
இலங்கை சார்ந்த சூழலில் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையும் தேசிய விடுதலையும் குறித்த கருத்துக்களை முன்வைப்பவர்களை அவர்களின் பலம் பலவீனம் என்பவற்றிற்கு அப்பால் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. பெருமை மிக்க தமிழருக்கு என்று நிலம் வேண்டும் என்பதால் நாம் தனியான நாட்டை அமைப்போம்.
2. தேசிய விடுதலை ஊடாக தமிழர்களின் வர்க்க விடுதலையை அடைவோம்.
3. வர்க்க விடுதலையை முதன்மைப்படுத்தி தேசிய விடுதலையைப் பெற்றுக்கொள்வோம்.
4. ஒடுக்கப்பட்ட இலங்கை மக்கள் விடுதலை அடைவதற்கு ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நிபந்தனை.
தமிழர்களின் பெருமை, அவர்களின் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் உட்பட பல்வேறு பிற்போக்கு பழமைவாதக் கருத்துக்களை முன்நிறுத்தி அவர்களுக்கான தனி நாட்டை அமைக்கக் கோரும் கருத்தியலானது, தேசியம் என்று பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மேலாதிக்கமும் அதிகார வேட்கையும் கொண்ட மக்கள் கூட்டமாகத் தம்மை முன்நிறுத்துவதன் ஊடாக இந்தக் கருத்தியல் தோற்றம்பெற்று அது இறுதியில் எதிரிகளை மட்டுமே உருவாக்கிக்கொண்டு அழிந்துபோகிறது.
முதலாளித்துவமும் அதனோடு கூடிய சந்தைப் பொருளாதாரமும் தோன்றும் போது தேசியமும் அதனோடு இணைந்தே தோற்றம் பெறுகிறது. ஐரோப்பாவில் முதலாளித்துவம் தோன்றிய வேளையில் உருவாகிய மக்கள் கூட்டங்களே முதலில் தேசிய இனங்கள் என்று அழைக்கப்பட்டனர். தேசிய மூலதனமும், தேசிய முதலாளிகளும் இந்தத் தேசிய இனங்களின் ஆதிக்க சக்திகளாகும்.
நிலப்பிரபுத்துவத்தில் காணப்பட்ட மன்னர்களின் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் அதனோடு இணைந்த பிற்போக்கு அம்சங்களையும் அழித்தே தேசிய இனங்களும் தேசங்களும் தோன்றுகின்றன. இதற்கு மாறாக, தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் அவ்வாறான நிலப்பிரபுத்துவகால பிற்போக்கு பழமைவாதத்தைப் பேணுவதற்காக போராடியிருப்பதை வரலாறு முழுவதும் காணலாம்.
இன்னமும் முழுமையாக வளர்ச்சியடையாத முதலாளித்துவமும் அதனால் இன்னும் முழுமையாக வளர்ச்சிய்டையாத தேசிய இனங்களையும் கொண்ட ஒரு நாடாக இலங்கை காணப்படுவதால், உழைக்கும் மக்களின் அரசியல் தலைமையற்ற சுயநிர்ணய உரிமைக் கோசங்கள் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
தேசிய வெறியும் பரந்துபட்ட அடிப்படையில் இன்றி குறுகிய எல்லைகளைக் கொண்ட தேசிய வாதம் இறுதியில் ஏகாதிபத்தியங்களில் நலன்களுக்காப் பயன்படுத்தப்பட்டு பேரழிவுகளை எற்படுத்துகின்றது.
இரண்டாவதாக தேசிய விடுதலைக்கு ஊடாக வர்க்க விடுதலையைப் பெற்றுக்கொள்ளாலம் என்ற முழக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT) போன்ற இடதுசாரி அடையாளத்தோடு முன்வந்த அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டன.
இவர்களின் இடது அடையாளம் முதலாவது கருத்தியாலான பழமைவாத பிற்போக்கு அம்சங்களை புலிகளிடமிருந்து தமது தலைமைக்கு மாற்றுவதற்காவே முன்வைக்கப்பட்டது.
முள்ளி வாய்க்கலுக்குப் பின்னதக இதன் எச்சசொசங்கள் மீண்டும் துளிவிடுகின்றன. யாழ்ப்பாண நிலப்பிரபுத்துவ சிந்தனையின் முன் முகமான யாழ் வேளாள மேலாதிக்கவாதிகளின் ஆயுதமாக இந்தக் கருத்தியல் திகழ்ந்தது. 80 களின் ஆரம்பத்தில் வல்வெட்டித் துறையை கரையோர மீனவர் சமூகத்தின் தலைமையை மையமாகக் கொண்டிருந்த, படித்த வேளாள மேட்டுக்குடிகளின் முழுமையான ஆதிக்கத்திற்கு உட்படாமலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் போன்ற இயக்கங்களை எதிர்கொள்வதற்காக புளட் என்.எல்.எப்.ரி போன்ற இயக்கங்கள் இந்த முழக்கத்தை முன்வைத்தன.
ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டதும், புலிகளின் கருத்தியல் தலைமை யாழ்ப்பாண உயர்குடிகளின் அரசியலாக முழுமையாக மாற்றமடைந்தது. இதன் பின்னர் புளட் போன்ற அமைப்புக்களின் மக்கள் மத்தியிலான செல்வாக்கு அழிந்துபோனது.
தேசிய விடுதலைக்கு ஊடாக தமிழ் மக்களின் வர்க்க விடுதலை என்ற இவர்களின் வெற்று முழக்கங்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதையும் அவர்களின் தலைமையையும் நிராகரித்தது.
மூன்றாவதாக் இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறையை நிராகரித்து பாட்டாளி வர்க்க விடுதலை என்பது மட்டுமே தேசிய விடுதலையைப் பெற்றுத்தரும் என்றக் கருத்தைக்கொண்டவர்கள். சண்முகதாசன் போன்ற இடதுசாரிகள் இவ்வாறான கருத்தைக் கொண்டிருந்தபோதிலும் பின்னதாக அவற்றைச் சுயவிமர்சனம் அடிப்படையில் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி குறை நிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்கள், தேசிய இனங்களாக வளர்ச்சியடைவதன் முற்போக்குப் பாத்திரத்தையும் இனம் கண்டார்கள்.
சிங்கள மக்கள் மத்தியில்ருந்து தோற்றம்பெற்ற ஜே.வி.பி போன்ற கவர்சிகரமான புரட்சிகர சுலோகங்களோடு முன்வந்த இயகங்கள் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையையும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் ஏனைய போலி இடதுசாரிகளைப் போன்றே முற்றாக நிராகரித்தனர். சிங்கள மக்கள் மத்தியில் அரை நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சமாகப் புரையோடிப் போயிருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குத் தீனி போடுவதற்கும், அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் சுயநிர்ணய உரிமைக்கான முழக்கத்தை இனவாதமாக சித்தரிக்க முயன்றனர்.
பௌத்த சிங்கள பாசிசத்தின் வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணைபோன ஜே.வி.பி இறுதியில் பேரினவாதக் கட்சிகளோடு சங்கமித்தத வரலாறு எம்முன்னே இன்னும் உறைந்து கிடக்கிறது.
போராடும் தமிழ்ப்பேசும் சிறுபான்மையினர் மத்தியில் இடதுசாரியம் என்பது தமது ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நிராகரிக்கும் அரசியல் என்ற பொதுப் புத்தியை உருவாக்குவதிலும் இவர்களின் பங்கே பிரதானமாக அமைந்தது. இறுதியாக போலி இடதுசாரிகளும் ஜே.வி.பி போன்ற குழுக்களும் தேசிய விடுதலப் போராட்டத்தை வலதுசாரி பிற்போக்குத் தலைமைகளிடம் ஒப்படைத்த வரலாற்றுத் துரோகத்தை அரங்கேற்றினர்.
வன்னிப் படுகொலைகளின் பின்னர் தோன்றிய முன்னிலை சோசலிசக் கட்சியின் பெரும்பாலானவர்கள் சுய நிர்ணய உரிமை குறித்து தெளிவான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக் கூறிவந்தாலும் இறுதியில் ஜே.வி.பி இன் புதிய பதிப்பாக மாறிப்போயினர். மறுபடி ஒருமுறை அதே வரலாற்றுத் துரோகம் ஆரம்பமாகியிருக்கிறது. பெருந்தேசிய வாத தீயில் எண்ணை வார்க்கும் இவர்கள் மறுபுறத்தில் தமிழ் இனவாததையும், இடதுசாரி எதிர்ப்புணர்வையும், வலதுசாரி எழுச்சியையும் வளர்க்கத் துணைபோகின்றனர்.
இறுதியில் தமிழ்ப் பேசும் மக்கள் குறுந்தேசிய வாத்த்திடம் சரணடைவதற்கும், இடதுசாரியம் மீது வெறுப்படைவதற்கும் இவர்கள் இன்னொரு வெளியை உருவாக்கிக்கொடுக்கின்றனர்.
இறுதியாக ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனங்களின் விடுதலை என்பதும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பதும் இலங்கை மக்களின் விடுதலைக்கான முன் நிபந்தனை என்பதை ஏற்றுக்கொள்ளும் அரசியல் தலைமை இன்று அவசியமான ஒன்று. பேரினவாதத்தையும் குறுந்தேசிய வாதத்தையும் எதிர்கொள்ளும் அடிப்படை இதிலிருந்தே உருவாகமுடியும்.
தேசிய இனங்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவது என்பது தமது ஆணவத்தினதும் பெருமைகளையும் பழைய பெறுமானங்களையும் முன்வைத்துப் பிரிந்து செல்வதற்காக அல்ல. தேவையேற்படும் போது பிரிந்து செல்வதற்கான முழுமையான உரிமையே சுயநிர்ணய உரிமை. சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுதலை இனவாதம் என்றும், பிரிவினைவாதம் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ள்வோரில் பெரும்பகுதியானோர் இலங்கை இந்திய அரசியல் நலன்களைச் சார்ந்தே செயற்படுகின்றனர்.
பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுதல் என்பதும் பிரிந்து செல்வதற்காகவே போராடுதல் என்பதும் வேறுபட்டவை என்றும் பிரிந்து செல்வதற்கான போராட்டம் பிரிவினை என்ற கருத்தை முன்வைக்கும் சிறுபகுதியினரும் காணப்படுகின்றனர். கட்சி, தேசியவிடுதலை இயக்கங்கள், வெகுஜன இயக்கங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான அமைப்புரீதியான உறவு குறித்த கோட்பாட்டுரீதியான தெளிவற்ற நிலையிலேயே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகின்றது.
கட்சி என்பது இலங்கை உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் தேசிய இயக்கத்தையும் தலைமைதாங்கும் உயர்ந்த அரசியல் வடிவம்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் புதிய இனவாத அரசியல் கட்சிகளுக்கு அப்பால் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைய அங்கீகரிக்கும் அரசியல் தலைமை உருவாகி அது அரசியல் இயக்கமாக முன்னெழுமானால் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பிரிவினை கோசம் இருந்த இடம் தெரியாமல் இல்லாமல் போகும்.
சந்தர்ப்பவாதிகளும் வாக்குப் பொறுக்கிகளும் தமது பேரினவாத அரசியலை மக்கள் அரசியல் என்று முன்வைக்கும் சூழல் நம்பிக்கை தருவதல்ல. இந்தச் சூழலில் தேசிய இனங்களின் தேசியவிடுதலைப் போராட்டத்திற்கான இயக்கம் எவ்வளவு அவசியமானதோ அதற்கு எந்த வகையிலும் குறைவின்றி இலங்கை தழுவிய இடதுசாரிக் கட்சியினதும் தேவை அவசியமாகின்றது.