Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரெட் ஹாலிடே : கலாச்சார அரசியல் குறிப்பேடு-யமுனா ராஜேந்திரன்

 

 பிரெட் ஹாலிடே கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி தனது 68 வது வயதில் புற்றுநோயினால் மரணமுற்றிருக்கிறார். மூன்றாம் உலகின் புரட்சிகள் குறித்தும் மத்தியக் கிழக்கு மார்க்சிய இயக்கங்கள் குறித்தும் அதிகமும் எழுதியவர் ஹாலிடே. இலண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சில் பேராசிரியராகப் பணியாற்றிய ஹாலிடே மத்தியக் கிழக்கின் முதல் கம்யூனிச நாடான தெற்கு யேமானில் தங்கியிருந்து அந்த அரசுக்கு ஆதரவராக ஒரு முழ நூலையும் எழுதி வெளியிட்டவர்.

 இலத்தீனமெரிக்க ஆப்ரிக்கப் தேசிய விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளர். இந்த நாடுகளுக்கு நேரடியாகச் சென்று கட்டுரைகளை எழுதியவர். ஐரோப்பிய விமர்சன மார்க்சிய கோட்பாட்டிதழான நியூ லெப்ட ரிவியுவின் ஆசிரியர் குழவில் எண்பதுகளில் பங்குபற்றியவர். எழுபதுகளில் ஈரானியப் புரட்சியின் ஆரம்ப காலங்களில் மிகுந்த உற்சாகம் பெற்று அங்கு சென்ற அவர் பின்னாளில் அப்புரட்சி இஸ்லாமிய மதவாதிகளால் கைப்பற்றப்பட்டு இடதுசாரிகளை வேட்டையாடத் துவங்கியதைக் கண்ணுற்று, அரசியல் இஸ்லாம் என்பது திட்டவட்டமாக இடதுசாரி எதிர்ப்பும் சீரழிவுத்தன்மையும் கொண்டது என்பதனைத் திட்டவட்டமாக அறிவித்தவர்.

 சோவியத் யூனியனின் வீழ்ச்சி, ஸத்தாம் குசைனுக்கு எதிரான அமெரிக்க மேற்கத்திய அரசுகளின் முதலாவது இரண்டாவது வளைகுடாப் போர், செப்டம்பர் 11 தாக்குதல் போன்றவற்றின் பின் தனது இடதுசாரிக் கடந்த காலத்தை உதறியவர் எனவே இவரை இன்று நாம் மதிப்பிட முடியும். மத்தியக் கிழக்கு அரசியலும் அரசியல் இஸ்லாமும் குறித்த அனுபவத்திலிருந்து அவரது அரசியல் நிலைபாடுகள் எழுகிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தலையீட்டை ஆதரித்தது போலவே பிற்பாடு அமெரிக்கத் தலையீட்டையும் அவர் ஆதரித்தார். யுகோஸ்லாவியா, ஈராக் போன்றவற்றிலும் அமெரிக்கத் தலையீட்டை ஆதரித்தார். கெடுபிடிப் போர் காலகட்டத்தின் இறுதியில் அமெரிக்க மேற்கத்திய தலையீடுகளுக்கு வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் இருக்கிறது எனக் கருதியவர் அவர்.

 மூன்றாம் உலகின் அல்லது ஸத்தாம் குசைன் போன்ற மத்தியக் கிழக்கின் கொடுங்கோலர்களுக்கு எதிராக – இனக்கொலை புரிபவர்களுக்கு எதிராக – அமெரிக்க மேற்கத்தியத் தலையீடுகள் சாதகமானவை எனக் கருதியவர். தலையீடுகளை அரசியல் ரீதியில் ஆதரித்தாலும் கூட பிற்பாடு ஆப்கானிலும் ஈராக்கிலும் பிரச்சினைகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கையாளும் நடைமுறைகளை இவர் விமர்சித்தார்.

 வரலாற்றில் மூன்று விடயங்கள் வராலற்றின் குப்பைக் கூடைக்குப் போகவேண்டும் என இவர் எழுதினார். முதலாவது சோவியத் யூனியன் திட்டம், இரண்டாவது உலகை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கத் திட்டம், மூன்றாவதாகவும் இறுதியாகவும், முந்தைய இடதுசாரி அரசியலில் இருந்து எந்தப் பாடங்களையும் கற்காத முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கம் எனப்பெறும் ஆன்டி காபிடலிஸ்ட் இயக்கத்தின் அரசியல் என இவர் எழுதினார்.

 யுகோஸ்லாவியத் தலையீட்டையும் ஈராக் தலையீட்டையும் ஆதரித்ததன் வழி தனது கடந்தகால இடதுசாரி நிலைபாட்டிலிருந்து இவர் முற்றிலும் முறித்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். தனது இறுதிக் காலங்களில் உரிமை அரசியலில் இவர் அதிகமும் ஆர்வம் காட்டினார். மூன்றாம் உலகின் கொடுங்கோலர்கள் தமது தேசிய இறையாண்மை எனும் கோஷத்தின் கீழ் பிறரின் உரிமைகளை நிராகரிப்பதைச் சுட்டிக் காட்டிய இவர், இத்தகைய கொடுங்கோலர்களுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பியத் தலையீட்டை ஆதரித்தார்.

 அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலையீட்டுக்கான நோக்கங்கள் எத்தகையதாக இருந்தாலும், அந்தத் தலையீடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை தருமானால் அந்தத் தலையீட்டை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர். மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற விடயங்களில் மார்க்சியர்கள் அக்கறை செலுத்தாதது மட்டுமல்ல அதற்கு எதிராகவும் வரலாறு நெடுகிலும் அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் எனவும் கடுமையான நிலைபாடுகளை அவர் எடுத்தார்.

 இவரது எழுத்துக்களை ஒரு வரலாற்று மாணவனாக நான் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். அரசியல் இஸ்லாம் எனும் சீரழிந்த சமூகத் திட்டம் பற்றிய இவரது கருத்துக்கள் பெரும்பாலும் எகிப்திய மார்க்சியரான சமீர் அமினுடன் உடன்படுவதை என்னால் காணக் கூடியதாக இருந்தது. அவரது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவரை ஏகாதிபத்திய ஆதரவாளராக எளிமைப்படுத்திக் கொச்சைப்படுத்திவிட முடியாது.

 இலங்கைப் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டாலும் கூட தமிழர்களின் உரிமையை உலகின் மாரக்சிய அரசுகள் நிராகரித்திருக்கின்றன. தேசிய இறையாண்மை எனும் பெயரிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் வகையிலும் பெரும்பான்மை இனவாத எதேச்சாதிகாரம் தலையெடுக்க முடியும் என்பதனை அவைகள் அறியவில்லை. இதற்கான காரணம் உரிமை அரசியல் குறித்த பரிமாணங்களில் வைதீக மார்க்சியர்கள் அதிகமும் அக்கறை கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.

 உரிமை அரசியலும் மூன்றாம் உலக அரசுத் தலைவர்களதும் கொடுங்கோன்மையும் குறித்த சரியான அறிவுறுத்தலையே பிரெட் ஹாலிடே கொண்டிருந்தார் எனவே சொல்லத் தோண்றுகிறது.  உலகப் புரட்சிகள் குறித்த அவரது நேரடி அனுபவமும், உலகின் பணிரெண்டு மொழிகளில் ஆளுமை கொண்டிருந்த அவரது மகத்தான ஆகிருதியும் நாம் தலைவணங்கி ஏற்கத் தக்கது. அவரைத் தொடர்ந்து பயில்வதன் மூலம் அவரை நாம் கடந்து சொல்ல முடியும்.

Exit mobile version