Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி – வட பிராந்திய மாநாடு : தோழர் செந்தில்வேல் சிறப்புரை

புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின்
5வது வடபிராந்திய மாநாட்டில்
பொதுச் செயலாளார் சி.கா.செந்திவேல் ஆற்றிய சிறப்புரை.

 

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இருபது மாதங்களுக்கு மேலாகியும் அக் கொடிய யுத்தத்திற்குக் காரணமாக நீடித்து வந்த தேசிய இனப் பிரச்சினைக்கு மகிந்த சிந்தனை அரசாங்கத்தினால் தீர்வு எதனையும் முன்வைக்க இயலவில்லை. ஆதற்கான அடிப்படைக் காரணம் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க நிலைப்பாடேயாகும். இதன் மூலம் இன முரண்பாடும் இன ஒடுக்கு முறையும் நீடித்துச் செல்கின்றன. அதனால் இலங்கை அரசியலில் தேசிய இனப் பிரச்சினை என்பது இன்றும் பிரதான இடத்தில் இருந்து வருகின்ற அரசியல் யதார்த்தத்தை ஜனநாயக மறுப்பு, சலுகைகள், அபிவிருத்திகள் போன்றவற்றால் மூடி மறைத்து விட முடியாது.

அதனாலேயே ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி மூலமாக நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என எமது புதிய – ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வற்புறுத்தி வருகின்றது.

இவ்வாறு புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின் ஜந்தாவது வடபிராந்திய மாநாடு கடந்த 26.02.2011அன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய கட்சியின் பொதுச் செயலாளார் சி.கா.செந்திவேல் கூறினார். ஜந்து பேர் கொண்ட தலைமைக் குழுவின் தலைமையில் நடைபெற்ற முழு நாள் மாநாட்டில் செந்திவேல் தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது.

யுத்தத்தின் கொடூரத்தாலும் போரட்டத்தின் தவறான கொள்கை வழிமுறைகளாலும் தமிழ் மக்கள் வரலாறு காணாத பேரவலங்களையும் பேரழிவுகளையுமே அனுபவித்துக் கொண்டனர். இதற்கான முழுப் பொறுப்பையும் தெற்கின் பேரினவாத முதலானித்துவ ஆளும் வர்க்கத்தினரும் வடக்கின் தமிழ்த் தேசியவாதம் பேசிவந்த குறுந்தேசியவாதிகளும் ஏற்றுக் கொள்ள வோண்டும். ஒரு நாட்டிற்கான தேசியத்தையாயினும் அல்லது ஒரு இனத்திற்கான தேசியத்தையாயினும் இரண்டு தளங்களில் நின்று முன்னெடுக்க முடியும். ஓன்று முற்போக்கான தேசியம் இரண்டாவது பிற்போக்கான தேசியம். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பேசப்பட்டுவந்த நாட்டுத் தேசியம் பிற்போக்குத் தளத்தில் பேரினவாதமாகவே வளர்த்து முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறே தமிழ் இனத் தேசியம் என்பதும் பிற்போக்குத் தளத்தில் நின்று குறுந் தேசியவாதமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இவற்றால் சிங்கள ஆளும் வர்க்க சக்திகளும் தமிழ் மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் சக்திகளுமே பயன்கள் பெற்று வந்தன.
2
ஆனால் அவலங்களையும் இழப்புக்களையும் சாதாரண உழைக்கும் தமிழ் மக்களே அனுபவிக்க வேண்டியவர்களாக ஆனார்கள்.

ஆதாலால் இனிமேலும் தமிழ்த் தேசியம் என்பதனை வாக்குகள் பெறுவதற்கு வெறும் உணர்ச்சிக் குரியதாகக் கொண்டு பழைய செக்கிழுத்த பாதையில் பிற்போக்கான தமிழ்க் குறுந்தேசிய வாதமாக முன்னெடுத்துச் செல்லும் இரத்தக் கறை படிந்த கொள்கைகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய ஆதிக்க அரசியல் போக்கை இளம் தலைமுறையினர் இனம் கன்டு முற்போக்கான தமிழ்த் தேசியத்தை கைப்பிடிக்க முன்வர வேண்டும். தமிழ்த் தலைமைகள் அந்நிய ஏகாதிபத்திய சக்கிகளுக்கும் பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கும் அடிபணிந்து சென்றதன் விளைவை இறுதி யுத்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் இரத்தம் பெருகி உயிழ்கள் இழந்த போது அனுபவித்துக் கொண்டனர். இத்தனைக்குப் பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவையும் அமெரிக்காவையும் அடிமை விசுவாசத்துடன் அரசியல் தீர்வுக்காகக் காத்திருப்பது தமிழ் மக்களை மீண்டும் தமது பிற்போக்கான தமிழ்க் குறுந்தேசிய வாதப் பாதையில் ஏமாற்றி அழைத்துச் செல்வதற்கேயாகும்.

தமிழ்த் தேசியம் என்பதனை உரத்துக் கூவிக் கொண்டு கடந்த நூற்றாண்டில் தமிழ்த் தலைமைகள் யாவும் முன்னெடுத்த கொள்கைகளும் போராட்ட வழிமுறைகளும் முற்று முழுதான தோல்விகளையே கண்டு வந்துள்ளன. இன்று அவற்றை வேறுவேறு பெயர்களில் முன்னெடுக்கவே அத்தலைமைகள் முன் நிற்கின்றன. வாக்குகள் பெறுவதற்காகத் தமிழ்த் தேசியவாத அரசியலை மீண்டும் தூசு தட்டி மக்கள் முன்வைக்கின்றனர். இவர்களில் சிலர் முற்றிலும் அடிபணிந்த அரசியலை ;விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை’ என்ற தோறணையில் முன்னெடுக்கின்றனர். மற்றும் சிலர் ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ என்பதனை நம்பி ‘அவலை நினைத்து உரலை இடிப்பது’ போன்று அரசியல் செய்ய முன்நிற்கின்றனர். ஆனால் தமிழ் மக்கள் பட்டது போதும் என்ற நிலையில் அரசியல் மௌனத்தில் உறைந்து காணப்படுகின்றனர்.

இதற்கு ஜனநாயக மறுப்பும் இயல்பு வாழ்வுச் சிதைப்பும், அரசியல் தீர்வு முன்வைக்காமையும் அடக்கு முறை அச்சம் பீதி என்பன மட்டும் காரணமல்ல. தமிழ்த் தேசியவாதம் பேசி தமிழீழத்தை அடைய நின்ற அனைத்துத் தலைமைகளின் மீதான அரசியல் விரக்தியும் வெறுப்புமே காரணமாகும்.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள ஒரே அரசியல் மார்க்கம் வெகுஜனப் போராட்டப் பாதையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. நமக்கான கொள்கை நிகழ்ச்சி நிரலை நாமே தயாரிப்போம். நாமே அணி திரள்வோம். ஏமக்கான தலைமையை நாமே உருவாக்குவோம். அத்தகைய கொள்கையானது கடந்தகாலப் பட்டறிவில் இருந்து முற்றிலும் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வோம். தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சாதிய ஏற்றத் தாழ்வுகள், சமூக நீதி மறுப்புக்கள் பெண்கள் மீதான ஒடுக்குதல்கள், மற்றும் பாரபட்சங்களை அகற்றக் கூடிய ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை ஜக்கியப் படுத்துவோம். அந்திய சக்திகள் மீதான அடிமை விசுவாசத்தைத் தகர்த்தெறிவோம்.

குறுகிய இனவாதத்தைக் கைவிட்டு சிங்கள உழைக்கும் வர்க்க மக்களோடு இணைந்து நிற்போம். ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகள் பற்றி சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் எமது வெகுஜனப் போராட்டபபாதையில் ஜக்கியமுறச் செய்வோம்.

இதுவே தமிழ்மக்களின் முன்னால் உள்ள சரியான அரசியல் தெரிவாக இருக்க முடியும்.

இதுவரை தமிழ் மக்கள் மத்தியில் மூன்று கட்டங்களாகளில் முன்னெடுக்கப் பட்டு வந்த கொள்ளைகள் வழிமுறைகள் தோல்வியடைந்து அழிவுகள் எஞ்சியுள்ள சூழலில் மேற் கூறியவற்றின் அடிப்படையில் நான்காவது போராட்ட முனை திறக்கப்படுவது மட்டுமே சரியானதாக உறுதியானதாக தூர நோக்குடையதாக அமைய முடியும். துமிழ் மக்கள் மத்தியில் இத்தகை புதிய மாற்று அரசியல் கொள்கையும் நடைமுறை வழி முறைகளும் சிந்திக்கப்படாது விட்டால் விடுதலைக்கான மார்க்கம் ஏதுவும் திறக்கப்பட முடியாததாகும்.

எனவே எமது கட்சி தனது சொந்த கொள்கை நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அதே வேளை முற்போக்கான தமிழ்த் தேசியம் என்பது குறுந்தமிழ்த் தேசியவாதத்தை நிராகரித்து முகிழ்த்தெழுமானால் அவற்றுடன் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயல்படவும் தயாராக இருக்கிறது என்பதையும் இப் பிராந்திய மாநாட்டின் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றது என்றம் பொதுச் செயலாளார் சி.கா.செந்திவேல் கூறினார்.

இப்பிhந்திய மாநாட்டில் வடமாகாணத்தின் ஜந்து மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். மாநாட்டிற்கான அறிக்கையை வடபிரந்திய செயலாளார் கா.கதிர்காமநாதன் முன்வைத்தார். ஆறிக்கை விவாதத்தில் மாநாட்டுப் பிரதிநிகள் கலந்து கொண்டு விரிவான கருத்துக்களை முன்வைத்தனர். ஆத்துடன் மாநாடு பதின்மூன்று திர்மானங்களை நிறைவோற்றிக் கொண்டது. க.தணிகாசலம், சோ. தேவராஜா ஆகியோர் ஆரம்ப உரை சிறப்புரை ஆற்றினர். மறைந்த கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்;டதுடன் மூத்த தோழர்கள் மூவர் மாநாட்டில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கா. கதிர்காமநாதன் வடபிராந்தியப் பணிமனை
வட பிரந்திய செயலாளார். 405, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின்
வடபிராந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1) யுத்தம் முடிவடைந்து இரண்டாவது ஆண்டை நெருங்கியபோதும் அந்த அவலங்கள் தாக்கங்களிலிருந்து மக்கள் முற்றாக மீளவில்லை. இந்நிலையில் இன இனமுரண்பாடும் ஒடுக்குமுறையும்; நீடிக்கின்றன. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காலத்தை நீட்டாது முன்வைப்பதை வற்புறுத்துகிறோம். அத்தகைய தீர்வு சுயநிர்ணய உரிமை அடிப்படையில், ஜக்கியப்பட்ட இலங்கையில் பூரண சுயாட்சி உடையதாக அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2) மீள் குடியேற்றம், புனரமைப்பு புனர்வாழ்வு என்பன வெறும் பெயரளவில் அன்றி மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் எவ்வித தலையீடும் அச்சுறுத்தலும் நெருக்கடிகளும் இன்றி சுதந்திரமாகவும், இயல்பாகவும் வாழ்வதற்கு ஏற்ப இயல்புச் சூழலை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.

3) வலி வடக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் இருந்து வரும் உயர்பாதுகாப்பு வலயபகுதிகளில் மீள் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

4) அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்படுவதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.

5) ஆரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதுடன் காணாமற்போனோர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

6) இனம் தெரியாதோர் என்னும் பெயரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொலைகள் கொள்ளைகள் ஆட்கடத்தல்கள் நிறுத்தப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

7) ஜனநாயகம், இயல்பு வாழ்வு என்பன மீண்டும் தோற்றுவிக்கப்பட வேண்டும். முழுமையான சிவில் நிர்வாகம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

8) அடிப்படை ஜனநாயக – மனித உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், ஊடக, கருத்துச் சுதந்திரம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

9) பொருட்களின் விலையுயர்வு தடுத்து நிறுத்தப்படுவதுடன் வாழ்க்கைச் செலவின் உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சம்பள உயர்வு சகல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும்.

10) விவாசயிகள் அன்றாடத் தொழிலளர்கள் மீனவர்கள் தத்தமது தொழில்களை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் முன்னெடுப்பதற்கு ஏற்ற இயல்புச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

11) ஏகாதிபத்திய உலகமய திறந்த பொருளாதாரத்தின் விளைபயனான நுகர்வுக் காலாசாரத்தின் நச்சுத்தனமான பாதிப்புக்களுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்து அணிதிரட்ட வேண்டும்.

12) இலங்கையின் இறைமைக்கும், இனங்களின் ஜக்கியத்துக்கும் வேட்டு வைத்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுகளின் ஊடுருவல்களுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.

13) இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக உழகை;கும் வர்க்கத்தின் நலன்களுக்கான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில் அணிதிரட்டி ஜக்கியம், சமத்துவம், சுதந்திரம், சுபீட்சமுள்ள புதிய இலங்கையைக் கட்டி எழுப்புவோம்.

14) உலகின் அடக்கி ஒடுக்கபட்ட நாடுகளினதும் மக்களினதும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரட்டங்களுடன் ஒன்றிணைந்து முன்செல்வோம்.

Exit mobile version