ஊடகங்களுக்கான அறிக்கை 27-06-2010
இவ்வாறு புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் (புதிய ஜனநாயக கட்சி) ஐந்தாவது மாநாட்டில் அங்கிகரிக்கப்பட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவ் அறிக்கையில், 2009 ஆண்டின் இராணுவ நடவடிக்கைகளின் போது இடம் பெற்றுள்ளது எனப் பரவலாக முன்வைக்கப்படும் போர்க் குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் நேர்மையாக விசாரித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிடின் இலங்கையின் சுதந்திரம் இறைமை சுயாதிபத்தியத்தில் ஏகாதித்திய மேலாதிக்க நவகொலனித்துவ சக்திகளும் ஐ.நா. சபை போன்ற நிறுவனங்களும் மேன்மேலும் தலையிடுவதற்கே வாய்ப்பு ஏற்படும். போர்க் குற்றம் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறிக்கொண்டு வெளிநாட்டு சக்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. அதே போன்று உள்நாட்டு விவகாரங்களில் வெளியார் தலையிடக் கூடாது என்று கூறிக்கொண்டு தனது சொந்த நாட்டு மக்கள் மீதான போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசாங்கம் முடி மறைக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைகவோ முடியாது என்பதையும் மாநாடு வலியுத்தியது.
புதிய ஜனநாயகக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு யூன் 25,26 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்றது. சி.கா. செந்திவேல், இ. தம்பையா, க. தணிகாசலம், சோ. தேவராஜா, வெ. மகேந்திரன் ஆகியோரைக் கொண்ட தலைமை குழு தலைமையில் இம் மாநாடு நடைபெற்றது. அதன் போது கட்சியின் பெயர் புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி என மாற்றம் செய்யப்பட்டது.
இம் மாநாட்டில் சர்வதேச உள்நாட்டு அறிக்கைகளும் ஸ்தாபன, நிதி அறிக்கைகளும் கட்சியின் யாப்புத் திருத்தங்களும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்களின் ஊடே ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ன.
புதிய ஜனநாயகக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு யூன் 25,26 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்றது. சி.கா. செந்திவேல், இ. தம்பையா, க. தணிகாசலம், சோ. தேவராஜா, வெ. மகேந்திரன் ஆகியோரைக் கொண்ட தலைமைக் குழுவின் தலைமையில் இம் மாநாடு நடைபெற்றது. அதன் போது கட்சியின் பெயர் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி என மாற்றம் செய்யப்பட்டது.
இம் மாநாட்டில் சர்வதேச உள்நாட்டு அறிக்கைகளும் ஸ்தாபன, நிதி அறிக்கைகளும் கட்சியின் யாப்புத் திருத்தங்களும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்களின் ஊடே ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மாக்சிசம் லெனினிசம் மாஓ சேதுங் சிந்தனையையும் அவற்றின் விருத்திகளையும் வழிகாட்டும் கோட்பாடுகளாக ஏற்றுக் கொண்டுள்ளதால் அதனை பிரதிபலிக்கும் வகையில் கட்சியின் பெயர் அமைய வேண்டும். புதிய ஜனநாயகக் கட்சி என்ற பேரில் உலகின் பல நாடுகளில் முதலாளித்துவ கட்சிகள் இயங்கி வருகின்றன. அத்துடன் ஒத்த பெயருடைய கட்சி ஒன்றை தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அரசியல் கட்சியாக அங்கஷீகரித்தும் இருக்கிறார். அத்துடன் வெளிநாடுகளின் மாக்சிச லெனினிச சகோதரக் கட்சிகள் எமது கட்சியின் பெயர் பற்றிச் சுட்டி காட்டி இருந்தனர். மேற்படி காரணங்களை விவாதித்த மாநாடு கட்சியின் பெயரை புதிய- ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி என மாற்றுவதற்கு அங்கீகாரம் அளித்தது.
அந்த அடிப்படையில் நடைபெற்ற புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு சுதந்திரமான ஐக்கிய இலங்கை, தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான புதிய ஜனநாயப் புரட்சி, சோசலிஷ எதிர்காலம் என்பனவற்றை அடிப்படை அரசியல் இலக்குகளாகப் பிரகடனப்படுத்தியது.
மேற்படி மாநாடு 15 பேரைக் கொண்ட மத்திய குழுவை தெரிவு செய்தது. அம் மத்திய குழுவானது கட்சியின் தலைமை நிர்வாகிகளையும் தெரிவு செய்து கொண்டது. பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரன், சர்வதேச அமைப்பாளர் இ. தம்பையா, பொருளாளர் சோ. தேவராஜா ஆகியோர் தெரிவாயினர்.
மாநாடு அங்கீகரித்த முக்கிய தீர்மானங்கள்.
1. பௌத்த சிங்கள நிலவுடைமை பழைமைவாத பெருமுதலாளித்துவ அல்லது தரகு முதலாளரித்துவ அதிகார சக்திகளே இலங்கையின் இன்றைய நவ கொலனித்துவ அமைப்பைக் கட்டிக் காத்து நிற்கும் ஆளும் வர்க்கங்களாக இருந்து வருகின்றன.
இத்தகைய சக்திகளே தொழிலாளர்கள், விவாசாயிகள் சிறு வியாபாரிகள், மத்தியதர வர்க்கத்தினர், பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மைத் தேசிய இனங்கள் போன்ற பிரிவினர் உட்பட ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஆள்வதுடன் இலங்கை மக்களுக்குரிய தேசிய ஜனநாயகத்தைக் மறுத்தும் வருகின்றன. ஆதலால் தேசிய ஜனநாயகத்தை வென்றெடுப்பது உடனடியானதும் அவசரமானதுமான தேவையாகவே உள்ளது. அதனை வென்றெடுக்க இடதுசாரி ஜனநாயக முற்போக்கு கட்சிகளும் தேசிய இனங்களின் அரசியல் கட்சிகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகள் தொழிற்சங்கள் விவசாய அமைப்புள் கலை இலக்கிய அமைப்புகளையும் புத்திஜீவிகளையும் கொண்ட பரந்துபட்ட ஐக்கிய முன்னணி கட்டப்பட வேண்டும். பாராளுமன்ற வரையறைகளுக்கப்பால் விரிந்தது பரந்த அரசியல் வேலைத்திட்டம் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அரசியல் பொருளாதார தீர்மானங்களை எடுப்பதில் மக்கள் முடிவெடுப்பவர்களாக மாறும் நிலையில் மக்களின் கைகளுக்கு அதிகாரத்தை கொண்டு செல்ல வேண்டும். இலங்கையின் சுதந்திரம் இறைமை ஐக்கியத்தை உறுதிசெய்யும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் தேசிய இனங்களின் சமத்துவம், சுயாட்சி;, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிப் பல்லினத் தேசியப் பண்பாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுத் தேசிய ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும்.
2. அடுத்த கட்டமாக இலங்கை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடல்லாதபடியால் சோஷலிஸ புரட்சியின் முன்தேவையாகப் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பது அவசியமாகும். புரட்சிகரப் போராட்டங்களினூடாக தொழிலாளர் விவசாயிகளின் ஐக்கிய முன்னணியில் தேசிய இனங்களும் அனைத்து சுரண்டப்படும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசபக்த சக்திகள் தேசிய முதலாளித்துவ சிறு முதலாளித்துவ வர்க்கங்களை அணிதிரட்டி ஏகாதிபத்தியத்தையும் பெரும் தரகு முதலாளித்துவத்தையும் தோற்கடித்து தேசிய இனங்களின் சுயாநிர்ணய உரிமைமயை அந்தந்த இனங்களின் சுயவிருப்பின் படி உறுதிசெய்து, நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களை அகற்றி, சோஷலிஸ கட்டுமானங்களை முன்னெடுக்க வேண்டும்.
3. ஏகாதிபத்திய முகவரான ஐ.நா. சபையையும் அதன் நவகொலனித்துவ நிகழ்ச்சி நிரலையும் ஏற்றுக் கொண்டு பலவிதமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை அரசு யுத்தத்தை நடத்துவதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகளின் இராணுவ உதவிகளையும் பெற்றுக் கொண்டே செயற்பட்டது. யுத்தத்தின் போதும் அதன் பிறகும் வெளிநாடுகள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டது. அப்போதெல்லாம் இலங்கை அரசு நாட்டின் இறைமை சுதந்திரம் சுயாதிபத்தியம் மீது எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை. ஆனால், இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்களும் மனிதஉரிமை மீறல் களும் பற்றிய ஆலோசனை வழங்கவென ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் குழுவொற்றை நியமித்த பிறகே கவலையடைவதாகவும் அதனால் ஆத்திரமடைவதாகக் காட்டுவது நம்பகத்தன்மையற்றதும் மக்களை ஏமாற்றக் கூடியதுமாகும். ஐ.நா. போன்ற அமைப்புகளினது ஏகாதிபத்திய மேலாதிக்க நிகழ்ச்சி நிரல் அவற்றின் உள் நோக்கத்துடனேயே நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறித்து சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்துள்ள ஆலோசனை வழங்கும் குழு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கோ அரசியல் தீர்வு காணப்படுவதற்கோ எவ்வகையிலும் உதவப்போவதில்லை. எனவே தமிழ் மக்கள் ஐ.நா.விடம் எதிர்பார்க்க எதுவும் இருக்க மாட்டாது.
அதேவேளை, இலங்கை போர்க்குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களையும் மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை அரசாங்கம் பிரதான பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காண்பதுடன் போர்க் குற்றங்களும்; மனித உரிமை மீறல்களும் பற்றி விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அதனுடாகவே வெளிநாட்டுச் சக்திகள் இலங்கையில் தலையிடுவதை தடுக்க முடியும்.
4. மிதவாதத் தமிழர்கள் முதல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரை எவரும் முற்போக்கு தேசியத்தை முன்னெடுக்காது ஏகாதிபத்தியச் சார்பு, இந்தியச் சார்பு நிலை நின்று பழைமைவாதப் பிற்போக்குத் தேசியத்தை முன்னெடுத்தனர். அவர்கள் தமிழ் மக்கள் மீது தனிநாட்டுக் கோரிக்கையைத் திணித்தார்கள். தற்போது புலம் பெயர்ந்த தமிழர்களில் மேட்டுக்குடியினர் “நாடு கடந்த தமிழீழ அரசை” நிறுவி, அதனைத் தமிழ் மக்கள் மீது மீண்டும் திணிக்கின்றனர். இதற்கு அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஆதரவு தெரிவிப்பதாக கூறுகின்றனர். 1998ம் ஆண்டில் முதல்முதலாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது இந்தியாவே. அத் தடை இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அவ்வாறே வட அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இடம் பெற்றது. இடையிடையே முணுமுணுப்பதற்கு அப்பால் மேட்டுக்குடியினரால் எதனையும் செய்யமுடியவில்லை. இந்தியா இலங்கையுடன் இணைந்து யுத்தம் செய்து கொண்டிருந்த போது விமானத்தை அனுப்பி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களைக் காப்பாற்றப் போவதாக உறுதியளித்த அமெரிக்கா காத்திருந்து கழுத்தறுத்தது போன்று செயற்பட்டது தெரிந்ததே. தனிநாட்டைக் கோரிய சிலர், மாகாண சபை அதிகாரங்களையே தர மறுக்கும் பேரினவாத அரசாங்கத்துடன் கூட்டிணைந்துள்ளதால் தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் கிடைக்கப் போவதில்லை. இலங்கையில் தேசிய ஜனநாயகத்தை நிலைநாட்டும்போதே நியாயமான அரசியல் தீர்வைக் காணமுடியும். புதிய-ஜனநாயகப் புரட்சி வெற்றிபெறும் சூழ்நிலையில், தமிழ் மக்களின் சுய விருப்பின் பேரிலான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முடியும். எனவே தேசிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் பங்கெடுப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்க முடியும். தேசிய இன விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாடு ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் தரகு முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் ஆதரவாக இருக்க முடியாது. அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் பெரும்பான்மைச் சிங்கள உழைக்கும் மக்களது ஏகாதிபத்திய ஏதிர்ப்பு, பூகோளமயமாதல் எதிர்ப்பு, நவகொலனித்துவ எதிர்ப்பு, பெரும் தரகு முதலாளித்துவ அதிகாரத்துவ நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறமுடியாது. அதேபோன்று சிங்கள மக்களது. மேற்படி போராட்டங்களுக்கு ஆதரவளிக்காமலோ அவற்றுடன் இணையாமலோ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ― அதாவது பிரதான முரண்பாட்டைத் தீர்ப்பதற்குச் ― சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவோ அவர்களை இணைத்துக் கொள்ளவோ முடியாது.
5. மலையகத் தமிழர்கள் தனியான தேசிய இனமும் இன ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்களும் ஆவர். இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அவர்கள் ஒர் அங்கமாக உள்ளனர். அதே வேளை, வர்க்கச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். எனவே இன, வர்க்க ரீதியில் ஒடுக்கப்பட்டு வரும் மலையக மக்கள் அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு வர்க்கப் போராட்டப் பாதையில் அணி திரட்டப்படுவது அவசியமானதாகும்.
6. முஸ்லீம் மக்களம் ஒரு தேசிய இனமாக உள்ள போதிலும், மத அடையாள எல்லைகளுக்குள் மட்டும் நிற்பதற்கும் அப்பால், வர்க்க ரீதியான அணிதிரள்வுக்கு உள்ளாக்கப் படல் வேண்டும்.
7. இனவாதம் மக்களின் ஐக்கியத்திற்குப் பாரிய தடையாக இருந்துவருகிறது. இலங்கையின் தொழிற்சங்க-இடதுசாரி இயக்க வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு அனைத்து இனத் தொழிலாளர்களையும் வர்க்க ரீதியாக ஐக்கியப்படுத்தும் புரட்சிகர இயக்கம் கட்டி வளர்க்கப்பட வேண்டும். சமூக ரீதியாகவும் தொழிற் பிரிப்பினாலும் இனவாதத்தினாலும் பிரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடையே வர்க்க ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து ஐக்கியத்தைக் கட்ட வேண்டும்.
தொழிலாளர்களின் உடனடிக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களினூடாக அரசியல் ரீதியாகத் தொழிலாளர்களுக்கு விழிப்பூட்டி ஸ்தாபன ரீதியாக அணிதிரட்டி அவர்களைத் தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் தலைமைச் சக்திகளாக வளர்க்கச் செயற் திட்டங்களுடன் செயற்பட வேண்டும். உழைக்கும் மக்கள் அனைவரையும் தொழிலாளர்கள் என்ற அடையாளத்திற்குள் கொண்டு வருவதுடன் அவர்களது அனைத்துப் போராட்டங்களிடையேயும் ஒத்துழைப்பை உறுதி செய்து வர்க்கப் போராட்ப் பாதையில் அணிதிரளச் செய்தல் வேண்டும்.
8. விவசாயிகள் சமூக மாற்றப் புரட்சியின் பிரதான சக்திகளாவர். அதனால் விவசாயிகளதும் விவசாயத் தொழிலாளர்களதும் பரந்துபட்ட ஐக்கியம் கட்டப்பட வேண்டும். விவசாயத் துறையில் ஏகாதிபத்திய முகவர்களாக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் (என்.ஜி.ஓக்கள்) முன்வைக்கும் “பேண்தகு உற்பத்தி” “அபிவிருத்தி” “மாற்று உற்பத்தி” “அரசியல்நீக்கச் செயற்பாடு” போன்ற நவகொலனித்துவ பிடிகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். கடற்றொழிலாளர்களிது பிரச்சினைகளும் பிரத்தியேகமாக ஆராயப்பட்டு பெரிய பெரு முதலாளிகளதும் பன்னாட்டு கம்பெனிகளதும் பிடியிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட, அவர்கள் வெகுஜனப் போராட்டங்களின் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும்.
9. தற்போது தீண்டாமை அடங்கு நிலையில் இருந்தாலும் சாதியத்தை வெறும் அடையாளம் தொடர்பான பிரச்சினையாகக் காணவன்றிச் சாதிய ஆதிக்கத்திற்கும் குறுகிய சாதிவாதத்திற்கும் எதிரான போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் சாதியம் மக்களின் ஐக்கியத்தைக் குலைக்கும் நிலப்பிரபுத்துவக் கருத்தியலாகும். இலங்கையில் 1960களில் மாக்சிச லெனினிசப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட்டுகளால் முன்னெடுக்கப்பட்ட சாதியத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டம் இந்தியாவில் போன்று அடக்கப்படும் சாதியினருக்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை கோரும் சாதி அடையாளத்தை நிலைநிறுத்தும் போராட்டமாகவன்றி வர்க்கப் போராட்டத்தின் ஊடாகச் சாதியத்தையும் தீண்டாமையையும் தகர்க்கும் இலக்கைக் கொண்டதாகவே இருந்தது.
சாதியத்திற்கு எதிரான போராட்டம் தலித்தியப் பார்வையில் சாதியத்தை இல்லாமல் செய்துவிடும் என்ற குறுகிய சாதியவாத நிலைப்பாட்டை நிராகரிக்கிறது. அதேவேளை வர்க்கப் போராட்டத்திற்கும் சாதியத்திற்குமிடையிலான நெருங்கிய இணைப்பையும் ஒத்துழைப்பையும் பேண வேண்டும்.
10. தனிச் சொத்துடமைக்கு எதிரான வர்க்கப் போராட்டம் பெண் விடுதலைக்கான போராட்டமே. ஏனெனில் ஆரம்பகாலத்தில் பெண்கள் தனிச் சொத்தாக கொள்ளப்பட்டனர் என்ற வரலாற்று உண்மையை மாக்சியமே விளக்கியது. அதனால் பெண் விடுதலைக்கான போராட்டத்தை வெறும் அடையாளப் பிரச்சினையாகவன்றி வர்க்கப் போராட்டத்தின் பகுதியாகவும் அதேவேளை குறிப்பாகவும் இரண்டு தளங்களிலும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும்.
11. இலங்கையின் மீது மேலாதிக்கம் செய்ய முன்நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பிராந்திய மேலாதிக்க சக்தியான இந்தியாவிற்கு எதிராகவும் இலங்கை மக்கள் ஐக்கியப்படா விட்டால் இலங்கையின் சுதந்திரம், இறைமை, சுயாதிபத்தியம், ஐக்கியம் என்பன பறிபோகும் அபாய நிலையே இருந்து வருகிறது. இலங்கை மீது அமெரிக்க மேற்கு உலக ஏகாதிபத்தியங்களும் ஐப்பானிய ஏகாதிபத்தியமும் பூகோளமயமாதலின் முன்னெடுப்பாளாகளாவர். அத்தகைய பூகோளமயமாதலின் பங்காளிகளாக இருக்கும் இந்தியா, சீனா போன்றவையும் இலங்கை மீது தமது கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றன. எனவே ஏகாதிபத்தியத்திற்கும் பூகோளமயமாதலுக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக வலுவான ஐக்கியப்பட்ட பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும் எனவும் மாநாடு அறைகூவல் விடுத்தது.