் அப்பெயர் பெற்றான்.

இந்த வரலாற்று உண்மைகlove.jpgள் யாவும் முற்றாகப் புதைக்கப் பட்டன. புதையுண்ட இடத்தில் பொய்யான கதைகள் புனைந்து தமிழ்மக்கள் மனங்களில் பரப்பப் பட்டன.

ஆரோக்கியமான தமிழ்ப் பண்பாட்டின் பழைய புலையப் புரோகிதர் வீழ்த்தப் பட்டு அவர்களின் இடத்தைப் புதிய வைதிகப் புரோகிதர் கைப்பற்றினர். இதைச் சாதிப்பதற்காக பழைய தமிழ்முருகனும் கைப்பற்றப் பட்டான். அக்கடவுளை முற்றிலும் வேறுவிதமாக மாற்றியமைத்தார்கள். மக்கள் மத்தியில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அனைவருக்கும் சமமாக அருள்செய்த அந்த முருகன் மக்களிடமிருந்து விலக்கப் பட்டு தேவர் உலகில் இணைக்கப்பட்டான். இறுதியில் தமிழரின் தனிப் பெருங்கடவுள் என்பதெல்லாம் போய் வெறும் தளபதியாக, தேவசேனாபதியாகப் பதவியிறக்கம் செய்யப்பட்டு இரண்டாந்தர, மூன்றாந்தரக் கடவுளாக ஓரத்தில் ஒதுக்கப் பட்டான்.

கடவுள் உரிமையைப் பறிகொடுத்த புலையப் புரோகிதக் குடிகள் தங்கள் சிறப்புப் பண்பாட்டையும், திறன்களையும் பறிகொடுத்தார்கள்,

அவர்கள் செய்த கைத்தொழில்கள் யாவும் இழிந்தவை என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. பானை செய்யும் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் கேவலமானவை என்று கற்பித்தார்கள். பாணன் மதிப்பிழந்து இரவலன் ஆனான். அவன் பாட்டும் மதிப்பிழந்தது.

தோலைத் தொட்டாலே தீட்டு என்றார்கள். தோலால் ஆன பறை இழிவானதாக ஆக்கப் பட்டது.
கூடை பின்னுதல் போன்ற தொழில்களும் இழிந்தவை என்று கூறியது பார்ப்பனியம்.

“இது ஏன் என்று அறிந்துகொள்ள சிரமமாக உள்ளது,” என்று எழுதியுள்ளார் புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆய்வறிஞர் ஏ.எல். பாஷம் (A.L.Basham, “The Wonder that was India”, Rupa, 1992, page 146)
கூடை பின்னுதலைப் பார்ப்பனியம் இழிவு செய்ததற்குக் காரணம் உள்ளது. இதுவும் புலையரோடு தொடர்புடையதுதான்.

கூடை செய்வது போன்ற தொழில்கள் மூங்கிலைக் கொண்டு செய்யப்படுவன. வேல் முதற்கொண்டு பல்வேறு பொருள்கள் செய்வதற்கு மூங்கில் முக்கியமானது. அது புலையர் வாழ்வோடும், பண்பாட்டோடும் நெருங்கிப் பிணைந்த ஒன்று என்று முன்னமே பார்த்தோம்.

புலையர்களின் புரோகிதத் தலைமையை அழிக்கவேண்டி அவர்களின் வாழ்வில் தனிச் சிறப்பு பெற்றிருந்த மூங்கிலையும், அது தொடர்பான தொழில்களையும் இழிவு செய்தனர் பார்ப்பனர். வைதிக தர்ம சாத்திரங்கள் மூங்கில் தொடர்பான வேலைகளை இழிந்தவை என்று வகுத்தன.
வடமொழியில் மூங்கில்தொழில் செய்வோன் “வேணன்”

என்று சொல்லப்படுகிறான். “வேணு” என்ற வடசொல் மூங்கிலைக் குறிப்பது. ஆரியர்மரபில் மூங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.அவர்களது பூர்விகமான தாயகப் பகுதிகளில் மூங்கில் வளர்ந்ததில்லை. எனவே இந்த “வேண” எனும் வடசொல் உண்மையில் பழைய தமிழ்ச் சொல்லாகிய “வே” என்பதிலிருந்து உருவாக்கப்பட்டதே.

இங்கே ஒரு உண்மையை கவனிக்கவேண்டும். ஆரிய மன்னரை எச்சரிப்பதற்காக வைதிக தர்ம சாத்திரங்கள் அடிக்கடி குறிப்பிடும் புராணக் கதை ஒன்று உள்ளது. அது ஆதிகாலத்தில் இருந்த வேணன் எனும் மன்னன் பற்றியது. இந்த வேணன் பார்ப்பனியத்துக்கு எதிரான பெரும் பாவமாகிய வர்ணசம்கரம்
என்ற குற்றத்தைச் செய்தானாம். அதாவது வர்ணங்களும், சாதிகளும் கலந்து உறவாடும்படி ஆட்சி செய்தானாம்.

அதுமட்டுமல்ல, இந்த வேணன் (“மூங்கிலோன்”) தன்னையே கடவுள் என்று அறிவித்து மக்களின் பலிகளைத் தானே பெற்றுக்கொண்டானாம். வைதிக வேள்விகளைத் தடுத்தானாம். பிராமண ரிஷிகள் எவ்வளவோ சொல்லியும் அவன் போக்கு மாறவில்லையாம். எனவே ரிஷிகள் அனைவரும் ஒன்றுகூடி புனிதமான “குசைப்புல்லை” (தருப்பைப் புல் போன்றது) தங்கள் சக்தியால் வேல்களாக மாற்றி அந்த வேணனைக் கொன்றார்களாம்.

இக்கதை மீண்டும், மீண்டும் பார்ப்பனிய சாத்திரங்களில் சுட்டிக் காட்டப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது என்கிறார் ஏ.எல்.பாஷம், (A.L.Basham, முன்குறித்த நூல், பக்.88).
இதன் மெய்ப்பொருள் என்ன?

பிராமண ரிஷிகள் புல்லை வேலாக்கினர். புலையரை (வேணன்) வீழ்த்த அந்தக் குடியினரின் கடவுளாகிய முருகனின் கையிலிருந்த மூங்கில்காம்பு கொண்ட வேலைப் பறித்து அதற்கு பதில் புதிய “ஆரிய வீரியம்” கொண்ட சக்திவேலைக் கொடுத்தார்கள்.

இதுவே புராண கற்பனைக்குள் இருக்கும் வரலாற்றுப் பதிவு என்பது உறுதி.

இப்படியாக சாதிகள் கலந்து உறவாடுமாறு ஆண்ட வேணன் என்ற மூங்கிலோன் தானே பலி பெற்றுவழிபாட்டில் முதன்மையாக இருந்த நிலை மாற்றியமைக்கப் பட்டது. அவன் அழிக்கப் பட்டான். அதன்பொருட்டு இழிவு கற்பிக்கப் பட்டான். அவன் குலத்தார் செய்யும் மூங்கில் தொடர்பான தொழில்களும் இழிந்தவை என்று கற்பிக்கப் பட்டது.

பார்ப்பனியம் பற்றிய புரிதல் இல்லாத அயல்நாட்டு அறிஞரான பாஷம் போன்றோருக்கு இதைப் புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது. ஆனால் நம்மவர்களே இப்போது இதைப் பற்றி சிந்திப்பதும் ஆய்வு செய்வதும் இல்லை என்பதோடு எதிர்த் திசையிலும் பல நூல்களைப் படைத்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தொகுத்துப் பார்க்கையில்,

முல்லைநிலக் குடிகளில் ஒரு பிரிவினராம் பறையர் உள்ளிட்ட புலையரைப் பிற தமிழ் மக்களிடமிருந்து தனிமைப் படுத்தி அவர்கள் மீது அருவருப்பும் பகையும் உருவாக்கி வளர்த்து மக்களிடையில் பகைமுரண்பாட்டை மேலோங்கச் செய்து தங்கள் ஆதிக்க நிலையை உறுதிசெய்துகொண்டிருக்கிறார்கள் பார்ப்பனிய வாதிகள்.
அனைவர்க்கும் பொதுவான காவல்தெய்வமாகவும், நீதிக்கடவுளாகவும் விளங்கிய முருகன் வீழ்த்தப்பட்டபிறகு,
பொதுவான தமிழ்ப் பண்பாட்டின் தலைவர்களாக அன்று விளங்கிய புலையர்குடிப் புரோகிதரும், கலைஞர்களும்
இழிவுபடுத்தப் பட்டுக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டபிறகு,
தமிழக மக்கள் தனித் தனித் தீவுகளாக மாறியதோடு ஒன்றுபட்டசமூகம் படைக்க இயலாத நிலையை எய்தினர்.
இந்த உண்மைவரலாற்றை ஆழமாகக் கற்று உள்வாங்கினால்தான் தமிழக மக்கள் சரியான திசையில் முன்னேறி மேம்பட முடியும்.

நிறைவுறுகிறது..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இக்கட்டுரை முதலில் 1998-ல் “கணையாழி” இதழில் வெளியானது.
அடுத்து 2004-ல் இக்கட்டுரை உள்ளிட்ட மேலும் சில ஆய்வுகள் வெளியிடப் பட்டன (“பழந்தமிழகத்தில் நீதியும், முருகனும்”–பேராசிரியர் மருதமுத்து, தமிழ்முழக்கம் வெளியீடு)

பெறுமதி மிக்க வரலாற்றாவணமான இக்கட்டுரை மீள் பதிவாவதற்கு உதவிய திருமதி. போர்க்கொடி மருதமுத்து மற்றும் சௌந்தர் ஆகியோருக்கு இனியொரு..வின் நன்றிகள்.

முன்னயவை:

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [1] : மருதமுத்து

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [ 2 ] : மருதமுத்து

இது ஒரு மீள் பதிவு

Exit mobile version